ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
"வாழ்ந்து காட்டினார் மும்பை தொல்காப்பியனார் - நாமும் வாழ்ந்து காட்டுவோம்!"
September 11, 2020 • Viduthalai • கழகம்

மும்பை பெரியார் பெருந்தொண்டர் தொல் காப்பியனாரின் நூற்றாண்டு விழா மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் காணொலி மூலம் சிறப்பாக நடை பெற்றது. (10.9.2020)

காணொலியில் அமெரிக்கா, கருநாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களிலிருந்து தோழர்கள் பங்கேற்றது தனிச் சிறப்பாகும்.

பங்கேற்ற முக்கியப் பொறுப்பாளர்கள்:

செயல் அவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர். துரை.சந்திரசேகரன், தஞ்சை இரா. ஜெயக்குமார், வீ.அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி, கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், பிரச்சாரச் செயலாளர் அ. அருள்மொழி, துணைப்பொதுச் செயலாளர் பொறியாளர் இன்பக்கனி,  அமைப்புச் செயலாளர்கள் ஈரோடு த. சண்முகம், ஊமை செயராமன், பொன்னேரி வி. பன்னீர்செல்வம், மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா. அழகிரிசாமி, புதுச்சேரி மாநிலத்தலைவர் சிவ. வீரமணி, அலிஷேக் மீரான்,  அமெரிக்கா பேராசிரியர் வேலாயுதம், டாக்டர் சோம. இளங்கோவன்,  பெங்களூர், முல்லைக்கோ, முத்துச் செல்வன், மும்பை மாநிலச் செயலாளர் இ. அந்தோணி, மும்பை வில்சன், கண்ணன், நெல்லை இரா. காசி,   அண்ணா சரவணன், (மாநில துணைத் தலைவர் ப.க.), டாக்டர் மீனாம்பாள், திராவிட மறுமலர்ச்சி மய்யம் ஸ்டீபன் ரவிக்குமார், மும்பை, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் முதலியோர் பங்கு கொண்டனர்.

தோழர்கள் உரை

மும்பை திராவிடர் கழகத் தலைவர் கணேசன் வரவேற்புரையாற்றினார். தொல்காப்பியனாருடன் அவருக்கு இருந்த தொடர்பு; தொல் காப்பியனாருக்குப் பல துறைகளிலும், பல்வேறு மொழி பேசுபவர்களிடம் அதிகாரிகளிடம் இருந்த நெருக்கம், செல்வாக்குப் பற்றி எடுத்துக் கூறினார்.

தனது மரண சாசனமாக - அம்பேத்கர் உடல் எரியூட்டப்பட்ட இடத்தின் அருகே தமது உடலும் எரியூட்டப்பட வேண்டும் என்றுகூறியதைக் குடும்பத் தினர் நிறைவேற்றினர் என்று எடுத்துக் கூறினார்.

தொடக்கவுரை ஆற்றிய மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரவிச்சந்திரன், மராட்டியர்கள் மத்தியிலும் தந்தை பெரியாரைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளதுஎன்றும் அவர்கள் ஏற்பாடு செய்த காணொலி நிகழ்ச்சியில் தந்தைபெரியார் பற்றிப் பேசும் அரிய வாய்ப்புக் கிடைத்தது குறித்தும் பெருமிதமாக எடுத்துக் கூறினார்.

தோழர் குமணராசன்

தமிழ் லெமுரியா அறக்கட்டளையின் தலைவர் குமணராசன் தொல் காப்பியனாரின் இயக்கப் பணிகளை விரிவாக எடுத்துரைத்தார். "பம்பாய் முரசு" ஏட்டை நடத்தியதும், தந்தைபெரியார் பிள்ளையார் உடைப்புப் போராட்டத்தைத் தமிழ் நாட்டில்நடத்திய போது ஒற்றை மனிதராக நின்று அந்தப் போராட்டத்தை நடத்தியதையும் சிலாகித்தார்.

தலைவர் ஆசிரியர் வர முடியாத நிலையில் தமது திருமணத்தைத் தலைமை தாங்கி நடத்திக் கொடுத்த தோடு தமது மகனுக்கு இங்கர்சால் என்று தொல் காப்பியனார் பெயர் சூட்டியதையும் பசுமையாக நினைவு கூர்ந்தார்.

