ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆசிரியர் விடையளிக்கிறார்
October 24, 2020 • Viduthalai • மற்றவை

கேள்வி : அறிவியலைப் பயன்படுத்தி, ஆன்மிகத்தின் பெயரால் அறியாமையை வளர்ப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

- நெய்வேலி க.தியாகராசன்,  கொரநாட்டுக் கருப்பூர்.

பதில் : கரோனா (கோவிட் 19) கொடுந்தொற்றைவிட கொடியதான மூடநம்பிக்கை, பரப்பப்படும் முழு அறிவு முடக்க நோய் ஆகும். அறிவியல் மூட நம்பிக்கையைப் பரப்புவதற்கு அல்ல; அவற்றைத் தடுத்து ஒழிப்பதற்கே - இங்கே எல்லாம் தலைகீழ்!

- இராமாயணத் தொடர் - பாபர் மசூதி இடிப்பதற்கு மறைமுகத் தூண்டுகோல்.

- பல ஊர்களில் நடக்கும் மூட விழாக்கள் அந்த ஊரோடு நின்றிருந்த நிலையில் இன்று தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பின் (லைவ்) மூலம் பல லட்சம் பேரை முட்டாளாக்கும் கொடுமை அரங்கேறுகிறது. அதுவும் அறிவியல்பூர்வமாக - அதன் ஒத்துழைப்புடன் மேலும் வேகமாக மூடத்தனம், அறியாமை பரவுதலுக்கு 'ஆன்மீகம்' என்ற ஒரு மோசடி பரப்பப்படுகிறது. ஆத்மா - ஆன்மா - ஆன்மீகம் என்பதே இல்லாத ஒன்று - பக்தி போதையூட்டி, பயத்தைத் தூண்டுவதே ஆன்மீகம்.

மதம் தவிர்த்த ஆன்மீகம் ஒன்று உண்டா?

தத்துவம் வேறு; மதம் வேறு; அதையும் குழப்பி விட்டார்கள் சில அறிவியல்வாதிகள்! 'கம்ப்யூட்டர் ஜாதகம்', 'கம்ப்யூட்டர் வாஸ்து' போன்று!

கேள்வி : பெண்ணுரிமைக்காக தொடர்ந்து போராடி அவர்களுக்கு கல்வியும் அதிகாரமும் கிடைத்து வரும் இந்த நிலையில் கூட பெண்ணடிமைத் தனம் நீடிக்கிறதே?

- முகிலா, குரோம்பேட்டை

பதில்: சலிப்படைய வேண்டாம் தோழரே, தேவை மேலும் அதிகமாகிவிட்டது என்பதுதான். பெரியார் வழியில் சலிப்பின்றி பிரச்சாரம் செய்க - வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம்!

கேள்வி : நீட் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்தும் அதனை அடியோடு ரத்து செய்ய மாநில அரசு முயலாதது ஏன்?

- எஸ். பத்ரா, வந்தவாசி.

பதில்: மத்திய அரசு - உச்சநீதிமன்றம் என்ற 'பூச்சாண்டிகளுக்குப்' பயந்த நிலையில், பதவியாசை மேல் உள்ள தளராத பிடிப்பும்தான் முக்கிய காரணம்!

கேள்வி: அனைத்து மாநில சமூக நீதி தலைவர்களையும் ஒருங்கிணைத்து, வடபுலத்தில் சமூக நீதிக்கு அரணாக இருந்த மாண்புமிகு இராம்விலாஸ் பஸ்வான் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு, திராவிடர் கழகத்தின் சார்பில் காணொலி வாயிலாக நடத்தப்படுமா?

- மன்னை சித்து, மன்னார்குடி-1.

பதில்: விருப்பம் உண்டு. தற்போதைய பீகார் அரசியல் நிலை, தேர்தல் போன்ற பல சூழல்களால் அதை உடனடியாக நடத்த வாய்ப்பில்லை. பொறுத்து பின்னர் நடத்துவோம்!

கேள்வி : கோயில் நுழைவுப் போராட்டத்தைத் தந்தை பெரியார் எதிர்த்ததாக தொடர்ந்து சில பார்ப்பனர்கள் பரப்பிக் கொண்டிருக்கிறார்களே?

