ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அரசமைப்புச் சட்டத்திற்கே முரணான தேசியக் கல்விக் கொள்கை - 2020
August 18, 2020 • Viduthalai • மற்றவை

ஏற்றத்தாழ்வுகளை நிரந்தரமாக்கும் ஆபத்தான கல்விக் கொள்கை! - 2

8 ஆம் வகுப்பு வரை தேர்வு இல்லாத நிலை

அந்த நிலையில் ஆங்கிலம் 3 ஆவது வகுப்பிலி ருந்து படிக்க வேண்டியதானது. மேலும் பல அறிஞர் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் முடிவு செய்தபடி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை எந்த மாணவனையும் தேர்ச்சி பெறவில்லை என்று இடையில் நிறுத்துவது தடைசெய்யப்பட்டு. 8 ஆம் வகுப்பு வரை இடைநிற்றல் இல்லாமல் படிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை முடிவு தமிழ்நாடு அரசால் எடுக்கப் பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கை முடிவானது பல்துறை வல்லுநர் குழுவின் ஆலோசனை கள், குழந்தைகள் நலக் குழுவின் ஆலோசனைகள், மனித உரிமைக் குழுவினரின் விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப் பட்டது. இந்த முடிவுகள் மேசையில் உட்கார்ந்தபடி எடுக்கப்பட்ட முடிவுகளோ அல்லது ஓரிரு நாட்கள் கலந்துரையாடிய பின் எடுக்கப்பட்ட முடிவுகளோ அல்ல. இவ்வாறான மாற்றங்கள் மாணவர்களுக்குப் பெரிதும் பயனளிப்ப தாக அமைந்தது, மேலும் மாநில மக்கள் அனைவருக் கும் ஒட்டுமொத்த நன்மை பயக்கும் விதத்தில் அமைந்தது. அதே சமயம் 4 ஆண்டு பட்டப் படிப்பைப் பற்றி ஆலோசித்து அது தேவை இல்லை எனக் கைவிடப்பட்டது.

பல்கலைக்கழகங்களின் வகைகள்

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மெட்ராஸ் மாகாணத்தில் மெட்ராஸ் பல்கலைக் கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆகிய இரண்டு பல்கலைக் கழகங்கள் உட்பட அகில இந்தியாவிலும் வெகு சில பல்கலைக் கழகங்களே இருந்தன. அண்ணா மலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகள் எதுவும் இல்லை. மருத்துவ, பொறியியல், கால்நடை, விவசாயம் முதலான அனைத்துக் கல்லூரிகளுமே மெட்ராஸ் பல்கலைக் கழகத்தின் இணைப்புக் கல்லூரி களே. அதன்பின் தேவைக்கேற்ப, அனுபவத்தின் அடிப்படையில், பல் கலைக் கழகங்களின் நோக்கங்கள் மாற்றி அமைக்கப் பட்டன. அதனால் பலதுறைகளுக்குத் தனித்தனியாக பல்கலைக் கழகங்கள் அமைக்கப் பட்டன. மருத்துவத் துறைக்கு, பொறியியல் துறைக்கு, கால்நடைத் துறைக்கு, விவசாயத் துறைக்கு, கடல்சார் துறைகளுக்கு, சட்டத் துறைக்கு எனத் தனித்தனியாக துறைவாரி பல்கலைக் கழகங்கள் ஏற்படுத்தப்பட்டன.

தமிழ்நாட்டில்தான் மேற்சொன்னவற்றிற்கு முதல் முதலாகத் தனித் துறைப் பல்கலைக் கழகங்கள் அமைந்தன. விவசாயத் துறைக்கு மட்டுமே பஞ்சாப் மாநிலத்தில் முதல் தனித் துறைப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. தனிப் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டதால் கிட்டிய பலன்கள் மிக அதிகம். ஒற்றைப் பல்கலைக் கழகமாக இருந்திருந்தால் அத்தனை வளர்ச்சி, துறை தோறும், எட்டப்பட்டிருக்காது என்பதே உண்மை. தனிப் பல்கலைக்கழகங்களாக இருந்ததால் மிகச்சிறிய பொருள் பற்றியும் பெரிய அளவில் ஆழ்ந்து ஆராய்ச்சி நடத்த ஏதுவானது.  

ஒரு துறையின் வல்லுநர்தான் அத்துறையின் முன்னேற்றம் குறித்தும், செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆலோசனை வழங்கத் தகுதியானவர்.

