ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
'இந்து' (தமிழ்) ஏட்டின் தலையங்கம்!
September 3, 2020 • Viduthalai • தலையங்கம்

'இந்து தமிழ் திசை' ஏட்டில் சமீபத்தில் வெளிவந்த பி.பி. மண்டல் பற்றிய கட்டுரையும், முன்பு ஒரு முறை வி.பி. சிங் அவர்களிடத்தில் எடுக்கப்பட்ட பேட்டியும், 'மண்டல் பரிந்துரைகள் - இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன' எனும் தலைப்பில் வெளிவந்த தலையங்கத்தின் உள்ளடக்கமும், சமூகநீதியில் அக்கறை கொண்ட ஒவ்வொரு வரலாறும் அவசியம் படிக்கப்பட வேண்டியவையே.

தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:

"இன்றைக்கு இடஒதுக்கீட்டை ஆதரிப்பதாக அனைத்து அரசியல் கட்சிகளுமே பாகுபாடின்றிச் சொல்கின்றன. இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசிவிட்டு, எந்தக் கட்சியுமே ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற அரசியல் கணக்கே இந்த ஆதரவுக்கான முக்கிய காரணம். ஆனால், நடைமுறையில் இடஒதுக்கீட்டுக் கொள்கை நாளும் பொழுதும் தடைகளையே சந்தித்துக்கொண்டிருக்கிறது. மருத்துவ மேற்படிப்பில் அனைத்திந்திய இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு கேட்டு தமிழ்நாடு சமீபத்தில் நடத்த வேண்டியிருந்த போராட்டத்தை இங்கே நினைவுகூரலாம். மருத்துவம், பொறியியல், மேலாண்மை, சட்டம் என்று சகல விதமான உயர் கல்வி நிறுவனங்களும் படிப்படியாக ஒன்றிய அரசினுடைய அமைப்புகளின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் சூழலில், இடஒதுக்கீட்டுக்கான சூழல் இன்னும் நெருக்கடியைத்தான் சந்திக்கும் என்ற அச்சத்துக்குக் காரணம், மாநில அளவில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டுக்கும், ஒன்றிய அளவில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டுக்கும் இடையே நிலவும் வேறுபாடு. பிற்படுத்தப்பட்டோரையே எடுத்துக்கொண்டால், மக்கள்தொகையில் குறைந்தது 52% பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டையே உச்ச அளவாக வைத்திருக்கிறது ஒன்றிய அரசு. இது நியாயமற்றது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஜாதிவாரியாக மேற்கொள்ளப்பட்டு, அதற்கேற்ப இடஒதுக்கீட்டில் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிக முக்கியமானது. ஆனால், அது நடக்கவில்லை. சமூக நீதிக்கு எதிரான மனோபாவம்தான் இதற்கான காரணம் என்பதை விளக்க வேண்டியது இல்லை. மண்டல் பரிந்துரைகள் அமலாக்கத்துக்குக் கால் நூற்றாண்டுக்குப் பிறகும், மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் 21.57% என்ற அளவிலேயே இருந்தது என்கிற அதன் பின்னுள்ள நியாயத்தைச் சொல்லும்.

இடஒதுக்கீடு என்பது இந்தியப் பின்னணியில் எல்லாச் சமூகங்களுக்குமான பிரதிநிதித்துவத்தையே அர்த்தப்படுத்துகிறது. ஜனநாயக நாட்டில் வாய்ப்புகளும் போட்டிகளும் எல்லா சமூகங்களுக்கும் சமமாக இருக்க வேண்டும். ஒரு துறையின் மொத்த ஆட்களை எடுத்துப் பார்க்கும்போது அந்தந்தச் சமூகங்கள் உரிய பிரதிநிதித்துவத்தைப் பிரதிபலிக்கின்றனவா என்பதே இதை நாம் உறுதிப்படுத்துவதற்கான அளவுகோல். எவ்வளவுக்கு எவ்வளவு இதில் நாம் தாராளமாகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஜனநாயகம் ஆவோம். அப்படிப் பார்த்தால், மண்டல் வகுத்த பார்வையும் பரிந்துரையும் மேலும் விரிவாக்கப்பட வேண்டும். நம்முடைய மனம் விரிவடைய வேண்டும்."

