ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
"சுயமரியாதைச் சுடரொளி" மும்பை தொல்காப்பியனார் நூற்றாண்டு விழா
September 11, 2020 • Viduthalai • கழகம்

கொள்கை - தொண்டு - ஒழுக்கம்  - தியாகம் இதுவே திராவிடர் கழகம்!

தமிழர் தலைவர் படப்பிடிப்பு

* கலி. பூங்குன்றன்

மும்பை திராவிடர் கழகத் தலைவர் "சுயமரியாதைச் சுடரொளி"  தொல்காப்பியனார் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று காணொலி மூலம் சிறப்புரையாற்றிய திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டதாவது: (10.9.2020 மாலை)

'வடநாட்டில் பெரியார் தொகுதி- 2' "அய்ரோப்பாவில் பெரியார், 'மலேசியாவில் பெரியார்' என்று கழகம் ஆவணப்படுத்தியுள்ள நூல்களை எடுத்த எடுப்பிலேயே அறிமுகப்படுத்தினார்.

'வடநாட்டில் பெரியார்' என்னும் தொகுப்பில் தந்தை பெரியார் மும்பைக்கு எத்தனை முறை வந்துள்ளார்  - என்னென்ன நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார்  - தொல்காப்பியனார் போன்ற கழகச் செயல் வீரர்களின் பங்களிப்பு என்ன என்ற விவரங்கள் எல்லாம் இத்தொகுப்புகளில் அடங்கியிருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

அடுத்து மும்பையில் கழக அரும் பணியாற்றிய கருஞ்சட்டைத் தோழர்களின் பட்டியலை  நினைவுப்படுத்தினார்.

தோழர்கள், தொல்காப்பியனார், மந்திரமூர்த்தி, சாமிக்கண்ணு (குவைத் செல்லப்பெருமாள் அவர்களின் சகோதரர்) ஜார்ஜ் முத்தையா, ஆர்.ஏ. சுப்பையா, நெல்லையா, நெல்லையப்பா, ஜோசப் ஜார்ஜ் ('பைபிளோ பைபிள்' என்ற நூலைஎழுதியவர்) எஸ்.எஸ். அன்பழகன் என்.ஏ. சோமசுந்தரம் எப்பொழுதும் துடித்துடிப்பாக சீறி எழும் இராவணன் ஆறுமுகம், ராஜு, பாலையா, வேலாயுதம் (நெல்லை மாவட்டக் கழகத் தலைவர் காசியும், மும்பையில் பணியாற்றி நெல்லை திரும்பியவர்தான்) முதலிய சுயமரியாதைச் சுடரொளிகளை வீர வணக்கத்தோடு நினைவு கூர்ந்தார்.

தமிழ்நாட்டில் தி.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் உரசல் ஏற்பட்ட கால கட்டத்தில்கூட மும்பையைப் பொறுத்தவரையில் தி.க.. - தி.மு.க. எப்பொழுதுமே இரட்டைக் குழல் துப்பாக்கிகள் தான் - கொள்கை உணர்வோடு இணைந்து பணியாற்றுவார்கள் - தோழர்கள் தியாகராசன் ஆரிய சங்காரன், பொற்கோ போன்ற திமுக தோழர்கள் நினைவூட்டத்தக்கவர்கள் என்றும் கூறினார்.

1957இல் தந்தை பெரியார் மும்பை வந்த போது, அண்ணல் அம்பேத்கர் தம் வாழ்நாளில் இறுதியாக எழுதிய 'புத்தா அண்ட் ஹிஸ் தம்மா' என்ற ஆங்கில நூலை தந்தை பெரியாருக்கு அளித்தார் தொல்காப்பியனார். அந்த நூலை தந்தைபெரியார் என்னிடம் அளித்து, படித்துப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினார். (அந்த நூலையும் எடுத்துக்காட்டினார் கழகத் தலைவர்).

யாருக்கும் கிடைக்காத அனுமதி ஒன்றை தந்தை பெரியாரிடமிருந்து பெற்றவர் தொல்காப்பியனார். தமிழ்நாட்டில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற அறக்கட்டளையின் கிளையை மும்பையில் நிறுவிட அய்யாவிடம் அனுமதி பெற்று, பள்ளிக்கூடம் ஒன்றைக்கூட நடத்தியதுண்டு என்ற தகவலையும் கூறினார் ஆசிரியர்.

