ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆசிரியர் விடையளிக்கிறார்
August 22, 2020 • Viduthalai • கழகம்

கேள்வி: “மாநில அரசு நிதியில் உருவாக்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களை, மத்தியத் தொகுப்புக்குக் கொடுக்க மாட்டேனென்று கூறும் முதுகெலும்புள்ள ஒரு முதல்வர் கூடவா இந்தியாவில் இல்லை?   - சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

பதில்: இன்றுவரை கிடைக்கவில்லை. தேடுகிறோம், தேடுகிறோம், தேடிக் கொண்டே இருக்கிறோம்! இனி வருங்காலத்தில் கிடைப்பார் - அந்த திருப்பம் 8 மாதங்கள் கழித்துத் துவங்கும் என்று எதிர்பார்ப்போமாக!

கேள்வி: மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பேசுவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நம்முடைய இயக்கப் பிரச்சாரத்திற்கு தடையாக வராதா? இந்த நிலையில் நாம் ஆற்ற வேண்டிய எதிர்வினை என்ன?         - உ.விஜய், த.சோழன்குறிச்சி

பதில்: திட்டமிட்டு இயக்கத்தை நடத்திச் செல்லும் தலைமையும், இயக்கமும், தோழர்களும் எதனையும் ஏற்று எதிர் கொண்டு வெற்றி பெறுவர். மீளும் வழி அறிவர்.பிரச்சினைக்கேற்ப விடிவுகள் கிடைக்கவே செய்யும். அச்சம் என்பது மடமை!

கேள்வி: ஆரியர்கள் - பார்ப்பனர்கள் என்பவர்கள் வெவ்வேறானவர்களா?

                - எஸ்.பத்ரா, வந்தவாசி. 

பதில்: போண்டா - வடை வெவ்வேறானதா? உருவம் வேறு - ஒரே உளுந்து மாவுதானே?

ஆரியர் - இனம்; பார்ப்பனர் - ஜாதி! அவ்வளவுதான்!

கேள்வி: சுதந்திரம் அடைந்து எழுபத்தி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஜாதிப் பாகுபாடு காரணமாக, பெண் ஊராட்சித் தலைவரை தேசியக் கொடியேற்ற விடாமல் தடுத்தது, ஜனநாயக நாட்டிற்கு ஏற்பட்ட இழுக்கு அல்லவா?         - இல. சீதாபதி, மேற்கு தாம்பரம்.

பதில்: தந்தை பெரியார், ஏன் அதை 'துக்க நாள்' என்று தொலைநோக்கோடு கூறினார் என்பது இப்போதாவது புரிந்தால் சரி!

பறையருக்கும், இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை என்பது பாரதி பாட்டு!

உண்மையில், இன்னமும் விடுதலை வரவில்லை என்பதைத் தானே திருவள்ளூர் நிகழ்வு காட்டுகிறது?

கேள்வி: நீதிபதிகளின் மீதான விமர்சனம் கூட, நீதிமன்ற அவமதிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படுமா? - இளையராஜா, பிலாக்குறிச்சி

பதில்: இப்போது உச்சநீதிமன்றத்தில், பிரசாந்த் பூஷண் நீதிமன்ற அவமதிப்பு வழக்கே அந்த அடிப்படையில்தானே!

கேள்வி: ‘நீட்’ தேர்வைத் தள்ளிவைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளதைப் பற்றி தங்கள் கருத்து என்ன? - எஸ்.பூபாலன், திண்டிவனம்.

பதில்: 20.8.2020 விடுதலை அறிக்கையை படிக்கவும்!

கேள்வி: தமிழர்களிடத்தில் உட்பகை, வெளிப்பகை, ஒற்றுமையின்மை தொடர்கதையாக நீளுவதற்கு என்ன காரணம்?

                - நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர். 

பதில்: (1) எல்லையற்ற சுயநலம் (2) தன்முனைப்பு, (3) பதவி வேட்டை, (4) குறைந்த விலைக்குத் தன்னை விற்றுக் கொள்ளும் கேவலம் - இவைதான்!

மீண்டவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி!!

கேள்வி: மத்திய அரசின் அனைத்துப் பணியிடங்களுக்கும், ஒரே தேர்வு வாரியமாமே, இதில் ஒளிந்துள்ள ஆபத்துகள் என்னென்ன?

                - கே.பரிமளம், கடையநல்லூர்

பதில்: தமிழ்நாட்டவருக்கு வாய்ப்புகளின்மை அல்லது சுருக்குதல்!

சமூகநீதிக்குப் புதை குழி!

அதைவிட, மாநிலங்களை அதிகாரமின்றி ஆக்கி, கூட்டாட்சியை ஒழித்து, ஒற்றை ஆட்சி முறையை நடைமுறைப்படுத்துதலை நோக்கி, இது அடுத்ததொரு கட்டம். ஒரே மொழி, ஒரே மதம், ஒரே ரேஷன் கார்டு, ஒரே கல்வி, ஒரே தேர்வு எல்லாம் மத்தியமயமாக்குதல் (Centralasation) என்பதை இலக்காகக் கொண்ட நடவடிக்கை.

