ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அய்யா இராஜரத்தினம் அவர்களுடனான அனுபவங்கள் நமக்குப் பாடங்கள்; வழிகாட்டுகின்ற நெறிகள்!
August 10, 2020 • Viduthalai • கழகம்

தமிழர் தலைவரின் இரங்கலுரை

வரியியல் வல்லுநர் இராஜரத்தினம்

சென்னை, ஆக. 10-  "அய்யா இராஜரத்தினம் அவருடைய வழி காட்டுதல்கள், அவருடைய கனிந்த அனுபவங்கள் நம்மை செதுக்கியிருக்கின்றன. அந்த அனுபவங்கள் நமக்கு பாடங்களாக, வழிகாட்டு கின்ற நெறிகளாக என்றைக்கும் இருக்கும் என்று நம்பி, ஆறுதல் பெறுவோமாக!" என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அறக்கட்டளையின் பாதுகாவலர்

கடந்த 19.7.2020 மாலை 6 மணியளவில் ஒப்பற்ற தலைமை நான்காம் பொழிவு தொடங்குவதற்கு முன்பு மறைந்த வரியியல் வல்லுநர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இணைவேந்தர் ச.இராஜரத்தினம் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். அவரது இரங்கலுரை வருமாறு

பேரன்புமிக்க அருமைத் தோழர்களே, சான்றோர் களே, இன்றைய ஒப்பற்ற தலைமை தொடர் பொழிவிற்கு முன்பு, மிகவும் வருத்தத்தோடும், வேதனை யோடும், எல்லையற்ற துன்பத்தோடும், துயரத்தோடும், எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டிய ஒரு துன்பச் செய்தி என்னவென்றால், நீங்கள் எல்லாம் அறிவீர்கள், நம்முடைய அறக்கட்டளையின் தலை வராக இருந்த பெருமதிப்பிற்குரிய மானமிகு அய்யா இராஜரத்தினம் அவர்கள் நேற்று நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்கள். சில நாள்கள் உடல்நலக் குறை வாக இருந்து அவர்கள் மறைந்த சோகமான அந்தச் சூழல், நமக்கு எளிதில் வெளியே வர செய்ய முடியாத ஒரு துன்பத்தைத் துயரத்தைக் கொடுத்துக் கொண்டி ருக்கிறது. அதன் காரணமாகத்தான். அவருக்கு மரியாதை செலுத்தக் கூடிய வகையில், நேற்று நடை பெறவிருந்த இந்தக் கூட்டத்தைத் தள்ளி வைத்து இன்றைக்கு நடத்துகின்றோம்.

அய்யா இராஜரத்தினம் அவர்களைப்பற்றி தனியே ஓர் இரங்கல் கூட்டம் - வீர வணக்கக் கூட்டம் நடைபெறவிருந்தாலும், இன்றைக்கு நடைபெறும் இந்தக்  கூட்டத்தில் என்னுடைய உரையைத் தொடங் குவதற்கு முன்பு, அவருக்கு வீர வணக்கம் செய்வ தற்குக் காரணம், அவர்கள் நமக்கு தந்தையின் நிலையில் இருந்து, வழிகாட்டியாக இருந்தார். அறக் கட்டளையின் பாதுகாவலராக இருந்தார். சரியான வழியில், நேர்மையான முறையில் எப்பொழுதும் நாம் நடக்கின்றோம் என்பதைப் புரிந்து நம்மோடு வந்து இணைந்தவர் அவர்.

அய்யா இராஜரத்தினம்!

எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், நம்முடைய இயக்கத்தைப் பொறுத்தவரையில், அதிலும் குறிப்பாக என்னைப் பொறுத்தவரையில், அய்யா இராஜரத்தினம் அவர்களை கலந்தாலோ சிக்காமல் எந்த முடிவும் எடுத்தது கிடையாது. அது போலவே, அவர்கள் சொல்லி, எந்த ஒரு காரியத் தையும் தட்டியதே கிடையாது. அதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றக் கூடிய அளவிற்கு வந்து, அதனைக் கடைபிடித்து ஒழுகுகின்ற ஒருவனாக இருந்ததனால்தான், பல நேரங்களில் ஏற்பட்ட சோதனைகளையெல்லாம் கடந்து, அதி லிருந்து வெளியே வரக்கூடிய வாய்ப்பை நாம் பெற் றோம்.

