ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அத்துமீறும் அதிகாரம்!
October 23, 2020 • Viduthalai • தலையங்கம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹத்ராசில் செப்டம்பர் 14ஆம் தேதி அன்று நான்கு உயர் ஜாதி ஆண்களால் தாழ்த் தப்பட்ட, பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்;   அவர் ஏ.எம்.யூ. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டார். 2 வாரமாக எந்த ஒரு மருத்துவப் பரி சோதனையும் செய்யாமல் செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மூலம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தற்குத் தேவையான மாதிரிகளை எடுக்க முடியாமல் செய்து விட்டனர். அதன் பிறகு 11 நாள் கழித்து அவருக்கு சுய நினைவு வந்த பிறகு அவருக்கு பாலியல்வன்கொடுமை நடந்ததற்கான உடலியல் பரிசோதனை நடைபெற்றது.

 இந்த மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் அந்தப் பெண் பாலியல்வன்கொடுமை செய்யப்படவில்லை. அவரது கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகவே மரணமடைந்தார் என்று கூறப்பட்டது. இதனை வைத்துதான் உத்தரப் பிரதேச காவல்துறை ஆணையர் "அந்தப் பெண் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படவில்லை" என்று கூறினார்.

 இதனை அடுத்து பெண்ணின் உடற்கூறு சோதனையை நடத்திய மருத்துவர்கள்  அஸீம் மாலிக் மற்றும் ஒபைத் ஹக் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில் “அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்பட்ட நாளில் இருந்து 11 நாட்கள் கழித்து தான் மாதிரிகள் பெறப்பட்டன. ஆனால் அரசு விதிமுறைகளோ, இது போன்ற வழக்கில் 96 மணி நேரத்திற்குள் மாதிரிகளைப் பெற வேண்டும் என்று கூறியுள்ளது. எனவே இந்த அறிக்கை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை நிரூபிக்காது" என்று கூறியிருந்தனர்

இதனால் சாமியார் முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான அரசு வேண்டுமென்றே இந்த பாலியல்வன்கொடுமை மற்றும் படுகொலையை மறைக்க திட்டமிட்டு செயல்பட்டு உள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்தது,

இந்த நிலையில் உண்மைகளை வெளியில் கொண்டு வந்த இரண்டு  மருத்துவர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இது குறித்து மருத்துவர் ஹக் கூறும் போது  ”எங்களுக்குக் கடைசியாக ஆகஸ்ட் மாதம் ஊதியம் வழங்கப்பட்டது. எங்களின் சீனியர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி எங்களை பணியில் அமர்த்தினார்கள். உடனடியாக பணியில் சேர வேண்டும் என்று அப்போது கூறப்பட்டது. நான் அறுவைசிகிச்சை பிரிவில் மேற்படிப்பு படித்து இந்த ஆண்டு தான் ஏ.எம்.யூ.வில் பட்டம் பெற்றேன். கரோனா காலத்திலும்  பணியாற்றினேன். எங்களின் வாழ்வை பணயம் வைத்து வேலை பார்த்தோம். அஸீம் மாலிக் ஊடகங்களில் பேசிய காரணத்திற்காகவும், நான் ஏதோ தகவலை கசிய விட்டுவிட்டேன் என்று நினைத்தும் தற்போது பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளோம். நாங்கள் ஏன் இலக்காக்கப்பட் டோம் என்று  தெரியவில்லை.  நாங்கள் ஏதும் தவறு செய்ய வில்லை. இது  மிகவும் வேதனை அளிக்கிறது” என்று ஹக் கூறியுள்ளார்.

அதே போல் டாக்டர் மாலிக்கிடம் பேசிய போது, அவருக்கும் கடந்த மாத ஊதியம் தரவில்லை என்று கூறினார். மேலும் தன்னுடைய தனிப்பட்ட கருத்தாக ஹத்ராஸ் வழக்கு குறித்து பேசியதைக் கண்டிக்கும் வகையில் தன்னுடைய சீனியர்கள் தன்னைத் திட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.

"செப்டம்பர் மாத இறுதியில், நான் என்னுடைய பணி நீட்டிப்பிற்காக விண்ணப்பித்தேன்.  அதனை ஒரு மாதம் கழித்து நிராகரித்துள்ளனர். காரணங்கள் ஏதும் கூறாமலே எங்களை பணியில் இருந்து நீக்கி இருப்பது எப்படி?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

துணை வேந்தர் தாரிக் மற்றும் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ஷாஹித் அலி சித்திக்கிடம் இந்த விவகாரம் பற்றித் தொடர்பு கொண்ட போது பதில் ஏதும் அளிக்கவில்லை. மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த மருத்துவர், "அனைத்து விசாரணைகளும் முடிந்த பிறகு இந்த மருத்துவர்கள் தங்களின் ஊதியத்தைப் பெற்றுக் கொள் வார்கள்" என்று கூறியுள்ளார்.

இதே போல் 2016-ஆம் ஆண்டு கோரக்பூர் மருத்துவ மனையில் குழந்தைகளுக்காக தனது சொந்த செலவில் ஆக்ஸிஜன் வாங்கிக் கொடுத்து பல குழந்தைகளைக் காப்பாற்றிய கமால்கான் முதலில் பணி நீக்கம் செய்யப்பட்டு பின்னர் அவர் மீது தேசத்துரோக வழக்கு, கொலை வழக்கு மற்றும் ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் அவர் பிணையில் வெளிவந்துள்ளார். தற்போதும் அதே பாணியில் ஹத்ராஸ் நிகழ்வில் குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசு நடத்திய சூழ்ச்சியை வெளிக்கொண்டு வந்த மருத்துவர்களும் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர்.

உ.பி.யில் நடப்பது ஆட்சியா அல்லது அத்துமீறும் தர்பாரா? அதிகம் ஊதினால் பலூன்கூட வெடிக்கும் என்பது அரசியல் பாடம்!