ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அரசியல், அரசு நிர்வாக ஆளுமைமிக்க கல்வி வள்ளல் காமராசர்
July 15, 2020 • Viduthalai • மற்றவை

வீ. குமரேசன்

இன்று ஜூலை 15, 2020, கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 118-ஆம் ஆண்டு பிறந்தநாள். 1952ஆம் ஆண்டில் அன்றைய சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த, ‘அப்பன் தொழிலையே மகனும் செய்ய வேண்டும்’ என்ற வர்ணாஸ்ரமத்தை மீண்டும் வலுப்படுத்திடும் ‘குலக் கல்வித் திட்டத்'திற்கு தந்தை பெரியார்காட்டிய கடுமையான எதிர்ப்பினாலும், நடத்திய போராட்டங்களாலும், பதவியிலிருந்து இறங்க நேரிட்டது.

மூடப்பட்ட பள்ளிக் கூடங்களை

மீண்டும் திறந்தார்

அடுத்து காங்கிரசுக் கட்சிக்குள்ளேயே முதல் அமைச்சராக வர பலர் விருப்பப்பட்ட நிலையில், தந்தை பெரியாரும், டாக்டர் வரதராஜூலு அவர்களும் காமராசர்தான் முதல் அமைச்சராக வரவேண்டும் என்று வலியுறுத்தி, காமராசரைச் சம்மதிக்க வைத்தனர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காமராசர் எந்த குலக் கல்வித்திட்டத்தின் மூலம் பல பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டனவோ, அதே குலக்கல்வித் திட்டத்தை திரும்பப் பெற்று மூடப்பட்ட பள்ளிக் கூடங்களை மீண்டும் திறக்க வைத்தார்.

புதிதாக பள்ளிக் கூடங்கள் பல திறந்து ஆண் டாண்டு காலமாக கல்வி மறுக்கப்பட்டு வந்த மக்க ளுக்கு கல்விக் கண் திறந்தார். ‘கல்வி வள்ளல்’ என அனைவராலும் பாராட்டப்பட்டார்.  பள்ளிப்படிப்பை முறையாக முடிக்காத காமராசர் அந்தத் தலைமுறை சார்ந்த பெரும்பாலான குடும்பத்துப் பிள்ளைகள் முதல் முறையாக பள்ளிக் கூடம் சென்று படித்திட சமூகநீதிப் பாதை அமைத்தார்.

‘படிக்காத காமராசர் எப்படி அரசாள முடியும்?’ என எதிர்ப்பாளர்கள் கொக்கரித்த வேளையில் தமது இயல்பான திறமை, பட்டறிவால் வளர்த்துக் கொண்ட ஆற்றலைப் பயன்படுத்தி எந்த முதல் அமைச்சரும் அதுவரை சாதிக்காத பல சாதனைகளைச் செய்து காட்டினார் காமராசர். ராஜகோபாலாச்சாரியர் தலை மையில் இருந்த அத்துணை அமைச்சர்களையும் அப்படியே தன்னுடைய அமைச்சரவையில் தொடரச் செய்து உள்கட்சி அரசியலில் நிலவிய எதிர்ப்பினை தவிடு பொடியாக்கினார். 

அரசியல் சாதுர்யம்

மேலும் ராஜகோபாலாச்சாரியர் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்து ‘குலக் கல்வித் திட்டத்தை’ சட்டமன்றத்தில் அறிமுகம் செய்த சி. சுப்பிரமணியம் அவர்களைக் கொண்டே, தனது அமைச்சரவையிலும் கல்வி அமைச்சராகப் பொறுப்பு வழங்கி, அந்த குலக் கல்வித்திட்டத்தை திரும்பப் பெற்ற அவரது அரசியல் சாதுர்யம் அனைவரையும் வியப்படைய வைத்தது. ஆட்சி அதிகாரத்திற்குப் புதியவர் என்பது போன்றல் லாமல், பழுத்த அரசியல் ஆட்சியாளராக காமராசர் பரிணமித்தார்.

காமராசர் முதலமைச்சராக இருந்த பொழுது ஒரு கிராமத்திற்குச் சென்ற பொழுது அந்தக் கிராமத்தினர் தங்களது ஊரில் பள்ளிக்கூடம் இல்லை; தங்களது பிள்ளைகள் பக்கத்து ஊருக்கு நீண்ட தொலைவு நடந்து சென்றுதான் படிக்க முடிகிறது எனக் கூறி தங்களது ஊரிலேயே பள்ளிக்கூடம் இருந்தால் தங் களது பிள்ளைகள் படித்திட வசதியாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்தனர்.  தன்னுடன் வந்த கல்வித் துறை அதிகாரியிடம், அந்த ஊரில் பள்ளிக்கூடம் அமைத்திட வேண்டும் எனக் காமராசர் கூறிய பொழுது, அந்த அதிகாரி, ஒரு குறிப்பிட்ட தொலைவிற் குள் ஏற்கெனவே ஒரு பள்ளிக் கூடம் செயல்பட்டு வந்தால், புதிதாக பள்ளிக்கூடங்களைத் திறப்பதற்கு அரசு விதி அனுமதிக்காது என பதில் சொன்னாராம்.

