ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அலட்சியம் காட்டினால் அரசியல் ரீதியாகக் கடும் விலையைக் கொடுக்க நேரிடும்!
October 17, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

* அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவிகித ஒதுக்கீடு - அனுமதியளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போடுவது ஏன்?

* கண்கலங்கி உயர்நீதிமன்ற நீதிபதி எழுப்பிய கேள்வி கண்களைத் திறக்குமா?

* தமிழ்நாடு அரசின் உறுதிப்பாடும் வரவேற்கத்தக்கதே!

மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர் களுக்கு ஏழரை சதவிகித இட ஒதுக்கீடு செய்த தமிழக அரசின் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தராததைச் சுட்டிக்காட்டியும், உயர்நீதிமன்ற நீதிபதி கண்கலங்கி எழுப்பிய கேள்வியை மேற்கோள்காட்டியும், ஆளுநர் அனுமதி அளிக்கா விடின், அரசியல் ரீதியாக விலை கொடுக்க நேரும் என்று குறிப்பிட்டும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கை வருமாறு:

‘நீட்' தேர்வு என்பது ஒரு ‘நவீன மனுதர்மம்' என்பது நாளும் மக்களுக்கு நன்கு புரிந்துவருகிறது.

ஒடுக்கப்பட்டோருக்குக் கதவடைப்பு

வறட்டுப் பிடிவாதம் - அதுவும் தமிழ்நாடு போன்ற மருத்துவக் கல்வியில் வளர்ந்தோங்கி வரும் மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட, கிராம, ஏழை, எளிய மாணவர்களுக்கு வாய்ப்புக் கதவை அறவே மூடுவதற்கே இப்படி ஒரு திட்டமிட்டு தடுப்பு ஏற்பாடு!

‘நீட்' தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் - கோச்சிங் சென்டருக்குப் போகாதவர்கள் முதல் ஆண்டிலேயே வெற்றி பெறக் கூடிய வாய்ப்பும் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை வெகு வெகுச் சொற்பமே என்பது சுவர் எழுத்து போன்று பளிச்சிடுகிறது!

‘நீட்' தேர்வு எழுதிடும் மாணவர்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் குறிப்பாக அரசு பள்ளிகளில் படித்து ‘நீட்' தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் போதிய வாய்ப்புக் கிட்டவில்லை என்பதால், தமிழக அரசு ஓய்வு பெற்ற ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு குழு அமைத்தது.

அக்குழு, 10 சதவிகித இட ஒதுக்கீடு தர பரிந்துரை தந்தது.

ஆனால், தமிழக அமைச்சரவை 7.5 சதவிகிதத் திற்கான தனிச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றியது கடந்த செப்டம்பர் மாதம். இப்போது 45 நாட்களுக்கு (ஒன்றரை மாதங்களுக்கு) மேலாக அது ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

நீதிபதியின் கண்ணீர்!

இதற்கிடையில் ‘நீட்' தேர்வு எழுதியுள்ள அரசு பள்ளி மாணவர் சார்பிலும், மருத்துவர் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை முன்பு நீதிபதிகள் ஜஸ்டீஸ் கிருபாகரன், ஜஸ்டீஸ் புகழேந்தி ஆகியோர் அமர்வுமுன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் நியாயமான கேள்விகளை எழுப்பி, நீதி பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தோடு, விசாரணை செய்து தமிழக அரசு வழக்குரைஞரிடம், ‘‘ஆளுநர் அவர்களிடம் ஒரு மாதத்திற்கும்மேல் கோப்பு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. மாணவர்கள் சேர்க்கைக்கு இவ்வாண்டு பயன்பெறச் செய்யவேண்டாமா?'' என்று உருக்கத்துடன் கேட்டுக்கொண்டு, ஒரு சதவிகிதத்திற்கும் கீழேதான் அரசு பள்ளிகளில் உள்ள மாணவர் சேரும் நிலை இருப்பதும், ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் பல லட்சம் ரூபாய் செலவழித்து பயன்பெற முடியாத யதார்த்த நிலை குறித்தும் கேட்டபோது, மூத்த நீதிபதி திரு.கிருபாகரன் கண்களில் நீர் வழிந்தோடியது என்று செய்திகள் கூறுகின்றன!

தமிழ்நாட்டு மெத்தனம் குறித்து நியாயாதிபதிகள்கூட கண்ணீர் விடும் காட்சி அசாதாரணமானது அல்லவா?

நிலைமை எவ்வளவு மோசமானதாகியிருந்தால், இப்படி ஒரு காட்சி அவலம் ஏற்பட்டிருக்க முடியும்?

தமிழக அரசின்

வரவேற்கத்தக்க முடிவு!

தமிழ்நாட்டு ஆளுங்கட்சியை ‘மிரட்டி'டும் வித்தைகளை, வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் மத்திய பா.ஜ.க. ஆட்சி செய்வதும், குட்டக் குட்டக் குனிந்து போகும் தமிழக அரசின் எல்லையற்ற சகிப்புத்தன்மையையும் உலகம் காண்கின்றது.

ஆளுநர் ஏற்கெனவே உச்சநீதிமன்றமே தடை யில்லை என்று கூறிய எழுவர் விடுதலை சம்பந்தமாகப் பிடிவாதமாக முரண்டு பிடித்து கோப்புகளை வைத்துள்ள நிலைபோல, இந்த ‘நீட்' தேர்வு இட ஒதுக்கீடு சட்டத்திலும்கூட உடனடியாகத் தனது ஒப்புதலை அல்லது காரண காரியங்களை மறுப்புடன் கூடிய திருப்பி அனுப்புதலோ செய்யாமல் இருப்பது, எவ்வகையில் நியாயம் ஆகும்? இதில் தமிழ்நாடு அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்து, அந்த இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வரும்வரை இவ்வாண்டு கலந்துரையாடல் நடைபெறாது என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்க ஒரு உத்திதான். உறுதியுடன் இறுதிவரை இருந்தால் சரி.

இதில் இந்த அரசு உறுதிகாட்டிட வேண்டும்; ஏற்கெ னவே உச்சநீதிமன்றத்தில் அண்மையில் வெளிவந்த பல முக்கிய தீர்ப்புகளில் மாநில அரசு உள்ஒதுக்கீடு வழங்க அரசமைப்புச் சட்டப்படி - சமூகநீதியில் - எந்தத் தடையும் கிடையாது என்று அரசமைப்புச் சட்ட அமர்வு கூறியிருக்கும் நிலையில், தமிழக ஆளுநர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வது ஏன் என்பது புரியவில்லை. இதற்காகவே முதலமைச்சரும், சில அமைச்சர்களும் சில வாரங்களுக்குமுன் ஆளுநரை நேரில் சந்தித்து, நினைவூட்டி வற்புறுத்தியும் வந்தார்கள் என்றும் செய்திகள் வந்தன.

நீதிபதிகள் வருந்தி கண்கலங்கும் அளவுக்கு சமூகநீதி இங்கு திட்டமிட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுவது - எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல!

அரசியல் ரீதியாக

கடும் விலையைக் கொடுக்க நேரிடும்!

அல்லற்பட்டு ஆற்றாது ஏழைகள் அழும் கண்ணீ ருடன், நீதியரசர்கள் கண்ணீரும் இணையும் நிலை ஒருபோதும் வீணாகிவிடாது!

இதில் காட்டப்படும் அலட்சியம், கடும் விலையை சம்பந்தப்பட்டவர்கள் அரசியல் ரீதியாக கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாவது உறுதி! உறுதி!!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

17.10.2020