இலங்கையிலிருந்து மும்பை வந்த அவரின் இயற்பெயர் (ஆனைமலை) கணபதி என்றும்,தமிழ் உணர்வோடு தன் பெயரை தொல்காப்பியன் என்று மாறிக் கொண்ட தகவலையும் தெரிவித்தார். 1986-இல், கோவையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டிற்கு பெரியார் பெருந்தொண்டர் தொல் காப்பியனாருடன் தான் வந்தது; பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் இல்லத்தில் தங்கியது, அம்மாநாட்டின் கண்காட்சியை தொல் காப்பியனார் திறந்து வைத்ததையும் சிறப்பாக நினைவூட்டினார்.

விழாவிற்கு முன்னிலை வகித்த திராவிடர் கழகப் பொதுக் குழு  உறுப்பினர் ம.தயாளன் அவர்கள். மும்பையில் கழகத்தைக் கட்டிக் காத்த தோழர்களை எல்லாம் நினைவு கூர்ந்து, தமக்கும் தொல் காப்பியனாருக்கும் இருந்த நெருக்கத்தையும், அவர் கூறிய அறிவுரைகளையும் அனுபவ ரீதியில் எடுத்துக் கூறினார்.

கலி. பூங்குன்றன்

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் தன் உரையில் குறிப்பிட்டதாவது:

அன்னை மணியம்யை£ர் திருமணத்திற்குப் பிறகு அவர்கள் தலைமை வகித்த முதல் மாநாடு 1950 பிப்ரவரியில் மும்பையில் நடைபெற்ற இரண்டாவது திராவிடர் கழக மாநில மாநாடு; மாநாட்டுத் தலைவரை முன்மொழிந்தவர். எஸ்.எஸ். அன்பழகன் (தற்போதைய மும்பைப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரவிச் சந்திரன் அவர்களின் தந்தையார்) வழிமொழிந்தவர் தொல்காப்பியனார்ஆவார். அந்த மாநாட்டுப் பந்த லுக்குச் சூட்டப்பட்டது - தாளமுத்து - நடராசன் எனும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் (1938) உயிர் துறந்த மாவீரர்களின் பெயர்கள் ஆகும்.

திராவிடர் கழகத் தோழர்கள் உடலால் மறைந்தாலும் கொள்கை உணர்வால், ஆற்றிய இயக்கத் தொண்டால், தியாகத்தால் என்றென்றைக்கும் நம்மோடு வாழக் கூடியவர்கள். ஆதலால் மறைந்த அந்தக் கருஞ்சட்டைத் தோழர்களுக்கு "சுயமரியாதைச்சுடர் ஒளிகள்" என்று தமக்கே உரித்தான முறையில் பொருள் பொதிந்த சொற்களை உருவாக்கிக் கொடுத்தவர் நமது கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள். அதே போல "மானமிகு" என்ற சொல்லையும் தமிழில் அதுவரை இல்லாத ஒரு புதிய சொல்லை சுயமரியாதை சூடேற்றும் சொல்லினைத் தமிழுக்குக் கொடை அளித்தவரும் நமது தலைவர் ஆசிரியர் என்று குறிப்பிட்டார்.

உங்களைப்பற்றி ஒரு வரியில் சொல்லுங்கள் என்று செய்தியாளர் கேட்டபோது - "மானமிகு சுயமரியாதைக்காரன்!" என்று பளிச் சென்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களே சொல்லும் அளவுக்கு கழகத் தலைவர் உருவாக்கிக் கொடுத்த அந்தசொல் தார்க்கத்தை ஏற்படுத்தி விட்டது.

"நினைவிடம்"   - என்ற சொல்லும் அவர் உருவாக்கிக் கொடுத்ததே!

திராவிடர் கழகத்தில் உறுப்பினர்கள் எத்தனைப் பேர் என்பது முக்கியமல்ல; இருக்கிறவர்கள் அத்தனைப் பேரும் கொள்கைவாதிகளாக குடும்பத்திற்கு விதிவிலக்குக் கொடுக்காமல் வாழ்கிறார்கள் வாழ்ந்தே தீர வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள்.

நமது கொள்கையின் பாதுகாப்பை இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களிடம் இன்னும் சொல்லப்போனால் நம் கொள்கைக்கு மாறுபட்டவர்களிடமும் தந்தை பெரியார் ஒப்படைத்துச் சென்றுள்ளார்.

கொள்கையில் சிறு தவறு செய்தாலும் அவர்கள் கேட்பார்கள். "இது உங்கள் கொள்கைக்கு விரோதம் அல்லவா? இப்படி நீங்கள் நடந்து கொள்ளலாமா?" என்று கேட்பார்களே!