உடனே சற்றும் தாமதிக்காமல், தான் அதிகாரியிடம் எதிர்பார்த்தது, பள்ளிக்கூடம் தொடங்குவதற்கான வழிமுறை களைத்தான், ‘பள்ளிக் கூடம் திறக்கமுடியாது’ எனச் சொல்லும் விதிமுறைகளை அல்ல. விதிகளை மாற்றுவ தற்கு உரியவற்றை செய்து பள்ளிக் கூடத்தைத் திறந்திட வேண்டும் என கடுமையாக ஆணையிட்டா ராம்.

கல்வி வள்ளல் காமராசர்

அன்று காமராசர் காட்டிய மக்கள் நலன் மீதான சமூகநீதி அக்கறையால் புதிய பள்ளிக் கூடங்கள் அமைப்பதற்கான விதிகள் மாற்றப்பட்டு, அனைத்து ஊர்களிலும் பள்ளிக் கூடங்களைத் திறக்க வழி ஏற்பட்டது. இப்படியாகத்தான் ‘அரசியல் அதிகாரம் பற்றித் தெரியாத காமராசர்’ என ஏளனமாகக் கருதப் பட்ட ஆதிக்கவாதிகளால் ‘கல்வி வள்ளல் காமராசர்’ என போற்றப்படும் நிலைமையும் ஏற்பட்டது.

நிர்வாகத் திறன்

அரசியல் அமைப்பில் பெரும்பாலான அரசியல் வாதிகள் சிறப்பாகச் செயல்படும் இயல்பினைப் பெற்றி ருப்பார்கள். அதே அரசியல்வாதிகள் ஆட்சி அதிகாரத் தில் அமரும் பொழுது அதிகாரிகளை நிர்வகித்திடும் ஆற்றலைப் பெற்றிருப்பார்களா என்பது அய்யமே! அதிகாரத்தில் இருந்து அந்தத் திறனைக் கற்றுக் கொள்ளவே சற்று காலமாகும். கற்றுணரும் நிலையில் அந்த அரசியல் அதிகாரம் பெற்றவர்களின் பதவிக் காலமும் முடிந்து விடும். ஆனால் ‘தராசு தூக்கும் காமராசருக்கு’ அரசாளத் தெரியுமா? என அவர் சார்ந்த சமுதாயத்தின் வியாபாரத் தொழிலை இழிவு படுத்திய ஆதிக்கவாதிகளின் கணிப்பைத் தொடக்கம் முதலே பொய்யாக்கிய பெருமை கல்வி வள்ளல் காமராசருக்கு உண்டு. காமராசரின் அரசு நிர்வாகத் திறன் பற்றிய சிறப்பிற்கு எத்தனையோ நிகழ்வுகளைக் குறிப்பிடலாம். அமைச்சர்-அரசு அதிகாரி சம்பந்தப் பட்ட ஒரு பிரச்சினையைக் காமராசர் கையாண்ட வித மும், அணுகு முறையும் மேலாண்மைப் பள்ளிகளில் (ஙிusவீஸீமீss ஷிநீலீஷீஷீறீ) படித்தவர்களுக்கும் கூட அவ்வளவு எளிதில் வந்து விடாது.

காமராசர் அமைச்சரவையில் இருந்த ஓர் அமைச்சர் தனது அதிகாரக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு துறையின் தலைவரை, பணிநிமித்த வரம்பினை யும் மீறி கடுமையான சொற்களால் திட்டி விட்டார். அமைச்சர் கூறிய தகாத வார்த்தைகளால் பாதிக்கப் பட்ட அந்த உயர் அதிகாரி அன்றைய அரசு முதன் மைச் செயலாளரிடம் சென்று முறையிட்டார். முதன்மைச் செயலாளரும் உயர் அதிகாரி நடத்தப்பட்ட விதம் குறித்து முதலமைச்சர் காமராசரிடம் தெரிவித்துவிட்டார். அமைச்சர் செய்த தவறை, வரம்பு மீறலை உணர்ந்து கொண்ட காமராசர், அமைச்சரையும், அந்த உயர் அதிகாரியையும் தம்மை உடனே சந்திக்கப் பணித்தார். இருவரும் முதல்வர் காமராசரைச் சென்று பார்த்தனர்; உடன் முதன்மைச் செயலாளரும் இருந்தார். காமராசர் சற்று உரத்த குரலில் அமைச்சரைப் பார்த்து,

‘எல்லாரும் மக்களுக்கு சேவை செய்ய வந்திருக் கோம்ணேன். உமக்கும் எனக்கும் அதிகாரம் அய்ந்து வருடம் தான்ணேன். ஆனால் அரசு அதிகாரிகளுக்கு அப்படி கிடையாதுண்ணேன். ரிட்டையர்டு ஆகும் வரை பதவியில், அதிகாரத்தில் இருப்பாங்கண்ணேன். யாரையும் மரியாதையோடு நடத்தண்னும்ணேன். வரம்பு மீறி பேசுவது தப்பு. நீங்க உங்க துறை அதிகாரியிடம் வருத்தம் தெரிவிக்கனும்ணேன்’ எனக் கூறினார்.

