ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனைகள் குறள் வெண்பா வடிவில்...
August 1, 2020 • Viduthalai • மற்றவை

ஆக்கம்: சுப.முருகானந்தம், மதுரை

36.தொண்டு மனம், பிறருக்கு உழைக்கும் வானம் போன்ற பரந்த மனம் அமைந்தவர்கள், சிறந்த மனிதர்கள் மட்டுமல்ல; வரலாற்று மனிதர்கள். என்றும் எவருக்கும் எடுத்துக்காட்டுகள் (Role models) என்பதை எண்ணி நன்னம்பிக்கையாளராகவே வாழுங்கள்! நீண்டநாள் வாழமுடியும் - அதன்மூலம்!!

பிறருக் குழைக்கும் பெருமனத் தொண்டர்

சிறப்பர் வரலாற்றில் தேர்ந்து.

  1. உங்கள் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு பேரிடரும், உங்களுக்கு உள்ளவுறுதி இருந்தால், அது பேரிடராக இருக்காது. பெரும் திருப்திக்கு அடிகோலிய, ஒரு சம்பவமாக, மாற்றம் அடையலாம். மறவாதீர்!

பேரிடரு மாறுமே போரிடும் நெஞ்சரைப்

பார்த்ததும் வேறிடம் பார்த்து.

  1. தனது அறியாமை என்னவென்று ஒரு மனிதன் அறிந்து கொள்வதிலும் புரிந்து கொள்வதிலும் தானே அவனது அறிவு பளிச்சிடுகிறது.

தன்னறி யாமை தனையறி வான்நிறை

மின்னும் விளக்காய் மிளிர்ந்து.

  1. எந்த ரகசியமும் இல்லாது வாழ்பவர்களே இணையர்கள், உயிருக்கு உயிரான உற்ற தோழர்கள் என்பதை மனதில் நிலை நிறுத்தி, ஆலையிட்ட கரும்பாக்கி விடிவைப் பிழியுங்கள். இரும்பும் ஒரு நொடியில் துரும்பாகி ஓடுவதை காண்பீர்!

இரும்பைத் துரும்பாக்கி இன்பத்தை யாக்கும்

மருந்தாம் திறந்த மனது.

  1. தன்மதிப்பு (self-respect) என்பது ஒருவரது, மானத்தை, மரியாதையை உணர்ந்து அதைக் காப்பாற்ற வேண்டிய பண்பு ஆகும். தன்முனைப்பு என்பது தனக்கு, அளவுக்கு மீறிய தகுதி இருப்பதாகவும், எனவே, தனக்கே மற்றவர் கீழ்படிதல் அவசியம் என்றும் வலியுறுத்தும் ஒரு சர்வாதிகாரி போன்ற போக்கு.

தன்மதிப்பும் தன்முனைப்பும் தண்ணீருந் தீயுமாம்

உன்னிப்பாய் கண்டு வுணர்.

  1. பலர் உலகம் என்னவென்றே அறியாது, "எப்போதும்" தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்று வாழ்கிறார்களே, அவர்கள், எவ்வளவு பெரிய செல்வந்தர்களாக இருப்பினும் கூட, அவர்கள் தத்தம் சுயநலப் பெருக்கத்தால், ஏழ்மையில் உழலுபவர்களே ஆவார்கள்.

செல்வம் மிகவுற்றுஞ் செய்யார் பொதுப்பணி

இல்லாரின் ஏழை யவர்.

  1. வாழ்த்துகள் வெறும் ஒளி அல்ல; அச்சிடப்பட்ட எழுத்தல்ல. எந்த நிலையிலும் நாம் அனைவரும் உறவினர் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டியவர் என்ற அந்த உறுதியைத் தான் வாழ்த்தாகக் கூறுகிறோம்.

வாழும் நாளெல்லாம் வருவோ முறவென்றே

வாழ்கவெனச் சொல்வார் வலிந்து.

  1. முதலில் எது மகிழ்ச்சியைத் தந்ததோ, அதே பணம் சேரச் சேர, கவலையையும் எதிரிகளையும் நமக்கு நிம்மதியற்ற நிலையும் நாம் கேளாமலேயே கொண்டு வந்து நிறுத்தி நம்மைத் திக்குமுக்காடச் செய்யும்.

தருவதூஉம் தந்ததைத் தானெடுத்தே யின்னல்

தருவதூஉம் எல்லாம் பணம்.

  1. "என் கையிலோ, நம் கையிலோ என்ன இருக்கிறது?" என்று கேட்காதீர் இனி! ஆம், என் நினைப்பிலும், செயலிலும்தான் அனைத்தும் உள்ளன என்ற மன உறுதியால் உயருங்கள்.

நினைப்புச் செயலிணை நெஞ்சுறுதி வாழ்வின்

அனைத்தும் கொடுக்கு(ம்) அறி.