தனித்துறையில் தேர்ச்சி பெற்ற ஒருவர் மற்றொரு துறை சார்ந்தவற்றிற்கு ஆலோசனை வழங்கத் தகுதியா னவர் அல்ல. விவசாயி ஒரு கொல்லருக்கோ அல்லது கொல்லர் விவசாயிக்கோ ஆலோசனை சொல்ல இய லாது. இக்கட்டுரையில் தேசியக் கல்விக் கொள்கைகளில் கண்டுள்ள சில மாற்றங்களைப் பற்றி மட்டுமே ஆராயப் படுகிறது. குறிப்பாக சட்டம் சம்பந்தப்பட்டவை மட் டுமே ஆராயப்படுகிறது.

இந்தக் கொள்கைகளின் முக்கிய நோக்கங்களாவன:

  1. ‘கல்வி’ நற்பண்புகளை கூட்டிடவும், வேலைவாய்ப் பையும், வருமானத்திற்கு வகை செய்யும்விதமாகவும் இருக்க வேண்டும்.
  2. ஆதிகால இந்தியாவில் கல்வி கற்பது, வாழ்க் கைக்குத் தயார் ஆவது மட்டுமல்லாமல் “தான் யார்” என்பதை உணர்வதற்கும் தன்னை ‘விடுவித்து'க் கொள்வதற்கும் ஆனது.
  3. இந்தியப் பாரம்பரியத்தையும் அதன் மதிப்பையும் கட்டிப் பாதுகாப்பதற்காகவும் ஆகும்.
  4. எல்லா நிலைகளிலும் கற்பிக்கும் நபர்களாக மிகவும் திறமை வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற் காகவும்.
  5. தக்‌ஷசீலா மற்றும் நாளந்தா போன்ற உலகத்தரம் வாய்ந்த நிலையங்களைப் போன்று மிக உயர்ந்த தரத்திலும் பலகலைகளையும் கற்பிக்கவும், ஆராய்ச்சி செய்யவும், அந்த உயர்ந்த பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டியும், கல்வியைப் பயன்படுத்தி அவற்றை மேன்மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு சேர்ப் பதும் ஆகும்.

அதாவது, புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் தக்‌ஷசீலம் மற்றும் நாளந்தா போன்ற பல்கலைக்கழகங் களை நிர்மாணிப்பதாகும்.

யதார்த்த நிலை

மனிதர்கள் அனைவரும், அனைத்திலும், சமமான வர்கள் இல்லை என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது. ஒவ்வொருடைய, திறமை, அறிவு, முயற்சி, புரிந்து கொள்ளும் தன்மை போன்றவை வேறு பட்டவை. அதேசமயம் இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களுக்கும் கல்வி கற்பிக்கப்பட வேண்டும்? தக்‌ஷ சீலமும், நாளந்தாவும் அதிகபட்சம் சில நூறுபேர்களுக்கு கல்வி கற்பித்திருக்கும். ‘தன்னை உணர்தல்’ என்ற தத்துவத்தை விளக்குவதற்கு சொல்லப்படும் வாதங்கள் விதண்டாவாதங்கள்; தத்துவார்த்தமான வாதங்களாக இருக்காது; அறிவுக்குப் பொருந்தாத சொற்கோவை களாகவே இருக்கும். மேலும் எதற்காகத் ‘தான் யார்’ என்பதையும், முற்பிறவியில் எங்கிருந்தார், அடுத்த பிறவியில் எங்கு போவார் போன்ற விவரங்களை அறிய வேண்டும். அவை மதநம்பிக்கையினை அடிப் படையாகக் கொண்டவை ஆகும்.

இந்தக் கல்வி கொள்கையில், இதற்கு முன்னர் வகுக்கப்பட்ட கல்விக் கொள்கைகளில் கல்வி என்பதை எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும், சமத்துவக் கொள்கைகளையும் குறிப்பாக கையாண்டது என்றும், இந்தக் கொள்கையானது முடிக்கப்படாத மீதி அம்சங் களை முடிப்பதற்கான அட்டவணை ஆகும் என்று குறிப்பிடப்படுகிறது.

