ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அமிதாபச்சன்மீது பாயும் வழக்கு!
November 9, 2020 • Viduthalai • தலையங்கம்

வட இந்தியாவில் இந்தி மொழியில் ஒளிபரப்பப்பட்டு வரும் “குரோர்பதி” நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இதனை பிரபல நடிகர் அமிதாபச்சன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் கேட்ட கேள்வியை சர்ச்சையாக்கியுள்ளது சங்பரிவார்.

கடந்த வெள்ளி அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில்,

பீம் ராவ் பாபாசாகிப் .அம்பேத்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எந்த புனித நூலின் பிரதிகளை தீயிட்டுக் கொளுத்தினர்? (25 டிசம்பர் 1927 அன்று) என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு,

A) விஷ்ணு புராணம்

B) பகவத் கீதை

C) ரிக் வேதம்

D) மனு ஸ்மிருதி

ஆகிய நான்கு விருப்பங்கள் வழங்கப்பட்டன. இதற்கு மனு ஸ்மிருதி என்ற சரியான விடையை போட்டியாளர்கள் தெரிவித்தனர்..

‘விருப்ப - பதில்களில் வழங்கப்பட்டுள்ள அனைத்தும் இந்து சமயத்தைச் சேர்ந்தவை. எனவே கேள்வி இந்துக்களைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். அம்பேத்கரை இந்து விரோதி யாகக் காட்ட முயற்சிக்கின்றனர்.

ஜாதி ரீதியிலாக இந்து சமூகத்தை உடைக்க திட்ட மிடுகின்றனர்' என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

 இது குறித்து பிரபல பாஜக தலைவர்கள் சமூக வலைதளங்களில் கூறியதாவது, “கோடீஸ்வரன் நிகழ்ச் சியை கம்யூனிஸ்ட்கள் தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். இவ்வாறு கேள்விகள் கேட்பது சிறுவர்கள் மனதில் தவறுதலான புரிதலை ஏற்படுத்தும். இவை அனைத்தும் திட்டமிடப்பட்ட நிகழ்வு" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

 இது பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சூழலில் லக்னோவைச் சேர்ந்த அனைத் திந்திய இந்து மகாசபாவின் மாநிலத் தலைவர் ரிஷி குமார் திரிவேதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித் துள்ளார். அதில், கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வி கண்டனத்திற்கு உரியதாகத் தெரிவித்து உள்ளார். 

மராட்டிய மாநிலம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் அபிமன்யு என்பவர் "இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்தும் முயற்சியில் அமிதாபச்சன் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் இறங்கியுள்ளனர். இப்படி செய்வது இந்துக்களிடையே கருத்து மோதலை உருவாக்கும். இதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சிதான் இது" என்று கூறி அமிதா மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை நகலை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜாதி பகைமையைத் தூண்டுவதற்காகக் கூறி அய்.பி.சி 153 மற்றும் 153 ஏ

மோசடியாக லாபம் பெறுதல் 210

வெகுமதியைப் பெறுவதற்காக வன்முறையைத் தூண்டுதல் 215

அவமான வார்த்தைகளைப் பேசி பொது அமைதியைக் கெடுத்தல் (அய்பிசி 504)

கூட்டுச்சதி  34 ஆகிய பிரிவுகளின் கீழ் அமிதாப் பச்சன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே பிரிவுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் மீதும் மனுதர்ம நூல் தொடர்பாக பேசியபோது தமிழக காவல்துறையால் அசுவத்தாமன் என்ற பாஜக பிரமுகர் கொடுத்த புகாரின் கீழ் பதிவு செய்யப்பட்டது

தொடந்து ஆளும் பா.ஜ.க.வின் அராஜகங்கள் குறித்து சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்த 16 இந்தி திரைப்பட நடிகர்கள் மீது போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப் பட்டு அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டது.

நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது, கருத்துரி மைக்கு இடம் கிடையாதா?

இத்தகையை வழக்குகள் - இந்தப் பாசிசப் போக்குகள் எவ்வளவு நாளைக்கு? எப்படியும் அவர்களுக்கு நல்ல பாடத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்ப்போம்!