ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
"குறள்நெறி" என்று கூறுங்கள்! - தந்தை பெரியார்
July 23, 2020 • Viduthalai • கழகம்

"திருக்குறளும் - பெரியாரும்" | காணொலியில் தமிழர் தலைவர்

* கலி. பூங்குன்றன்

விஜிபி - உலகத் தமிழ்ச் சங்கத்தில் 18ஆம் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்று “திருக்குறளும் பெரியாரும்“ எனும் தலைப்பில் நேற்று மாலை 7 மணிக்குக் காணொலி மூலம் கருத்துரை யாற்றினார்.

தமிழ் இலக்கியங்களில் தந்தை பெரியாரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே நூல் திருக்குறளே. அதனால்தான் “நீங்கள் என்ன சமயத்தவர் என்று கேட்டால் “வள்ளுவர் சமயம்“ என்று சொல்லுங்கள்! உங்கள் நெறி என்ன வென்றால் “குறள் நெறி” என்று கூறுங்கள். அப்படிச் சொன்னால் எந்தப் பிற்போக்குவாதியும், எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரனும் எதிர் நிற்கமாட்டான், யாரும் குறளை மறுக்க முடியாததே  இதற்குக் காரணம்” என்றார் தந்தை பெரியார் (விடுதலை 18.4.1950).

முதன் முதலில் திருக்குறளுக்காக மாநாடு நடத்தியவரும் தந்தை பெரியாரே! "வள்ளுவர் குறள் மாநாடு” 1949 ஜனவரி 15,16 ஆகிய நாள்களில் தமிழர் திருவிழாவாம் பொங்கல் நாளையொட்டி சென்னையில் நடத்தினார்.

திரு.வி.க., தெ.பொ.மீ., நாவலர் சோமசுந்தரபாரதியார், முத்தையா முதலியார், மா.இராசமாணிக்கனார், அறிஞர் அண்ணா, புலவர் குழந்தை. பேராசிரியர் இலக்குவனார், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் முதலிய பல்துறை அறிஞர் பெருமக்கள் எல்லாம் குறள் மாநாட்டில் பங்கு கொண்டு கருத்துரை, சிறப்புரை வழங்கினர்.

எதற்காக குறள் மாநாடு?

“குறளைப் பொறுத்தவரை என்னுடைய கருத்து - ஆரிய கால பண்பு நெறி, ஒழுக்கம் முதலியவற்றிற்குத் தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாகக் குறள் உருவாக்கப்பட்டது என்பதும் உறுதியான கருத்தாகும். குறள் தத்துவத்தை விளக்கவென்றே நடத்தப்படும் இம் மாநாட்டில் நாம் பங்கு கொண்டு, தத்துவங்களை உணர்ந்து தமிழ்ப் பாமர மக்களுக்குக்கிடையில் இந்தத் தத்துவங்களை புகும்படிச் செய்ய வேண்டியது நம் கடமையாகும்" என்று குறள் மாநாடு நடத்தவதற்கான நோக்கத்தை வெளிப் படுத்தினார் தந்தை பெரியார்.

திருக்குறளை மலிவு விலையில் அச்சிட்டும் மக்கள் மத்தியில் கொண்டு சென்றார்.

இத்தகு காரணத்தால்  “திருக்குறளும் - பெரியாரும்" எனும் தலைப்பில் தந்தை பெரியார் அவர்களின் சிறப்புமிகு மாணாக்கரான ஆசிரியர் கி.வீரமணி அவர்களை உரையாற்ற உலகத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்தது மிகவும் பொருத்தம்தானே!

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்.                      (குறள் 620)

என்ற திருக்குறளை எடுத்துக்காட்டி., இதற்குப் பொருத்தமாக வாழ்ந்து காட்டி வாழ்க்கையில் உயர் நிலையை எட்டிய குடும்பம்தான் அண்ணாச்சி வி.ஜி.பன்னீர்தாஸ் குடும்பம்.

குறளைப் பின்பற்றினால் வாழ்வில் வெற்றி பெறுவர் என்பதற்கு இந்தக் குடும்பமே எடுத்துக்காட்டு என்று பொருத்தமாகச் சொன்னார் திராவிடர் கழகத் தலைவர்.

(ஊழ் என்றால் தலைவிதி என்றுதானே பொதுவாகச் சொல்லுவார்கள் - ஆனால், தந்தை பெரியார் கூறும் விளக்கம் என்ன? - தனியே காண்க)

டீக்கடை வைத்தும், வீடு வீடாகச் சென்றும் பத்திரிகை களை விநியோகித்தும் வாழ்க்கையைத் தொடங்கிய வி.ஜி. பன்னீர்தாஸ் குடும்பம் - இன்று வளமாக புகழோங்கி வாழ்கிறது என்றால் விதிப் பலன் அல்ல - அதனை தோல்வியுறச் செய்யும் வகையில் அவர்கள் உழைத்த உழைப்பாகும் என்றார் கழகத் தலைவர்.

‘விடுதலை’ முக்காலணா, ஓரணா என்று விற்கப்பட்ட காலத்திலிருந்து, தந்தை பெரியாரோடும், ‘விடுதலை’ யோடும் தொடர்புடையது இந்தக் குடும்பம்.

