ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனைகள் குறள் வெண்பா வடிவில்...
July 25, 2020 • Viduthalai • மற்றவை

ஆக்கம்: சுப.முருகானந்தம், மதுரை

  1. மனிதர்களை மாற்றிடும் அரிய சாதனை, சிறப்புவாய்ந்த பல நூல்கள்தான். மாறிய மனிதர்களால் சமூக அரசியல் பொருளாதார மாற்றங்கள் உருவாயின.

மாற்றுமே நன்னூற்கள் மானிடரைப் பின்னவர்

மாற்றுவார் ஞாலத்தின் போக்கு.

  1. எதையும் எதிர்கொண்டு வாழ்வோம் என்ற இன்றைய துணிச்சல், நாளை வரும் துன்பங்களைக் கூடத் துரத்தியடிக்கும் மறவாதீர்!

இன்றின் துணிவால் எதிர்வருந் துன்பமும்

குன்றி விலகுங் குனிந்து.

  1. எல்லா மனிதர்களுக்கும் பிரச்சினைகள், கவலைகள், துன்பங்கள் உண்டு. அவை கண்டு துவண்டு விடக் கூடாது; நம் பயணத்தை மேலும் உறுதியுடன் தொடர வேண்டும் என்ற ஈடுபாட்டுடன் செயல்படுவது அவசியம்.

வழியில்லா ஊரும் வலியறியாப் பேரும்

விழிகண்ட துண்டோ? விழி.

  1. எதிரேயுள்ளவரைக் குற்றம் சுமத்தப் போய், அது தனக்கே கேடாக வந்து முடியுமே என்று கூட எண்ணாமல், பல மனிதர்கள் - தாம் கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டே கற்கோட்டைகளை நோக்கிக் கல் எறிவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

கற்கோட்டை மீதெறிந்த கண்ணாடி வீட்டார்கள்

தற்குற்றம் காணாதார் சொல்.

  1. எவரையும் எடை போட்டு பார்க்கும் போது சரியான எடைக் கல்லையும், சாயாத தராசையும் பயன்படுத்துங்கள்; இல்லையேல், நட்டம், எடை போடுபவருக்கே அதிகம்.

சாய்ந்த துலாக்கோல் சலிந்த எடைக்கல்லால்

ஆய்ந்த வரடைவர் கேடு.                   

  1. தவறுக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கிக் கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது; போட்டியில் தோற்றாலும் ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவன் தான், வெளியில் நின்று வேடிக்கைப் பார்ப்பவனை விட, விமர்சிப்பவனை விட மேலானவன் என்பதை மறவாதீர்!

வேடிக்கைப் பார்த்தலின் மேலதாம் போட்டியில்

ஓடியுந் தோற்ற திறன்.

  1. ஒரு நன்னம்பிக்கையாளன், கடும் நோய் வந்தாலும் கூட, தனது தைரியத்தை இழக்காமல், அதனை எதிர்த்து வலுவுடன் போராடுவான். பின்வாங்க மாட்டான். வியாதி பயப்படும்! பிறகு ஓடும்!

தீராநன் நம்பிக்கை தேக்கிய நெஞ்சினரைப்

பாராமல் நோயோடும் பார்.

  1. நாம் நாமாக இருக்காமல், நாம் பிறராகவே வாழ்கிறோம். அப்படி வாழாமல், நமக்கென வாழ்வு எப்படி அமைய வேண்டுமென்று, ஒரு குறிக்கோளை வகுத்துக் கொண்டு, அதன்படி வாழ்வதே சிறப்பு..

வாழாது வாழ்தல் வகையன்று; நம்மிலக்கு

தாழாது வாழ்தல் தலை.

  1. சுவை என்று சொல்லும் போது இனிப்பு என்று கற்பனை செய்து கொள்ளாதீர். இனிப்புச்சுவை போலவே கசப்பும், கார்ப்பும், புளிப்பும், உவர்ப்பும், துவர்ப்பும் சுவை தான் என்பதை மறவாதீர்கள். வாழ்வின் பல கட்டங்களில் இந்த சுவைகள் இருந்தால்தான், அது உயிர் வாழ்க்கை ; உயர் வாழ்க்கை , மறவாதீர்

நாக்கிற்கு ஆறுசுவை; நன்றுணர்ந்தால் வாழ்க்கையின்

போக்கிற்கு மஃதே வகை.

  1. வீட்டில், குடும்பங்களில், இயக்கங்களில், நிறுவனங்களில் கூட இந்தக் குறிப்பறிந்து செயல்படும், கூட்டுப் பணி தோழர்கள் கிடைப்பார்களானால், அதைவிட, மிகப்பெரிய லாபம் வேறு இல்லை.

குறிப்பை யறிந்து கொடுப்பா ருழைப்பைப்

பெறுவது கோடி தகும்.