ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆசிரியர் விடையளிக்கிறார்
August 8, 2020 • Viduthalai • மற்றவை

சிறப்புக் கேள்வி

புலவர் பா.வீரமணி

கேள்வி: மத்திய பா.ஜ.க.அரசு, சமய இணக்கத்திற்கும், இட ஒதுக்கீட்டிற்கும், சமூகநீதிக்கும், முற்போக்கான கல்விக்கும், மாநில உரிமைக்கும் பேராபத்தை விளைவிக்க அச்சுறுத்திக் கொண்டு வருவதோடு, ஊடகத் துறையையும், நீதித் துறையையும் வளைத்துப் போட்டுக் கொண்டு வரும் பாசிச முறையை ஒழிக்க, ஒட்டுமொத்த தமிழகமும் எடுக்க வேண்டிய அரசியல் நடவடிக்கைக்கு வழி கூறுவீர்களா?

பதில்: முதல் அரசியல் நடவடிக்கை ஒத்தக் கருத்துள்ள, முற்போக்கான  அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், ஓரணியில் நின்று ஒத்த வேலைத் திட்டமாக, ஒரே முக்கிய நோக்கமாக பா.ஜ.க. என்ற காவிக்கட்சியையும் அதனை ஆதரிப்போரையும் அடையாளம் காட்டி, கிராமங்களில் தொடங்கி சிற்றூர், பேரூர், நாடு, நகரங்கள் எல்லாம், பட்டி தொட்டிகளெங்கும், திண்ணைப் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம், பொதுப் பிரச்சாரம் செய்ய வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் கிடைத்த வெற்றி போல மீண்டும் கிடைக்க, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட -  அரசியல் கட்சியினர் நீக்குப் போக்குடன் - கூட்டணியில் இணைந்து - பதவிகளை முன்னிறுத்தாமல் லட்சியத்தை முன்னிறுத்திப் பாடுபட வேண்டும் அதுவே அவசரம் - அவசியம்.

கேள்வி:  ஏழை, எளிய, பாமர மக்கள் மிகுந்த பாரத புண்ணிய பூமியில்  நம்பிக்கை எனும் பெயரால் கோயில்களுக்குக் கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி அழுவது அவசியம்தானா?                - சீதாலட்சுமி, திண்டிவனம்.

பதில்: புத்திசாலித்தனமும், நியாய உணர்வும், பகுத்தறிந்து நடக்கும் உண்மையான மக்களாட்சி நாட்டில் ஏற்பட்டால், கோயில்களுக்கும், மத விழாக்கள் என்ற பெயரால் பல கோடி ரூபாய்களை - வறுமையும், பட்டினியும், வேலையில்லாத் திண்டாட்டமும் பல்கிப் பெருகி, கரோனாவினால் பொருளாதாரம் மிகவும் கீழிறக்கத்திற்குச் சென்றுள்ள நிலையில் அவற்றைத் தவிர்த்தால் மக்கள் திட்டங்களை - கல்வி, ஆராய்ச்சி, சுகாதாரம், வாழ்வுரிமையை மேலும் உயர்த்த முடியும்.

தந்தை பெரியார் ஒரு வரியில் அழகாகச் சொன்னார். ‘கடவுளை மற; மனிதனை நினை.’ அது செயல்பட்டால் எல்லா துறைகளிலும் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். அறிவு வரவில்லையே!

கேள்வி: மதுக்கடைகளைத் திறக்கச் சொன்ன ஆட்சியாளர்களையும், அவர்க ளுக்கு வாக்களித்தவர்களையும் செருப்பாலடிக்க வேண்டும் என துக்ளக்கில் கூறிய குருமூர்த்தி அய்யர், சில ஆண்டு காலம் மிடாஸ் மது ஆலையின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த துக்ளக் சோ ராமசாமியை வசதியாக விட்டுவிட்டாரே?

                - மன்னை சித்து, மன்னார்குடி-1.

பதில்: எப்படிக் காண முடியும்? அதுமட்டுமல்ல. பாஜக ஆளும் பல மாநிலங்களில் மதுக்கடைகளை நடத்துகிறார்களே அவர்களை எதால் அடிப்பது என்பதை குருமூர்த்திகள் கூறலாமே! எதுவோ கொழுத்தால் வளையில் தங்காது! என்ன செய்ய. பதிலில் பண்பு வேண்டாமா?

கேள்வி: மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு என்ற போர்வையில் மக்களின் உரிமைகளை அடக்குகின்றனவா?            - வெங்கட.இராசா, ம.பொடையூர். 

பதில்: ஆம்! நூற்றுக்கு நூறு உண்மை. நீட்டித்துக் கொண்டே போவதன் உள்நோக்கம் அதுதான்! காவல் நிலையங்களில் கைதிகளைத் தனி அறையில் கட்டிப் போட்டு துன்புறுத்தும் திரைப்படக் காட்சி, நிஜத்தில் சாத்தான்குளங்களில் நிகழ்வுது மாதிரிதான் இப்போதைய நிலையும்கூட! நாளும் மக்களுக்கு அந்தச் சந்தேகம் வலுத்து வருகிறது!

கேள்வி: தமிழின் பிறவிப் பகைவர்களே, சில நேரங்களில் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

                - நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.   