இக்கொள்கையின் நோக்கம்

இந்தக் கல்விக் கொள்கை 3-18 வயதினரைக் குறித்ததாகும். முறையான கல்வி 3 ஆம் வயது முதலே தொடங்கப்பட வேண்டும் என்று இக்கல்விக் கொள்கை குறிப்பிடுகிறது. உண்மையில் கல்வியில் முன்னேறிய நாடுகளில் 5 வயது முடிவதற்கு முன் முறையான கல்வி கற்பிக்கப்படுவதில்லை. சில நாடுகளில் அது 6 வயதாகவும் உள்ளது. தற்போதைய கால கட்டத்தில் சிறுகுடும்பங்களாகவும், பெற்றோர்கள் இருவருமே பணிக்குச் செல்பவர்களுமாக இருக்கும் வீடுகளில் குழந்தைகளை 3 வயதில் விளையாட்டுப் பள்ளிக்கு அனுப்புவது வழக்கமாக உள்ளது. அக் குழந்தை அங்கு செல்வது மற்ற குழந்தையுடன் விளை யாடுவதற்கும் உரையாடுவதற்கும் மட்டுமே. எண் களோ எழுத்துகளோ கட்டாயமாகக் கற்றுத்தரப் படுவதில்லை. ஆனால் இந்தக் கொள்கைகளில் அவ் வாறு இல்லை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்தக் கொள்கையில் கண்டிருப்பது அனைத்தும் அய்க்கிய அமெரிக்க நாட்டில் நிலவும் கல்விமுறைதானே தவிர வேறில்லை என்பது புலனாகும். ஆனால் அங்குக்கூட 8 ஆம் வகுப்பு வரையிலும் தேர்வு என்பதே இல்லை. மாறாக இங்கு மூன்று வயது முதலே தேர்வு நடத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் இடைநிற்றலைக் கட்டுப்படுத்துவது

இக்கல்விக் கொள்கையின் முக்கியமான அம்சங்களில் ஒன்று, மாணவர்களின் இடைநிற்றலைக் கட்டுப் படுத்தி 100 சதவீத மாணவர்களையும் பள்ளிக்கு வர வழைப்பது என்று சொல்லப்படுகிறது. அதனை மாணவர்களுக்கு முதலாம் வகுப்புக்கு முந்தைய கால கட்டத்திலிருந்தே (Pre-School) கட்டத்திலிருந்து 12 ஆம் வகுப்பு வரையிலும் முழுமையான கல்வியுடன் சேர்த்து தொழிற்கல்வியையும் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்கித் தருவதன் மூலம் நடை முறைப்படுத்திவிடலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த அறிக்கை, உயர்தரமான, பகட்டான, வார்த்தை ஜாலங்களாலும் நிச்சயமற்ற பொருள்தரும் வார்த்தை களாலும் நிரப்பப்பட்டுள்ளது. ‘முழுமையான’ (holistic) என்ற வார்த்தை இங்கங்கு என்னாது எங்கும் நிறைந்து காணப்படுகிறது. அச்சொல்லுக்கு நிச்சயமான பொருள் இல்லை என்பதும், அது ஒரு வளைந்து கொடுக்கும் தன்மையுடைய சொல் என்பதும், இடத்திற்கேற்ப வேறுபட்ட அளவைக் கொள்ளக்கூடியது என்பதும் எவராலும் அறிந்து கொள்ளக் கூடியதே!

முன்பகுதியில் குறிப்பிட்டபடி, ‘கல்வி’ என்பது பொதுக்கல்வியையே குறிக்கும். மேலும் ‘தொழிற்கல்வி’ (Vocational Education) என்று குறிப்பிடப்படுவது வழக்கமில்லை. ‘தொழிற் பயிற்சி’ (Vocational Training) என்றே குறிப்பிடுவதே வழக்கமாகும். பொதுக்கல்வியினுள், தொழிற்பயிற்சி அடங்காது. முதலாம் வகுப் புக்கு முந்தைய காலக்கட்டத்தில் (Pre-school) பயிலும் மாணவனுக்கு என்ன தொழிற் பயிற்சி அளிக்க முடி யும்? அது போன்ற செயற்பாடுகள் அரசமைப்புச் சட்ட 21கி பிரிவுக்கு நேர் எதிரானதும், அப்பிரிவினை மீறுவது மாகும்.

