ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
"ஸ்திரீகளுக்குச் சொத்தில் பாத்யம் கொடுத்தா லோகமே அழியப் போகிறது ஓய்!"
August 6, 2020 • Viduthalai • கழகம்

சங்கராச்சாரியார் சொன்னதை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் உரை

சென்னை, ஆக. 6 - "ஸ்திரீகளுக்குச் சொத்தில் பாத்யம் கொடுத்தா லோகமே அழியப் போகிறது ஓய்!" சங்கராச் சாரியார் சொன்னதை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

குறிஞ்சி பொன்விழா கருத்தரங்கம்

கடந்த 12.7.2020 அன்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிஞ்சி மகளிர் சிந்தனைக் களத்தின் இணையப் பொன்விழா கருத்தரங்கத்தில்' காணொலிமூலம் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

எதற்காக அந்த அம்மையார் திண்ணையில் அமர்ந் திருக்கிறார்? மாதவிலக்கு என்பதை விளம்பரப்படுத்திக் கொண்டு! இதைவிட காட்டுமிராண்டித்தனம் வேறு ஏதாவது உண்டா? இன்றைக்கு அதுபோன்ற நிலை உண்டா? தயவு செய்து நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.

பெரியாருடைய அயராத உழைப்பினால்...

இன்றைக்குப் பெண்கள் அரசாங்கப் பணிகளுக்குச் செல்கிறார்கள் - டாக்டர்களாக இருக்கிறார்கள் - செவிலியர்களாக இருக்கிறார்கள் - நீதிபதிகளாக இருக்கிறார்கள் - வழக்குரைஞர்களாக இருக்கிறார்கள் - இவை அத்தனையும் எப்படி வந்தது? முப்பத்து முக்கோடி தேவர் களாலா? நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகளாலா? அல்லது சப்த ரிஷிகளாலா? சனாதனத்தினுடைய பெருமையி னாலா? இல்லை. பெரியாருடைய அயராத உழைப்பினால் அல்லவா!

தேவதாசி முறை ஒழிக்கப்படவேண்டும் என்று சொன்ன நேரத்தில், அவர்களைவிட்டே எதிர்க்க வைத்தார்கள். இன்றைக்குத் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமை கேட்கும்பொழுது, அவர்களே எதிர்ப்பதுபோல, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிமை கேட்கும்பொழுது, அவர்களே எதிர்ப்பதைப்போல.

ஒரு காலத்தில் தேவைப்பட்டது - இப்பொழுது அதற்கென்ன ரெலவன்ஸ் (Relevance) இருக்கிறது என்று ஆங்கிலத்தில் கேட்கிறார்கள் சிலர்!

தமிழகத்தின் முதல் பேராசிரியர் பெரியார்

பெண்ணிய உரிமை என்று வருகின்றபொழுது, அந்த உரிமை எப்படிப்பட்டது என்று பெரியார் கேட்டார்.

"பெண்களே, நீங்கள் சரிபகுதியானவர்" என்று எளிமையாகச் சொன்னார், பாமர மக்களுக்கு! அவருடைய  வகுப்பு மாலை நேரத்தில் தொடங்கக்கூடிய ஒரு கல்லூரி. தமிழகத்தின் முதல் பேராசிரியர் பெரியார் என்று அறிஞர் அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னதைப்போல, மாலை நேரங்களில் படித்த பாமரர்கள், படிக்காத பாமரர்கள் எல்லோருக்கும் சேர்த்து சொல்லுகின்ற நேரத்தில், அருமையாகப் பெரியார் கேட்டார்,

‘‘நீங்கள் சிந்திக்கவேண்டாமா? இரண்டு கைகள் இருக்கிறதே, இரண்டு கைகளும் சரியாக இயங்க வேண் டாமா? இரண்டு கால்களும் சரியாக இயங்க வேண்டாமா? இரண்டு கண்களும் சரியாக இருந்தால்தானே, பார்க்க முடியும்? அதுபோல, ஆணும் - பெண்ணும் இரண்டு பேரும் சமம் அல்லவா!

ஒரு கால் நடந்தால் போதும், ஒரு கை இயங்கினால் போதும் என்றால், அது பக்கவாதம் என்று நீங்களே சொல்வீர்கள் அல்லவா!" அதுபோல, காலங்காலமாக இந்த சமுதாயத்தில் இருந்த பக்கவாதத்தைப் போக்கிய பெருமை மாமருத்துவர் தந்தை பெரியாரையே சாரும்!

