ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அகில  இந்திய அளவில் அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து சமூகநீதியைக் காப்பாற்றுவோம்!
July 27, 2020 • Viduthalai • கழகம்

கரோனா மரணங்கள் உள்ளிட்ட முக்கியத் தரவுகளை மறைப்பதா?

அரசியல் கண்ணோட்டத்துடன் நடக்கலாமா காவல்துறை?

ஊடகத் துறையினரின் உரிமைக் கழுத்தை நெரிக்கலாமா?

மத்திய - மாநில அரசுகளின் போக்கிற்குக் கண்டனம்

‘நீட்'டை நீக்கி +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக்

கல்லூரிகளில்  மாணவர்களை சேர்த்திடுக!

பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவக் கல்விக்கான மத்தியத் தொகுப்பில்

 இட ஒதுக்கீடு அளிக்க உத்தரவிட்ட  உயர்நீதிமன்ற வரலாற்றுத் தீர்ப்புக்கு நன்றி- பாராட்டு!

எஸ்.சி., பி.சி.க்குரிய இட ஒதுக்கீட்டை முழு அளவில் செயல்படுத்திட  கண்காணிப்புக் குழு அமைத்திடுக!

கிரீமிலேயர் பெயரால் பிற்படுத்தப்பட்டோரை வஞ்சிப்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே விரோதமானது

தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

சென்னை, ஜூலை 27 தமிழ்நாட்டில் கரோனாவால் நிகழும் மரணம் மற்றும் கரோனா தொடர்பான தரவுகளை மறைப் பது, காவல்துறையின் ஒரு சார்பு போக்கு, ஊடகத் துறை யைச் சார்ந்தவர்களின் உரிமையை நசுக்குவது, சட்டப்படி வழங்கப்பட வேண்டிய இட ஒதுக்கீட்டுக்கான சதவிகித இடங்களை சரியாக அமல்படுத்தாதது, கிரீமிலேயரில் பல் வேறு  குளறுபடிகளைச் செய்து, பிற்படுத்தப்பட்டோருக்குரிய சமூகநீதியைக் குலைப்பது உள்ளிட்டவற்றைக் கண்டித்தும், இட  ஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றும் உள்ளிட்ட 10 முக்கியத் தீர்மானங்களை தி.மு.க. தலைமையில் காணொலிமூலம் கூட்டப் பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

சமூகநீதியைக் காப்பாற்றிட அனைத்திந்திய அளவில் ஒன்றுபட்டுச் செயல்படுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் காணொலிமூலம் இன்று (27.7.2020) முற்பகல் நடைபெற்றது.

இக்காணொலிமூலம் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவை வருமாறு:

தீர்மானம் 1:

கரோனா மரணங்கள் உள்ளிட்ட

முக்கிய தரவுகளை மறைத்த

அதிமுக அரசுக்குக் கண்டனம்!

தொடக்கத்திலிருந்தே, முதலமைச்சரிடமும் சம்பந்தப் பட்ட அமைச்சர்களிடமும், கரோனா பெருநோய்த் தொற்று பரவல் குறித்து வெளியிடுவதிலும் சொல்வதிலும் ஒரு வகையான தயக்கம் நீடித்து வருகிறது; மருத்துவ விஞ்ஞானிகள் பலரும் சமூகப் பரவல் என்று கருத்து அறிவித்ததற்குப் பிறகும் அதை ஏற்றுக்கொள்வதிலே தடுமாற்றம் காணப்படுகின்றது. அதனால், சரியான தரவுகளே முறையான திட்டமிடலுக்கும், சிகிச்சைக்கும் அடிப்படை என்பதை மறந்து,  கரோனாவின் ஒவ்வொரு படிநிலையிலும் எண்ணிக்கைகளைக் குறைப்பதும், மறைப்பதுமான செயல்களில் ஈடுபட்டு, குழப்பங்களையும், குளறுபடிகளையும் உருவாக்கி வருகின்றனர்.

