ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அரசியல் சூதாட்டத்தில் அலைவுறும் பாமரரின் வாழ்வு
September 5, 2020 • Viduthalai • மற்றவை

நூல்: வாழ்க வாழ்க
ஆசிரியர்: இமையம்
வெளியீடு: 
க்ரியா பதிப்பகம்
விலை: ரூ.125/- 

இமையம் அவர்களின் சமீபத்திய படைப்பான ‘வாழ்க வாழ்க ‘ குறுநாவல், பல்வேறு வகைமைகளில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முன்னோடிப் படைப்பாகத் தடம் பதித்திருக்கிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து புனையப்பட்டிருக்கும் இக்குறுநாவல், சமகால அரசியல் சூழலை எந்த சமரசமுமின்றி, படம் பிடித்துக் காட்டுகிறது. தமிழக அரசியல் சூழலை எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் எதிர்நிலையையோ, சார்புநிலையையோ முன்வைக்காமல், அதன் பொது குணாம்சங்களை தோலுரித்துக் காட்டியிருக்கிறது. ஒரு நாள் நிகழ்வுகளின் தொகுப்பாக விரியும் கதைக்களம், ஒரு தலைமுறைக்கான விவாதங்களை முன்வைக்கிறது. எளிய பாமர மக்களின் வாழ்வின் ஊடாக, கட்சி அரசியலின் அசல் முகங்களை, அந்த எளிய மக்களின் மொழியாகவே பதிவு செய்திருக்கும் விதத்தில், இந்நூல்  மேலும் கவனிக்கத்தக்கதாக அமைகிறது.

இன்றைய காலக்கட்டத்தில், அரசியல் நடத்தப்படும் விதத்தை உயர்மட்டத் தலைவர்களின் செயல் பாடுகளைக் கோடிட்டுக்காட்டிவிட்டு, உள்ளூர் தலைவர் கள், பொறுப்பாளர்கள், அடிமட்டக் கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைவரையும்,  கட்சி மேலிடம் எவ்வாறு சுரண்டுகிறது, அவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை, அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறார் இமையம்.

ஒவ்வொரு தொகுதியிலும், அந்தந்தப் பகுதியின் சாதிக்காரர்களாலேயே, கட்சி அமைப்பு பரிபாலனம் செய்யப்படுகிறது. இதில் கட்சிகளை விட சாதிகளின் கைதான் மேலோங்கியிருக்கிறது. பிரச்சனை என்று வரும்போது, கட்சியைவிட சாதிக்குதான் முதலிடம் தரப்படுகிறது என்ற யதார்த்தத்தையும், பூடகமின்றி நேரிடையாகவே சொல்கிறது நாவல்.

கட்சிக்காரன் என்றாலே அவன், கட்சியிலிருந்து ஆதாயங்களை அனுபவிப்பவன் என்ற பொதுபுத்தியை உடைத்து, அவர்களுக்கும் பல நெருக்கடிகளும், சவால்களும் இருப்பதைப் பதிவு செய்திருக்கும் பாணியில், மற்ற இலக்கியப் பிரதிகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறார் இமையம்.

அரசியல் எனும் சூதாட்டத்தில் அவன், தன் சுயநலத்துக்காகவும், தான் சார்ந்திருக்கும் கட்சிக்காகவும் சுயமரியாதையையும், தன் கைக்காசை யும் பணயம் வைத்து இழப்பது ஏராளம்,  வெற்றி கொள்வதும் ஏராளம். இது கயிற்றில் நடக்கும் வித்தைக்கு ஒப்பானது. இந்த வித்தையில், பல கண்ணுக்குத் தெரியாத விதிமுறைகள் உள்ளன. ஜாதியும் அதில் ஒன்று. கீழறுப்பு வேலைகளும் அவசியமாகிறது. துரோகங்களை நிரந்தரமாக நினைவில் வைத்திருக்கக் கூடாது. காரியம் முடிகிறவரை கரிசனம் காட்ட வேண்டும்.  பகையோ, உறவோ நிரந்தரமல்ல  என பல விதிமுறைகளை அநாயாசமாக பதிவு செய்கிறார் இமையம்.