செங்கல்பட்டு மாநாட்டிற்குப் பிறகு, பெரியாரிடம் கிண்டலாகக் கேட்டார்கள்,

‘‘பெண்களுக்கு உரிமை, உரிமை என்று சொல்கிறீர் களே,  அவர்களுக்கு உரிமை எந்த அளவிற்குக் கொடுக்க வேண்டும்'' என்று சொல்லுங்கள் என்று கேட்டார்கள்.

அய்யா அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. அதே மொழியில் திருப்பிக் கொடுக்கவும் தெரியும்.

சுந்தரவல்லி அவர்கள் சற்றுநேரத்திற்கு முன்பு அழகா கச் சொன்னார்களே, அதுபோல!

அய்யா அவர்கள் மிக அழகாகச் சொன்னார், ‘‘அதிக மாகக் கேட்கவில்லை; ஆண்களுக்கு என்ன உரிமை இருக்கிறதே, அந்த உரிமை கொடுத்தால் போதும்'' என்றார்.

பெண்ணிய உரிமை

இன்னும் முழுமை அடையவில்லை

இன்றைக்குப் பெண்களுக்குப் படிக்க உரிமை இருந்தாலும், நவீன காலத்தில் அவர்களுக்கு ஒரு சில சிக்கல்கள் உண்டு. பெண்ணிய உரிமை இன்னும் முழுமை அடையவில்லை. இந்தப் போராட்டம் ஒரு தொடர் போராட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மண்ணுக்கும் கேடாய் மதித்தவர் தம்மை

விண்ணுக்கு உயர்த்தியவர் தந்தை பெரியார் அவர்கள்.

அதனை, பெரியார் அவர்கள் இன்னொருவருக்கு உதவி செய்கிறோம் என்று நினைக்கவில்லை. எனக்கு எது மகிழ்ச்சியளிக்கிறதோ, அதனை நான் செய்கிறேன் என்றார். அது என்னுடைய சுயநலம் என்றார். அதைக்கூட, பொதுநலம் என்றோ, பொதுத் தொண்டு என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்வதற்குத் தயாராக இல்லை.

அந்த நேரத்தில் நண்பர்களே, பெண்ணியத்திற்கு எவ்வளவு கேடுகள்; படிப்பதற்கு இடையூறுகள், அப் படியே அவர்கள் படித்து முடித்து வந்தாலும், வேலைக்குப் போவதற்கு இடையூறுகள். இன்றைக்குக்கூட பெண் களைப் பார்க்கின்றபொழுது, வெறும் பாலினப் பண்டங் களாகப் பார்க்கின்ற பார்வை இருக்கிறதே, அதற்கே சனாதனம்தானே அடிப்படை.

கோவில்களில் புராணங்கள், இதிகாசங்கள், சிற்பங்கள், வரலாறுகளையெல்லாம் எடுத்துப் பார்த்தால், உங்களுக்கு நன்றாகப் புரியும்.

பெரியார்தான் கேட்டார், "பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?" என்ற ஒரு புத்தகம் உண்டு. பெண்களை மூன்று வகையில் நம் நாட்டிலே அடக்கி வைத்து விட்டார்கள் என்று பெரியாருக்கு மிகப்பெரிய வருத்தம்.

நாட்டில் சரி பகுதி - 50 சதவிகிதம் பெண்கள். அந்த மனித வளம் வீணாகலாமா?

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டார்களே - இந்த இயக்கம் இல்லை என்றால், பெண்கள் எல்லாம் அடுப்பூதிக் கொண்டுதானே இருக்க வேண்டும்.

பெரியார் ஒரு சமூக விஞ்ஞானம்!

இன்றைக்குப் பெண்கள், நீதிபதிகளாக, அமைச் சர்களாக இன்னும் பல பதவிகளில் வந்திருக்கிறார்கள் என்றால், அதற்கு என்ன காரணம்? இன்னமும்கூட, மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கின்ற பி.ஜே.பி.,க்கு எஜமானனாக இருக்கிற ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு, பெண்கள் குடும்பத்தோடு இருக்கவேண்டும்.