பரிசோதனைகள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கையை நாள்தோறும் மாவட்ட வாரியாக வெளியிடுக என்று கோரிக்கை விடுத்தும் அதற்கு அரசு செவிமடுக்கவில்லை.  கரோனாவால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பலமுறை எழுப்பப் பட்டதற்குப் பிறகு அதை ஆராய்வதற்கு மருத்துவர்கள் குழு ஒன்றை அமைத்தார்கள். அந்தக் குழு வெளி யிட்டிருக்கும் அறிக்கையில் 444 மரணங்கள் கணக்கிடப் படவில்லை என்ற உண்மை வெளிவந்துள்ளது. அதன் மூலம் மரணங்கள் பற்றித் திரும்பத் திரும்பச் சொன்ன பொய்யையே சொல்லிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்கள் இப்போது அறிந்து கொண்டு விட்டார்கள். அதிமுக அரசு இதுவரை,  கரோனா மரணங் கள் தொடர்பான எண்ணிக்கையில் போட்ட குளறுபடி களுக்கு தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

 கரோனா மரணங்களைப் போல, ஒவ்வொன்றையும் உட்புகுந்து ஆழமாக விசாரித்துப் பார்த்தால், இன்னும் எத்தனையோ குளறுபடிகள் வெளிச்சத்திற்கு வரும்.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல், மரணங்களில் சொல்லிவந்த பச்சைப் பொய், அரசு தரும் அனைத்துத் தரவுகளிலுமே கலந்திருக்கும் என்ற அய் யப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. குளறுபடிக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு; கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளான 10 பேரில் 7 பேர் குணமாகி வீடு திரும்புகிறார்கள் என்று கூறும் அதிமுக அரசு- குணமாகி வீடு திரும்பிய 1.40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குறித்த பதிவேடு ஏதுமில் லாமல் இருப்பது;  அந்த 1.40 லட்சம் பேரில் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்ட குணமானவர்கள் எத்தனை பேர்? அதற்கு தனியாக பதிவேடு இருக்கிறதா? வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமானவர்கள், மருத்துவமனை களில் இருந்து வீடு திரும்பியோர் ஆகியோரில் எத்தனை பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள் என்பது போன்ற விவரங்களை மக்களுக்குத் அதிமுக அரசு தெரிவிக்காமல் மறைத்து வருகிறது.

இத்தகைய குளறுபடிகள் வேண்டுமென்றே செயற் கையாக ஆளுந்தரப்பினரால் உருவாக்கப்பட்டவை என்று தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் முதலமைச்சர் மீது குற்றம் சாட்டுகிறது.

குழம்பிய குட்டையில் தானே மீன் பிடிக்க முடியும்?  கரோனா பேரிடரின் ஆரம்பகாலம் முதலே, தேவையான மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதில், ஒவ் வொன்றிலும் ஒவ்வொரு வகையான முறைகேடு வெளிச் சத்திற்கு வந்தும், அதுகுறித்து அதிமுக அரசு சிறிதும் வெட்கம் கொள்ளவில்லை. இந்தக் கொள்ளை நோயிலும், திட்டமிட்டு கொள்முதல் முறைகேடுகளைச் செய்த அதிமுக அரசுக்கு அனைத்துக்கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

அரசின் ஆணவ அலட்சியப் போக்கினால்- தமிழகத் தில் உள்ள 37 மாவட்டங்களிலும்- மாவட்டங்களின் கிராமங்களிலும்,  கரோனா நோய்த் தொற்று 2 லட்சத்தை நெருங்கி விட்டது; இறப்பு 3200-யைத் தாண்டி விட்டது. சென்னையில் 1 லட்சத்தைத் தொடவிருக்கிறது. மீதியுள்ள 36 மாவட்டங்களில் கரூர் தவிர - 35 மாவட்டங்களில்  கரோனா நோய்த் தொற்று குறைந்தபட்சம் 500க்கும் அதிகபட்சமாக 10 ஆயிரத்திற்கும் மேலுமாக அதிகரித்து நாள்தோறும் மக்களின் அன்றாட வாழ்க்கையை தலை கீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தில் இட்டு நிரப்ப முடியாத வெறுமை ஏற்பட்டு மிகப் பெரிய கேள்விக்குறி தோன்றி விட்டது.

மருத்துவமனை வசதிகள், மருத்துவப் படுக்கை வசதிகள், வென்டிலேட்டர்களில் இருப்பவர்கள், நோய்த் தொற்றுக்கு உள்ளானோர், சிகிச்சை முடிந்து வீடு திரும் பியோர் அனைவரின் கணக்கிலுமே அதிமுக அரசிடம் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மை இல்லை, எல்லா நடவடிக்கைகளுமே ஒரு ‘மர்ம’ முடிச்சுக்குள் சுருண்டு கிடக்கிறது என்பதை இந்தக் கூட்டம் பேரதிர்ச்சியுடன் பதிவு செய்து- நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு 31.7.2020 அன்று நிறைவடையும் நிலையில், இப்போதாவது, தீயாய்ப் பரவிவரும்  கரோனா நோய்த் தொற்றில் மிகுந்த தீவிரத் துடனும்- அதிக அக்கறையுடனும், வெளிப்படைத்தன்மை யுடனும் அதிமுக அரசு செயல்பட்டு- மக்களை இந்த நோய்ப் பேரிடரிலிருந்து பாதுகாத்திட- குறிப்பாக மாவட் டங்களிலும் கிராமங்களிலும் நோய்ப் பரவலைக் கட்டுப் படுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

 தீர்மானம் 2:

வற்றிவிட்ட வாழ்வாதாரத்தை மீட்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் பண உதவி செய்திடுக!

