ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அரசுகளுக்கே சவால்விடும் கார்ப்பரேட் சாமியார்கள்!
September 5, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்தியானந்தாவை கைது செய்து சிறையில் தள்ளாதது ஏன்?

மோசடி சாமியார்களை அம்பலப்படுத்தும் பிரச்சாரத்தை திராவிடர் கழகம் மேற்கொள்ளும்!

அரசுகளுக்கே சவால் விடும் மோசடி சாமியாரான தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்தியானந்தாவை கைது  செய்து சிறையில் தள்ளாதது ஏன்? மோசடி சாமியார்களின் சொத்து களைப் பறிமுதல் செய்யத் தயங்குவது ஏன்? இந்தச் சாமியார்களின் மோசடிகளை அம்பலப்படுத்தும் பிரச்சாரத்தை திராவிடர் கழகம் விரைவில் மேற்கொள்ளும்  என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நம் நாட்டில் காவி அணிந்த மோசடி சாமியார்களுக்குப் பஞ்சமே இல்லை. அவர்கள் சட்டம், ஒழுங்குபற்றி சிறிதும் கவலைப்படாமல், அரசுகளுக்கு எதிரான ஒரு போட்டி அரசாங்கத்தையே (Parallel Government) நடத்துகிறார்கள்; மத்திய - மாநில அரசுகள் தங்களின் ‘சர்வ சக்தி வாய்ந்த' காவல்துறைகளை முடுக்கிவிட்டு, அவர்களைக் கைது செய்து காராக்கிரகத்தில் அடைத்து சமூக ஒழுங்கையும், ஒழுக்கத்தையும் காப்பாற்ற எதனால் தவறுகிறார்கள் என்பது புரியவில்லை.

காலத்திற்கேற்ப

‘கார்ப்பரேட்' சாமியார்கள்!

பல சாமியார்கள் இப்போது காலத்திற்கேற்ப ‘கார்ப் பரேட் சாமியார்களாகி' கோடிக்கணக்கில் கொள்ளை யடித்த சொத்துக்கு அதிபதியாகி, அப்பாவி மக்களை ஏமாற்றி, வஞ்சித்து - அவர்தம் பக்தி மூடத்தனத்தை மூலதனமாக்கி ‘பக்தி' வியாபாரம் செய்து வருகின்றனர்!

பாலின வன்கொடுமைகளுக்கும், வக்கிரங்களுக்கும், வசீகரமான ‘வசந்தமாக' அவர்தம் துறவு(?) வாழ்க்கை வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது.

தொலைக்காட்சி ஊடகங்கள்மூலமும், கூலி எழுத்தாளர்கள்மூலமும் இந்த ‘ஆன்மீக' ஹம்பக்குகள் தங்களை அபரிமிதமாக விளம்பரப்படுத்திக் கொண்டு, ஏமாற்றும் ‘420' பேர்வழிகளாகவும் திகழுகிறார்கள்.

திருவண்ணாமலையில் படித்துவிட்டு, வேலை கிட்டாத ஒரு இளைஞன் இந்த குறுக்கு வழியில் இப்போது ‘அவதாரமாகவே' மாறிவிட்டான்!

நித்தியானந்தாவின்

நிட்டுரங்கள்!

நித்தியானந்தா என்ற பெயருடன் பல இடங்களில் சொத்து- மடம் - சிஷ்யைகள் முதலியன - கருநாடகத்தில் ஒரு பெரும் ‘சாம்ராஜ்யம்.' அங்கே இருந்து ‘தேடப்படும் குற்றவாளியாக' தலைமறைவாகியுள்ள நிலையில், இப்போது ‘கைலாசம்' என்ற ஒரு புது நாட்டையே உருவாக்கியுள்ளதாகவும், அதில் யாவரும் பாஸ் போர்ட்டுக்கு விண்ணப்பித்துச் சேரலாம் எனவும், அதற்கென தனியே ரிசர்வ் வங்கி, தங்க நாணயம் எல்லாம் தயாராகியும் விட்டதாம்! அடிக்கொரு முறை தொலைக்காட்சி ஊடகங்களில் பரவலாக செய்தி வருவதும், திரைப்பட நட்சத்திரங்களையே தோற் கடிக்கும் வண்ணம் ஒப்பனைகளை விதவிதமாகச் செய்துகொண்டு ‘வித்தை' காட்டுவதுமான விவஸ்தை யற்ற செயல்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

இது ஏறத்தாழ 8 மாதங்களுக்குமேல் தொடர்ந்து இடைவெளி விட்டுவிட்டு விளம்பரப்படுத்தப்படுகிறது!

தேடப்படும் குற்றவாளி தொலைக்காட்சியில் தோன்றுவது எப்படி?

தேடப்படும் குற்றவாளியை மத்திய - மாநில அரசுகளின் சக்தி வாய்ந்த காவல் துறை ஏனோ கண்டுகொள்ளாதவைபோல், மவுனம் சாதித்து, அலட் சியமாக இருக்கிறதா என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.

இதுகுறித்து உடனடியாக தகுந்த சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து கைது செய்வதுடன் அந்த போலி புரட்டு ஆசாமியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய முன்வரவேண்டும்!

அரசின் பல்வேறு துறைகள் இத்தகைய போலிகள், காவி(லி)களின் பக்தி வேஷத்தை அம்பலப்படுத்தி, உரிய வகையில் அரசுகளுக்குச் சவால்விடும் நிலையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

தொலைக்காட்சிகளில் எப்படி சினிமா காட்சிகள் போல - பலவித ஒப்பனை ஜோடனைகளுடன் இவர் களது மோசடி வித்தைகள் விளம்பரப்படுத்தப்படுவதை வைத்து, இவற்றிற்கெல்லாம் வேர் எங்கே இருக்கிறது என்பதை அரசுகள் மனம் வைத்தால், அடுத்த நொடிகளில் கண்டறிந்து, கைது செய்து, நீதிமன்றங்களில் நிறுத்தி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுத்து, சமூ கத்தில் ஒழுங்கையும், ஒழுக்கத்தையும் நிலைநாட்டிட லாமே?

ஆட்சிகள் மனம் வைத்தால் கைது செய்து

சிறையில் தள்ளலாம்!

மனமிருந்தாமல் மார்க்கமுண்டு. ஏனோ தயக்கம்? புரியவில்லை!

மக்களிடம் இந்த மோசடி சாமியார்கள்பற்றிய  அம்பலப்படுத்தும் பிரச்சாரத்தையும் திராவிடர் கழகம் மேற்கொள்ளும் திட்டத்தில் விரைவில் இறங்குவது உறுதி! உறுதி!!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

5.9.2020