அவர்கள் அமைப்பிலே கூட பெண்கள் பதவியில் இருக்கிறார்கள் - அமைச்சர்களாக இருக்கிறார்கள் - அதை மறந்துவிட்டுப் பேசுகிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு வேறு வழியில்லை. விஞ்ஞானத்தை வெல்ல அவர்களால் முடியாது. பெரியார் ஒரு சமூக விஞ்ஞானம். அந்த சமூக விஞ்ஞானத்தை அவர்களால் ஒருபோதும் வெல்ல முடியாது. வென்றதுபோல, காட்ட முடியுமே தவிர - அது ஒரு பாவனைதான், வேறு இல்லை.

பெண்களுக்குப் படிப்புரிமை - பெண்களுக்குச் சொத்துரிமையைப்பற்றி ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்லவேண்டும்.

இன்றைக்கும்கூட போராட்டம்தான். பார்ப்பனப் பெண்கள் உயர்கிறார்கள் என்று சொல்கிறார்கள் - நமக்கொன்றும் தனிப்பட்ட முறையில் வெறுப்பில்லை. அவர்களுடைய இல்லத்துப் பெண்களுக்கும் சேர்த்துத் தான் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

கணவனை இழந்த பெண்ணுக்கு, ‘காட்டுவது இல்'' என்று சொன்னார்கள். இதுதான் இலக்கியம் என்று சொன்னார்கள். இதைக் கேட்டவுடன், பெரியாருக்குக் கோபம் வந்தது. ‘காட்டுவது இல்லம்' - புதிய வாழ்வு - மறுமண வாழ்வு என்று சொன்னார்.

காட்டுவது இல் - இல்லை என்பது அது; காட்டுவது இல்லம் என்று இது.

எனவே, அந்த அடிப்படையில், மிக ஆழமாக, மிக சிறப்பாக பெண்ணியத்தை உயர்த்தினார்.

எஜமானன் - அடிமை என்று இருக்காதீர்கள். நண்பர் களாக இருங்கள்; தோழர்களாக இருங்கள் என்றார்.

இருவருக்கும் சம வாய்ப்பு உண்டு. ஒப்பந்தப்படி இருங்கள்; ஒருவர் அந்த ஒப்பந்தத்தை மீறினால், இன்னொருவர் அதனைக் கடைபிடிக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தார்கள்.

மனைவியைத் தொழுதெழுவான் என்று எங்கேயாவது இருக்கிறதா?

மனுதர்மத்தை எவ்வளவு கண்டிக்க ஆரம்பித்தார் களோ, அதே வேகத்தோடு, திருக்குறள் பக்கம் திரும்பினார்.

"தெய்வம் தொழா அள் கொழுநன் தொழு தெழுவாள்" என்று சொல்லக்கூடிய அளவிற்கு வருகின்றபொழுது, ‘கடவுளைத் தொழாதவள்கூட, கணவனைத் தொழ வேண்டும்' என்று சொன்னால், இது அடிமைத்தனம் அல்லவா என்று பெரியார் கேட்டார்.

புரட்சிக்கவிஞர் அதற்கு ஏதோ ஒரு விளக்கம் சொன்னார்.

பெய்யென பெய்யும் மழை என்று சொன்னால்,

அந்த மழை பெய்யவேண்டும் என்று நினைக்கின்ற நேரத்தில், மழை பெய்தால் எப்படியோ, அப்படி என்று சொன்னார். அது வள்ளுவரைக் காப்பாற்றுவதற்காகப் பயன்பட்டதே தவிர வேறொன்றும் கிடையாது.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை

என்று சொல்கிறீர்களே, மனைவியை தொழுதெழு வான் என்று எங்கேயாவது இருக்கிறதா? என்று பெரியார் கேட்டார்.

சிக்கல் என்ற ஊரில் நடைபெற்ற ஒரு திருமணவிழாவில், திருக்குறளாரும், பெரியாரும் கலந்துகொண்டனர். அந்த விழாவில் பெரியார் அவர்கள் உரையாற்றும்பொழுது, நான் மிகவும் மதிக்கின்ற நூல் திருக்குறள்தான். அறிவுக்கு முதலிடம் கொடுத்த நூல் - சமயச் சார்பற்ற நூலாகும். அதிலேகூட, பெண்ணியம் என்று வரும்பொழுது - பெண்களுக்கு மட்டும் கற்பு என்றெல்லாம் கட்டுப்பாடு வைத்தார்களே, ஆணுக்கு என்ன வைத்தார்கள்? என்று தெளிவாகக் கேட்டார்.