பதில்: அரசியல் வித்தைகளில் இதுவும் ஒன்று!

கோட்சே பற்றி கூட குறள் இருக்கிறதே!

“தொழுத கையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுத கண்ணீரும் அனைத்து”

அதனால் அதை ஒரு தந்திர மந்திரமாக்கி மயக்க மருந்து தருகின்றனர். தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்!

கேள்வி: சமூக நீதியால் பலனடைந்தவர்கள் அதற்கான களங்களைப் புரிந்துகொள்ளாமல் இருப்பது, அயராது போராடி வருகின்ற தங்களுக்கு வேதனையையும் அயர்ச்சியையும் தரவில்லையா?      - ச.செல்வம், பஹ்ரைன்

பதில்: அறிவு ஆசான் பெரியாருக்கு இந்தச் சலிப்பும், வேதனையும் வந்திருந்தால்... என்னவாகியிருக்கும்?

அய்யாவை நினைத்து, நன்றி எதிர்பாராமல், நமக்கும் மகிழ்ச்சியையும், இன்பத்தையும் தரும் பணியை இடையறாமல் செய்து வருவது நமது கடமையல்லவா?

கேள்வி: பாரதிதாசனார் பாரதிக்கு தாசன் என எதன் அடிப்படையில் தன் பெயரை மாற்றிக் கொண்டார்?                - கிருபாகர் ராஜ், பெருங்களத்தூர்

பதில்: பிரெஞ்சு அரசுப் பள்ளியில் ஆசிரியராக கவிஞர் கனக சுப்புரத்தினம்இருந்தபோது, தாம் பயன்படுத்திக் கொள்ள ஒரு புனை பெயராக தன்னை ‘பாரதிதாசன்’ என்று அழைத்துக் கொண்டார்! அதற்கு அவர் பாரதியாரிடம் கொண்ட நட்பும், அன்புமே காரணம். புதுச்சேரியில் கவிஞர் சுப்ரமணிய பாரதியார் சிறிதுகாலம் வாழ்ந்தபோது அவரிடம் தோழமையுடன் இருந்தவர் புரட்சிக் கவிஞர்! அவரைத் தனது மரியாதைக்குரியவராக எண்ணி இறுதி வரை வாழ்ந்தவர்.

கேள்வி: பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதைப் போல், மூன்று விழுக்காடு உள்ள பார்ப்பனர்களுக்கும் 2 அல்லது 3 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுத்து விட்டால் இப்பொழுது போல் எல்லா உயர் பதவிகளையும் அவர்கள் அபகரிப்பது தவிர்க்கப்படுமா? (10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டு)      - குணவேந்தன், பெங்களூர் 

பதில்: நாம் துவக்கத்திலிருந்து கூறுவது விகிதாச்சாரப் படியான வகுப்புரிமையைத் தான்! 2, 3 சதவிகித தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு முதலில் 1928இல் 16 சதவிகிதமும், பிறகு 1948இல் 14 சதவிகிதமும் இடம் கொடுக்கப்பட்டது.

என்றாலும், 100க்கு 100 அனுபவித்த ஏகபோகவாதிகள்  அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றனர்! அனுபவித்துச் சுகம் கண்ட கூட்டம் தங்களின் ஆதிக்கம் குறைவதை - ஏற்குமா எளிதில்?

கேள்வி: புதிய கல்விக் கொள்கையின் ஆபத்துகள் குறித்த விவாதம் பெரிதும் மும்மொழிக் கொள்கை பற்றியதாகவே சுருங்கி விடுகிறதே! அதன் பிற பேராபத்துகள் குறித்தும் மக்களிடம் விளக்க வேண்டாமா?       - முகிலா, குரோம்பேட்டை

பதில்: மில்லியன் டாலர் கேள்வி இது! முக்கியமாக சமூக நீதி, இடஒதுக்கீடு, பெண் கல்விக்கான வாய்ப்புக் குறைவு போன்றவற்றை அம்பலப்படுத்த வேண்டும்!

கேள்வி: கலைஞரின் படைப்புகளை ரசித்த நினைவுகளில் ஒன்றைப் பகிர முடியுமா?      - க.க.தென்றல், ஆவடி

 பதில்: சக்கரவர்த்தியின் திருமகன் என்ற நூல்!  இராஜகோபாலாச்சாரியார் (இராஜாஜி) கல்கியில் எழுதி வந்த சக்ரவர்த்தித் திருமகன் என்ற தொடருக்கு, பதில் தொடராக முரசொலியில் ‘மூக்காஜி’ என்ற பெயரில் கலைஞர் எழுதியது.

அந்தப் பதில் தொடருக்குக் கலைஞரின் தலைப்பு “சக்கரவர்த்தியின் திருமகன்”. இந்தத் தலைப்பே ராமனையும் குறிக்கும்; சக்கரவர்த்தி வேங்கடார்யா என்பவரின் மகனான ராஜகோபாலாச்சாரியாரையும் உள்ளடக்கமாகக் குறிக்கும்! கலைஞரின் அருமையான கருத்து வன்மை புலப்படும் இந் நூல், பல மறுப்புச் செய்திகளைக் கொண்டது!

அதுபோல பரதாயணம் என்பதும்! புதுவகை இலக்கியப் புரட்சிகள் இவை!