மூன்று வயது முதல்

3 மொழிகளைத் திணித்தல்

இளம் வயதில் குழந்தைகள் மொழிகளை விரை வாகக் கற்றுக்கொள்ளும் திறமையைத் தவறாகப் பயன் படுத்தி எல்லாக் குழந்தைகளுமே, மூன்று வயது முதலே, மூன்று மொழிகளைக் கற்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல. தன்னிச்சையாக பேச்சு மொழியாகக் கற்றுக் கொள்வது வேறு, கட்டாயப் படுத்துவது வேறு. இரண்டும் ஒன்றல்ல. அவர்கள் மூன்றாம் வகுப்பிற்கு வரும்போது அவர்கள் மூன்று மொழிகளிலும் பேசவும் எழுதவும் திறமை பெற்றவர் களாக இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்ப்பது கொடூரமான எண்ணமாகும்.

அந்தக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்குமே அது இயலாத செயல் என்பது தெரிந்தே இருக்கும் என்பதில் அய்யம் இல்லை. எனவே இதற்கான காரணம் வேறு ஏதோ ஒன்றாக இருக்க வேண்டும். அதாவது பெரும்பாலான குழந்தைகளை வெளியேற்றி விடவேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே கருத வேண்டி உள்ளது. மேலும் மூன்றில் ஒரு மொழியை 6-7 ஆம் வகுப்புகளுக்கு வந்தபின் மாற்றிக் கொள்ளலாம் என்பது “இல்லாத ஊருக்குப் போகாத வழியைக் காட்டுவது போன்றதாகும்”. முடியாத, இயலாத ஒரு காரியத்தை ‘உரிமை’ என்ற பெயரால் அழைப்பதாகும். இக்குழுவின் உறுப்பினர்கள், திரு மணமாகிக் குழந்தை பெறும் வரை வெளி உலகையே பார்க்காததாகச் சொல்லப்படும் சித்தார்த்தனைப் போன்றவர்கள் எனக் கருதத் தோன்றுகிறது. அவர்கள் பெரும்பாலான குழந்தைகளின் இயலாமையை அறியாதவர்களாகத் தோற்ற மளிக்கின்றனர்.

பெருநகரங்களில் வசிக்கும் குழந்தைகளுக்குமே அது இயலாத ஒன்றாகும். இதுபோன்ற விதிகள் அந்த 8 வயதிலேயே (3 ஆம் வகுப்பிலேயே) கல்வி நிலை யங்களிலிருந்து 80% மாணவர்களை வெளியேற்றி விடும் வல்லமை படைத்ததாகும். இந்தியச் சூழ்நிலை யில் ஒருமுறை வெளியேறிய மாணவன் மீண்டும் சேர்ந்து படிப்பது என்பது கனவிலும், திரைப்படங் களிலும் மட்டுமே சாத்தியப்படும். நிஜ வாழ்க்கையில் அது சாத்தியப்படாது. 3 வயதுக்கு மேல் வீட்டில் இருக்க விடாது பள்ளியில் சேர்க்கவைக்கும் விதிகள் 8 வய துக்கு மேல் அக்குழந்தையை வீட்டிலிருக்க அனுமதிக் கிறதா? மூன்றாம் வகுப்பில் 80% மாணவர்களைப் பொதுக்கல்வித் திட்டத்திலிருந்து வெளியேற்றுவதே குறிக்கோள் என்றால் அந்தக் குறிக்கோள் நிச்சயமாக நிறைவேறிவிடும்.

மாநிலங்களின் சாதனைகள்

பெரும்பாலான மாநிலங்கள், குறிப்பாகத் தென் மாநிலங்கள் கல்வியின் தரம் உயர்வதற்குப் பாடுபட்டு, அவ்வப்போது தேவையான மாற்றங்களைச் செய்து கல்வியின் தரத்தை உயர்த்தி உள்ளன. அவை மக்க ளின் தேவைகளை அறிந்து, குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய இடர்களைக் கருத்தில் கொண்டும் மிகச் சரியாகத் திட்டமிட்டு செயலாற்றி நடைமுறைப்படுத்தி வருகின் றன. ஆனால் இந்த 2020 தேசியக் கல்விக் கொள்கை யானது மாநிலங்கள் - அடைந்த முன்னேற்றங்களை அழித்துவிட முயற்சிப்பதாக உள்ளது

தமிழ்நாடு அரசு 2008 ஆம் ஆண்டில் நியமித்த நிர்வாக சீர்திருத்தக் குழுவும் அதன் அறிக்கையில் இவ்வாறு முடிவுக்கு வந்துள்ளது.