அப்படிப்பட்ட ஒருவர், இன்றைக்கு வரலாறாகி விட்டார் என்று நினைக்கின்ற நேரத்தில், அதனை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் கரோனா காலத்தில் ஏற்பட்ட துன்பங்களில், துயரங்களில், மிகப் பெரிய துன்பம் இது! எல்லோருக்கும் அவரைப்பற்றி தெரிந்திருக்கக் கூடிய வாய்ப்பில்லை. அறக்கட்டளை யில் இருந்த தோழர்கள், பெரியார் திடலுக்கு வரக் கூடிய தோழர்களுக்கு, சென்னையில் உள்ள தோழர் களுக்கு அவரை நன்றாகத் தெரியும்.

அவர் திராவிடர் கழகத்துக்காரர் அல்ல. ஆனால், பெரியாருடைய கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நம்முடைய செயல்பாடுகளில் உள்ள நேர்மையை, நாணயத்தைக் கண்டு, நமக்கு உதவ, நாம் கேட்டுக் கொள்ளாமலேயே, அவராக வந்து, நமக்கு அறிவுரை சொல்லக் கூடியவர்.

அவரைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்; இரங்கல் கூட்டம் ஒன்றை தனியாக நடத்தவிருக்கின்றோம் ஆகவே, ஒன்றே ஒன்றை மட்டும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நம்முடைய அறக்கட்டகளைகளை ஒழிக்க வேண்டும் என்று வருமான வரித்துறையினர் ஏராள மான வரிகளைப் போட்டு, தந்தை பெரியார் காலத் திலும், அன்னை மணியம்மையார் காலத்திலும், இறுதி யாக நான் பொறுப்பேற்றவுடன் 1978 ஆம் ஆண்டு, கடைசி கட்டம் என்பதற்கு முன் கட்டமாக, இன்கம் டாக்ஸ் டிரிபியூனலுக்கு வந்து, இரண்டு நீதிபதிகளை நியமித்தனர். அவர்கள் உயர்ஜாதிக்காரர்கள்தான். அவர்கள் விசாரித்தார்கள்.

அவர்கள் சொன்ன குற்றச்சாட்டுகளை உறுதிப் படுத்தவேண்டும் என்று அங்கே இருந்த ஆதிக்க வாதிகள் நினைத்தார்கள். அதற்காக தனி வழக்குரை ஞரை எல்லாம் ஏற்பாடு செய்தார்கள். அதுபற்றிய விரிவான விவரங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். ஆகவே, அதனைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

உயர்ஜாதி பார்ப்பனர்கள் என்றாலும்,

நேர்மையாக நடந்துகொண்டார்கள்!

நம்முடைய அறக்கட்டளைதான் இது என்று சொல்லி, 80 லட்சம் ரூபாய் வருமான வரி கட்ட வேண்டும் என்று சொல்லியிருந்ததைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்கள். தீர்ப்பளித்த இரண்டு பேரும் உயர்ஜாதி பார்ப்பனர்கள் என்று சொன்னாலும், அவர்கள் நேர்மையாக நடந்துகொண்டார்கள், அந்த வழக்கினைப் பொறுத்தவரையில்!

அந்தத் தீர்ப்புக் குறித்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும் என்று வருமான வரித்துறையினர் உறுதியாக நின்றனர். அப்படி மேல்முறையீடு செய்யவேண்டுமானால், அந்தத் துறையில் இருக்கக்கூடிய ஆலோசனைக் குழுவிடம் ஆலோசனை பெறவேண்டும். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தால், அது வெற்றி பெறுமா? என்பதையெல்லாம் உறுதி செய்துகொள்ளவேண்டும் என்று ஒரு சட்ட நடைமுறை இருக்கிறது.

டிரிபியூனலில் அதிகாரிகள் அய்யா இராஜரத்தினம் - லட்சுமணப் பெருமாள்!

அந்த வகையில், இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும் என்று வந்தபோது, டிரிபியூனலில் அதிகாரிகளாக இருந்தவர்கள் அய்யா இராஜரத்தினம் அவர்களும், லட்சுமணப் பெருமாள் என்பவரும் ஆவார்.

