ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அன்றைய குஜராத் முதல்வரும் இன்றைய உ.பி. முதல்வரும்
October 13, 2020 • Viduthalai • தலையங்கம்

உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் - 'ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கின்' கதையாக அவதிப்பட்டுக் கொண்டுள்ளார். அவர் என்ன செய்தாலும் விழுந்து விழுந்து ஆதரித்தவர்கள், ஏடுகள்கூட 'உடும்பு வேண்டாம்; கைவிட்டால் போதும்' எனும் கையறு நிலைக்கு ஆளாகி விட்டன.

அதிகாரப் பூர்வமானதாக இல்லாவிடினும் 'தினமலர்' சங்பரிவார்களை, பிஜேபியை மேலே விழுந்து ஆதரிக்கும் அக்கிரகார ஏடுதானே!

அந்த ஏடே, 'சட்டி சுட்டதடா கைவிட்டதடா'  என்ற போக்கிலே எழுத ஆரம்பித்ததுதான் ஆச்சரியம். நேற்றைய நாளில் (12.10.2020) பக்கம் 11இல் வெளி வந்துள்ள கட்டுரை என்ன கூறுகிறது?

“உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் என்ற இடத்தில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவம், நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த வழி வகுத்துள்ளது.

'உ.பி. அரசுமீது வீண் பழி சுமத்த இப்படிப் போராட்டங்களை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுகின்றன; இதன் பின்னால் பெரும் சதி உள்ளது' என முதல்வர் ஆதித்யநாத் கூறுகிறார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா, இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்து, தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். மற்ற எதிர்க்கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

இந்த விவகாரம் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 'இந்தப் பிரச்சினையை எப்படி தீர்ப்பது' என்று விசாரிக்கும்படி மூத்த தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

'யோகி ஆதித்யநாத்துக்கு அரசு நடத்துவதில் அனுபவம் கிடையாது; அவரை முதல்வராக நியமிக்கக் கூடாது' என ஏற்கெனவே பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலர் கூறினர்.

ஆனால் மோடியும், அமித்ஷாஷம் 'யோகி ஆதித்யநாத் தான் முதல்வர்' என பிடிவாதமாக இருந்துவிட்டனர்.

உள்துறை உட்பட முக்கிய துறைகளை வேறு யாருக்கும் கொடுக்காமல் தன்னிடமே வைத்துள்ளார் யோகி ஆதித்யநாத்.

அவரால் அனைத்துத் துறைகளிலும் அதிக கவனம் செலுத்த முடியவில்லை என்கின்றனர். மேலும் தனக்கு வழிகாட்ட, மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவையும் அமைத்துள்ளார். இதில் 11 அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

வரும் 2022இல் உ.பி.யில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. அதுவரை, முதல்வர் ஆதித்யநாத் தாக்குப் பிடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றன பா.ஜ.க. வட்டாரங்கள்" - என்று 'தினமலர்' அழாத குறையாகப் புலம்பித் தவித்துள்ளது.

உ.பி. தேர்தல் முடிவு வந்த நிலையில் தன்னைத்தான் முதல் அமைச்சராக ஆக்க வேண்டும் என்று அடவாடித்தனமாகக் குதித்தவர் தான் இவர். அதற்குப் பயந்துதான் அவருக்கு முடி சூட்டப்பட்டது என்பது 'தினமலர்' உட்பட மறந்தோ - மறப்பதுபோல  நடித்தோ கதை கட்டுகின்றனர்.

உள்துறையையும் கையில் வைத்துக் கொண்ட இவர், காவல்துறை வாகனத்தில் காவிக் குண்டர்களையும் உலவ விட்டது எல்லாம் மறந்தே போயிற்றா?

உ.பி.யில் முஸ்லிம் பெரியவர் அக்லக் என்பவர் வீட்டில் குளிர் சாதனப் பெட்டியில் (Fridge) பசு மாட்டுக் கறி வைத்திருந்ததாகக் கூறி அடித்துக் கொன்ற கொடுமையை இன்று நினைத்தாலும் பகீர் என்கிறது. அது மாட்டுக்கறியல்ல - ஆட்டுக் கறி என்பது பரிசோதனையில் தெரிய வந்தது; பொய்த் தகவலால், புரளியால் ஓர் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டதே - அந்தக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனரா? பதின்மூன்று பேரும் விடுதலையாம், அவர்கள் அத்தனைப் பேரும் சிறையிலிருந்து ஊர்வலமாக அழைக்கப்பட்டதோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை.

அந்தப் பதின்மூன்று பேர்களுக்கும் மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய அனல்மின் நிலையத்தில் (NTPC) பணியமர்த்தமும் செய்யப்பட்டதே - இந்தக் கொடுமைக்கு மத்திய அரசும் துணை போனது என்பது இதன் மூலம் தெரியவில்லையா?

இந்தக் காட்டுவிலங்காண்டித்தனமான திமிர் எப்படி வந்தது? குஜராத் முதல் அமைச்சராக நரேந்திரமோடி இருந்தபோது தேர்தல் நேரத்தில் என்ன பேசினார் என்று பிரபல மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் கூறியது தான் நினைவிற்கு வருகிறது.

'நீ இந்து என்றால் எனக்கு வாக்களிக்கவும்' என்பதுதான் நரேந்திர மோடியின் பிரச்சாரமாக இருந்தது. ‘இந்துத்துவாவே குஜராத்தின் பெருமை' என்று மோடி பிரச்சார விற்பனை செய்தார். குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதிதான் இந்தியா என்று குஜராத்திகளை மோடி நம்ப வைத்து விட்டார். குஜராத்துதான் இந்தியா என்ற கோஷத்தை நானும் எனது செவிகளில் கேட்டேன் என்றாரே மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார்.

அன்று குஜராத் முதல்வர் - இன்று உ.பி. முதல்வர். கூட்டிக் கழித்துப் பாருங்கள் - உண்மை புரியும். மதவாத பாசிசத்தில் மக்கள் இன்னும் என்னென்ன விலை எல்லாம் கொடுக்க வேண்டுமோ, யார் கண்டது? மக்கள் விழிப்புணர்வே ஒரே பரிகாரம்!