ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அமீரகத்தில் அய்யா விழா!
September 12, 2020 • Viduthalai • தலையங்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வளைகுடா நாடான அமீரகத்தில் நேற்று (11.9.2020) தந்தை பெரியார் பிறந்த நாள் விழா (செப்டம்பர் 17) வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்களின் 58ஆம் ஆண்டு பிறந்த நாளும் இணைந்த நிகழ்ச்சிகள் (ஆகஸ்ட் 17) சிறப்பானவை!

ஒரு வெளிநாட்டில் இதனைச் சாதித்துக் காட்டியது சாதாரண மானதல்ல.

தந்தை பெரியார் 142ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 142 பேர்கள் குருதிக்கொடை அளித்துள்ளனர். எழுச்சித் தமிழர் 58ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி 58 பேரீச்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிகளுடன், மூன்றாம் நிகழ்ச்சியாக, அமர்வாக காணொலி மூலம் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

விடுதலைச் சிறுத்தைகள், கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர்  கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன், மேனாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்), மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, மதிமுகவின் துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்பான கருத்துக்களை வழங்கினர்.

"கொடிய கிருமி கரோனாவும், கொடியோர் வகுத்த கல்விக் கொள்கையும்" என்ற தலைப்பில், காலத்தின் பசியை உணர்ந்து உருவாக்கப்பட்ட கருத்தரங்கம் உன்னதமானது.

குருதிக் கொடை வழங்கும் நிகழ்ச்சியை இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா. நல்லகண்ணு அவர்கள் காணொலி வழியில் தொடங்கி வைத்தார். லாத்திப்பா மருத்துவமனையில் குருதிக் கொடை அளிக்கப்பட்டது.

குருதிக் கொடை அளிப்பும், மரக்கன்று நடுவதும், மானுடத்திற்கு அளிக்கப்படும் நூற்றுக்கு நூறு  மகத்தான தொண்டறச்   சரியான செயல்பாடுகளே.

மனிதனை பிறப்பால் உயர்வு - தாழ்வு என்று சிறைப்படுத்தும் இந்துத்துவக் காட்டை அழிக்கும் மிகச் சரியான செயல்பாடாகும். ஒவ்வொரு ஜாதிக்கும் என்று தனிக் குருதிப் பிரிவு உண்டா? என்று கேட்பார் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கும் உயர்ஜாதி 'பிராமண' நோயாளிக்கு அரிய பிரிவு குருதி தேவைப்படும் நேரத்தில், தாழ்த்தப்பட்ட தோழர் ஒருவர் அப்பிரிவுக் குருதியைக் கொடுக்க முன் வந்தால் வேண்டாம் என்று மறுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம் என்பார். மருத்துவமனையில் 142 பேர் குருதியை வழங்கினர் என்றால் எந்த ஜாதிக்காரரின் குருதி இது என்று பதிவேட்டில் குறிப்பதுண்டா?

வாழ்நாள் எல்லாம் ஜாதி ஒழிப்புக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தந்தை பெரியாரின் பிறந்தநாளை யொட்டி ஆக்கப் பூர்வமான செயற்கரும் இந்தச் செயலை ஆற்றியிருக்கும் அமீரக விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் பொறுப்பாளர்களை வரலாறு வாழ்த்தும். இதற்குப் பெரும் ஆதரவு தந்து ஊக்குவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழரின் இந்த அணுகுமுறையை பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துக்காட்டி பாராட்டும் நிலை ஏற்படும்.

காணொலி வழி கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னணியினர் தெரிவித்த கருத்துகள் சிறப்பானவை.

1) தந்தை பெரியார் சமூகநீதிக்காகக் கடைசிவரை பாடுபட்டு, மிகப் பெரிய வெற்றியை ஈட்டியவர்.

2) தந்தை பெரியார் செல்வந்தர் வீட்டில் பிறந்தவர். ஜாதி அடிப்படையிலும் அவர் சமூகத்தால் தள்ளி வைக்கப்பட்டவரும் அல்லர். ஆனாலும் ஜாதியின் காரணமாக ஒடுக்கப்படும் - இழிவுபடுத்தப்படும் மக்கள் பக்கம் நின்று, களங்கள் பல கண்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் உரிமை ஒளியைப் பாய்ச்சியவர்.

3) தமிழ் மண்ணை பல வகைகளிலும் முற்போக்குத் திசையில்  பக்குவப்படுத்தியவர்.

4) மதவாதக் காற்று இங்கு வீச முடியாமல் தடுத்தவர்.

5) மூடநம்பிக்கைகளைத் தகர்த்து பகுத்தறிவுச் சிந்தனையை ஊட்டியவர்.

6) பெண்ணடிமை ஒழிப்பில் தடம் பதித்தவர்.

7) இன்றைக்கு மத்திய பா.ஜ.க. ஆட்சியால் திணிக்கப்படும் தேசிய கல்வித் திட்டமான வருணாசிரம குலக் கல்வியை உள்ளடக்கமாகக் கொண்ட திட்டத்தின் முன்னோடி ராஜாஜி - 1952- 54 கால கட்டத்தில் முதலமைச்சராக அவர் இருந்தபோது கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை அடையாளம் கண்டு, அதனை ஒழிக்கும் போரில் வெற்றி பெற்று, வருணசிரமவாதி ராஜாஜியை அரசியல் தளத்திலிருந்து அப்புறப்படுத்தியவர்.

8) தேசிய கல்வியில் இடம் பெற்ற அம்சங்களைப் பற்றி நாம் ஆராய்வதைவிட இந்தக் கல்வித் திட்டத்தை செயல்படுத்த முனையும் மத்திய ஆட்சி- எந்த சித்தாந்தத்தைப் பின்பற்றுகிறது என்பதைத் தெரிந்து கொண்டால், இந்தக் கல்வித் திட்டத்தின் நோக்கம் எது என்பது விளங்கிவிடும் - அந்தப் பார்வையை  தந்தை பெரியார் நமக்கு அளித்துள்ளார் என்று எழுச்சித் தமிழர் குறிப்பிட்டது மிகவும் சரியானதே.

9) விடுதலைச்சிறுத்தைகள் நடத்தும் எந்த ஒரு நிகழ்ச்சியும் ஒரு கொள்கைக் கோட்பாடாக இருந்து வருவது பாராட்டத்தக்கது என்று கருத்தரங்கில் பேசப்பட்டது.

இளஞ் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாநில செயலாளர் தோழர் ம. சங்கத் தமிழன், தம் உற்ற கட்சித் தோழர்கள், சமூகநீதி ஆர்வலர்கள் துணை கொண்டு இத்தகைய அரும் பெரும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து, வெற்றிகரமாக நடத்தியது வரவேற்கத் தக்கது, பாராட்டத்தக்கதே!