அந்த மேடையில் இருந்த திருக்குறளார் அவர்கள், ‘‘பிறன்மனை நோக்கா பேராண்மை'' என்று இருக்கிறது என்று கொஞ்சம் தயங்கித் தயங்கிப் பதில் சொன்னார்.

பெரியார் அவர்கள், யாருக்காகவும் சமரசம் செய்துகொள்ளாதவர்!

உடனே தந்தை பெரியார் அவர்கள், ‘‘அது திருட்டு'' இன்னொருவருடைய பொருளை எடுக்கக் கூடாது என்பதுதான். விதவைகளைப்பற்றியோ, திருமணம் ஆகாத பெண்களைப்பற்றியோ சொல்லியிருக்கிறாரா? என்று மிகத் தெளிவாகக் கேட்டார்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் நண்பர்களே, பெண்ணியம், பெண் உரிமை என்று வருகின்றபொழுது, பெரியார் அவர்கள், யாருக்காகவும் சமரசம் செய்து கொள்ளாதவர்.

எனவேதான், பெரியார் பெண்களுக்காக படிப்புரிமை, சொத்துரிமை பெறவேண்டும் என்பதற்காகப் பாடுபட் டார்கள்.

ஆண்களுக்குத்தான் சொத்தில் உரிமை உண்டு என்று இருந்தது. பெண்களுக்குச் சொத்துரிமை கிடையாது. பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்பதற்காக, பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்து சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தபோது, சனாதன வாதிகள் கடுமையான எதிர்ப்பைக் காட்டினார்கள்.

அமைச்சர் பதவியிலிருந்து

அம்பேத்கர் விலகினார்

இந்த நாட்டில், பெரியார் போராடி, அம்பேத்கர் போரா டியதன் விளைவாக, இந்து சட்டத் திருத்தம் வந்தபொழுது, இராஜேந்திர பிரசாத் போன்றவர்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். பிரதமர் நேருவை அம்பேத்கர் நம்பினார். பிரதமர் நேருவால், சமாளிக்க முடியவில்லை. பிறகு அம்பேத்கர் அவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து வில கினார். மகளிருக்கு சொத்துரிமை கொடுக்கும் சட்டத் திருத் தத்தை நீங்கள் ஏற்கவில்லை என்றால், நான் என்னுடைய பதவியிலிருந்து விலகுகிறேன் என்று சொல்லி, நேரு அமைச்சரவையிலிருந்து விலகினார்.

இது 1954 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆனால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக இந்தக் காரியங் களைச் செய்துகொண்டு வந்ததில், எந்தக் காங்கிரஸ் ஆட்சியின்கீழ் பெண்களுக்குச் சொத்துரிமை மறுக்கப்பட் டதோ, அதே காங்கிரஸ் மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்தபோது, கலைஞர் அவர்கள் தலைமையிலான திரா விட முன்னேற்றக் கழகம், மத்திய ஆட்சியில் பங்கேற்றதன் விளைவாக, மிகப்பெரிய ஒரு மாறுதல் ஏற்பட்டது.

செங்கல்பட்டு சுயமரியாதை மாகாண மாநாட்டில், பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை - 1989இல் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும்பொழுது, மாநிலத்தில் சட்ட மாக்கிக் காட்டினார். பிறகு 2006 ஆம் ஆண்டு மத்தியிலும் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா முழுமைக்கும் வந்தது.

இப்பொழுது பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு. ஒரு காலத்தில், சனாதனவாதிகள் எதிர்த்தார்கள்.

பெண்களுக்கு சமத்துவம் இருக்கவேண்டுமானால், அவர்களுக்குச் சொத்துரிமை இருக்கவேண்டும். பெண் களுக்குச் சொத்துரிமை இல்லாத காலத்தில், ‘‘உங்க அப்பன் வீட்டுக்கு அனுப்பிவிடுவேன்'' என்று மிரட்டி, மிரட்டி, படிக்காத பெண்களாக இருந்தாலும் சரி, படித்த பெண் களாக இருந்தாலும் சரி, அவர்களை விலக்கி வைத்துவிட்டு, வாழாவெட்டிகள் என்று முத்திரை குத்தினார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை நீங்கள் எல்லாம் எண்ணிப் பாருங்கள் நண்பர்களே!