- சு.அறிவன், வீராக்கன்

பதில்: பார்ப்பனர் கூட்டம் திட்டமிட்டுப் பரப்பும் பொய்களில் இதுவும் ஒன்று. பெரியார் பேராதரவுடன் ஈரோட்டில், திருவண்ணாமலையில், மதுரையில் கோயில் நுழைவை நடத்திய முன்னோடிகள் சுயமரியாதை வீரர்கள்! பெரியார், தேவஸ்தான குழு பொறுப்பிலிருந்து விலகியதற்கே இது ஒரு முக்கிய காரணம் என்பதை அறியாத மூடர்கள் இந்தப் பார்ப்பனர்கள்!

கேள்வி: தாங்கள் சந்தித்த முதல் வட இந்திய தலைவர் யார்?

- தமிழ்மைந்தன், சைதாப்பேட்டை

பதில்: சமூகநீதிக்காக தனது வாழ்வையே தியாகம் செய்த போர்த் தளபதி (உ.பி.யின்) சந்திரஜித் (யாதவ்) அவர்கள். வழக்குரைஞர், எம்.எல்.ஏ.,  எம்.பி.,  அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர், மத்திய அமைச்சர், பிறகு தொடர்ந்து சமூகநீதிப் போராளி. இந்திய - சோவியத் நட்புறவுக் கழகத்தின் சிறப்புமிகு தலைவரும்கூட. நல்ல பார்லிமெண்டேரியன் - பொது வாழ்வில் ஏதும் சம்பாதிக்காத பெருமைமிகு செயல்வீரர் அவர்!

கேள்வி : நீட் தேர்வில் ஒரு குளறுபடியும் இல்லை என்று பச்சையாக மறைக்கிறதே மத்திய அரசு?

- க.தென்றல், ஆவடி

பதில்: முழுப் பூசணியை சோற்றில் மறைக்க முயலும் மாய்மாலம் பல உயர்நீதிமன்ற வழக்குகளில் அம்பலமாகியுள்ளதுவே!

கேள்வி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தாயாரின் உருவப் படத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியது நயத்தக்க நாகரீகம் என்று கருதலாமா?

- சீ. இலட்சுமிபதி, தாம்பரம். 

பதில்: தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மட்டுமல்ல; அவரது ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கும் அத்துணை எதிர்க்கட்சித் தலைவர்களுமே சென்று ஆறுதல் கூறியது சிறந்த நனி நாகரிகம். எப்போதும் தேவைப்படும் அரசியல் பண்பாடு - வளர வேண்டிய ஒன்று.

 

சிறப்புக் கேள்வி:

பேராசிரியர் அரசு செல்லையா

அமெரிக்கா

  1. பேரன்பு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் தங்களின் உரைகள், சீரிய வகுப்புகளாகவே அமைகின்றன. மனமார்ந்த நன்றிகள்.

உரையின்போது பல்வேறு புத்தகங்களை மேற்கோள் காட்டுகிறீர்கள். தாங்கள் மேற்கோள் காட்டிய பல புத்தகங்களில் ஒன்று - பழ. அதியமான் பெருமுயற்சியால் விளைந்த “வைக்கம் போராட்டம்”. 645 பக்கங்களைக்கொண்ட இப்புத்தகம் “காலச்சுவடு” பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே படித்து முடித்திருக்கிறீர்கள்.  பல்வேறு இடங்களை மேற்கோள் காட்டி உரையாற்றும் அளவில்  ஆழ்ந்து படித்து உள்வாங்கியிருக்கிறீர்கள். இன்றைய சூழலில், இந்தியாவிலானாலும், அமெரிக்காவிலானாலும், விலைகொடுத்து வாங்கப்படும் புத்தகங்களில் பெரும்பாலானவை படிக்கப்படாமலேயே அலமாரிகளில் உறங்குகின்றன. வாசகர்கள் விரும்பி வாங்கும் புத்தகங்கள் படிக்கப்படாமல் போவதற்கு ”நேரமில்லை” என்ற காரணம் பொதுவாக சொல்லப்படுகிறது. பல்வேறு மாறுபட்ட பணிச்சுமைகளோடு செயல்படும் உங்களால், இப்படி வேகமாகவும், ஆழமாகவும் ஒரு புத்தகத்தை எப்படி படிக்க முடிகிறது?

விரிவாக உங்கள் பதில் அமைந்தால், புத்தகம் படிக்க முயலும் அனைவருக்குமே நன்கு பயன்படும். மிக்க நன்றி.

பதில்: நன்றி தோழர் அரசு அவர்களே!