“கல்வியாளர்களிடையே, நிலவும் ஓர் ஒருமித்த கருத்து யாதெனில், மாணவர்கள் அனைத்துப் பாடங் களிலுமே, தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் இல்லை. ஓரிரண்டு பாடங்களில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றி ருந்தாலும் அவர்களை தேர்ச்சி பெறாதவர்கள் எனக் கூறி வெளியேற்றக்கூடாது. மாறாக அந்த மாணவனுக்கு உகந்தபாடங்களில் கல்வியைத் தொடர அனுமதிக்க வேண்டும்.”

மேலே கண்டுள்ள அறிவுரை, மாணவர்களை கல்வி கற்கும் முக்கியப் பாதையிலிருந்து வெளியேற்றா மல் பாதுகாக்கும். ஆனால் இந்த தேசியக் கல்விக் கொள் கையின் நோக்கம் பெரும்பாலான மாணவர்களை வெளியேற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டுள் ளது. அதனால்தான் ஒவ்வொரு நிலையி லும் வெளி யேற்றுதலையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. முதலாவது வெளியேற்றம் 3 ஆம் வகுப்பில்; அடுத்தது 5 ஆம் வகுப்பில்; அதற்கடுத்து 8 மற்றும் 10 ஆம் வகுப் புகளில் வெளியேற்றம். மேலும் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு மற்றொரு நுழைவுத் தேர்வு. அதனைக் கண்காணிக்க ‘தேசிய சோதனை அமைப்பு’ (National Testing Agency). இவ்வாறு கல்வி கற்பது என்பது மேலும் மேலும் கடினமாக்கப்படுகிறது. “எல்லோருக்கும் கல்வி” என்பதே தமிழ்நாட்டின் தாரக மந்திரம் அதனை இக் கொள்கை "பெரும்பாலோருக்கு வெளியேற்றம்" என்று மாற்றிவிடுகிறது.

அரசமைப்புச் சட்டப்படி பல்கலைக் கழகங்களை உருவாக்கவும், கட்டுப்படுத்துவதற்குமான அதிகாரம், மாநிலங்களுக்கே தரப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை; மறுக்கப்பட்டுள்ளது. பெரும் பாலான பல்கலைக்கழகங்கள் பல கல்லூரிகளை இணைக் கல்லூரிகளாகக் கொண்டவை. இந்த புதிய கொள்கைப்படி இணைக் கல்லூரிகளே இருக்கக் கூடாது. (There can be no affiliated Colleges). இதன் நோக்கம் மருத்துவப் பல்கலைக்கழகம், பொறியியல் பல்கலைக்கழகம் போன்ற தனித்துறைப் பல்கலைக் கழகங்கள் தொடர இயலாது. எல்லாப் பல்கலைக் கழ கங்களும் பல்துறைப் பல்கலைக் கழகங்களாக மாற்றப் பட வேண்டும் என்பதாகும். இந்தக் குழு மாநிலங்கள் தங்கள் அனுபவத்தால், தங்கள் மக்களுக்குத் தேவை யான மாற்றங்களை உருவாக்கியுள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்ள மறுப்பதாகத் தோன்றுகிறது. நடை முறை உண்மை நிலையை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்குவதும் சரியான போக்கல்ல.

அரசமைப்புச் சட்டத்தில் கண்ட கடமைகளை மீறுவது

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும், அரசமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டியது அடிப்படைக் கடமை களுள் ஒன்று. (One of the Fundamental Duties) என் பது அரசமைப்புச் சட்ட 51A ஆவது பிரிவில் தெளி வாகச் சொல்லப்பட்டுள்ளது. அவ்வாறிருக்க, அரச மைப்புச் சட்டத்தில் கண்டுள்ள ‘சமூக நிலையிலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ (Socially and educationally Backward Classes) என்பதையும், பட்டியல் இனவகுப்பினர் (Schedule Caste) என்பதை யும், பட்டியல் பழங்குடியினர் இனம் (Schedule Tribes) என்றும் வார்த்தைக் கோவைகளைப் பயன்படுத்தாமல், அதற்கு மாற்றாக ('Socially and economically Disadvantaged groups') ’சமூக நிலையிலும், பொருளாதார நிலையிலும், சாதகமில்லா நிலையிலுள்ள வகுப்பினர்’ என்ற வார்த்தைக் கோவையைப் பயன்படுத்தியதானது அரசமைப்புச் சட்டப் பிரிவு 51A(f) இனை மதிக்கத் தவறுவதற்கு ஒப்பாகும். இந்தக் குழுவிற்கு அரசமைப் புச் சட்டத்தினை மதிக்கத் தேவையில்லை என்னும் அதிகாரத்தை யார் அளித்தார்கள் என்பது தெரிய வில்லை.

