ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அன்று - காங்கிரஸ் என்றால் பார்ப்பனருக்கானது  என்ற நிலைப்பாடு!
August 21, 2020 • Viduthalai • கழகம்

காணொலியில் கழகத் தலைவர் -2

* கலி. பூங்குன்றன் 

“மூன்று நூற்றாண்டுகளில் சமூகநீதி - ஒரு வரலாற்று பார்வை” எனும் தலைப்பில் காணொலி மூலம் தனது  இரண்டாம் சொற்பொழிவை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் நேற்று மாலை 6.30 மணியளவில் நிகழ்த்தினார்.

தந்தை பெரியாருக்கும், மகாத்மா ஜோதிபாபூலேக்கும் இடையில் கருத்தளவில் நிலவிய ஒற்றுமையை விளக் கினார்.

மகாராட்டிரத்திலே ‘சத்ய சோதக் சமாஜ்’ என்ற அமைப்பை ஜோதிபாபூலே தோற்றுவித்தார். தமிழ் நாட் டிலே தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.

இருவரின் கால கட்டம் வேறாக இருந்தாலும் அடிப் படைக் கொள்கை என்பது ஒன்றாகவே இருந்தது. சமூக விஞ்ஞானம் என்பது இதுதான்.

இதிகாசங்களையும், புராணங்களையும், பார்ப்பன ஆதிக்கத்தையும் கிராமங்களில் பிரச்சாரம் செய்தவர் ஜோதிபாபூலே என்றால், தமிழ்நாட்டிலும் தந்தை பெரியார் அதனையே செய்தார்.

சமூக அநீதிக்கு எதிர்ப்பாக இருவருமே சமூகநீதி என்னும் போர்க் கொடியைத் தூக்கினர்.

கெயில் ஓம்வெட் (Gail Om Vedt) என்னும் அமெரிக்க அம்மையரால் கலிபோர்னியா பல்கலைக் கழக டாக்டர் பட்ட ஆய்வுக்காக எழுதப்பட்ட நூல் ‘Cultural revolt in colonial society' (The Non - Brahmin Movement in Western India 1873-1930).  ஜோதி பாபூலே அவர்களின் சமூகப் புரட்சி இயக்கம் குறித்தும், அது விளைவித்த பலன்கள் குறித்து விரிவாகவும் அதேபோல் சாகுமகராஜ் குறித்தும் பல அரிய தகவல்களும் அந்நூலில் கிடைக்கப் பெறுகின்றன.

குறிப்பாக மகாராட்டிரத்தில் பம்பாயில் புரட்சிக் கொடி தூக்கிய மகாத்மா ஜோதிராவ் பூலே பற்றி விரிவாக எழுதியுள்ளார். Nationality and Equality   என்ற இரண்டும்தான் ஜோதிபாபூலேவின் கோட்பாடு என்று குறிப்பிட் டுள்ளார். தந்தை பெரியாரும், பாபூலேவும் எப்படி ஒத்துப் போகிறார்கள் என்பது இதன் மூலம் விளங்க வில்லையா?

‘சத்திய மேவ ஜெயதே!’ என்ற வாசகத்தை  பெரும் அளவில் பரப்பியவரும் ஜோதிபாபூலே தான்.  (இந்த வாசகம் ரூபாய் நோட்டுகளிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது)ஆனா லும் அந்த இயக்கம் ஒரு 55 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து மேற்கொண்டு பணிகளை ஆற்ற இயலாமல் போனது கெட்ட வாய்ப்பே!

மகாராட்டிரத்தைப் பொறுத்தவரை சாகுமகராஜ் - சிவாஜி பரம்பரையைச் சேர்ந் தவர். 1874இல் பிறந்தவர். சிவாஜிபோல ஆரியச் சூழ்ச்சி வலைக்குள் சிக்காமல், சமூக நீதியை உயர்த்தியவர் அவர். பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளைக்  சுக்கல் நூறாக உடைத்தெறிந் தவர். இடஒதுக்கீட்டைத் தமது கோல்ஹாப்பூர் சமஸ்தானத்தில் முதன் முதலாக அமல்படுத் தியவர். அனைத்துப் பணிகளிலும் ஒடுக்கப் பட்டோருக்கு 50 விழுக்காடு இடங்கள் என்று அறிவித்து 1902ஆம் ஆண்டில் செயல்படுத் தியவர். இந்தியாவில் முதன் முதலாக இந்த வகையில் பிறப்பிக்கப்பட்ட ஆணை இது.