மும்பையில் 1950 பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற்ற திராவிட நாடு - பகுத்தறிவு நிலையத்தில் 6ஆவது ஆண்டு நிறைவு மற்றும் பம்பாய் மாகாணஇரண்டாவது திராவிடர் கழக மாநாடு குறித்தும் கூறிய கருத்து முக்கியமானது.

மணியம்மையார் திருமணம் என்ற பெயராலே செய்யப்பட்ட ஏற்பாடு குறித்த புயல் கிளம்பிய நேரம்; உலக வரலாற்றில்ஒரு பெண், மணியம்மையார்போல ஏச்சுகள் - பேச்சுகள் - அவதூறுகளைச் சந்தித்தவர்கள் யாரும் இருக்க முடியாது.

அத்தகைய புயல் வீசிய கால கட்டத்தில், பம்பாய்க் கழகத்தினர் முன்வந்து, திராவிடர் கழக மாநில மாநாட்டுக்கு ஏற்பாடு செய்ததோடு, அதற்கு மணியம்மையாரைத் தலைமை தாங்க வைத்தனர் என்றால், அது சாதாரணமானதல்ல.

அந்த மாநாட்டிலே தலைவரை வழிமொழிந்து பேசிய தொல்காப்பியனார் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

"பெரியார் அவர்களின் திருமணத்தில் குற்றம் காண முயன்ற தோழர்கள் குற்றம் காண இயலாது. மணியம்மையார் அவர்கள் கழகத் தலைமையேற்று நடத்த முடியுமா? என்று நையாண்டி செய்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று கருதுகிறேன். அந்த நையாண்டிக்குப் பதில் கூறும் முகமாகவே நாங்கள்தோழர் மணியம்மையார் அவர்களை அன்னை யாராக மதித்து ஏற்று, இம்மாநாட்டுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறோம். மாநாட்டைத் திறம்பட நடத்திக் கொடுக்கும் ஆற்றல் அவருக்குண்டு என்பதை நாம் அறிந்தே அவருக்கு இப்பணியை அளித்திருக்கிறோம்!" என்று பேசினார் தொல்காப்பியனார்.

இதனை எடுத்துக்காட்டிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தந்தை பெரியார் அம்மாநாட்டில் தெரிவித்த முக்கிய கருத்தையும் எடுத்துக்காட்டி ஒரு தலைவர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக தந்தைபெரியார் பேசியதைக் குறிப்பிட்டார்.

"தலைவர் பிரேரேணையின் போது தோழர்கள் சிலர் தோழியர் ஈ.வெ.ரா. மணியம்மையாரை திராவிடர் கழகத் தலைவி என்று குறிப்பிட்டார்கள் - அது தவறாகும். அவர் உங்களால் விரும்பி அழைக்கப்பட்டு வரும் இயக்கத் தலைவருடைய துணைவியாவார். இம்மாநாட்டுக்குத்தான் அவர் தலைவரே யொழிய இயக்கத்திற்கு அவர் எப்படியும் தலைவராக மாட்டார். மணியம்மையாரை இயக்கத்திற்குத் தலைவியாக்கி விட்டேன் என்று சிலர் கிளர்ச்சி செய்வதற்கு இது ஆக்கமளிக்கக் கூடுமாதலால், இதை முதலில் விளக்க வேண்டியது அவசியமாயிற்று!" என்று தந்தை பெரியார் அம்மாநாட்டில் பேசியதைப்பற்றி திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக்காட்டியதோடு ஒரு விளக்கத்தையும் அளித்தார். தலைவராக இருந்த பெரியார் ஒரு பிரச்சினையை எப்படி அணுகி கருத்துரை வழங்கினாரோ, அதே போல தலைவர் ஆசிரியர் அவர்கள் அய்யா வழி, ஒரு விளக்கத்தையும் கூறினார்.