சமூக அநீதிகள் நிரந்தரமாக்கப்படும்

இக்குழுவின் ஆலோசனைகள் முழுவதுமாகச் செயல்படுத்தப்பட்டால், நிச்சயமாக சமூக அநீதிகள் நிரந்தரமாக்கப்பட்டுவிடும். பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து வரும் குழந்தைகள் சந்தித்த, ஏற்றத்தாழ்வுகள் நிரந்தரமாக்கப்பட்டு இன் னும் பல நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்து கொண்டிருக் கும். இதுவரை கண்ட முன்னேற்றங்கள் மறைந்து போய், மெக்காலே காலத்திற்கு முந்தைய இருண்ட காலத்திற்கு அவர்களை இட்டுச் செல்வதில் முடியும். தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் நூறாண்டுகால முன்னேற்றம் காணாமல் போய்விடும்.

இக்குழுவின் அறிக்கையில் தற்போதைய கல்வி முறையில் மாநிலங்கள் செயலாற்றிவரும் முறையில் கண்ட குறைகள் என்ன என்பது சொல்லப்படவில்லை. மாற்ற முயற்சிப்பதற்கான காரணம் என்ன என்பதும் விளக்கப்படவில்லை. பொதுவாக 21 ஆம் நூற்றாண்டின் போட்டியைச் சந்திக்க வேண்டும் என்று சொல்வது சரியான காரணமல்ல. கல்வி என்பது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பொதுவான துறையாக உள்ள போது மாநிலங்களின் உறுப்பினர்களே இல்லாத அந்தக் குழுவிற்கு, தற்போது நிலவும் செயல்முறையை முற்றிலு மாக மாற்ற வேண்டும் என முடிவு செய்வதற்கு எந்த முகாந்தரமும் இல்லை. மத்திய அரசு இம்மாதிரியான குழுவை அமைத்ததே சட்டப்படி ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல.

முடிவுரை

கூர்ந்து நோக்குபவர்களுக்கு, 2020, தேசியக் கல்விக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஏற்படப் போகும் பின் விளைவுகள் நன்கு புலப்படும். மாநிலப் பிரதிநிதிகளே இல்லாது அமைக்கப்பட்ட இத்தகைய குழுவை நியமித்ததே அரசமைப்புச் சட்டத் திற்கு முரணானதாகும். மாநிலங்களுக்கும் உரிமை யுள்ள ‘கல்வி’யை மத்திய அரசுக்குத் தனித்த அதிகாரம் உள்ளது போல் பாவிக்க முயல்வதாகத் தோன்றுகிறது. அது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

இக்குழுவின் பரிந்துரையான மாணவர்களின் 8ஆவது 11 ஆவது 14 ஆவது வயதிலேயே கல்விக்கூடங் களிலிருந்து வெளியேற்றும் முறை நிச்சயமாக ஒரு பிற் போக்குச் செயலாகும். மேலும் அவ்வாறு வெளியேற்று வது அரசமைப்புச் சட்ட 21A பிரிவிற்கு நேர் முரணா னதாகும். ‘கட்டாயக் கல்வி’ என அரசமைப்புச் சட்டத் தில் கண்டுள்ளதானது. ‘தொழிற் பயிற்சி’ அளிப்பதை உள்ளடக்காது. ‘தொழிற் பயிற்சி’ தருவது என்பது கல்வி கற்பிப்பதாகாது. பல்கலைக் கழகங்களைக் கட்டுப்படுத் துவது என்பதே அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான எண்ணம், அந்த எண்ணம் தோன்றுவதாலேயே அது செல்லாததாகிவிடும்.

அந்நோக்கம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படைக் கட்டுமானத்தையே அழிக்கும் முயற்சியாகும். (Violation of Basic Structure). மேலும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானதாகும். ‘அனைவருக்கும் கல்வி’ என்பதை எப்போதும் இந்தமுறையில் எட்ட இயலாது. இது போன்ற செயல்பாடுகள், இந்திய மக்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும் மற்றும் சமூக இடைவெளியையும் நிரந்தரமாக்கிவிடும்.

எனவே இந்த 2020 தேசியக் கல்விக் கொள்கை அரசமைப்புச் சட்டத் திற்கு முரணானது என்பதால் அதை நடைமுறைப் படுத்தக்கூடாது.