மார்ச் மாதம் துவங்கிய ஊரடங்கு கடந்த 125 நாள்களாக இன்று வரை தொடர்கிறது. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நிலை நீடிக்கும் என்பது ‘கடவுளுக்குத் தான் தெரியும்‘ என்று முதலமைச்சரே கூறிவிட்ட நிலையில், மக்கள்- தனியார் அலுவலக வேலைக்கோ, தொழில் நிறுவன வேலைக்கோ, தினக்கூலித் தொழிலுக்கோ முழுமையாக செல்ல முடியாமல் இன்னும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மார்ச் மாதம் நிலைகுலைந்த அவர்களது வாழ்வாதாரம் இன்னும் நிமிரவில்லை. இதனால் தற்கொலைகள் தலைதூக்குகின்றன. வேலை இழப்பைத் தாங்க முடியாத குடும்பங்கள் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி பசி - பட்டினிக்கு தள்ளப்பட்டுள்ளன.

சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகள் தலைவிரித்தாடும் போக்கும்- சுயதொழில், சிறு குறு நடுத்தர தொழில் புரிவோர் அனைவருமே செல்லும் திசை தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள். வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், மின் கணக்கீட்டு குளறுபடிகளால் மிக அதிகமாகக் கணக்கிடப் பட்ட மின் கட்டணத்தைச் செலுத்த இயலாமல்- இதுவரை அனுபவிக்காத அல்லல்களுக்கு ஆளாகி அவதியுறும் சூழல் மாநிலம் முழுவதும் மிக வேகமாக உருவாகி வருகிறது.

ஆகவே மக்களின் வாழ்வாதாரத்திற்குப் பொருளாதார ரீதியாக உடனடியாக உதவிட வேண்டியது பொறுப்புள்ள அரசின் கடமை என்று கருதித்தான் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்கனவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் ரொக்கமாக நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு 7500 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால், அதை அரசு ஏற்க மறுத்ததால், இன்றைக்கு விவசாயத் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், தெருவோரக் கடை வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டு விரக்தியின் விளிம்பிலே நிற்கிறார்கள்.

ஆகவே, அவர்கள் இழந்து விட்ட வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் மீட்டிட -  மத்திய மாநில அரசுகள் ரொக்கமாக நிதியுதவி உடனடியாக அளித்திட வேண்டும் என்றும்; தவறாக கணக்கிடப்பட்ட மின் கட்டணத்தில்

50 சதவீதத்தை ரத்து செய்து மீதித்தொகையினை, எளிய தவணைகளில் செலுத்துவதற்கான வாய்ப்பினை உரு வாக்கிக் கொடுத்திட வேண்டும் என்றும்; ஏழை எளியோர் கையில் கொடுக்கப்படும் நிவாரணப்  பணம் அவர்களுக்கு வாங்கும் சக்தியை உருவாக்கி, பொருளாதார சுழற்சிக்கு உதவிடும் என்பதை உணர வேண்டும் என்றும்; அதிமுக அரசை அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3:

பாதிக்கப்பட்ட- உயிர்த் தியாகம் செய்த “கரோனா  முன் கள வீரர்களுக்கான”  நிதியுதவி வழங்கிடுக!

  கரோனா நோய் தொற்றுத் தடுப்பு மற்றும் சிகிச்சையில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், மக்கள் நல்வாழ்வுத்துறையின் ஊழியர்கள், தூய்மைப் பணியா ளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் முன்கள வீரர்களாக நின்று இரவு பகலாக மகத்தான பணியை ஆற்றி வருவதற்கு இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பாராட்டுதலையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பில் இந்த அரசு போதிய கவனம் செலுத்தி அவர்களுக்குரிய பாதுகாப்பு உபகரணங்களை இன்னும் கூட முழுமையாக வழங்கிட வில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் இந்தக் கூட்டம், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்படும் முன்களப் பணியாளர்களுக்கு போதிய உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவற்றையும் செய்யத் தவறியிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. முன்களப் பணியாளர்கள் நோய்த் தொற்றுக்குள்ளானால் அவர்களுக்கு 2லட்சம் ரூபாய் நிதியுதவியும், உயிர்த் தியாகம் செய்தால் 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும் என்று அதிமுக அரசு அறிவித்தது. முன்களப் பணியாளர்கள் எத்தனை பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது - இறந்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த புள்ளிவிவரங்களை வழக்கம் போல் அதிமுக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளி யிடாமல் மறைத்து வருவது வேதனைக்குரியது.

