ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆசிரியருக்குக் கடிதம்
July 29, 2020 • Viduthalai • மற்றவை

கரோனா காலத்திலும் புத்துணர்வு

உலகத்தையே கரோனா அச்சுறுத்தி ஆட்டிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அடங்கி ஒடுங்கிக் கிடக்காமல், தகைசான்ற அறிவாசான் தந்தை பெரியார் கண்ட பேரியக்கத்தைத் தொய்வில்லாமல் தொடர் ஓட்டம் போல் வழி நடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் விடுதலை பெருவிளைச்சல் விழா தொடங்கி இடஒதுக்கீட்டு பெரு மகனார் சாகு மகராஜ் வரை ஏராளமான சொற்பொழிவினை நிகழ்த்தி வருகின்றார்.

70 அகவை கடந்த என் போன்றோர் அறிந்திடாத, கேட்டிடாத, படித்திடாத அறிய பெரும் வரலாற்றத் தகவல்களை தனக்கே உரிய ஆவணச் சான்றுக ளுடன் காணொலி வாயிலாக அவரவர் வீட்டிலி ருந்தே கேட்டு மகிழ்வுறும் வகையில் நடத்திட எளிய வழிவகைகளைக் கண்டு, கழகத் தோழர்களுக்கு புத்துணர்வூட்டி வருகின்றார் ஆசிரியர் அவர்கள். இந்நிகழ்வு எங்களுக்கு எல்லையில்லா மகிழ்வினை அளிக்கின்றது.

கழகத்தின் பலதுறை அமைப்பினரையும் காணொலி வழிப் பரப்புரைக் கூட்டங்களை நடத்திடப் பணித்ததின் விளைவால் கழக முன்னோடிகளும், பரப்புரையாளர்களும், பேராசிரியர்களும், இனிய சொற்போர் நடத்தி வருகின்றனர். குறிப்பாக புதுவை மாநிலக் கழகத்தின் சார்பில் இதுவரை 18 காணொலிப் பரப்புரை நிகழ்வுகளை நிகழ்த்திச் சிறப்பிடத்தினைப் பெற்று, அனைவரும் இதனைத் தொடர ஊக்க மூட்டி வருகின்றனர்.

'ஒப்பற்ற தலைமை' எனும் அய்ந்து தொடரால் பயனடைந்தது போல் ஆகஸ்ட் திங்களிலும் அரிய பொழிவினை எதிர்பார்க்கின்றோம்.

- அ.இரா.முல்லைக்கோ, பெங்களூரு

- - - - -

இந்த அவசரம் ஏன்?

இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச் சரும், அவரின் அமைச்சகமும் - பள்ளி, கல்லூரிகள் திறப்பில் மிக மிக அவசரம் காட்டுகின்றன. கரோனா தொற்று நோய் வருகிற செப்டம்பர், அக்டோபரில் தான் இந்தியாவில் உச்சமடையும் என மருத்துவத் துறை அறிவுறுத்துகின்றது.

உலக சுகாதாரத் துறையும் இந்த அறிவிப்பை அடிக்கடி வெளியிடுகின்றது. இந்த நோய் காட்டுத் தீயாய் பரவுகின்ற நேரத்தில் - தன் துறையும் செயல் படுகிறது என்பதைக் காட்ட நினைக்கிறாரா, அத் துறையின் அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால்? பள்ளி, கல்லூரிகளை ஒரு கல்வியாண்டுக்கு நிறுத்தி வைத் தால் கூட தவறில்லை என்று கல்வியாளர்கள் கருதுகின்ற இந்நேரத்தில், இந்த வாரத்திற்குள் - தமிழக அரசு, பள்ளி திறக்கும் தேதியை தெரிவிக்க வேண்டும் என்பது சரியா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

முழு ஊரடங்கு இன்னும் எத்தனை மாதங்களுக்கு தொடரும் என்பதை - பொது வாகனப் போக்கு வரத்து எப்பொழுது தொடங்கும் என்பதை முடிவு செய்ய இயலாத இந்நேரத்தில் - பள்ளிகளைத் திறக்க வேண்டிய கட்டாயம் என்ன? கல்லூரிகளைத் திறக்க வேண்டிய நிர்பந்தம் என்ன? தங்களிடம் அதிகாரம் உள்ளது என்ற ஆணவத்தில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது; மாநில அரசுகளை நிர்பந்திக்கக் கூடாது. இந்தச் சிந்தனைகளை எல்லாம் மீறி பள்ளி, கல்லூரி களைத் திறந்தால் எத்தனை ஆயிரம் - எத்தனை லட்சம் மாணவர்கள் உயிர் போகும் என்பதை சிந் திக்க வேண்டும். பலி எண்ணிக்கையைக் மறைத்து விடலாம் என்ற திட்டமா?

- பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், சிதம்பரம்