ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அரசு கல்லூரிகள்: மாணவர் சேர்க்கை தாமதம் ஏன்
September 7, 2020 • Viduthalai • தலையங்கம்

அரசு கல்லூரிகள்: மாணவர் சேர்க்கை தாமதம் ஏன்?

கல்விக் கூடங்கள் கரோனா காரணமாகத் திறக்கப்பட முடியவில்லை. தேர்வுகளையே நடத்த முடியாமல் தேர்வுகள் நடத்த முடியாத சூழலில் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க வேண்டிய கட்டாயம் - இவை எல்லாம் சரிதான்.

இணையத்தின் மூலம் கல்லூரிகளில் - குறிப்பாக அரசு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை பற்றி வந்துள்ள தகவல் கவலையை அளிக்கிறது.

"தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 128 வகையான இளநிலை பட்டப்படிப்புகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு இணைய வழியில் 3.12 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அதில் 2.25 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து, கல்லூரி அளவிலான தரவரிசை வெளியிடப்பட்டு முதல்கட்ட மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி கடந்த 4ஆம் தேதி வரை நடந்தது. இதில், தரவரிசையில் முன்னிலையில் இருந்த பல மாணவர்களுக்கும் கல்லூரிகளில் இருந்து அழைப்பு வரவில்லை.

இந்நிலையில், முதல்கட்ட மாணவர் சேர்க்கையில் மொத்தம் 53 ஆயிரம் இடங்களே (60 சதவீதம்) நிரப்பப்பட்டுள்ளன. இதில் பல கல்லூரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெறும் 40 சதவீதத்துக்கும் குறைவாகவே நிரப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசு கல்லூரிகளில் இருந்து அழைப்பு வருவது தாமதமானால், மாணவர்கள் தனியார் கல்லூரி நோக்கி செல்லும் நிலை ஏற்படும் என்பதால், அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்து உயர்கல்வித் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அரசு கல்லூரி முதல்வர்கள் சிலர் கூறியதாவது:

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் திருநெல்வேலி, வேலூர், தஞ்சாவூர், தருமபுரி போன்ற மண்டலங்களில் உள்ள பல கல்லூரிகளில் 40 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கையே நடந்துள்ளது. புதிய கல்லூரிகள், அடிப்படைஇணைய வசதி இல்லாத கல்லூரி களில் மாணவர்களின் விவரங்களை பதிவிறக்கம் செய்து தரவ ரிசை பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. மாணவர் சேர்க்கை குறைய இதுவே காரணம். அதேநேரம், சென்னை, கோவை, மதுரை மண்டலங்களில் உள்ள பல அரசு கல்லூரிகளில் 80 சதவீத மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.

அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை விரைந்து நடத்துமாறு முதல்வர்களை கல்லூரிக் கல்வி இயக்குநரகம், உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளன. அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனவே, மாணவர்கள், பெற்றோர் அச்சப்பட வேண்டாம். செப்டம்பர் 7 (இன்று) முதல் போக்குவரத்தும் சீராகிவிடும் என்பதால், மாணவர் சேர்க்கை விரைந்து நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."

மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று சில  அரசு கல்லூரி முதல்வர்கள் கூறினாலும் இந்தப் பிரச்சினை அரசின் கவனத்துக்குச் செல்லவில்லையா?

அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அரசுக் கல்லூரிகளில் இருந்து, அவர்களுக்கு அழைப்பு வரவில்லை என்றால் மாணவர் களும், பெற்றோர்களும் அச்சப்படாமல் இருக்க முடியுமா?

அடிப்படை இணைய வசதி இல்லாத கல்லூரிகளில் மாணவர்களின் விவரங்களைப் பதிவிறக்கம் செய்து தர வரிசைப் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது என்று கூறும் சமாதானம் ஏற்கக் கூடிய ஒன்றல்ல.

இதன் மூலம் என்ன தெரிகிறது? விஞ்ஞானம் வளர்ந்துள்ள ஒரு கால கட்டத்தில்  இணையத் தொடர்பு வசதியில்லாத கல்லூரிகளும் இருக்கின்றன என்பது ஆரோக்கியமானதுதானா?

கல்வி வளர்ச்சிக்காகக் குறைந்தபட்சம் 6 விழுக்காடு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று கல்வி நிபுணர்களும், ஆய்வுகளும் கரடியாகக் கத்தினாலும், அதனை மத்திய, மாநில அரசுகள் காதில் போட்டுக் கொள்ளாததன் விளைவுதான் அது!

இணைய வசதியே இல்லாத கல்லூரிகள் என்றால், அந்தக் கல்லூரிகளில் மற்ற மற்ற வசதிகளும் எந்த அளவில் இருக்கும் என்ற அய்யமும், கேள்வியும் எழத்தானே செய்யும்!

தனியார்க் கல்வி நிறுவனங்களை மக்கள் நாடிச் செல்லுவ தற்கும், அரசுக் கல்வி நிறுவனங்களை அலட்சியப்படுத்துவதற்கும், இது போன்ற அடிப்படை வசதிகளே இல்லாமல் அரசுக் கல்வி நிறுவனங்கள் பெயர் அளவுக்கு இயங்குவதுதான்.

தனியார்க் கல்லூரிகளில் வகுப்புகள் காணொலி மூலம் செயல்படத் தொடங்கி விட்டன. அரசுக் கல்லூரிகளில் இன்னும் மாணவர் சேர்க்கையே இந்த நிலையில் இருப்பது வேதனைக் குரியதே.

தனியார்க் கல்லூரிகள், அரசு கல்லூரிகளில் நிர்ணயிக்கப் பட்டுள்ள கட்டணத் தொகை என்பது மலைக்கும் - மடுவுக் குமானது என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்கள் அரசு கல்லூரிகளையே நம்பியிருக்கிறார்கள். அவர்களை அச்சத்திற்கும், ஏமாற்றத்திற்கும் ஆளாக்காமல் அரசு தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு முடிவு எட்டப்பட ஆவன செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.