பிறகு மணியம்மையார் இயக்கத்திற்குத் தலைவர் ஆகவில்லையா என்று கேட்கலாம். தனக்குப் பிறகு இயக்கத்திற்குத் தலைவர் மணியம்மையார் என்று தந்தைபெரியார் அறிவித்துச் செல்லவில்லை. தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு கழகத் தோழர்கள் திருச்சியில் கூடி அந்த முடிவை  எடுத்தனர் என்று கூறிய விளக்கம் தேவையானது - அவசியமானதும்கூட!  இன்னொரு சுவையான தகவலையும் கூறினார். மாநாட்டின் வரவேற்புரையை ஆற்றிய தோழர் மோசஸ் "பெரியார் மணி வாழ்க!" என்று சொன்னதையும் குறிப்பிட்டார்.

மும்பையைப் பொறுத்த வரையில் மராட்டியர்களுடன் தலைவர்களுடன் மும்பைக் கழகப் பொறுப்பாளர்கள் நல்ல நேச உணர்வுடன், தொடர்புடன்தான் இருந்தனர். இந்தக் கால கட்டத்தில் அது மேலும் வலுவாக வேண்டும். மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரவிச்சந்திரன் இங்கே ஒன்று கூறினார்.

தந்தை பெரியார் குறித்து மராட்டிய மொழியில் எடுத்துக் கூறும் வாய்ப்பினை எனக்கு அளித்தனர். நானும் கலந்துகொண்டு காணொலியில் பேசினேன் - வரவேற்பு இருந்தது என்று தோழர் இரவிச்சந்திரன் கூறியதை வரவேற்கிறேன் - இந்தப் பணி மேலும் மேலும் விரிவடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் கழகத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

'பம்பாய் முரசு' என்ற பத்திரிக்கையை தொல்காப்பியனார் நடத்தினார். பத்திரிக்கை நடத்துவது என்பது சாதாரணமானதல்ல; பொருள் நட்டப்படும் என்பது தெரிந்திருந்தும், கொள்கை பரவட்டும் என்ற உணர்ச்சியோடு சில ஆண்டுகள் நடத்தியதையும் எடுத்துக்காட்டி, நமது கொள்கை பரவ வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்தை சுட்டிக்காட்டினார்.

திராவிடர் கழகம் என்றால் அதன் அடையாளம் எளிமை, எதிரிகள்கூடநம்மை கொள்கையை வைத்துத்தான் அடையாளம் காட்டுகிறார்கள். கருப்புச்சட்டை அணிந்து ஒருவர் சென்றால், என்ன பேசிக் கொள்வார்கள்? இவர்கள் யார் தெரியுமா? சாமியில்லை என்று கூறும் தி.க. கட்சிக்காரர்கள் என்று தானே சொல்லுவார்கள். இப்படி கொள்கையை வைத்து அடையாளம்  காட்டப்படுபவர்கள் நாம் மட்டுமே! என்று கழகத் தலைவர் கூறுவதுதான் எத்தகைய பெருமை!

இது ஒரு கொள்கை ரீதியான அமைப்பாகும். திராவிடர் கழகத்தில் ஆதிதிராவிடர் பிரிவு என்பது போன்ற அணிகள் பொறுப்புகள் கிடையாது. இது ஒரு ஜாதி ஒழிப்பு இயக்கம். இந்த இயக்கத்தின் கொள்கையே ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை கொடுத்துப் பாடுபடும் இயக்கமாக இருக்கும்போது அதில் என்ன ஆதிதிராவிடர் பிரிவு?

நாம் பார்ப்பனர்களை எதிர்ப்பதுகூட இரத்தப் பிரிவின் அடிப்படையில் அல்ல - பண்பாட்டு மாறுபாட்டின் அடிப் படையில்தான் - பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் நோக்கத்தோடுதான் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

நதிகள் கடலில் கலந்துவிட்டால், அது கடல் தானே தவிர நதிகளல்ல - தனித் தனியே பிரித்து எடுக்க முடியாது. திராவிடர் கழகமும் அது போன்றது தான். திராவிடர் கழகத்தில் இணைந்து விட்டால் இங்கே ஜாதி அடையாளங்கள் கிடையாது. கல்வி, வேலை வாய்ப்பில் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்பதையும், இதையும் வைத்துக் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை - ஏன் கூடாது!