கேள்வி: பள்ளி, கல்லூரிக் காலங்களில் நண்பர்களுடனான உங்கள் நினைவுகள் சில...          - முகிலா, குரோம்பேட்டை

பதில்: பள்ளியில் நண்பர் ஜெயகாந்தனும், நானும் 2ஆம் வகுப்பில், ராஜா வேஷம் போட்டு நாடகம் நடித்தது (‘அய்யாவின் அடிச்சுவட்டில்...’ நூலில் எழுதியிருக்கிறேன்.)

கல்லூரி, பல்கலைக் கழகத்தில் எனக்கு இறுதித் தேர்வு எழுதக் கட்டணம் கட்ட எனது நண்பர்களே முன் வந்து பணியாற்றி கடனாக்கினர். பிறகு சில மாதங்களில் அங்கேயே, பணியேற்று என்னை ‘மீட்டுக்கொண்ட’ கதை போல பலப்பல!

கேள்வி: அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள், செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் செமஸ்டர் கட்டணங்களைச் செலுத்தாவிட்டால், அம் மாணவர்களின் பெயர்கள் நிரந்தரமாக நீக்கப்படும் என்று அறிவித்துள்ளது நிர்வாகம்! இத்தனை இக்கட்டான காலகட்டத்தில், அரசு நிறுவனம் ஒன்று இவ்வளவு வேகமாக அறிவிப்பு கொடுப்பதேன்?         - கி.ரோஹித், கொளத்தூர்

பதில்: அண்ணா பெயரில் ஒரு பல்கலைக்கழகம், அதுவும் அரசு நடத்தும் பல்கலைக்கழகத்தில் இப்படி ஒரு கெடுபிடியா? வெட்கம், வேதனை! தமிழக அரசின் உயர்கல்வித் துறை இந்தக் கறையைத் துடைக்க முன் வர வேண்டும்!

சிறப்புக் கேள்வி

கோபண்ணா,

தலைவர், ஊடகத்துறை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

கேள்வி: தந்தை பெரியார் தம் வாழ்நாள் முழுவதும்

எந்த கொள்கைக்காக வாழ்ந்தாரோ, அதற்குத்

தமிழகத்தில் தற்போது வகுப்புவாத சக்திகளால்

மிகப் பெரிய அளவில் அச்சுறுத்தல் உருவாவதை

எப்படி முறியடிப்பது?

பதில்: நன்றி நண்பர் கோபண்ணா அவர்களே!

மதவெறி, ஜாதிவெறி, பதவிவெறி ஆகியவை இன்று நாட்டில் கோலோச்சுகின்றன! பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் மத்தியில் வெற்றி பெற்று ஒரு ‘புல்டோசர் மெஜாரிட்டி’யைப் பெற்றுவிட்டோம் என்பதால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி ஆட்சிகளைக் கலைப்பது; எம்.எல்.ஏ.க்களைக் கட்சி தாவச் செய்வது, குதிரை பேரம் நடத்துவது, கோடிக்கணக்கில் பணம் தர முயற்சிப்பது போன்றவை வடபுலத்தில் நடத்தப்பெறுகின்றன.

ஆனால் தமிழ்நாட்டில், அது போன்ற முறை பயன்படாது; ஒரு சிலர் கிடைத்தாலும், அதனால் உருப்படியான பலன் அக்கட்சிகளுக்கு ஏற்படாது.

இதை உணர்ந்த நிலையில் இருந்தாலும்கூட, இங்கே சில வித்தைகள் காட்டி, தமிழக ஆளுங்கட்சியை உருட்டி, மிரட்டி தங்களது ஊடுருவலைச் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

வருகின்ற தேர்தல் அதற்கு முக்கியமானதொரு சோதனைக் களம்.

அதிலும் சரி, அதற்கு முன்பு, தனித் தனி மேடைகளிலும் சரி, பொது மேடைகளிலும் சரி, ஒரே குரலில், ஒரே அணியாக நின்று இந்த பிற்போக்கு மதவெறிச் சக்திகளை ஒழிக்க, நாம் ஒருங்கிணைந்து நின்று, பிரச்சாரம் களம், போராட்டக் களம், தேர்தல் களம் ஆகிய மூன்று களங்களையும் ஒன்றுபட்டு நடத்திட வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் சீட்டுப் பிரச்சினையின்றி, தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணியை அமைத்து வென்றதைப் போல, ஒத்த கருத்துள்ளவர்கள் சீட்டு எண்ணிக்கை பற்றி கவலைப்படாமல், திறந்த மனதோடு வியூகம் அமைக்க வேண்டும்; மனப்பூர்வமாக அவரவர் உண்மை பலத்தினை, அவரவர் புரிந்து, ஒன்று பட்டால், நிச்சயம் அச் சக்திகளைத் தோற்கடித்து, புதிய முற்போக்கு ஆட்சியை தி.மு.க. தலைமையில் மலரச் செய்யலாம். அதுவே முக்கியமான ஒன்றாகும்!

சிறுசிறு செய்திகளை ஊடகங்கள் பெரிதாக்க முயற்சிக்கும்; அவற்றை அலட்சியப்படுத்த வேண்டும்; கருமமே கண்ணாக இருக்க வேண்டும்!