பொதுகூட்டங்களுக்கு லாரியில் ஆட்களைப் பிடித்து வரும் மாவட்ட கிளைச் செயலாளரான வெங்கடேச பெருமாள், கூலிக்காக மட்டுமே கூட்டத்திற்கு வர சம்மதிக்கும் தெரு சனங்களான ஆண்டாள், கண்ணகி , சொர்ணம், கோமதி போன்ற, எளிய அடித்தட்டு பெண்களின் உரையாடல்களின்  மூலமாகவே, அரசியல் வாதிகளின் சுரண்டல் எப்படி சமூகத்தின் அடிமட்டம் வரை பரவியிருக்கிறது என்பதை  ஆசிரியர் காத்திர மாகவும்,  மிக இயல்பாகவும் உணர்த்துகிறார். 

இந்நாவல் முழுக்க முழுக்க பெண்கள் சார்ந்த பின்புலத்தில் கட்டமைக்கப் பட்டிருப்பதைக் கூர்ந்து கவனித்தால், அதன் பின் இருக்கும் உளவியல் தத்துவத்தை விளங்கிக் கொள்ளலாம். கட்சிக் கோட்பாடுகளோ, குறைந்தபட்ச கட்சி அபிமானமோ எதுவுமில்லாது, எளிய குடியானவப் பெண் முதல், படித்த பெண்கள் வரையிலான ஆண் வெறுப்பு அரசியலே ஒரு பெண் தலைமையை ஆதரிக்கப் போதுமானதாக இருக்கும் உளவியலை, ஆண்டாள், கண்ணகி பாத்திரங்கள் மூலம் ஆசிரியர் நிறுவுகிறார்.

பொருளாதார நிலையில் பின் தங்கியிருந்தாலும், சாதிப் படிநிலையில் கொஞ்சம் உயர்ந்து இருக்கும் மனிதர்கள், குறிப்பாக பெண்கள், எந்தச் சூழலிலும், எதற்காகவும் தங்களது ஜாதி ஆணவத்தைச் சமரசம் செய்து கொள்வதில்லை. பிரம்மாண்டமான மைதானத்தில் நடக்கும் ஒரு கட்சிப் பொதுக்கூட்டத்தில், உட்காரும் இருக்கைக்கு நடக்கும் போராட்டத்தில், ஜாதி எப்படி தலைவிரித்தாடுகிறது என்பதை நாவலில் வரும் ஒரு சம்பவம் நுட்பமாக விவரிக்கிறது. ஊர் என்பது அனைத்து மக்களுக்குமானது அல்ல! அது ஆதிக்கச் ஜாதிக்காரர்களுக்கு மட்டுமே உரியது! ஒடுக்கப்பட்ட மக்கள் அவ்வூரில் வசித்தாலும், அவர்கள், அந்த ஊரைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவதில்லை! இதை இமையம் அவர்கள் கீழ்கண்ட பகுதியில் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். (பக்..37 )

“ஒரே ஊருக்காரின்னுகூடப் பாக்காம, என்னைக் கீழேத் தள்ளிட்டீங்க இல்லையா ? ஒங்கள நான் சும்மா வுடப்போறதில்ல “ என்று கத்தினாள்.

“ நீ ஊரு இல்ல. பறத்தெரு”

“ நானும் பவழங்குடிதான்”

“ நீ பவழங்குடியா இருந்தாலும் நீ ஊருல்ல , பறத்தெரு”

“ அப்ப பவழங்குடிங்கறது என்னா ?”

“எங்க ஊரு”

“அப்ப நானு?”

“பவழங்குடியா இருந்தாலும் நீ பறத்தெரு. ஊரு வேற. பறத்தெரு வேற”

கட்சிப் பொதுக் கூட்டத்திற்காக  கூலி  கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டத்தில், பிரியாணிக்காகவும் , புடைவைக்காகவும் அல்லாடும் பெண்களாக இருப்பினும், ஜாதி பேதம் அவர்களை விடுவதாயில்லை. இதற்கு எதிர்க்குரலாக ஒலிக்கும் அந்த ஒடுக்கப்பட்ட காலனிப் பெண்ணின்  வார்த்தைகள், ஒட்டுமொத்த ஜாதியாணவ சமூகத்தின் மீதும் செருப்படியாக விழுகின்றன.                   