 கரோனா பணியில் உயிர்த் தியாகம் செய்த முன்கள வீரர்களுக்கு, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், நேர்ந்துவிட்ட இழப்பினால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

கரோனாவால் பாதிக்கப்பட்டோர், உயிர்த் தியாகம் செய்தோரின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு - அவர்களுக்காக அறிவிக்கப்பட்ட நிதியை மேலும் தாமதப்படுத்தாமல் வழங்கிட வேண்டும் என்றும், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் உரிய அடிப்படை பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் அதிமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4:

உள்ளாட்சிகளின் அதிகாரத்தைப் பறிப்பதை கைவிட்டு - அனைத்து உள்ளாட்சிகளுக்கும்  உரிய நிதி வழங்கிடுக!

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்று ஏழு மாதங்களுக்கு மேலாகியும்- ஊராட்சி மன்றத் தலைவர்களின் அதிகாரங்களைப் பறிக்கும் விதத்திலும்- நிதி ஒதுக்காமல் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கும் விதத்திலும் ஜனநாயக விரோதச் செயலில் ஈடுபட்டு வரும் அதிமுக அரசுக்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மட்டுமின்றி- அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர்களே உள்ளக் குமுறலுக்குள்ளாகும் விதத்தில், ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் வசதி அளிக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழான  குடிநீர் திட்டப் பணிகளைக்கூட ஊராட்சி மன்றங் களிடமிருந்து பறித்து- மாவட்ட அளவில் டெண்டர் விடுவதும், 14ஆவது நிதிக்குழு உள்ளாட்சி மன்றங்களுக்கு அளித்துள்ள அதிகாரங்களை அபகரிப்பதும் மிகுந்த வேதனைக்குரியது. இதுபோலவே 100 நாள் வேலைதிட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் உள்ளாட்சி அமைப்பு களின் அதிகாரங்களைப் பறித்து பஞ்சாயத்து ராஜ் சட்டத் தின் அடிப்படை நோக்கத்தையே தகர்த்தெறியும் விதத்தில் எதேச்சாதிகாரமாகச் செயல்படும் உள்ளாட்சித்துறை அமைச்சரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களையும், உள்ளாட்சி அமைப்புகளையும் சிறுமைப்படுத்துவதை முதலமைச்சர் அனுமதிப்பது  ஜனநாயக விரோதமானதாகும். 

ஆகவே,  காந்தியார் கண்ட கிராம ராஜ்யத்தின் அடிப் படை அம்சமாக அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களைப் பறிக்கும் செயலைக் கைவிட்டு - கிராமங்களில் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான மக்கள் நலத் திட்டங்களைத் தடையின்றி நிறைவேற்றுவதற்கு தேவையான நிதியை அனைத்து உள்ளாட்சி மன்றங் களுக்கும் உடனடியாக ஒதுக்கிட வேண்டும் என்றும், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் முழு அதிகாரத்தையும் ஊராட்சி மன்றங் களுக்கே அளித்திட வேண்டும் எனவும் அதிமுக அரசை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 5:

அரசியல் கண்ணோட்டத்துடன் நடக்கும்

காவல் துறை அவலம்!

சமூக வலைதளங்களில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிக ள்மீது நடத்தப்படும் பண்பாடற்ற - அநாகரிகமான- வெறுப் புணர்வைத் தூண்டி பொது அமைதியைக் கெடுக்கும் தனி மனிதத் தாக்குதல்களை, மாநிலத்தில் சமூக, மதநல்லிணக் கத்தைச் சீர்குலைக்கும் சதிச் செயலாகவே அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கருதுகிறது. அதுபோன்ற அரு வருக்கத்தக்க, தரம்தாழ்ந்த அவதூறுகள் - விமர்சனங்கள் குறித்துப் புகாரளித்தால் அதிமுக அரசு அவற்றின் மீது சட்டப்படி நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருப்பது - பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத- சமூக விரோதச் செயலுக்கு அ.தி.மு.க. அரசும் கூட்டு சேர்ந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