தனது தவறை உணர்ந்த அமைச்சர், காமராசர் கூறியதற்குப் பின் மறுப்பேதும் சொல்லாமல் தனது துறையின் உயர் அதிகாரியிடம் வருத்தம் தெரிவித் தாராம். அமைச்சரே வருத்தம் தெரிவித்த நிலையில் உயர் அதிகாரியும் சமாதானம் அடைந்தாராம். பின்னர் அமைச்சரையும், உயர் அதிகாரியையும் கிளம்பச் சொல்லிவிட்டு காமராசர் முதன்மைச் செயலாளரிடம் கூறியதுதான் அவரது பழுத்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவதாக இருந்தது.

அமைச்சர் உயர் அதிகாரியிடம் வருத்தம் தெரிவித்த நிலையில் இருவரும் சமாதானம் அடைந்தது போலத் தெரிந்தாலும், அந்த நிகழ்ச்சியின் பாதிப்பு இருவரது மனத்திலிருந்து மறைவதற்கு நீண்ட நாளா கும் என்னும் நோக்கத்தில் தலைமைச் செயலாளரிடம் முதலமைச்சர் கூறுகிறார்,

“அந்த அதிகாரியை அமைச்சரின் நேரடிக் கட்டுப் பாட்டிலிருந்து மாற்றி வேறு துறைக்கு அனுப்பிவிடுங் கண்ணேன். அந்த அதிகாரிகிட்ட விருப்பமான துறை யையும் கேட்டுச் செய்யுங்க. அடுத்து அமைச்சரிடம் பேசி, அவருக்கு அனுசரணையாக ஒரு அதிகாரியை அவரது துறைக்கு மாற்றி பிரச்சினையை முடிச்சுடுங் கண்ணேன்.”

அரசு அதிகாரிகளும் இணக்கமாக

தவறு செய்தவரை தவறு இழைக்கப்பட்டவரிடம் வருத்தம் தெரிவிக்கச் சொல்லுவது பெரும்பாலான வர்கள் செய்வதுதான். பின்னர் முதன்மைச் செயலாள ரிடம் முதலமைச்சர் காமராசர் சொன்னதுதான் அவரது நுட்பமான நிர்வாகத் திறனை வெளிப்படுத்தியது. சட்ட மியற்றும் அதிகாரமிக்க ஆளும் அரசியல்வாதிகளும், அதனை நடைமுறைப்படுத்திடும் அரசு அதிகாரிகளும் இணக்கமாக, முழுமையான ஈடுபாட்டுடன் இணைந்து பணியாற்றினால்தான் அரசு நிர்வாகம் நன்றாகச் செயல்படும் என்பதை எந்தப் பள்ளிக் கூடத்தில் படித் துத் தெரிந்து கொண்டார் காமராசர்?

காமராசர் கடைப்பிடித்த அணுகுமுறையைத்தான் சச்சரவு மேலாண்மை (Conflict Management) என உயர்நிலை மேலாண்மைப் பள்ளிகளில் முக்கியப் பாடமாக கற்பிக்கிறார்கள். ‘ஏட்டுப் படிப்பில் தெரிந்து கொண்டதை அனைவரும் நடைமுறையில் சரியாக, உரிய நேரத்தில், உரிய வகையில் பயன்படுத்துகின் றனரா’ என்பது அய்யமே!

படிக்காத மேதை

‘படிக்காத காமராசர் எப்படி நாடாளமுடியும்’ என வெளிப்படையாகக் கிண்டல் செய்த ஆதிக்கவாதி களுக்குத்தான் ‘படிக்காத மேதை’ என்பதை தனது செயல்களின் மூலம் உணர்த்தியவர் காமராசர்.

விடுதலை பெற்ற நாட்டில் தமிழ்நாட்டின் மூன்றாம் முதலமைச்சராக ஒன்பது ஆண்டுகள் (1953-1963) திறம்பட ஆட்சி புரிந்து தமிழ்நாட்டை சமூக, கல்வி, பொருளாதாரத் துறைகளில் முன்னேற்றிய பெரு மகனார் காமராசர்.

அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சமூகம் சார்ந்த உண்மையான அக்கறை கொண்டு மக்கள் பணி ஆற்றிய காமராசர் வாழ்க! அவர் காட்டிய சமூகநீதி அக்கறை சார்ந்த ஆட்சி அணுகுமுறை வளர்க!