என்று இந்து (தமிழ்) தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ள மேலே கண்ட தகவல்களும், கருத்துகளும் முக்கியமானவை.

மண்டல் குழுப் பரிந்துரை வெளிவரயிருந்த சூழ்நிலையில் 'Burry the mandal report' என்று எழுதியதும் ‘இந்து’தான் (ஆங்கிலம்).

அதனை எதிர்த்துதான் "Hurry the mandal report" என்று தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதை எடுத்துக்காட்டுவது - 'இந்து' ஏட்டைக் குறைகூறும் கண்ணோட்டத்தில் இல்லை. இடஒதுக்கீட்டுக்கு எதிராக எந்த அரசியல் கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாது என்று தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல, 'இந்து' போன்ற ஊடகங்களிலும் ஏற்பட்டு இருக்கும் மாற்றம் வரவேற்கத்தக்கதே.

இடஒதுக்கீடுப் பிரச்சினையில் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நிலவும் வேறுபாட்டை தலையங்கம் மிகச் சரியாகவே இடித்துக் காட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே மருத்துவப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பில் இடஒதுக்கீடு அளிப்பதுபற்றிய முடிவினை மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பும் - இடஒதுக்கீடு சமூகநீதித் திசையில் ஒரு முக்கிய மைல்கல்லேயாகும்.

1950 ஜனவரி 26 அன்று செயல்பாட்டுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது அந்தக் கால கட்டம் முதலே கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு 1990 ஆகஸ்டில் சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் பிரதமராக இருந்தபோதுதான் செயல்பாட்டுக்கு வந்தது என்பது எத்தகைய அநீதி! அதைவிட பெரிய அநீதி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசின் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை அறிவித்ததற்காக, வி.பி.சிங் தலைமை யிலான ஆட்சிக்கு அதுவரை வெளியிலிருந்து  அளித்து வந்த ஆதர வினை பிஜேபி விலக்கிக் கொண்டு ஆட்சியைக் கவிழ்த்ததாகும்.

அதனால் வி.பி. சிங் சமூகநீதி வரலாற்றில் கம்பீரமான மாமனிதராக ஒளிவீசிக் கொண்டு இருக்கிறார். அந்த சமூகநீதி ஆட்சியைக் கவிழ்த்த குற்றத்திற்காக பிஜேபி எதிர்கால வரலாறு எங்கும் தூற்றப்படும் நிலைதான்.

தலையங்கத்துக்குப் பக்கத்தில் வெளிவந்துள்ள வி.பி.சிங்கின் பேட்டியின் இறுதி பத்தி கருத்துமுத்தின் காலக் கண்ணாடியாகும்.

கேள்வி: ஆளும் மேல்தட்டு வர்க்கத்தின் சதிதான் உங்களைக் கவிழ்த்து விட்டதா?

வி.பி.சிங் பதில்: "நான் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை. அது இயல்பான எதிர்வினைதான். ஆளும் மேல் தட்டினர் ஒரு விசயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நம் சமூகத்தில் நசுக்கப்பட்ட பிரிவினரைத் துரத்திச் சென்று, ஒரு முட்டுச் சந்தில் நிறுத்துவோம் என்றால், நமது நாட்டில் மேலும் மேலும் அமைதியின்மையே ஏற்படும். 'வி.பி. சிங் கைத் தூக்கில் தொங்க விடுங்கள்' ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்கான நீதியைக் கொடுங்கள். இல்லையென்றால் இந்த நாடு யாராலும் நிர்வகிக்க முடியாத நிலையை நோக்கிச் சென்று விடும்" என்றார் வி.பி.சிங். இதன் பொருள் என்ன? சமூகநீதியை வழங்காவிட்டால் நாட்டில் பெரும் புரட்சி வெடிக்கும் என்பதுதான். புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ளட்டும்!