ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆசிரியர் விடையளிக்கிறார்
November 7, 2020 • Viduthalai • கழகம்

கேள்வி: பெரியார் சிலைக்குக் கூண்டு காவல்துறை அதிகாரிகளே காரணம் ஆகின்றார்கள், காவி வண்ணம் பூசும் கட்சித் தலைவர்களைக் கூப்பிட்டு எச்சரிக்கை செய்வதை விடுத்து, இவ்வாறு கூண்டு கட்டுவது நடைமுறைத் தவறல்லவா?

- செல்வ.கலைவாணன், அண்ணாநகர், தஞ்சை-6

பதில்  : காவல்துறை தங்களது நிர்வாகத் தோல்வியை உலகுக்கே பிரகடனப்படுத்துவது போன்ற விரும்பத் தக்காத செயல் ஆகும்!

ஒரு காவல் நிலையத்தை அசிங்கப்படுத்துவார்கள் சில சமூக விரோதிகள் என்றால், அதற்காக காவல் துறையைச் சுற்றி மதில் கட்டவேண்டும் என்று கூறுவது போன்ற விசித்திரம்.

குற்றவாளிகள் யார் என்பது நுண்ணறிவுப் பிரிவுக் குத்  தெரியாதா? சட்டம் ஒழுங்கை கடுமையாக நடை முறைப்படுத்தினால், ஒரு நொடிப் பொழுதில், தானே அடங்கும் இந்த சமூக விரோதச் செயல்! தலைவர்களை அவமானப்படுத்துவதற்குத்தான் 'கூண்டு' பயன்படும்!

எனவே, காவல்துறை அதைக் கைவிடவேண்டும்.

கேள்வி: வேலைத் தூக்கிக் கொண்டு யாத்திரை செல்வோம் என்று சொல்லும் பா.ஜ.க. மற்றும் இந்து மத அமைப்புகள்  மனு நீதி நூலை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யுமா?

- மன்னை சித்து, மன்னார்குடி-1

பதில்: பரிதாபத்திற்குரிய பா.ஜ.க. தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் முன்பு 'மிஸ்டு காலை' நம்பினார் கள்; இப்பொழுது 'மிஸ்டு கடவுளை' நம்பி வேலைப் பிடித்து, பக்தியால் சுற்றி வளைத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்; தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் இந்த 'வித்தை'கள் ஒருபோதும் எடுபடாது! 'மனுதர்ம' முறைப்படி அதன் தலைவருக்கே தர்மசங்கடம் விளையுமே!

கேள்வி:  தொடர் வண்டித் துறைக்கான தேர்வு மய்யங்களில் ஒன்று கூட தமிழகத்தில் இல்லை. (தகவல்: 'விடுதலை' 16.10.2020 பக்.4) இது பற்றி...

- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

பதில்: இதுபற்றி மக்கள் கணக்கு வைத்துக் கொண்டு வருகிறார்கள். 6மாதங்கள் கழித்து வட்டியும், முதலுமாக, தேர்தலில் திருப்பிக் கொடுப்பார்கள்!

கேள்வி: 'லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்கக்கூடாது?' என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆவேசமாக கேள்வி எழுப்பி  இருப்பது அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும் அல்லவா?

- சீதாலட்சுமி, திண்டிவனம்.

பதில்: அதில் 'கப்பம்' எவ்வளவு? யாருக்குப் போகிறது? என்பது நாடறிந்த ஒன்று. அவர்களை என்ன செய்வது? தராசில் நிறுப்பதா?

கேள்வி: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு அகில உலகில் மாற்றம் ஏற்படுத்தவல்லதா?

- ஜி. செல்வராணி, மாங்குளம்

பதில்: பெரிய அளவில் மாற்றம் வராது என்பது கடந்தகால அனுபவம். என்றாலும், அரசியல் அடா வடித்தனமும், கிராதகத்தன்மையும் முன்புபோல இருக் காது; ஜனநாயக அம்சம் தெளிவாகத் தெரியும்.

கேள்வி: பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை விவகாரத்திலும் சரி, மருத்துவக் கல்லூரி இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்க்கான உள் ஒதுக்கீடு விவகாரத் திலும் சரி, வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு ஆளுநர் காலதாமதம் செய்தது அரசமைப்புச் சட்டத் திற்கு முரணானது இல்லையா? மாநில அரசு இதனை எப்படி எதிர் கொள்ள வேண்டும்?

- சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

பதில்: அடிமை அரசு அல்ல; மக்கள் ஆதரவுள்ள ஒரு சுதந்திர அரசு என்று காட்டும் வகையில் நடந்து கொள்ளவேண்டும்.

கேள்வி: 1927இல் எந்த புத்தகத்தை அம்பேத்கர் எரித்தார் என்று குரோர்பதி நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட அமிதாப் பச்சன் மீது வழக்காமே! என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் பாஜகவினர்?

- முகிலா, குரோம்பேட்டை

பதில்: தாங்கள் ஹிந்துராஷ்டிரத்தையே மோகன் பாகவத் தலைமையில் நடத்துவதாக நினைப்புடன் வலம் வருகிறார்கள்! வரலாற்று உண்மையைக்கூட கூற உரிமையில்லையா?

கேள்வி: ராமேஸ்வரம் கோயில் நகைகளின் 'எடை குறைந்து’விட்டதாமே? களவை எவ்வளவு நைச்சிய மாகச் சொல்கிறார்கள்?

