ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆசிரியர்களின் கருத்துகளை கேட்கப் போகிறார்களாம்!
August 26, 2020 • Viduthalai • தலையங்கம்

மத்திய பிஜேபி கொண்டு வரத் துடிக்கும் தேசியக் கல்விக் கொள்கை என்பது சமூகநீதியாளர்கள், மதச் சார்பின்மையாளர்களால் மட்டும் எதிர்க்கப்படும் திட்டமல்ல. கல்வியாளர்களும் எதிர்க்கின்ற ஒரு திட்டமாகும்.

உலக நாடுகளைச் சுற்றிப் பார்க்கும் நம் நாட்டு அமைச்சர்கள், அங்கெல்லாம் கல்வி எத்தனை வயதில் தொடங்கப்படுகிறது - தேர்வு முறைகள் எந்த அளவில் இருக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டு இருந்தால், இது மாதிரியான தேசியக் கல்வித் திட்டத்தைப் புகுத்த முன்வந்திருக்க மாட்டார்கள்.

உலகளவில் கல்வி கற்பித்தல் முறையில் முன்மாதிரியாக வெளிச்சம் பாய்ச்சும் நாடான பின்லாந்தில் கல்வி 7 வயதி லிருந்துதான் தொடங்கப்படுகிறது.

அவ்வாறு தொடங்கப்படுவதால் என்ன கெட்டு விட்டது - எந்த வகையில் தரம் குறைந்த கல்வி என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

7ஆம் வயதிலிருந்து 13ஆம் வயது வரை மாணவர்களைத் தரம் பிரித்துப் பார்ப்பது கிடையாது. தேர்வுகளை அடிப்படையாகக் கொள்ளாத பின்லாந்து மாணவர்கள் உலகளவில் தேர்வுகளில் முதன்மையான இடங்களைப் பெற்று வருகிறார்கள்.

இன்னும் அடிப்படைக் கல்வியையே திருப்திகரமாக எட்டாத இந்தியா, தகுதி - திறமை என்ற பெயரில் முதல் தலைமுறையாகக் கல்விக் கூடங்களை எட்டிப் பார்க்கும் - பிறப்பின் அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்ட அவர்கள் எந்த வகையிலும் கல்விமூலம் தலை எடுத்துவிடக்கூடாது என்ற உயர்ஜாதி பார்ப்பனீய மனப்பான்மை என்னும் கண்ணி வெடிக்கு மறுபெயர்தான் தேசியக் கல்விக் கொள்கையாகும்.

மூன்றாம் வகுப்பிலும், 5ஆம் வகுப்பிலும், எட்டாம் வகுப்பிலும் அரசுத் தேர்வு நடத்தும் இந்தக் Ôகொலைகாரத்தனத்தை' என்னவென்று சொல்லுவது?

எட்டிலிருந்து 11ஆம் வகுப்புவரை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு என்றால், இதன் நோக்கம் என்ன? கல்வியின்மீது வெறுப்பை ஏற்படுத்தும் விபரீதத் திட்டம்தானே! தப்பித்தவறி படித்தாலும், தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் மேற்கொண்டு படிக்காமல் இடைநிற்றல் (Drop-outs) என்னும் நிலைக்குத்தானே தள்ளப்படுவார்கள்?

அப்படி இடைநிற்றலுக்கு ஆளாகும் மாணவர்கள், வயிற்றுப் பிழைப்புக்காக ஏதாவது ஒரு தொழிலைத் தேர்வு செய்வார்கள். இவை பெரும்பாலும் அப்பன் தொழிலாகத்தானே இருக்கும்!

மேலும் இதனை ஊக்குவிக்க, ஆறாம் வகுப்பிலிருந்து பிற்பகலில் உள்ளூர்த் தொழில்களில் ஈடுபடுவார்கள் என்று தேசியக் கல்வி கூறும் சூழ்ச்சியின் பின்னணி இதுதான்.

சரி, இத்தனைத் தேர்வுகள் நடத்தி முடிந்தபின் மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டுமானால், இத்தனை ஆண்டு படித்தும், இத்தனைத் தேர்வுகள் எழுதியும் இருந்தாலும், அவை எல்லாம் குப்பைக் கூடையில் தூக்கி எறியப்பட்டு Ôநீட்' என்னும் Ôநீட்டாக' ஒடுக்கப்பட்ட மக்களை, ஏழை, எளிய கிராமப்புற மக்களை வரிசையாக நிற்க வைத்துக் கழுத்தை வெட்டும் ஏற்பாடே! சூத்திரன் சம்பூகனை ராமன் வெட்டிய வாள் புத்துரு எடுத்துச் சுழலுகிறது.

அதுதான் போகட்டும்; இப்படியொரு முக்கிய கல்வித் திட்ட முடிவை எடுக்கும் போது,  ஒரு ஜனநாயக நாட்டில் நாடாளுமன்றத்தில் வைத்து இத்திட்டம் விவாதிக்கப்பட வேண்டாமா? நாடாளுமன்ற நிலைக்குழுவின் கருத்தைக் கேட்க வேண்டாமா? மாநில அரசுகளின் கருத்தைத் தெரிந்து கொள்வதற்கான போதிய அவகாசமும், அணுகுமுறையும் தேவையில்லையா?

ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட கருத்துகள், ஆலோசனைகள் எந்த அடிப்படையில் ஏற்கப்பட்டன அல்லது நிராகரிக்கப்பட்டன? எதிலும் வெளிப்படைத் தன்மையில்லாத ஒரு முகமூடி அரசுதான் மோடி தலைமையில் மத்தியில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு.

இப்பொழுது தலைமை ஆசிரியர்களின் கருத்துகளைக் கேட்கப் போகிறார்களாம். தலைமை ஆசிரியர்கள் மட்டும் கருத்துச் சொல்ல வேண்டுமாம்.

ஒரு நாயைக் கொல்லுமுன், அது பைத்தியம் பிடித்து விட்டது என்று சொல்லிக் கொல்ல வேண்டும் என்ற காலனிய புத்தி- இந்தப் பார்ப்பனர்களுக்கானது.

இந்தத் தேசியக் கல்வித் திட்டம்தான் மத்திய பிஜேபி ஆட்சியைப் புதைகுழிக்கு அனுப்பப்போகிறது. எப்படியென்றால், பெரும்பான்மையான மக்களின் கல்விக் கண்ணைக் குத்தும் குரூரமான செயல்தான் இந்தத் தேசியக் கல்வி திட்டம் என்பதால் அந்த நிலை ஏற்படுவது தவிர்க்கப்பட முடியாததே!