நமக்கு அந்த இருவருமே யார் என்று தெரியாது. அப்படி நடந்ததும் நமக்குத் தெரியாது. நம்முடைய தகவலுக்கும் வரவில்லை, வரவேண்டிய அவசியமும் இல்லை.

மேல்முறையீட்டைக் கைவிட்டனர்

வருமான வரித்துறையினர்

அந்த வழக்குபற்றி டிரிபியூனல் அதிகாரிகளிடம் சென்றபொழுது,  மேல்முறையீடு செய்வதற்கு, இரண்டு வகையில் தகுதி பெற்றிருக்கவேண்டும். ஒன்று, சட்ட ரீதியாகப் பிரச்சினை இருந்தால்தான், மேல்முறையீடு செய்து வெற்றி பெற முடியும். ஆனால், இந்த வழக்கில் சட்ட ரீதியான நுணுக்கங்கள் இல்லை. அதே நேரத்தில், தகவல்களின் அடிப்படை யில் இந்த வழக்கு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அப்படியே மேல்முறையீடு செய்தாலும், வெற்றி வாய்ப்பு கிடைக்காது. தேவையற்ற முயற்சியை வருமான வரித் துறை எடுப்பது, அதற்கு நட்டத்தைத் தான் ஏற்படுத்துமே தவிர, எந்தவிதப் பலனும் கிடைக் காது என்று அவர்கள் ஆலோசனை சொன்னார்கள்.

ஆனாலும், வருமான வரித்துறையினர் விட வில்லை. அந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நேரத்தில், இதில் சட்டப் பிரச்சினை இல்லை. இந்த வழக்கை மேல்முறையீடு செய்யவேண்டாம்; அப்படி செய்தால், வழக்கைத் தள்ளுபடி செய்ய நேரிடும் என்றவுடன், மேல்முறை யீட்டைக் கைவிட்டனர் வருமான வரித்துறையினர்.

இந்தப் பணியை, நேர்மையாகவும், அதேநேரத்தில் தெளிவாகவும் செய்த பெருமை - நமக்கு அறிமுகமே இல்லாத ஓர் அதிகாரியாக இருந்த அய்யா இராஜ ரத்தினம் அவர்களுக்குண்டு. இந்தத் தகவல் பிறகு தான் எங்களுக்குத் தெரிய வந்தது.

அவர் ஓய்வு பெற்று வந்த பிறகு, அவரைப் போய் பார்த்தோம். அவர் யார் என்று சொன்னால், நம் முடைய சாலை. இளந்திரையனார் அவர்களின் மைத்துனர். அய்யா இராஜரத்தினம் அவர்கள் எந்த அரசியல்வாதியிடமும் தொடர்பு இல்லாதவர். டில்லி யில், அய்யா சுந்தரவடிவேல் அவர்கள் ஒருமுறை அவரைப்பற்றி சொன்னார்கள். நெ.து. அவர்கள் மத்திய அரசின் கல்வித் துறையில், துணைச் செயலா ளராக சில காலம் இருந்தார்கள். அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்தவுடன்தான், நெ.து.சு. அவர்கள் மீண்டும் இங்கே வந்தார்கள்.

பிறகு ஜஸ்டீஸ் வேணுகோபால் அவர்கள் மூல மாக அய்யா இராஜரத்தினம் அவர்கள் (ஓய்வு பெற்ற பிறகு) எங்களுக்கு அறிமுகமானார்கள்.

அதற்குப் பிறகு ஒவ்வொரு துறையிலும் நம்முடைய ஈடுபாடு, செயல்களை எல்லாம் பார்த்து, இவ்வளவு நேர்மையாக நடத்துகிறார்களே - ஓர் இளைஞர், இந்த அளவிற்குத் தெளிவாக, தந்தை பெரியாருக்குப் பிறகு செய்கிறாரே என்று எவ்வளவு தட்டிக் கொடுத்து, ஊக்கம் கொடுக்க முடியுமோ - அந்த அளவிற்கு நம்மை ஊக்கப்படுத்தினார்கள். கிரியா ஊக்கி என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நமக்குப் பெரிய வாய்ப்பாக அமைந்தார்கள்.

அய்யா இராஜரத்தினம் அவர்களை கலந்து ஆலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்கமாட்டேன்!

