ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆசிரியர் விடையளிக்கிறார்
August 15, 2020 • Viduthalai • கழகம்

சிறப்புக் கேள்வி

உ.பலராமன்,

மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர்,

காங்கிரஸ்

  1. டாக்டர் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டத்தையே சீர்குலைக்கும் பி.ஜே.பி.யும்,

அதன் அரசும் அம்பேத்கரைக் கொண்டாடலாமா?

பதில்: நன்றி தோழர் பலராமன் அவர்களே!

அதுதான் ஆரியத்தின் நடைமுறை! கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்ட காந்தியைக் கொண்டாடுவதுபோல இதுவும் ‘பாவ்லா’!

பவுத்தத்தை நாட்டிலிருந்து விரட்டி விட்டு, புத்தரை விஷ்ணுவின் 9வது அவதாரமாகக் காட்டிடும் வித்தை போன்றதே இதுவும்!

  1. இந் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பிற்படுத்தப்பட்டவர்கள். அவர்களுக்கு விரோதமாகச் செயல்படும் மத்திய அரசை ஒன்றாகச் சேர்ந்து வீழ்த்த வேண்டாமா?

பதில்: பிற்படுத்தப்பட்ட மக்களின் பெரும்பான்மையை உடைக்கவே தனித்தனி ஜாதி - ஜாதிக்குள் ஜாதி - எந்த ஜாதி ‘உசந்த ஜாதி’  போராட்டங்கள் என்று திசை திருப்பி விட்டு - சமூக அநீதி, பகற் கொள்ளை நடைபெறுகிறது.

நாட்டின் 75 சதவிகித மக்கள் ஒரே அணியில் நின்றால், உண்மையான ஜனநாயகம் மலரும். அரசியல் கட்சிகளின் பதவி வேட்டை; அரசியல் சண்டைகள் போன்றவை ஒன்றுசேரத் தடைகள்!

அனைவரையும் ஒருங்கிணைக்க வடநாட்டில், திராவிடர் கழகம் போன்ற பொது இயக்கம் - மக்கள் இயக்கமாக இல்லை. பழைய சமூகநீதித் தலைவர்கள் பலர் வடநாட்டில் முன்பு தொண்டாற்றியது போல இப்போது தலைவர்கள் இல்லை. இவற்றை மாற்றினால் - நிலைமை மாறும் என்பது நம்பிக்கை - வெற்றி நிச்சயம்!

விபீஷணர்கள், அனுமார்களின் எண்ணிக்கை குறைய வேண்டும். அந்த விழிப்புணர்வு வெற்றியை ஈட்டித் தரும்.

பார்ப்பனர்கள் தங்கள் இனநலத்திற்குப் பாடுபடுவதிலிருந்து, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட அனைத்து மக்களும் பாடத்தைக் கற்று, ஓரணியில் திரள வேண்டும்.

கேள்வி: கலைஞர் பேனா, மோடி பேனா... ஒப்பிடுக?

                - க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

பதில்: கலைஞர் பேனாவில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, திராவிட உணர்வுகள் என்ற மை நிரம்பி இருக்கும். மோடி பேனாவில் ஆர்.எஸ்.எஸ்., காவி நிற மையே நிரம்பி இருக்கும்.

கலைஞர் பேனா பகுத்தறிவைப் பரப்ப! மோடி பேனா பழைய புராணங்களுக்கு புதிய விஞ்ஞான விளக்கம் கூறும் வேலையைச் செய்ய!

கேள்வி: இந்திய அரசின் தேசிய விளையாட்டு மதக் கலவரமா? ஆட்சிக் கலைப்பா?              -நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.

பதில்: இரண்டும் இணைந்த ஒரு விசித்திர விளையாட்டு! கரோனாவைப் பயன்படுத்தி உரிமையைப் பறிக்கும் புதிய ‘பரமபத‘ பாம்பு விளையாட்டு!

கேள்வி: குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது பெண்ணுரிமைக் காவலர் பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி அல்லவா?                 - மல்லிகா, மாங்காடு.

பதில்: ஆம். அதிலென்ன சந்தேகம்? தந்தை பெரியார் அவர்கள் 1929-இல் நிறைவேற்றிய செங்கற்பட்டு மாநாடுத் தீர்மானம் முதல் 1971-இல் நிறைவேற்றிய பெண்கள் பாலியல் சுதந்திரம் பற்றிய தீர்மானங்கள் வரை பல தீர்மானங்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளாகவே ஜொலிக்கின்றனவே!

கேள்வி: இலங்கையில் மீண்டும் ராஜபக்சே பிரதமராக வந்திருப்பதால் இனி இலங்கைத் தமிழர்களின் நிலை?          - சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.