1921இல் கோலாப்பூரில் 71 அலுவலர்களில் 60 பேர் பார்ப்பனர்கள், 1912இல் 95 அலு வலர்களில் 35 பேர் மட்டுமே பார்ப்பனர்கள் எனும் நிலையை உருவாக்கிய ஒப்பரும் சமூகநீதியாளர் சாகுமகராஜ்.

தனது தனிப்பட்ட பணிகளைக் கவனித்துக் கொள்ள தீண்டாதார் என்று ஒடுக்கப் பட்டவர்களை இணைத்துக் கொண்டார். அரசாங்க யானைமீது அமர்ந்து அதை வழி நடத்திச் செலுத்தும் பதவியை ஒரு தாழ்த்தப்பட்ட தோழருக்கு அளித்தார். தீண்டப்படாதவர் என்று ஒதுக்கப் பட்டவர்களுடன் அமர்ந்து உண்ணவும் தொடங் கியவர்.

பார்ப்பனர்களை அழைக்காமல் தங்கள் வீடுகளில்  நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர்களைப் புறக்கணிக்கச் செய்தவர் மகாத்மா ஜோதி பாபூலே. அந்தக் கருத்து சாகு மகராஜை மிகவும் கவர்ந்தது.

அதன் விளைவு 1920 ஆம்ஆண்டில் பார்ப்பனர் அல்லாத மராத்தியர்களிடையே அர்ச்சகர்களை உருவாக் கினார்.

சாகுமகராஜ் அவர்களை நீதிக்கட்சியைச் சேர்ந்த டாக்டர் டி.எம்.நாயரும், பனகல் அரசரும் சந்தித்து உரையாடினர் என்பது ஒரு சிறப்புத்தகவலாகும்.

(அத்தகு பெருமகனாரை வரலாற்றில் நினைவு கூறும் வகையில் தஞ்சாவூர் - வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் அன்னை நாகம்மையார் பெயரில் அமைந்துள்ள மாணவியர் தங்கும் விடுதியின் இரண்டாம் பகுதிக் கட்டடத்தின் மூன்று கூடங்களில் ஒன்றிற்கு ‘”சாகு மகாராசர்” என்று பெயர் சூட்டினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் - ஆண்டு 1995)

***

காங்கிரசு என்பது 1885 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற அய்.சி.எஸ். அதிகாரியான வெள்ளைக்காரர் ஆலன் ஆக்டோவியன் ஹியூம் என்பவரால் தோற்றுவிக்கப் பட்டது. இவர் காங்கிரசுக்கு 20 ஆண்டுகள் தொடர்ந்து பொதுச்செயலாளராக இருந்திருக்கிறார். முதல் 10 ஆண்டுகள் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளுக் கெல்லாம் வெள்ளைக்காரர்களே தலைமை  வகித்தனர். முதல் எட்டு மாநாடுகளில் ராஜவிசுவாச தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல் மாநாடு பம்பாயில் நடைபெற்றது. இரண்டாவது மாநாடு கல்கத்தாவிலும், மூன்றாம் மாநாடு சென்னை யிலும் நடைபெற்றது. மும்பை மாநாட்டுக்கு சென்னை யிலிருந்து சென்ற பிரதிநிதிகளில் 80% பார்ப்பனர். புனேயி லிருந்து கலந்து கொண்டவர் 100 சதவீதம் பார்ப்பனர்கள்.

இந்த மூன்று மாநாடுகளிலும் கவர்னர் ஜெனரலோ, கவர்னரோ மாலையிலே காங்கிரஸ் பிரதிநிதிகளை அழைத்து Ôதேநீர் விருந்துÕ கொடுத்தார்கள் என்பது ஒரு சுவையான தகவல்!

கல்வி கற்றவர்கள் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராகத் திரும்பி விடாமல் தடுக்க பிரிட்டீஷ் ஆட்சியில் பார்ப்பன அதிகா£ரிகள் கூட்டாளியாக்கப்பட்டார்கள். அந்தக் கால கட்டத்திலே படிப்பாளிகள் என்றால் பார்ப்பனர்கள்தானே!