தன் தலைவியின் கட்சிப் பொதுக் கூட்டத்திற்கு, ஆள்சேர்க்கும் வெங்கடேச பெருமாள், கூறும் ஆசை வார்த்தைக்கு மயங்கி, பதினைந்து பேர் போகக்கூடிய வேனில், முப்பத்தைந்து பேர்களோடு ஏறும் அப்பாவிப் பெண்கள், மண்டையைப் பிளக்கும் வெயிலில் ஒதுங்க நிழலோ , குடிக்கத் தண்ணீரோ இல்லாததுடன், இயற்கை உபாதையைத் தீர்த்துக் கொள்ள வழி கூட இல்லாத அவலம், ஒரு நாள் கூத்திற்காக, அய்ந்நூறு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மரங்களை வெட்டி நாசமாக்கும் இயற்கைச் சுரண்டல், இலட்சக்கணக்கான பணத்தில் வீண் ஆடம்பரம், கூட்டத்தை ஈர்க்க மலிவான உத்திகளைக் கையாளும் அவலங்கள், தனிமனித உரிமை சுரண்டல் , ஆபத்தான கட்அவுட் கலாச்சாரங்கள், கிள்ளுக்கீரையென மதிக்கப்படும் மனித உயிர்கள், கட்சிக் கூட்டத்திலும் நிலவும் ஜாதிவெறி, அரசியல் கட்சிகளில் ஜாதிகளின் ஆதிக்கம் என நாவல், பல்வேறு சித்திரங்களை மிக நுட்பமாகச் சித்தரிக்கிறது. இறுதியில், பல உயிர்கள் பலியான  பின்பும், அதைப் பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாமல், தலைவி, தொடர்ந்து தன் உரையைப் படிப்பதுடன் நாவல் முடிவடைகிறது. ஆனால், வாசகனின் மனதில் அதன் பிறகும், அது நீட்சி கொண்டு பல்வேறு வினாக்களை எழுப்பியபடி இருக்கிறது. புனைவிலக்கியத்தின் ஆகச்சிறந்த சாத்தியத்தை எளிமையான முறையில் நிகழ்த்தி யிருக்கிறது இந்நாவல்.

தமிழகத்தின் சமகால அரசியலின் நிலையை, அதன் அடிமட்டத்திலிருந்து மிக காத்திரமான வகையில், பதிவு செய்திருக்கும் இமையம் அவர்களின் ‘வாழ்க வாழ்க‘ குறுநாவல், புனைவிலக்கியத்தின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியிருக்கிறது என்றே கூற வேண்டும். சொல்லப்பட்ட விதத்திற்காகவும் , வடிவ ரீதியாகவும் சிறந்த கட்டமைப்பு கொண்ட படைப்பாக பரிணமிக்கிறது இக்குறுநாவல்.   அளவில் மிகச்சிறியதான இந்நாவல், வாசகரின் மனதில் ஏற்படுத்தும் தாக்கமோ ஒரு தலைமுறைக்கானது. சமகால அரசியல் அவலங் களை, சமரசமற்ற தொனியில் பேசுகிற விதத்திலும்,  பல பரிமாணங்களை உள்ளடக்கியிருக்கும் விதத்திலும்,  ‘வாழ்க வாழ்க ‘ நாவல், இலக்கிய மதிப்பீட்டில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை தனக்கென தக்க வைத்துக் கொள்கிறது. புத்தகத்தை மிக நேர்த்தியாக பதிப்பித்திருக்கும் க்ரியா பதிப்பகத்திற்கு வாழ்த்துகள்.

 இன்றைய அரசி யல் , நாட்டின் வேர்ப்பகுதியான சிற்றூர், கிராமப் பகுதிகளில் கொண்டிருக்கும் முகத்தை இதைவிடத் தெளிவாகவும், வலுவாகவும் வேறெந்த தமிழ்படைப்பும் காட்டியதில்லை, அந்த வகையில் இமையத்தின் ‘வாழ்க வாழ்க‘ தமிழின் ஒரே அரசியல் நாவல் எனலாம்.

வாழ்க! வாழ்க!         

- நர்மதா குப்புசாமி