ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அனிதாவை நினைப்போம்!
September 2, 2020 • Viduthalai • தலையங்கம்

அரியலூர் அனிதா மறைந்து மூன்று ஆண்டுகள் ஓடி விட்டன (1.9.2017). ஆனால் அவரின் தற்கொலை மரணம் விட்டுச் சென்ற இரணம் மட்டும் இன்னும் ஆறவேயில்லை.

'நீட்' என்ற கொடுவாளை ஈன்றெடுத்த கயமைக்கு என்றைக்கு மரணம் ஏற்படுகிறதோ அன்றுதான் அந்த இரணம் ஆறும்.

மனம் என்ற ஒன்று உள்ளது என்று உண்மையிலேயே எண்ணுபவர்கள், அதனைக் கொஞ்சம் உசுப்பி விட்டு ஒரு கணம் நினைத்துப் பார்க்கட்டும்!

மூட்டைத் தூக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் மகள் அனிதா +2 தேர்வில் 1200 மதிப்பெண்களுக்குப் பெற்றது 1176. இயற்பியல் (Physics) -200க்கு 200, கெமிஸ்ட்ரி - 199, பையாலஜி - 194, கணிதம் - 200, கட் ஆஃப் மதிப்பெண் 196.75.

ஆனால் 'நீட்' என்னும் கொடுவாளின் வீச்சால் பெற்ற மதிப்பெண்ணோ வெறும் 86.

'நீட்' எனும் கொலைவாள் அனிதாவைத் தாக்காமல் இருந்திருந்தால் தங்கத் தட்டில் வைத்து மருத்துவக் கல்லூரியில் இடம் கொடுக்கப்பட்டிருக்கும்.

கல்வியில் முதல்தலைமுறையைச் சார்ந்த ஒரு மூட்டைத் தூக்கும் தொழிலாளியின் மகள் 1200க்கு 1176 மதிப்பெண் என்பது சாதாரணமானதுதானா? 196.75 கட்ஆஃப் மார்க் என்பதை நினைத்துப் பார்க்க முடியுமா?

காலம் காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து கம்பீரமாக எழுந்த ஒரு பெண் டாக்டராகப் பவனி வரும் வாய்ப்பை வழிமறித்துத் தாக்கிய 'நீட்'டை ஆதரிக்கிறவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றால் அவர்கள் மனிதர்கள் அல்லர்!

'நீட்' ஏன் கொண்டு வரப்பட்டது என்பதை அனிதாவை வைத்தே கணித்து விடலாம்.

டாக்டர்கள் வீட்டுப் பிள்ளைகள்தான் டாக்டர்கள்ஆக வேண்டுமா? மக்கள் நல அரசு என்றால் அதன் கடமை என்ன? வாய்ப்பு மறுக்கப்பட்டுக் கிடந்த மக்களைக் கை தூக்கி விடுவதுதானே!

ஆனால் இன்றைய அதிகார முறையும், நிருவாகத் தன்மையும், நீதித் துறையும்  இதற்கு நேர்மாறாகவே பயணிக்கின்றன என்பது வெட்கக் கேடே!

'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவோர் யார்? வசதி வாய்ப்புள்ளவர்கள், பயிற்சி நிறுவனங்களில் (Coaching Centres) லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி ஓரிரு ஆண்டுகள் காத்திருந்து தேர்வு எழுதுபவர்கள் தானே!

பிகாரைச் சேர்ந்த ஒரு மாணவி 11, 12ஆம் வகுப்புக்கு செல்லாமலேயே டில்லியில் உட்கார்ந்து கொண்டு, 'நீட்' பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று, அதிக மதிப்பெண் பெற்ற செய்தி வரவில்லையா?

பள்ளிக்குச் செல்லாத அந்தக் கால கட்டம் - எந்த அதிகார வர்க்கத்தால் சரி செய்யப்பட்டது? இது போன்ற வாய்ப்புகள் நம் அனிதாக்களுக்கு உண்டா?

2013 ஜூலை 18ஆம் தேதி மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு பெரும்பான்மை தீர்ப்பாக மருத்துவக் கவுன்சிலின் வேலை தேர்வு நடத்துவதல்ல என்று 'பளார்' என்று அறைந்ததே!

அதற்குப் பிறகு மருத்துவக் கவுன்சில் 'நீட்'டை நடத்தும் அதிகாரம் பெற்றது எப்படி? அதே உச்சநீதிமன்றத்தின் இன்னொரு அமர்வு (முதல் அமர்வில் மாற்றுக் கருத்தை வழங்கிய ஏ.ஆர். தவேதான் இந்த இரண்டாம் அமர்வின் தலைவர் - வலைப் பின்னல் எப்படியெல்லாம் இருக்கிறது பார்த்தீர்களா?) மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரத்தைக் கொடுத்து 'நீட்'டை நடத்தச் சொல்லி விட்டதே!

அனிதாவின் தற்கொலைக்குக் காரணம் இந்த விஷ வட்டம் என்பது புரிகிறதா?

கடந்த 31ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு (5 நீதிபதிகள் கொண்ட அமர்வு) - தமிழர் தலைவர்  ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் அறிக்கையில் (1.9.2020) குறிப்பிட்டது போல நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.

மருத்துவ முதுநிலைப் படிப்பு இடஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறியதோடு - 2013ஆம் ஆண்டில் அல்தாமஸ் கபீர் அவர்களின் தலைமையில் அமைந்த அமர்வு கூறிய அதே கருத்தை வழிமொழியும் வகையில் மருத்துவக் கவுன்சிலுக்கு இடஒதுக்கீட்டில் நாட்டாண்மை செய்யும் அதிகாரம் இல்லை என்று மீண்டும் ஒரு 'பளார்' கொடுத்திருக்கிறது மருத்துவக் கவுன்சிலுக்கு.

'நீட்' தொடர்பான வழக்கிலும் இந்தப் பார்வை சமூக நீதிக்குச் சாதகமாக அமையும் என்று தாராளமாக நம்பலாம் - நம்புவோமாக! அனிதா மறையவில்லை - சமூக நீதியின் மனசாட்சியாக வாழ்ந்து கொண்டுள்ளார்.

வாழ்க பெரியார்!