இந்த வாய்ப்பைப் பார்ப்பனர்கள் நன்றாகப் பயன் படுத்திக் கொண்டனர்.

1885இல் காங்கிரசு கூடியது. அம்மாநாட்டில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தவர் ஜி.சுப்பிரமணிய அய்யர். இவர் யார் என்றால் தொடக்கத்தில் சுதேசமித்திரன் ஏட்டுக்கும், பிறகு இந்துப் பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்தவர். அவர் முன்மொழிந்த தீர்மானம்:

“பல நூற்றாண்டுகளாக இந்தியா கொலை, கொள்ளை, ஆக்ரமிப்பு முதலான பயங்கர குழுக்களால் தாக்கப்பட்டு வந்தது. இறைவனின் கருணைமிக்க அருளாட்சி நோக்கால் ஆங்கிலப் பேரரசு இந்தியாவை ஆட்கொண்டது.

பிரிட்டீஷ் ஆட்சி இந்தியாவிற்கு அமைதியையும் பாதுகாப்பையும் அளித்தது. முந்தைய ஆட்சி எதனைக் காட்டிலும் பிரிட்டீஷ் ஆட்சியின் குறிக்கோளும், பயன் களும் மொத்தமாகப் பார்க்கும்போது நலம் தருவதாகவே அமைந்தது. பொருளாதார தார்மீகச் செழிப்பிற்கு வழிப் படுத்தும் உலக வரலாற்றை எடுத்துக்காட்டும் சக்திகள், நம்நாட்டில் இந்த ஆட்சியின் வாயிலாக செயலாற்றத் தொடங்குகின்றன!

இந்த ஆட்சியின் காரணமாக நமக்குக் கிடைத்துள்ள பயனைச் சுருக்கிக் கூறுகிறேன்; என்பதுதான் அந்த முதல் தீர்மானம்:

பிரிட்டீஷ் அரசர், அரசி, ராணி இவர்கள் எல்லாம் நலம் பெற இருக்க வேண்டும்; அவர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டு அவர்களுக்கு இந்தத் தேசத்தைச் சேர்ந்த நாமெல்லாம் நம்முடைய மக்களெல்லாம் எப்படி உண்மையோடு இருக்க வேண்டும் என்ற ராஜ விசுவாச தீர்மானங்கள் எட்டாண்டுகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

இதற்கான அறுவடையைப் பார்ப்பனர்கள் மிக அதிகமாகவே பெற்றனர். 1888ஆம் ஆண்டில் இரண் டாவது காங்கிரசு மாநாடு குறித்து ஒரு நூல் வெளிவந்தது; அதனை எழுதியவர் க.சுப்பிரமணிய அய்யர்தான்.

புத்தகத்துக்குத் தலைப்பு என்ன தெரியுமா? ஆரிய ஜன அய்க்கியம் அல்லது காங்கிரஸ் ஜனசபை -இதற்கு மேல் என்ன விளக்கம் தேவை?

பிரிட்டீசு ஆட்சியில் பார்ப்பனர் எப்படி எப்படி யெல்லாம் சலுகை களையும் வாய்ப்புகளையும் பெற்றனர் என்பதற்குக் காலமெல்லாம் ராஜாஜி பக்கமும், பார்ப் பனர்கள் பக்கமும் சாய்காலாக இருந்த ம.பொ.சிவஞானம் அவர்கள் வாயிலாகவே சொல்லுவது பொருத்தமானது.