சமூக நீதியின் சுடர் விளக்காகத் தமிழக மக்கள் மனதில் என்றும் ஒளிவீசிக் கொண்டிருக்கும் தந்தை பெரியார் சிலைக்கு “காவி பூசுவது”; சாதாரண சாமான்ய உழைக்கும் மக்களுக்காக சித்தாந்த ரீதியாகப் போராடி வரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தையே அசிங்கப்படுத் துவது; அரசியல் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்துவது போன்ற சம்பவங்கள் அ.தி,மு.க. அரசின் அனுசரணையோடு அரங்கேறுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்தப் பிரச்சினைகளிலிருந்து பொது கவனத்தை திசை திருப்பும் நோக்கில், மதவெறியைத் தூண்டும் பொய்ப் பிரச்சாரங் களிலும், காரியங்களிலும் இறங்குகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக விவகாரத்திற்குக் காரணமான கயவர்கள் மீது புகார் அளித்தும், இதுவரை யாரும் கைது செய்யப்பட வில்லை என்பதோடு - “குள்ளநரி” எண்ணம் கொண்ட அந்தக் கூட்டத்தைக் காப்பாற்றும் போக்கில் அ.தி.மு.க. அரசு செயல்படுவதற்கும்; இதுபோன்ற தரம் தாழ்ந்த - ஆரோக்கியமற்ற - தனி நபர் விமர்சனங்களை திரைமறைவி லிருந்து இயக்கி, நல்லிணக்கத்தைப் பாழ்படுத்தும் பா.ஜ.க. விற்கும் இந்தக் கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

பா.ஜ.க.வினரும், அதிமுகவினரும் அளிக்கும் புகார் களின் மீது பாய்ந்து ஓடி நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, எதிர்க்கட்சிகள்- ஊடகத்தினர் அளிக்கும் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகவும் ஒருதலைப் பட்சமாகவும், நடு நிலையாளர்களாக உள்ள ஊடகவிய லாளர்கள் ஆணோ/பெண்ணோ அவர்களின் மீது தாக்குதல் நடத்துவது என்று புகார் அளித்தால் அந்தப் புகாரை அலட்சியபடுத்துவது போன்று செயல்படுவது- சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய தமிழகக் காவல்துறை தன் பொறுப்பை நிறைவேற்றத் தவறி விலகிச் செல்கிறது என்று அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறது.

இந்தப் போக்கை காவல்துறை கைவிட்டு, நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 6:

பிற்படுத்தப்பட்டோர்- தாழ்த்தப்பட்டோர் -

பழங்குடியினர் இடஒதுக்கீடுகளை

முழு வீச்சில் செயல்படுத்திடுக!

மண்டல் கமிஷன் பரிந்துரைத்து - சமூக நீதிக் காவலர் மறைந்த வி.பி.சிங் அறிவித்து - உச்சநீதிமன்றத்தில்

9  நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வால் உறுதி செய்யப்பட்டும் பிரதமர் நரசிம்மராவ் அவர்கள் நடை முறைபடுத்திய மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான 27 சதவீத இடஒதுக்கீடு, பா.ஜ.க. ஆட்சியில் முறையாக வழங்கப் படாமல் வஞ்சிக்கப்பட்டு வருவதை இக்கூட்டம் மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறது. மத்திய பா.ஜ.க. அரசு கல்வி, வேலைவாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீட்டை சீர்குலைக்கத் திட்டமிட்டுச் செயல்படுவது அதிர்ச்சியளிக் கிறது. மருத்துவக் கல்வியில் தமிழகத்திலிருந்து மத்திய தொகுப் பிற்கு ஒதுக்கப்படும் மருத்துவ மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களில் தமிழகத்தில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 50 சதவீதமும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு  18 சதவீதமும் வழங்காமல்  பா.ஜ.க. அரசு தொடர்ந்து பிடிவாதமாக மறுத்து  வருவதற்கு இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு 15 சதவீதம் மட்டுமே வழங்கி 3 சதவீத இடஒதுக்கீட்டை மறுப்பது அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.