நினைத்துப் பாருங்கள். இப்படிப்பட்ட இயக்கத்தை உலக வரலாற்றில் காண முடியுமா!

கொள்கையில் உறுதி என்று இருந்தாலும் அதைவிட ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவர் தந்தை பெரியார்.

கொள்கையில் ஒட்டை விழுந்தாலும் சரி செய்து  விடலாம்; ஆனால் நாணயத்தில், ஒழுக்கத்தில் ஓட்டை விழுந்தால் சரி செய்ய முடியாதுஎன்று சொன்னவர் பகுத்தறிவுப் பகலவன் என்று எடுத்துக்காட்டினார் துணைத் தலைவர்.

தொல்காப்பியனார் நூற்றாண்டு விழாவை எதற்குக் கொண்டாடுகிறோம்? அவர் வாழ்ந்து காட்டிய விதம், ஆற்றிய தொண்டறம், இலட்சியத்துக்காக எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருந்தநிலை - இன்றைய இளைஞர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் என்று குறிப்பிட்டார்.

முக்கியமாக தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டத்தை நடத்தியபோது மும்பையில் தனி மனிதனாக நின்று அந்தப் போராட்டத்தை தொல் காப்பியனார் நடத்தினார் என்றால், அது சாதாரணமா? அதுவும் எப்படிப்பட்ட மும்பையில்?

விநாயகனை முன் வைத்து ஆர்.எஸ்.எஸையும், இந்து வெறியையும் ஊட்டுவதற்குத் திலகரால் முன்னெடுக்கப்பட்ட மும்பையில் அந்தப் போராட்டத்தை நடத்தினார் ஒருவர் என்றால், அது ஒன்றுக்காகவே மட்டும் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். பெரியார் தொண்டருக்குள்ள துணிவும், கொள்கை உரமும் எத்தகையது என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறினார்.

 

நமது கழகம் உயர்ந்தது!

நமது கழகக் கொள்கை மிக மிகத் தீவிரமானது. கடவுளை, மதத்தை, சாஸ் திரத்தை வன்மை யாகக் கண்டிக்கிறோம் என்றாலும் நேரடியாகக் கண்டிக்க எவருக்கும் துணிவே இல்லையே.

நமது கழகத்தினர்கள் இடையேயும் ஒருவருக்கு ஒருவர் குறை கூறித் திரிவதும் இல்லை.

நமது கழகக் கூட்டங்களிலும் காலித் தனம், கலாட்டாக்கள் எதுவும் நடப்பதும் கிடையாது.

நமது கழகம் கடந்த 40 ஆண்டுகளாக இப்படியாக நடத்தி வருகின்றோம்.

1940 முதல் எடுத்துக்கொண்டால் எனது பிறந்தநாள் விழாவானது ஆண்டுக்கு ஆண்டு நம்மைப் பார்த்து பிறர் காப்பியடிக்குமாறு வளர்ந்துகொண்டுதான் வரு கின்றது.

பணம், காசு விஷயமாய் எடுத்துக் கொண்டாலும் ஸ்தாபனத்துக்கு வளர்ந்து கொண்டுதான் வருகின்றது.

நாம் எதிர்பார்த்த லட்சியத்தில் எதிலும் தோற்று விடவும் இல்லை. பெரிதும் வெற்றி பெற்றுக்கொண்டு மற்றவர்களும் ஏற்கும் படிதான் வளர்த்து வருகின்றோம்.

அரசாங்கமும்கூட நமது தோழர்களை மற்ற கட்சிக்காரர்களைவிட நல்லவண்ணமே மதிக்கின்றது.

இந்த நிலை, பெருமை மாறாமல் இருக்கவேண்டும். இப்படியே இருந்து வரும் நிலையிலேயே நாம் சாக வேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றேன்.

நமது தோழர்களும் நாணயமாகவும் கட்டுப்பாடாக வும் இருக்கின்றார்கள்.

நமது கொள்கையில் ஓட்டை விழுந் தால்கூட பரவாயில்லை. ஆனால், நாண யத்தில் - ஒழுக்கத்தில் தவறு இருக்கக் கூடாது. அதுதான் ஒரு கழகத்துக்கு முக்கியமான பலம்.

- தந்தை பெரியார்,  'விடுதலை' 11.10.1964

(மன்னார்குடி உரை)