அவர் எழுதிய நூல் “விடுதலைப் போரில் தமிழகம்“ என்பதாகும் அதில் எழுதியிருப்பதாவது:

“சென்னை மாகாணத்தைப் பொருத்தவரையிலே மிதவாதிகளைக் கொண்ட பழைய கட்சியாரில் வக்கீல்களே அதிகம். ஆண்டுதோறும் கூடும் காங்கிரஸ் மகாசபைகளிலே, வைஸ்ராயின் நிர்வாக சபைக்கும், சென்னை மாநில கவர்னரின் நிர்வாக சபைக்கும் இந்தியர்களை நியமிக்க வேண்டுமென்றும்; உயர்நீதிமன்ற நியமனங்களிலே இந்தியர்களைக் கூடுதலாக நியமிக்க வேண்டுமென்றும் கோரித் தீர்மானம் கொண்டு வந்ததே இந்த மிதவாதக் கூட்டம்தான். இத்தகைய பதவிகளைத் தாங்கள் அடைய முடியுமென்ற நம்பிக்கையின் பேரிலேயே சென்னை மாகாண வக்கீல்கள் காங்கிரஸ் கூடாரத்துக்குள்ளேயே குடியிருந்தனர். காங்கிரஸ் மகாசபையில் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களே சேர முடியும் நிலை இருந்ததும், இந்த மிதவாதக் கூட்டம் அந்த மகாசபையிலே செல்வாக்குப் பெறுவதற்குச் சாதகமாக இருந்தது. ஆங்கிலம் படித்தவர்களிலே பள்ளி களிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்களாக இருப்பவர்களும், அரசாங்க உயர் அலுவலர்களும் காங்கிரசில் இயலாத வர்களாக இருந்தனர். ஈடுபட்டாலும், பிரிட்டீஷ் பொருள்களை பகிஷ்கரிக்க வேண்டுமென்ற அளவுக்குச் செயல்பட முடியாதவர்களாகவும் இருந்தனர். இதனால், ஆங்கிலம் படித்தவர்களிலே சுதந்திரமாக செயல்படுவதற்கு அதிக அளவில் சந்தர்ப்பம் பெற்றிருந்தது வக்கீல் கூட்டம்தான்.

பிற்காலத்தில் சென்னை மாகாணத்திலே ஜஸ்டிஸ் கட்சி தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது இந்த வக்கீல்களின் ஆதிக்கம்தான். இவர்களிலே மிகப் பெரும்பாலோர் பிராமணர்களாக இருந்தாலும், அரசாங்க நீதித்துறை நிர் வாகத்துறை, பார்லிமெண்டரித் துறை ஆகியவற்றில் எல்லாம் இந்த பிராமண வக்கீல்களே நியமனம் பெற்ற தாலும், இவர்களுடைய ஆதிக்கத்துக்கு வகுப்புவாத வண்ணம் பூச ஜஸ்டிஸ் கட்சியால் முடிந்தது. அந்நாளில் சட்டம் படித்த வக்கீல்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்கு அதிகமானோர் பிராமணர்களாகவே இருந்தனர். ஆகவே, அவர்கள் இந்தியன் என்ற பெயரால் அரசாங்கத் துறைகள் அனைத்திலும் நியமனம் பெறுவது இயற்கையாக இருந்தது” என்று எழுதியுள்ளாரே.

(விடுதலைப் போரில் தமிழகம் - ம.பொ.சி. பக்கம் 173-174)

காங்கிரஸ் என்றால் பார்ப்பனருக்கானது என்ற ஆரம்ப வரலாறு இதுதான்.

வெள்ளைக்காரர்களின் அய்.சி.எஸ். பட்டம் தங் களுக்குத் தேவை என்று பார்ப்பனர்கள் கோரிக்கை வைத்தனர்.

மகாத்மா ஜோதிபாபூலேயின் சீர்திருத்தக் கருத்து களால் மக்கள் மத்தியில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. நாங்கள் சீர்திருத்தத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்று காட்டிக் கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. ஆனால் அவை எல்லாம் சமய சீர்திருத்தமே தவிர, சமூக சீர்திருத்தமல்ல. காங்கிரஸ் மாநாடுகளில் முதல் அய்ந் தாண்டுகளில் சமூக சீர்திருத்தத்துக்கு இடம் அளிக்கப் பட்டது. ஒரு கட்டத்திலே சமூக சீர்திருத்தம் நமது நோக்கமல்ல என்று வெளிப்படையாகவே கூறி விட்டனர்.

காங்கிரசைத் தோற்றுவித்தவரும், அதன் பொதுச் செய லாளராக 20 ஆண்டுகள் தொடர்ந்து இருந்து வந்தவருமான ஹியூமே, காங்கிரஸ் மாநாட்டில் வெளிப்படையாகவே பேசி விட்டார்.