அரசியல் சட்டப்பூர்வமான இடஒதுக்கீட்டையும் நிராகரித்து - இப்போது “கிரீமிலேயர் வருமான வரம்பைக் கணக்கிட “நிகர சம்பளத்தை” எடுத்துக் கொள்வோம் என்று மத்திய பா.ஜ.க. அரசு பிரச்சினை செய்வது  சமூக நீதிக்கு எதிரானது, அரசியல் சட்டம் வரையறுத்துள்ள முகவுரை மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று இந்தக் கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது. ஆகவே சமூக நீதியை நிலைநாட்டிட தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மட்டுமின்றி- அகில இந்திய அளவில் உள்ள அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம், “பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு மருத்துவக் கல்வி இடங்களில் 50 சதவீத இடங்களையும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18 சதவீத இடங்களையும் வழங்கிட வேண்டும்” என்றும், கிரீமிலேயர் வருமானத்தில் “நிகர சம்பளத்தை” எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மத்திய அரசாணைகளின் படி அறிவித்துள்ள இடஒதுக்கீடு சதவீதங்களை முழுமையாகச் செயல்படுத்திட தனியாக கண்காணிப்பு அமைப்பு ஒன்றினை உருவாக்கிட வேண்டும் என்றும் மத்திய பா.ஜ.க. அரசை, அனைத்துக் கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம்- சமூகநீதி பிறந்து தவழ்ந்து வளர்ந்த பெருமைக்குரிய தமிழ் மண்ணிலிருந்து கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 7:

“நீட்” தேர்வை ரத்து செய்க!  “ப்ளஸ் டூ” மதிப்பெண் அடிப்படையில்

மருத்துவக் கல்விக்கு  மாணவர் சேர்க்கை நடத்திடுக!

“நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும்" என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, ஆர்வமின்மை  மற்றும் தொடர் நட வடிக்கை இன்மை ஆகியவற்றின் காரணமாக,  குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் கோட்டை விட்டு- அடுத்த வாய்ப்பாக அந்த மசோதாக்களை திரும்பவும் நிறைவேற்றி அனுப்பி சட்டமாக்கும் தமிழ்நாடு சட்ட மன்றத்தின் அதிகாரத்தையும் பறிகொடுத்த அதிமுக அரசு, தற்போது அந்த “நீட்” தேர்வு மசோதாக்கள் குறித்தே பேசுவதை அறவே கைவிட்டு விட்டது. அதை மறக்கச் செய்திடும் நோக்கில்,  “நீட் தேர்வு எழுதி வெற்றி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குகிறோம்” என்று  அமைச்சரவையில்  தீர்மானித் துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அந்த அமைச்சரவை முடிவு அரசு ஆணையாக இதுவரை வெளியாகவில்லை. அதுகுறித்து இதுவரை முதலமைச் சரோ, சுகாதாரத்துறை அமைச்சரோ கருத்து எதுவும் தெரிவிக்கவும் இல்லை. கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து- மாணவி அனிதா உள்ளிட்ட மாணவ - மாணவிகளின் தற்கொலைக் குக் காரணமான “நீட்” தேர்வை பா.ஜ.க. அரசும் கைவிடு வதாக இல்லை. பாஜகவின் கோபத்திற்கு ஆளாகிவிடு வோமோ என்ற பயத்தில், அதிமுக அரசும் இதற்குமேல் அதுபற்றி வாய் திறந்து வலியுறுத்துவதாகத் தெரியவில்லை என்பதை இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறது.

இந்நிலையில், “கரோனா பேரிடர் காலத்திலும் செப் டம்பர் 13ஆம் தேதி நீட் தேர்வு நடக்கும்” என்ற மத்திய அரசின் அறிவிப்பைக்கூட எதிர்த்து இன்றுவரை முதல மைச்சர் வழக்கம்போல கடிதமும் எழுதவில்லை; கோரிக் கையும் விடுக்க மனமில்லை. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு 2லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ள “நீட்”  தேர்வை மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்திட வேண்டும் என்றும், “இந்த ஆண்டு முதல் பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்” என்று உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றிட வேண்டும் என்று அ.தி.மு.க. அரசையும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 8:

சுற்றுச் சூழல் தாக்க அறிவிக்கை-

2020 அய்த் திரும்பப் பெறுக!