திராவிடர் கழகத்தில் படித்தவர்கள் என்பதற்காகவோ, பணக்காரர்கள் என்பதற்காகவோ யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்றார் கழகத் தலைவர்.

(இதுகுறித்து தந்தை பெரியார் கூறுவது கவனிக்கத்தக்கது "செல்வந்தர்கள், அறிவு ஆற்றல் உள்ள பெரியோர்கள் நம் இயக்கங்களுக்கு அவசியம் வேண்டும். உதவி செய்யவே தவிர, ஆட்சி செலுத்த அல்ல என்பதை உணர வேண்டும்" என்கிறார் தந்தை பெரியார். 25.4.1943இல் நடைபெற்ற திருச்சி ஜில்லா 14ஆவது ஜஸ்டிஸ் மாநாட்டில் திராவிட நாடு படத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையில் குறிப்பிட்ட மணி வாசகம் இது).

திராவிடர் கழகத்தில் தொண்டு தான் அடையாளமும் அளவுகோலுமாகும். புகழைக்கூட எதிர்பார்க்க முடியாது - கூடாது.

நம் கழகத் தோழர்களில் குடும்பங்களை நன்கு அறிவோம் - கழகத்தவர்களே நம் குடும்பம் என்ற உணர்வோடு பழகுவோம். அதே நேரத்தில் யார் என்ன ஜாதி என்று அறிவதில்லை - அறியவும் முய்சிப்பதில்லை - காரணம் இந்த இயக்கம் ஜாதிமறுப்பு மட்டும் அல்ல. ஜாதியை ஒழிக்கும் புரட்சிகரமான இயக்கம்.

மும்பைத் தோழர்களிடம் 70 ஆண்டுகளுக்கு மேலான நட்பும், தொடர்பும் கொள்கை ரீதியாக உண்டு. அவர்கள் காட்டும் அன்பும் உபசரிப்பும் அலாதியானது - அது இன்றுவரை தொடர்கிறது - தொடரவும் வேண்டும்.

திராவிடர் கழகத்தில் மும்பைக்கு என்று ஒரு தனி வரலாறு உண்டு!

அய்யா தொல்காப்பியனார் போன்றவர்கள் வாயளவில் அல்ல - வாழ்ந்துகாட்டியிருக்கிறார். அவரது வாழ்விணையர் - இரத்தினாவதி அம்மையார் அவர்கள் தொல்.காப்பியனாரின் கொள்கைப் பயணத்திற்கு உறு துணையாக - உறுதியாக இருந்தவர்கள். அவர்களுக்கு நாம் இந்த நேரத்தில் அன்பையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வோம்!

வாழ்க தந்தை பெரியார்!

வளர்க பகுத்தறிவு!

ஓங்குக தொல்காப்பியனார் புகழ்!

என்று கூறி முடித்தார் கழகத் தலைவர்.

ஆசிரியர் அவர்களின் உரை இயக்க அமைப்புக்கும் இயக்கத் தோழர்களுக்கும் நெறியூட்டும். நெறிகாட்டும் வழித்தடமாக அமைந்திருந்ததுஎன்று கூறலாம்.

தொல்காப்பியனார் அவர்களின் மகன் காமராஜ், வாழ்விணையர் இரத்தினாவதி அம்மையார் ஆகியோர் நன்றி கூறினர்.

 

கழகத் தலைவரின் அறிவிப்பு

 ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி மும்பை திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து பெரியார் ஆயிரம் போட்டி நடத்திட வேண்டும். முதல் பரிசு ரூ.3000, இரண்டாம் பரிசு ரூ.2000, மூன்றாம் பரிசு ரூ.1000 - இப்பரிசை சுயமரியாதைச் சுடரொளி தொல்காப்பியனார் பெயரில் அளிக்கப்பட வேண்டும்  - அதற்கான புத்தகங்களை தலைமைக் கழகம் அளிக்கும் என்ற அறிவிப்பினைக் கழகத் தலைவர் வெளியிட்டார்.