“நாம் அரசியல் ரீதியாகக் கூடுகிறோமே தவிர, சமூக சீர்திருத்தம் பேசுவதற்குக் காங்கிரஸ் இல்லை. ஜாதி ஒழிய வேண்டும் என்பது போன்ற பிரச்சினைகளை நாங்கள் பேச மாட்டோம். ஏன் என்றால் மத விஷயங்களில் நாம் தலையிடுவதில்லை என்று அரசியார் தெளிவாக வாக்குக் கொடுத்து விட்டார்கள்; எனவே மதம், ஆசாரம் அனுஷ் டானம் வர்ணாசிரம தர்மம் இவற்றைப் பற்றியெல்லாம் கண்டித்தோ, எதிர்த்தோ, மாற்றியோ நாம் பேச மாட்டோம்; அவரவர்களுடைய ஜாதி ஆச்சாரம், குலஆச்சாரம், தருமங்கள் பாதுகாக்கப்படும். மற்றவர்கள் யாரும் இதில் குழப்ப வேண்டாம்“ என்று தெளிவாக திட்டவட்டமாகவே கூறப்பட்டு விட்டது.

1937 ‘குடிஅரசு’ இதழில் தந்தை பெரியார் எழுதியது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் என்பது பார்ப்பனர்களுக்கான அமைப்பாக மாறிவிட்ட நிலையில், முஸ்லிம்கள் தங்கள் பங்குக்கு விகிதாச்சாரம் கேட்டு 1906இல் போராட முன் வந்தனர். தங்களுக்குத் தனித் தொகுதி தேவை என்று போராடி 1909ஆம் ஆண்டில் அதனைப் பெற்றும் விட்டனர். 1916ல் சென்னை மாகாணத்தில் பார்ப்பனர் அல்லாத இயக்கமான நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் முகம்மது அலி ஜின்னா முஸ்லிம்களுக்காக தனி நாடு கோரும் நிலையை உருவாக்கியது காங்கிரஸ் பார்ப்பனர்கள்தாம் என்று தமது இரண்டாவது தொடரை நிறைவு செய்தார்  திராவிடர் கழகத் தலைவர்.

 

வல்லம் பாலிடெக்னிக்கில் ‘சாவித்திரிபாய்பூலே’

மகாத்மா ஜோதி பாபுலேயின் அய்ந்தாம் வம்ச வழியைச் சேர்ந்த குடும்பம் இன்னும் பூனாவில் வாழ்ந்து கொண்டுள்ளது. அவர் பெயர் ‘நீட்டா பாய் பூலே’ என்பதாகும். மும்பை வந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை நேரில் பார்க்க விரும்பினார். அதன்படி, ஆசிரியருடன் குமணராசன், கணேசன், நான் உடன் சென்று நேரில் பார்த்து விசாரித்து வந்தோம். திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற (2016 மார்ச் 19,20) திராவிடர் கழக மாநாட்டிற்கு அந்த அம்மையாரை அழைத்திருந்தோம். மாநாடு முடிந்து மறுநாள் வல்லத்திலுள்ள பெரியார் கல்வி நிறுவனங்களைச் சுற்றிக் காட்டினோம்.

பெரியார் நூற்றாண்டு நினைவு பாலிடெக்னிக் வளாகத்தைப் பார்வையிட்டபோது அந்த அம்மையார்  ஒரு கட்ட டத்தில் எழுதப்பட்டிருந்த பெயரைப்பார்த்து அப்படியே மலைத்து நின்றார். “சாவித்திரிபாய் பூலே’’ என்பதுதான் அந்த பெயர். அதைப்பார்த்து உணர்ச்சி வயப் பட்டு நெகிழ்ந்து போனார். அப்பொழுது அவர் சொன்னார்: ‘உங்கள் நாட்டிலே சமூக நீதி சிந்தனையோடு பாடுபட ஒரு தலைவர் வீரமணி இருக்கிறார். எங்கள் நாட்டில் அப்படி யாரும் இல்லையே’ என்று நெகிழ்ந்து கூறினார்.

- நேற்று நடைபெற்ற காணொலியில் மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர்  இரவிச்சந்திரன் இந்த அரிய தகவலைக் கூறினார்.