அன்றையிலிருந்து அவருடைய வழிகாட்டுதல்கள், அவருடைய மேலான அறிவுரைகள்தான் நம்மைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு வந்திருக்கின்றன. எந்தப் பிரச்சினை வந்தாலும், அய்யா இராஜரத்தினம் அவர்களைக் கலந்து ஆலோசிக்காமல், அவருடைய யோசனையைக் கேட்காமல், எதையும் நான் முடிவெடுக்கமாட்டேன்.

கடைசியாக நாங்கள் அவரை சந்தித்தது, திராவிடன் நிதி நிறுவனம் - குடும்ப விளக்கு நிதி நிறுவனத்தின் காணொலி கூட்டம் நடந்தபொழுது, அவருடைய கருத்துகளை எடுத்து வைத்தார். அது தான் நாங்கள் எல்லோரும் கடைசியாகச் சந்தித்தது. அவருடைய நினைவுகளை நாம் எல்லோரும் போற்றவேண்டும். அவருக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும், நன்றி என்பது மிகச் சிறிய வார்த்தை - அவர் போன்றவர்களை நாம் இழந்திருக்கின்றோம் என்றால், அது ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவருடைய குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய இழப்போ, அதைவிட மிகப்பெரிய இழப்பாகும் நமக்கு!

உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்!

கடந்த இரண்டு நாள்களாக எனக்கு மிகுந்த வேதனை. அதை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கரோனா கொடுமையான நோய் என்பதை நாம் அறிவோம். நேற்று இருந்தார், இன்றைக்கு இல்லை என்று சொல்லக்கூடிய நிலையையெல்லாம் பார்த் திருக்கின்றோம். இயக்கத் தோழர்களை அப்படி இழந் திருக்கிறோம், பொறுப்பாளர்கள் சிலரை இழந்திருக் கின்றோம் என்ற வேதனைகள் இருந்தாலும்கூட, அந்த வேதனையை அதிகப்படுத்தக்கூடிய இன் னொரு வேதனை என்னவென்று சொன்னால், நோயி னுடைய கொடுமையைவிட, இறந்தவர்கள் யாராக இருந்தாலும், அவருக்குச் செய்யக்கூடிய இறுதி மரியாதையை, இறுதிப் பயணத்தை, நாம் இருந்து செய்ய முடியாத ஒரு சூழலை இது உருவாக்கி விடுகிறது. அதற்கு வாய்ப்பில்லாமல் கரோனா நோய் ஏற்படுத்திவிடுகிறது. வெளியே செல்ல முடிவதில்லை; காரணம் என்னவென்றால் ஊரடங்கு. அவ்வளவு பெரிய தொண்டாற்றியவர்களுக்கு, நமக்குத் தோன் றாத் துணையாக இருந்தவர்களுக்கெல்லாம் இறுதி மரியாதையை செய்யக் கூடிய வாய்ப்பில்லாமல் ஆகிவிட்டதே என்பதுதான் இந்த வேதனையினுடைய உச்சக்கட்டமாக இருந்தது. இன்றைக்கு உங்களோடு பகிர்ந்து கொண்டு ஆறுதல் கொள்ள முயற்சிக்கிறோம். அவருக்கு, அவருடைய ஒப்பற்றத் தொண்டுக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம்.

அனுபவங்கள் நமக்கு என்றைக்கும் பாடங்களாக, வழிகாட்டுகின்ற நெறிகளாக இருக்கும்

நம்மைப் பொறுத்தவரையில், நம் நெஞ்சங்களில் என்றைக்கும் நிறைந்தவராக இருக்கின்றார். அந்த அளவிற்கு, அவருடைய வழிகாட்டுதல்கள், அவரு டைய கனிந்த அனுபவங்கள் நம்மை செதுக்கியிருக் கின்றன. அந்த அனுபவங்கள் நமக்கு பாடங்களாக, வழிகாட்டுகின்ற நெறிகளாக என்றைக்கும் இருக்கும் என்று நம்பி, ஆறுதல் பெறுவோமாக!

நன்றி, வணக்கம்!

வாழ்க அய்யா இராஜரத்தினம் அவர்களுடைய புகழ்!

(அனைவரும் இரண்டு நிமிடம் அமைதி காத்து, அய்யா இராஜரத்தினம் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர்).

- தொடரும்