 கரோனா பேரிடர் கால நெருக்கடியைப் பயன்படுத்தி விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மின்சார திருத்தச்சட்ட மசோதா 2020; அத்தியாவசிய திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம், விவசாயி களுக்கு விலை உத்திரவாதம் வழங்கும் வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகிய அவசரச் சட்டங்களை நாடாளுமன்ற அமர்வில் இல்லாத நேரத்தில் நிறைவேற்றிய மத்திய அரசை இந்தக் கூட்டம் கண்டிப்பதோடு- இந்த சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

அதுமட்டுமில்லாமல், தற்போது கார்ப்பரேட் நிறுவ னங்களே திகட்டும் அளவுக்கு திருப்திப்படுத்துவதற்கு,  “புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை-2020”-அய் வெளியிட்டு- அதன் மீது “கருத்துக் கேட்பு” என ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்தும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு இந்த அனைத்துக் கட்சிக்கூட்டம் கடும் கண்ட னத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. தற்பொழுது நடை முறையில் உள்ள “2006 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை”யே இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், மக்களின் வாழ்வாதரத்திற்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் இல்லாத திட்டங்களை நிறைவேற்றவும் வழி வகுக்கவில்லை என்று சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் எல்லாம் குறைசொல்லி குற்றம்சாட்டி வருகின்ற நிலையில்- இந்த புதிய வரைவு அறிக்கை, “சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986”அய் ரத்து செய்வதற்கு நிகரான ஒரு அராஜகமான நடவடிக்கை என்று இக்கூட்டம் கருதுகிறது.

தமிழகத்தில் சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக மக்கள்  போராடுகிறார்கள். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டக் கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமே எதிர்க்கிறது. காவிரி டெல்டா பகுதியை சகாரா பாலைவனமாக்க அ.தி.மு.க. அரசின் துணையோடு மத்திய அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் டெல்டா விவசாயிகளும்- மக்களும் கடுமையாக தினமும் எதிர்த்துப் போராடி வருகிறார்கள். இந்நிலையில் சுற்றுப்புறச்சூழல் முன் அனுமதி பெற வேண்டிய எண்ணற்ற திட்டங்களை “மறுவகைப்படுத்தி” - அவற்றை எல்லாம் “சுற்றுப்புறச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லாத” பட்டியலில் சேர்த்தும், “பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை” பலவீனப்படுத்தியும், “மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவிற்கு மத்திய அரசே தலைவர் உறுப்பினர்களை நியமிக்க வழி செய்தும்”- கொண்டு வரப்பட்டுள்ள மாநில உரிமைகளுக்கு விரோதமான- ஜனநாயக விரோதமான சுற்றுப்புறச்சூழல் தாக்க அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. நாடாளு மன்றம் கூடிய பிறகு ஏற்கெனவே உள்ள “2006 சுற்றுப் புறச்சூழல் தாக்க அறிவிக்கை 2006”அய் மேலும் வலுப் படுத்தும் வகையிலும் - நாட்டில் உள்ள இயற்கை வளங் களையும், மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாத் திடும் வகையிலும் மட்டுமே மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அனைத்துக் கட்சிகள் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 9:

கருத்துச் சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்படுகிறது!

திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம் மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகளால் சித்தாந்த ரீதியாகவும், செயல்பாட்டு முறைகளாலும், யாரும் உட்புக இயலாத வண்ணம், நன்கு பண்படுத்தப்பட்டிருக்கும் தமிழகம், பா.ஜ.க.வின் கண்ணை உறுத்துகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அதனால் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, முன்னதாகவே ஊடக வெளிச்சத்தில் குளிர்காய நினைக்கிறார்கள்.

அதற்கு வசதியாக, நமது பாரம்பரிய பன்முகத்தன்மைக்கு முற்றிலும் எதிரான, ‘ஒரே சித்தாந்தம்’ என்பதில் ஈடுபாடு கொண்டுள்ள குறிப்பிட்ட ஒரு சிலரை அதிகாரப்படுத்தி அமர வைத்திட ஆங்காங்கே ஆசனம் தேடும் பிரயத்தனத் தில் இறங்கியிருக்கிறார்கள். அப்படி இடம்பிடித்துக் கொடுத்து விட்டால், ஊடகங்கள் அனைத்தும் ஒரே குரலில் பாஜகவை உயர்த்தி முழக்கம் போடுவார்கள்; அந்தப் பொய் முழக்கத்தில் எப்படியாவது கோட்டைக்குள் நுழைந்து விடலாம் என்று தப்புக் கணக்கு போடுகிறார்கள். அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத் துரிமையைத் தொடர்ந்து நசுக்கி வரும் மத்திய ஆளுங் கட்சியினரான பா.ஜ.க.வினர், தமிழக ஊடக சுதந்திரத்திற்கு ஊறு விளைவிக்கும் நோக்கில் செயல்படத் தொடங்கி இருப்பது ஜனநாயக விரோதச் செயலாகும்.