இது எனக்கு மாணவப் பருவம்தொட்டே ஏற்பட்ட பழக்கம். அது ஒன்றும் பிரமாதம் அல்ல. சோம்பலைத் தவிர்ப்பதும், நேரத்தை வீணடிக்காமல் பயனுறு வகையில் செலவழிப்பதும் பொதுவாழ்க்கைக்கு சிறு வயதிலேயே வந்துவிட்ட எனக்கு, கற்ற பாடங்களாகின!

படிக்கும் ஆசை - விருப்பம் இருப்பின் படிப்பது கடினமே இல்லை.

பலர் புத்தகங்களை வாங்கி அலமாரியில் வைத்துவிட்டால், எப்படி படிக்க முடியும்?

எனக்கு எந்தப் புத்தகம் வாங்கினாலும், சிறு குழந்தைகள் புதிய பொம்மையை வாங்கியவுடன், அந்த பாக்கெட்டைப் பிரித்து, அதைப் பயன்படுத்தி மகிழ்வதைப் போன்ற ஆர்வமும், ஆசையும்,  என்னை பதைபதைப்புக் கொள்ளச் செய்யும் - ஒரு சில நூல்கள் தவிர, மற்ற நூல்கள் விறுவிறுப்புடன் படிப்பதற்குப் பெரிதும் தூண்டுபவைகளாகவே இருக்கும்!

அண்மையில் படித்த, படித்துக் கொண்டுள்ள மூன்று முக்கிய புத்தகங்கள் மிகமிக சுவையானவை - சுவாரஸ்யமானவை- இன்பத்தைத் தந்து அறிவை உயர்வு செய்ய உதவக் கூடியவையாக உள்ளன.

  1. The R.S.S. (and the making of) The Deep Nation

         by - Dinesh Narayanan, Pages 382

  1. Caste - The Lies that Divide Us

         by - Isabel Wilkerson, Pages 476

  1. Why I am not a Hindu Woman

          by - Wandana Sonalkar, Pages 169

 

தொடர்ந்து ஒரே நூலைப் படிப்பதற்குத் தடைகள்.

  1. எனது எழுத்துப் பணி - அன்றாடக் கடமைகள்.
  2. எனது பேச்சுப் பணி - மக்கள் தொடர்புடன் எனது அறிவை சாணை பிடிக்கும் வாய்ப்பு.
  3. ஒரே புத்தகம் படிப்பதில் சில நேரங்களில் தட்டும் அயர்வுகள் போன்றவைதான் -

இதனை நான் பள்ளி, கல்லூரிகளில், பாட வகுப்புகள் மாறி மாறி வருவதுபோல், ஆங்கிலம், தமிழ், வேறு வேறு தலைப்பும், சுவையும் உள்ள 'பல சரக்கு' புத்தகங்களை நான் மாற்றி மாற்றி படிப்பது, அதே உற்சாகத்துடன் தொய்வின்றி படிக்க வழிவகை செய்வதாக அமைந்துள்ளது.

பயணங்களில் சிறந்த நண்பன் புத்தகங்களே! - பயணத்தை வெகுவாகச் சுருக்குவது புத்தக நண்பன்தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதானே! கரோனா காலகட்டத்தால், பயணங்கள் நின்று விட்டன. என்றாலும், வீட்டிலிருந்தபடியே பணி புரியும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் இந்த நூல்கள் நமது அறிவுப் பசிக்கு நல்ல தீனிதானே!

திட்டமிட்டு செயலாற்றும்போதும், தெவிட்டாத உணவு போல படிக்கும்போதும், நேரம் ஒரு பொருட்டாகவே அமையாது.

இரவு படுக்கைக்குப் போகுமுன் குறைந்தது 15 மணித் துளிகள் முதல் 30 மணித்துளிகள் படித்த பின்பே உறக்கம் என்ற, பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால், 'சிறுதுளி' யாகும். அதுவே 'பெருவெள்ளமாகி' பயன் தருவது உறுதி!

எண்ணம் - விருப்பம் - செயல் இணையும்போது எதை யும் சாதிக்கலாம் - அரசு அவர்களே!

அதற்கு சிறிதளாவது இப்பதில் பயன்பட்டால், அதைவிட மிகுமகிழ்ச்சி, இன்பம்தான் வேறு வேண்டுமோ?

இதழாக்கம்:-  சரவணா  ராஜேந்திரன்