- க.தென்றல், ஆவடி

பதில்: அங்குள்ள கடவுளர் நகைகளின் எடை குறைந்ததற்கு, அங்குள்ள அர்ச்சகப் பார்ப்பனர்கள் மற்றும் சிலர் எடை கூடியுள்ளது என்பதுதான் காரணம் போலும்!

கேள்வி: ‘பகுத்தறிவாளர்’ என்று தன்னைச் சொல்லி வருகின்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி யொன்றில் மகாபாரதம் நம் முன்னோர்களின் வரலாறு என்றும், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது ‘மனுஸ்மிருதி புழக்கத்தில் இல்லாத புத்தகம்; அது பற்றி கேள்வியே எழாது’ என்றும் பச்சை பொய் யைக் கூறியுள்ளாரே? அய்யாவின் மொழியில் ‘பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதா’?

- செல்வம், பஹ்ரைன்

பதில்:  நண்பர் கமல்ஹாசன் எப்போது அரசியலில் நுழைய விரும்பினாரோ, அப்போதிருந்தே இதுபோல பல தடுமாற்றங்களும் உருமாற்றங்களும் அவரை ஆட்கொண்டே தீரும் என்பது அனுபவத்தில் நாம் காணும் அரசியலின் தன்மை! வாக்கு வங்கிக்காக நா(வா)க்கு மாற்றுவது எதிர்பார்க்க வேண்டிய ஒன்றுதானே!

மகாபாரதமும், மனுதர்மமும் விளைவிக்கும் தீமைகள் ஜாதி - தீண்டாமை - பெண்ணடிமை போன்றவை என்பதை எவரே மறுக்க முடியும்?

இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 372, அது செயலுக்கு வரும்போது உள்ள அனைத்துச் சட்டங் களையும் ஏற்றுக் கொள்வதாகச் சொல்கிறது.

372ஆவது பிரிவு தரும் விளக்கம்.

Continuance in force of existing laws and their adaptation.(பழைய சட்டங்கள் தொடரும்).

இதற்குரிய விளக்கம்:

“The expression ‘all the laws in force’ includes not only enactments of the Indian legistlature but also the common law of the land which is being adminstered in the court's in India. This includes not only the peronal law of the Hindu and Mohammedan Laws but also the rules of the English Common Law."

“இதன்படி அரசியல் சட்டம் அமலுக்கு வரும் போது இருந்த மதச் சட்டங்களான இந்துலா, முகமதியன் லா போன்றவை செல்லும் - நடைமுறையில் இருக்கும். ‘ஹிந்து லா’வின் முக்கிய ஆதார நூல்களில் ஒன்று மனுஸ்மிருதி. சிவில் மற்றும் திருமணம் பற்றிய பல வழக்குகளில் இன்னமும் அவை பின்பற்றப்பட்டு தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன என்பதை பலரும் புரிந்து கொள்ள வேண்டும். இதன்படி வர்ணமும், ஜாதியும் ஏற்கப்படுகின்றன.

 

சிறப்புக் கேள்வி:

பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன்

செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்

கேள்வி  1 : தந்தை பெரியாரோடு பயணித்த தமிழ்த் தென்றல் திரு.வி.க முதல் வேதாசலனார் வரை பிரிந்து சென்ற பிறகும், தந்தை பெரியாரின் தலைமைத்துவம் தொடர்ந்து அடைக்க இயலாததாய் இருந்த காரணம் என்ன?

பதில்:  நன்றி, பேராசிரியர் மங்கள முருகேசன் அவர்களே,

தந்தை பெரியார் ஒரு செயற்கைத் தலைவர் அல்ல; இயற்கையான தலைவர். தன்னையே நம்பி பெரும்பணி ஏற்று, எதிர்நீச்சலுக்கு அஞ்சாமல், அன்றாடம் மக்களைச் சந்தித்த சுயநலமில்லா சுய சிந்தனையாளர். அவர் வேறு எவரையும் நம்பி பொது வாழ்வில் இறங்கியவர் அல்லர். புகழ் வேட்டையாடும் பழக்கமும் இல்லாதவர்; உண்மையின்பால் தனது லட்சியப் பயணத்தை நடத்தியவர். அதுதான் அவரது ஒப்பற்ற தலைமை ஒளிவீசும் தலைமையாக எங்கும் வரலாற்றில் திகழ்வதற்கு மூலகாரணம்!

பதவி, புகழ், எதிர்பாராத துணிச்சல்தான் அவரது இயற்கைத்தன்மை!

இதுவே மூலபலம், அறிக!

கேள்வி  2 : தாங்கள் சிதம்பரத்தில் படித்த போது நடராசர் கோவில் அல்லது திருவாரூர் கோவில் போன்றவற்றிற்குச் சென்றதுண்டா?

 பதில்: சிதம்பரத்தில் படித்தபோதும் சரி, பிறகும் சரி எந்தக் கோவிலுக்கு எப்போதும் வேடிக்கைப் பார்க்கக் கூட சென்றதில்லை.

திருவாரூரில் கோவிலுக்கு வெளியே தெருவில்தான் பல பொதுக்கூட்டங்கள் நடைபெறுவதும், அதில் நாங்கள் பேசுவதும் வாடிக்கைதான்!

சிதம்பரத்தில் மாலை நடைபயிற்சிபோல, புலவர் இமயவரம்பனும், நானும் சில நண்பர்களும் நகரத்தில் நடக்கும்போதுகூட குறுக்கு வழி என்று கோவில் பிரகாரத்தில் நுழைந்து, வெளியே வரும் பழக்கம்கூட கிடையாது!