தமிழ்நாட்டின் செய்தி ஊடகங்களில் விவாதத் தலைப்புகள் தொடங்கி, நெறியாளர் - பங்கேற்பாளர்களைத் தீர்மானிப்பது வரை தங்களின் அதிகாரக் கட்டளைக்குள் அடங்கி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்கு இங்குள்ள அதிமுக அரசும் துணை போகிறது. தேர்தல் கணக்கினால் ஏற்பட்டுள்ள அந்த எதேச்சதிகார ஆசை ஏற்பட்ட வேகத்திலேயே நிராசையாகிவிடும் என்பதை அவர்கள், சரித்திரத்தைச் சற்றுப் பின்னோக்கிப் பார்த்து உணர வேண்டும்.

பா.ஜ.க.- அதிமுகவின் கட்டளைகளுக்குப் பணிந்து, நடுநிலையைக் காவுகொடுக்கும் ஊடகங்கள், காலப் போக்கில் இருந்த இடம் தெரியாமல் மங்கி மறைந்துவிடும். அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்சி’, கருத்துத் தணிக்கை காலகட்டத்திற்கு தமிழகத்தைப் பின்னோக்கி இழுக்க நினைப்பது, எள்ளளவும் பலிக்காது. அப்படியே பாஜக - அதிமுகவின் அழுத்தம், அச்சுறுத்தல், ஆசை காட்டுதல் ஆகியவற்றிற்குப்  பயந்து, பணிந்து, ஜனநாயக நெறிகளை யும், கருத்து சுதந்திரத்தையும், நடுநிலையையும்; ஊட கங்கள், இரண்டாம்பட்சமாகக் கருதி, பின்னிடத்திற்குத் தள்ளும் கடினமான முடிவை மேற்கொள்ளுமானால், தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சிகள் அனைத்தும் அத்தகைய ஊடகங்களின் நிகழ்வுகளில் பங்கேற்காமல் புறக்கணித்திட வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படும்.

ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள்; மக்கள் குரலே மகேசன் குரல்! மகத்தான அந்தக் குரலை, அச்சு - காட்சி ஊடகங்கள் மீது அதிகாரம் செலுத்திக் கட்டுப்படுத்துவதன் மூலம், நெரிக்க நினைப்பது, மீள முடியாத கொடுந்தீமையில் வீழ்த்திவிடும். ஆகவே கருத்து சுதந்திரத்தை முறையாகப் பேணிப் பாதுகாத்திட, அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த கண்காணிப்புக் குழு ஒன்றினை அமைத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 10:

சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு சமூக நீதியை நிலை நாட்டுவதில் எப்போதுமே ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னணியில் நிற்கும் என்பதற்கும் மற்றுமொரு சான்று!

மாநிலங்கள் “மத்தியத் தொகுப்பிற்கு” ஒப்படைக்கும் மருத்துவக் கல்விக்கான (எம்.பி.பி.எஸ்; பி.டி.எஸ், முதுநிலை மருத்துவம்) இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாண வர்களுக்கு இடஒதுக்கீடு பெறும் அரசியல் சட்ட உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு சமூகநீதி அத்தியாயத்தில் மிக முக்கியமாகவும், சமூக நீதியை நிலை நாட்டுவதில் எப்போதுமே ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் முன்னணியில் நிற்கும் என்பதற்கும் மற்றுமொரு சான்றாகும்.  இந்த சமூக நீதிப் போராட்டத்தை நடத்தி பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தின் உரிமையை நிலைநாட்டியுள்ள திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் இந்த கூட்டம் தனது பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

  “இட ஒதுக்கீடு அளிக்க முடியாது” என்ற மத்திய அரசின் வாதத்தை நிராகரித்து, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற் படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கமிட்டி அமைத்து முடிவெடுக்க வேண்டும் என்ற மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவினை ஏற்று- நீதிமன்றம் அளித்துள்ள  மூன்று மாத காலம் வரை காத்திராமல் உடனடியாக ஒரு கமிட்டியை அமைத்து,  உரிய முடிவெடுத்து மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு  இந்தக் கல்வி ஆண்டிலேயே தமிழ்நாடு மத்திய தொகுப்பிற்கு ஒதுக்கும் இடங்களில் தமிழக அரசு சட்டப்படி பின்பற்றி வரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டையும், தாழ்த்தப் பட்ட மக்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீட்டையும் -  பழங் குடியின மக்களுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீட்டையும் வழங் கிட வேண்டும் என்று மத்திய பாஜக அரசை  இந்த அனைத் துக் கட்சிக் கூட்டம்  வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. 

மேற்கண்ட 10 தீர்மானங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.