பதில்: அதோ கதி! பழைய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் ‘ஈழத் தமிழர்கள்’. ஒன்றுபட்ட இணைந்த தலைமை, ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்கும் பொதுஜன இயக்கம் நடத்தி, அவ்வப்போது ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். வெளி ஆதரவுகளை நம்பாமல் ‘தன் கையே தனக்குதவி’ என்ற புதிய உணர்வோடு உரிமைகளுக்குப் போராட வேண்டும். வரலாறு நிச்சயம் திரும்பும்.

கேள்வி:  விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கனிமொழி எம்பி சொன்னதும், பலரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்  உங்களுக்கும் இப்படி ஏதாவது அனுபவம் உண்டா?             - உ.மெய்யரசி, வாழப்பாடி

பதில்: டில்லி விமான நிலையத்தில் வேட்டி கட்டிக் கொண்டு போனதால், இருமுறை பரிசோதனைக்கு ஆளாகியதுண்டு! பழைய நாளில், தமிழ்நாடு - வேட்டி - இப்படிக் கண்டாலே இவர்கள் விடுதலைப் புலிகளோ என்றபடி ஓர் அச்சம் அவர்களுக்கு!

கவிஞர் கனிமொழி நிகழ்வினால் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டது வரவேற்கத்தக்கது (தமிழ் தெரிந்த அதிகாரிகள் பணியாற்றுவர் என்று செய்தி).

கேள்வி:  இத்தனை நாட்களாக குடியரசுக் கட்சியின் டிரம்பை ஆதரித்துக் கொண்டிருந்த பார்ப்பனர்கள், ஜனநாயகக்  கட்சியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டவுடன் இந்தப் பக்கம் சாய்கிறார்களே?

                - ஜீவராஜ்,  ஒர்லாண்டோ

பதில்: பொறுத்திருந்து பாருங்கள் - முழுமையாக சாய்கிறார்களா அல்லது என்னவென்பதை! இந்துத்துவாக்காரர்கள் மவுனம் வேறு ஒரு திசை செல்கிறது.

கமலா ஹாரிஸ் ஒரு பெண் வேட்பாளர் - கருப்பின மக்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்! அவர் தேர்வு, நாம் வரவேற்க வேண்டிய ஒன்று! கருப்பின மக்கள் வாழ்வுரிமைக்கான போராட்டங்களில், அவர் தாய் போராடியவர் என்பதே அவரது தகுதிகளில் உச்சமானது! உச்சம் வழி எச்சமும் ஏற்றமுடைத்து!

கேள்வி: சமஸ்கிருதம் தேவ பாஷை, அதனைச் சூத்திரர்கள் உள்ளிட்ட வேறு யாரும் பேசக் கூடாது என்றவர்கள், இன்று பள்ளிக்கல்வி முதல் சமஸ்கிருதம் விருப்பப் பாடமாக இருக்கும் எனக் கூறி, செத்த மொழிக்கு உயிர் ஊட்டும் வகையில் மத்திய அரசின் மூலம் முயற்சிக்கின்றனரே?       - மன்னை.சித்து, மன்னார்குடி-1

பதில்: முன்பு மறைத்தால் லாபம்; இப்போது பரப்பினால் லாபம். காலம் மாறிப் போச்சு என்பதால் மாறுதலுக்கு ஏற்ப புதிய முறையில் பண்பாட்டுப் படையெடுப்பு அவ்வளவுதான்! மற்ற மொழிகளையும், மக்களையும் பண்பாட்டுத் தளத்தில் அடிமைப்படுத்த இப்போது அவாளுக்கு இது புதிய ஏவுகணை! எனவே சூத்திரம் மாறிவிட்டது!

கேள்வி: அமெரிக்க மக்கள், நயாகரா நீர்வீழ்ச்சி, படகுத் துறைகள், பூங்காக்கள் போன்ற மக்கள் கூடும் பொதுவிடங்களில், சர்வ சாதாரணமாக மிகவும் எளிமையாக திருமணங்களைச் செய்து கொள்கிறார்களே... நம் நாட்டிலும் அதுபோல் எதிர்காலத்தில் நடக்குமா?      - சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

பதில்: பெரியார் திடலில் சாதாரணமாகவே வந்து திருமணம் நடத்திக் கொள்ளலாம். நிச்சயம் மாறுதல் வந்தே தீரும்! அது தவிர்க்க முடியாத காற்றோட்டம் போன்றதே.

கேள்வி: கரோனா பரவலால் வினாயகர் ஊர்வலத்துக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பதை தாங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?  - எஸ். பத்ரா, வந்தவாசி.

பதில்: முடிவு சரியானது! கடைசி வரை உறுதியோடு இருப்பார்களா? பி.ஜே.பி- ஹிந்து முன்னணி இதை வைத்து கலகம் செய்ய திட்டமிடுவது மாதிரி - அரசு உத்தரவை மீறி சிலைகளை ஆங்காங்கு வைப்போம் என்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் உயிரைவிட பிள்ளையார் பக்தி முக்கியம் என்பதையும், இது வருகின்ற தேர்தலுக்கான அச்சாரம் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்!