ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அண்ணா எதற்குத் தேவை - ஏன் தேவை
September 15, 2020 • Viduthalai • தலையங்கம்

அண்ணா எதற்குத் தேவை - ஏன் தேவை?

"நான் திராவிட இன வழி வந்தவன், நான் என்னை திராவிடன் எனக் கூறிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். இவ்வாறு கூறிக் கொள்வதால் வங்காளியர், குஜராத்தியர், மராட்டியர் முதலானவர் களுக்கு நான் எதிராக இருப்பவன் எனப் பொருள்படாது.”

"ராபர்ட் பேர்ன்ஸ் குறிப்பிடுவது போல "என்னவாக இருந்தாலும் மனிதன் மனிதன்தான்! திராவிடர்களிடம் திண்ணியமானதும், தனித் தன்மை பெற்றதும், வித்தியாசமானதுமான ஒன்று நாட்டிற்கு வழங்குவதற்கு இருக்கிறது என்பதுதான் நான் திராவிடன் என்று சொல்லிக் கொள்வதற்கான ஒரே காரணமாகும்". இந்தியா ஒன்று என நினைப்போருக்குச் சொல்வேன். அது இங்கும் அங்கும் குழப்பமிகுந்த, கதம்பப் பகுதிகளாக இருப்பதைக் காட்டிலும், நேச மனப்பான்மையுள்ள பல நாடுகளாக இருப்பது நல்லதல்லவா!  அதனால் எங்களுக்குச் சுயநிர்ணய உரிமை தேவை என்று கருதுகிறோம்."  மாநிலங்களவையில் தனது கன்னிப் பேச்சில்; தனித் தன்மையோடு, தலை நிமிர்ந்து, அதே நேரத்தில் கனிவாக தங்கள் இனம் எது - எங்கள் கொள்கை எது என்பதைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டிய நேரத்தில் கம்பீரமாகவே எடுத்துக் கூறினார் (1962 ஏப்ரல்).

மாநிலங்களவையில் சொல்லப்பட வேண்டிய கருத்துக்களை அவ்வப்போது அவருக்கே  உரித்தான வளமான ஆங்கிலத்தில் பொழிவு செய்திருக்கிறார்.

நாட்டு விடுதலைக்குப் பிறகு, தென்னாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்ற நிலையில் ஒருமைப்பாடு என்பது எப்படி இருக்க முடியும் என்றும் கேட்கத் தவறவில்லை.

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்திய மாநிலங்களவைத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களைப் பார்த்து அண்ணா கேட்டார்.

'தலைவர் அவர்களே, இந்தியா ஒரு நாடு என்பதற்கு ஒரு காரணம் காட்டியிருக்கிறீர்கள். கன்னியாகுமரியிலிருந்து இமாலயம் வரையிலும் இராமனையும், கிருஷ்ணனையும் தொழுகிறார்கள் என்று கூறினீர்கள். ஆனால் ஏசுநாதரை அய்ரோப்பா முழுவதும் தொழுகிறார்கள் என்றாலும், அங்கே பல தேசிய நாடுகள் இருக்கின்றனவே?' - அண்ணாவின் இந்தப் பகுத்தறிவு கூர்மை நிறைந்த கேள்வி, அவையில் உள்ளவர்களை அண்ணாவை அண்ணாந்து பார்க்க வைத்தது.

மத்திய அமைச்சராகவிருந்த பாபு ஜெகஜீவன்ராம் அண்ணாவின் கரத்தைக் குலுக்கிப் பாராட்டுத் தெரிவித்ததோடு, நின்றுவிடவில்லை.  I am a Dravidian from Bihar என்று உற்சாக மாகக் கூறினார்.

இந்திதான் இந்தியாவில் பெரும்பாலோர் பேசும் மொழி என்று சொன்னபொழுது 'இந்தியாவில் காகங்கள்தான் அதிகம்; அப்படியிருக்கும்போது மயிலை ஏன் தேசிய பறவையாகத் தேர்வு செய்துள்ளோம்?' என்று அண்ணா மடக்கினார் இந்தி வெறியர்களை.

இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் தீர்மானத்தில் தீர்க்கமாக இருக்கக்கூடிய ஆட்சியை மத்தியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில் பிஜேபி தலைமை தாங்கி நடத்திக் கொண்டு இருக்கிறது.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற பதாகையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டும், தேசிய கல்விக் கொள்கை என்று சொல்லி, அந்த நோக்கத்தின் அடிப்படையில் துரிதமாகச் செயல்பட்டுக் கொண்டும் உள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்கள், பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் இருப்பதைக் கிஞ்சித்தும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை மத்தியில் இருக்கும் ஆட்சியினருக்கு இல்லைவேயில்லை.

இந்தக் கால கட்டத்தில் அண்ணா ஆட்சியில் இல்லையே என்ற ஏக்கம்தான் நமக்கு முந்துறுகிறது - இருந்தால் எப்படியெல்லாம் பதிலடிக் கொடுத்து திணற வைப்பார் என்று எண்ணிப் பார்க்க வேண்டியும் உள்ளது.

அந்த அண்ணாவின் பெயரில் ஒரு கட்சி - ஓர் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்துகொண்டுதான் உள்ளது. அதே நேரத்தில் அண்ணாவின் வாசனையை வெளிப்படுத்தும் ஒரே ஒரு வார்த்தையாவது அழுத்தமாக அண்ணா திமுக ஆட்சியினர் வாயிலிருந்து வந்ததுண்டா?

அண்ணாவின் கொள்கைகளைச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. அண்ணாவின் கொள்கைகளுக்கு நேர் எதிராகவே பெரும்பாலும் நடந்து கொண்டு இருக்கிறார்களே, என்ன சொல்ல!

பாடத் திட்டத்தில்  அண்ணாவைப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டா?

குறைந்தபட்சம் மாநில சுயாட்சி என்ற ஒரே ஒரு வார்த்தையையாவது தெரிவிக்கும் முதுகெலும்பு உண்டா?

அண்ணாவின் பகுத்தறிவுக் கொள்கைக்குக் குழி வெட்டி அதன்மீது மேடையமைத்து ஆசனம் போட்டல்லவா அமர்ந்து இருக்கிறார்கள்.

அண்ணாவின் 112ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று, திராவிட இயக்க இளைஞர்கள் எந்த முகாமில் இருந்தாலும், அய்யா, அண்ணா பாடங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். வேறு எப்போதும்விட; இப்போது அவசியம் தேவை - அவசரமும்கூட,  மதவாத நோய்க்கு திராவிட இயக்க மாமருந்து தேவைப்படுகிறது - முதலில் இளைஞர்களைத் தயார் செய்வோம்?