ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அன்றும் என்றும் பெரியார்! பெரியார்! பெரியார்!
September 17, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (செப்டம்பர் 17, 2020).

ஒப்பாரும், மிக்காருமிலாத உயர் தனி மனிதர்!

ஓய்வறியாத உழைப்பின் எல்லை அவர்!

உண்மைகளை எவர்க்கும் அஞ்சாது வெளியிடும் துணிவின் தூய உருவம்!

ஒப்புவமை காட்ட இயலாத சுயசிந்தனையாளர்!

தன்னலம் சிறிதும் புகாத தன்னேரில்லாத தகைமைப் பொதுத்தொண்டு!

தனது செல்வம், தன்னை நம்பி மக்கள் தந்த செல்வம் எல்லாவற்றையும் திரட்டி மக்களுக்குத் தந்து மகிழ்ந்த மகத்தான அருட்கொடையாளர்!

மானமீட்பர்!

பேதமிலா பெருவாழ்வே மனித வாழ்வு - இதில் ஜாதி ஏன் - பெண்ணடிமை ஏன்? என்று கேட்டு உரிமை மீட்ட உத்தமத் தலைவர்!

இனிவரும் உலகம்பற்றி சரியாகக் கணித்த சமூக விஞ்ஞானி!

‘‘மானமும் அறிவும் மனிதர்க்கழகு'' என்று மனிதர்களுக்கு உண்மை அழகு எது என்று சரியாகக் கணித்த மானமீட்பர்!

பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டில் பயன் ஏது? என்று சொடுக்கிக் கேட்ட சோர்விலா சொல்வேந்தர்!

துறவறத்தையும் தாண்டிய தொண்டறத்தின் இமயம்!

- இத்தகைய பண்புத் தொகையின் கூட்டான நம் அறிவு ஆசான் தந்தை பெரியாரின் 142 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா - தமிழ்நாட்டுப் பட்டிதொட்டி முதல் பட்டணங்கள் வரை கொண்டாடப்படுவது ஏன்?

இந்தக் கரோனா தொற்றால் தன்னம்பிக்கை தளராது, தலைநிமிர்ந்து நிற்க பெரியாரே நம் ஊன்றுகோல்!

அவர் ஒரு அருமாமருந்து - நம் நோய் தீர்க்க!

பெரியார் என்பவர் ஒரு தனி நபர் அல்லர் - வெறும் உருவமும் அல்ல.

தத்துவம்! அசைக்க முடியாத இலட்சியம்.

காலத்தால் முந்துறும் கருத்துப் பேழை!

அறியாமை இருட்டில் அல்லற்பட்டு ஆற்றாது அழுது கண்ணீர் விடும் மக்களின் ஒரே நம்பிக்கை - அதுவும் நன்னம்பிக்கை! தன்னம்பிக்கை!!

அவர் உடலால் மறைந்து 47 ஆண்டுகள் ஆகின்றன.

எனினும், ‘பெரியார் வாழ்க' என்று முழக்கமிடுகிறார்களே, உலகமெங்கும் என்ற புரியாதோர் கேள்விக்கு இதே விடை!

புரட்சி ‘‘சுனாமி!''

பெரியார் - என்பது தத்துவம் - மனித குலத்தை வாட்டும் பேதங்களை, அறியாமையை, அறிவு வறுமையை, மானப் பஞ்சத்தை விரட்டும் புரட்சி ‘சுனாமி'யாகும்!

எனவேதான், பெரியார் தேவைப்படுகிறார், அன்றும் - இன்றும் -  என்றும்!

காற்றும், நீரும் எப்படி மனித வாழ்வுக்கு எப்போதும் தேவையோ; அதுபோலத்தான் பெரியாரின் சிந்தனைகளும், செயற்முறைகளும் நமக்கு ‘விழி திறக்கும் வித்தகங்கள்' ஆகும்!

பெரியாரே நம் ஒளி!

எனவே, உலகம் அவரது மண்டைச் சுரப்பை தொழுகிறது - பின்பற்றுவதில் போட்டிப் போடுகின்றது!

எனவே, பெரியாரே நம் ஒளி!

அவர் நம் லட்சியம் நம் வழி!

அவரது போராட்ட வடிவங்களே நமக்குத் தீர்வுகள்!

வாழ்க பெரியார்!

வாழ்க! வாழ்கவே!!

அனைவருக்கும் அய்யா பிறந்த நாள் வாழ்த்துகள்!

 

 

கி.வீரமணி,

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

17.9.2020