மனிதம் எங்கே இருக்கிறது?

பெரியாரிடத்திலா?

மதவாதிகளிடத்திலா? என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நன்றி உணர்ச்சி இருக்கவேண்டுமானால், அவரவர் வீட்டில் ஆண்கள், பெரியாருடைய படத்தை மாட்டி வைத்திருக்கிறார்களோ இல்லையோ! ஒவ்வொரு பெண்ணும், அது எந்தப் பெண்ணாக இருந்தாலும், ஜாதி, மதம், குலம் இவற்றையெல்லாம் தாண்டி, அவரவர் வீட்டில் பெரியாருடைய படம் இருக்கவேண்டும்.

படம் என்பது வெறும் படத்திற்காக மட்டுமல்ல - பாடத்திற்காக - தத்துவத்திற்காக!

இதோ ஒரு செய்தியை நம்முடைய மகளிர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதனை சொல்கிறேன்.

‘‘இந்து மதம் எங்கே போகிறது?''

இதோ என்னுடைய கைகளில் இருக்கும் புத்தகம் ‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற புத்தகம். அக்னி ஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய நூல்.

பக்கம் 104,

ஆலயப்பிரவேசப் போராட்டத்தைத் தடுத்த பெண்கள் தாக்கப்பட்டதற்காக அழுத சங்கராச்சாரியார் பெண்க ளுக்குச் சொத்துரிமை கொடுக்கப்பட்டதற்கு சந்தோஷப் பட்டிருக்க வேண்டும்.

ஆனால்?..

டில்லியில் நேரு ‘ஹிந்து கோடு பில்’லில் பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்கவேண்டும் என கொண்டுவந்த செய்தி பேப்பர்களில் வந்தது.

அப்போது மடம் காஞ்சிக்கு வந்துவிட்டது. கும்ப கோணத்தில் இருந்த எனக்கு ஒரு தந்தி பறந்து வந்தது. ‘உடனே காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டு வரவும்’ இதுதான் தந்தி வாசகம் - கொடுத்திருந்தவர் சங்கராச்சாரியார்.

நான் புறப்பட்டுக் காஞ்சி போன சமயம் காஞ்சிபுரத் துக்கு அருகே உள்ள எசையனூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது குடும்பச் சொத்துகளை எல்லாம் மடத்துக்கு கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். அவற்றைப் பார்வையிட எசையனூருக்குச் சென்றிருந்தார் மகாபெரி யவர்.

‘என்ன ஸ்வாமி’ என்றேன் நான்.

அன்றைய பேப்பரை எடுத்து என்னிடத்தில் காட்டிய மகா பெரியவர். "லோகமே அழியப்போறது ஓய்! அழியப் போறது!" என படபடப்பாகப் பேசினார்.

“இதப்பார்த்தீரா! ஸ்திரீகளுக்கு சொத்துல பாத்யம் கொடுக்கப் போறாளாம். அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? இஷ்டப்பட்டவா கூட ஸ்த்ரீகள் ஓடிப்போயிடுவா! அபாண்டமா அபச்சாரமா போயிடும்'’ என அந்த பேப்பரை தட்டியபடி வியாக்யானம் தந்து கொண்டிருந்தார் மகா பெரியவர்.

நான் சிரித்தபடியே பதில் சொன்னேன். "எனக்கு நல்லதுதான் ஸ்வாமி.. என் மாமனாருக்கு நிறைய சொத்துகள் இருக்கு. ஒருவேளை என் ஆத்துக்காரிக்கு பங்கு வந்தால் எனக்கும் நல்லதுதான்."

இந்தப் பதிலைக் கேட்டதும், "அசட்டுத்தனமாக பேசாதீர். இந்த சட்டம் வந்தால், ஸ்திரீ தர்மமே பாழாயிடும். ஸ்திரீகளுக்கு பாத்யமோ, சம்பாத்யமோ இருக்கக்கூடா துன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்திரீக்கு அழகு."

- தொடரும்