வி.ஜி. பன்னீர்தாஸ் அவர்கள் அந்தக் காலத்திலேயே ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். தன் திருமண நாளையொட்டி 'விடுதலை’ வளர்ச்சிக்கு ஒரு ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். அந்த செய்தி ‘விடுதலை’யிலும் வெளிவந்தது. நன்றி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்கிற கடுகுள்ளத்தோடு இல்லாமல் பிறர் நலம் பேணும் பெற்றியர் என்று கூறும் அளவுக்குப் பெருமைக்குரியது இந்தக் குடும்பம்.

நூறு நாடுகளில் திருள்ளுவர் சிலையை நிறுவியுள் ளனர் என்றால், இது சாதாரணமானதுதானா?

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தம்நோய்போல் போற்றாக் கடை.   (குறள் 315)

மற்றவரின் துன்பத்தைத் தன் துன்பம்போல் உணர்ந்து அதைப் போக்க முற்படாவிட்டால் பெற்றி ருக்கும் அறிவினால் என்ன பயன்? ஒன்றுமில்லை என்று கூறிய ‘விடுதலை’ ஆசிரியர் அவர்கள் இந்தக் குறளின் இலக்கணம் வி.ஜி.பன்னீர்தாஸ்  குடும்பத்துக்கு மிகவும் பொருந்தும் என்றார்.

ஆங்கிலத்திலே இரண்டு சொற்கள் உண்டு ஒன்று Sympathy மற்றொன்று Empathy.

முதலாவது அனுதாபப்படுவது. இரண்டாவது துயரப்படுபவர்களைப் பார்த்து, அவர்களாகவே தங்களை ஆக்கிக் கொண்டு உதவி புரிவது - இதைத்தான் வள்ளுவர் அறிவினான் ஆகுவதுண்டோ என்றும் குறளில் கூறுகின்றார்.

எது உடைமை?

உடைமை என்றால் பொதுவாக நாம் என்ன நினைப்போம்? பொருள் உடைமை, சொத்து உடைமை என்றுதானே நினைப்போம்!

ஆனால், வள்ளுவர் கூறும் அந்தப் பத்து உடைமைகள் என்ன என்பதைக் கழகத் தலைவர் குறளிலிருந்து ஒரு பட்டியலைத் தெரிவித்தார்.

அன்புடைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பொறையுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, ஊக்கம் உடைமை, ஆள்வினை உடைமை, பண்புடைமை, நாண்உடைமை என்று பத்து உடைமைகளைத் திருவள்ளுவர் குறிப்பிடுவது பொருள் வயப்பட்ட சொத்தை  - உடைமை என்று குறிப்பிட வில்லை. மாறாக, பண்பினைத்தான் ,அன்பினைத்தான், குணநலன்களைத்தான், ஒழுகலாறுகளைத்தான், முயற்சியைத்தான், தன்னம்பிக்கையைத்தான் உடைமை என்று கூறுகிறார்.

திருவள்ளுவரைத் தவிர, வேறு எவரும் இந்தக் கண்ணோட்டத்தில் கருத்தினைக் கூறியவர் இல்லை என்று சொல்லலாம் என்று ஒரு புதிய கோணத்தில் திருவள்ளுவரைப் படம் பிடித்துக் காட்டினார் கழகத் தலைவர்.

திருவள்ளுவரை தந்தை பெரியார் மதித்ததற்குக் காரணம் - வள்ளுவர் அறிவுக்கு, சிந்தனைக்கு முன்னு ரிமை கொடுத்தார் என்பதால்தான்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள் 423).

யார் சொன்னாலும் ஏற்காதே - உன் அறிவைக் கொண்டு சிந்தித்து முடிவுக்கு வா என்றார் வள்ளுவர்.

தந்தை பெரியாரின் கருத்தும் அதே! ஒவ்வொரு கூட்டத்திலும் முடிக்கும்போது இதைச் சொல்லித்தான் முடிப்பார்.

தந்தை பெரியார் ஒரு கல்லூரியில் இப்படிச் சொல்லும்பொழுது ஒரு மாணவர் எழுந்து கேட்டார். ‘நீங்கள் சொல்லுவதையும் கேட்கக் கூடாதா?’ என்று கேட்டார். தந்தை பெரியார் பளிச்சென்று சொன்னார். “ஆமாம். நான் சொல்வதையும் நம்பாதே! நான் சொல்லுவது சரியென்றால் ஏற்றுக் கொள் - இல்லையென்றால் தள்ளிவிடு!" என்று சொன்னார்.

அதோடு திருவள்ளுவர் நிறுத்திக் கொள்ளவில்லை,

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.       (குறள் 355)

ஒரு பொருள் எந்தத் தன்மை உடையதாக இருந்தாலும் சரியே! அதன் உண்மைத் தன்மையை அறிந்திட வேண்டும் என்று பகுத்தறிவுக்கு முன்னுரிமை கொடுத்த காரணத்தால்தான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் திருக்குறளை மதித்தார்.

(‘குடிஅரசு’ இதழிலும் தலையங்கப் பகுதியிலே திருக்குறளைப் பயன்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது).

தந்தை பெரியார் கொள்கைகள் முக்கியமானது. ஜாதி ஒழிப்புக் கொள்கை - பிறப்பால் பேதம் பேசும் அமைப்பை முற்றிலும் ஒழிப்பதே தந்தை பெரியாரின் கொள்கை. வாழ்நாள் எல்லாம் ஜாதி ஒழிப்புக்காக ஓயாது பாடுபட்டவர் தந்தை பெரியார். அதையேதான் வள்ளுவரும் கூறு கிறார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்            (குறள் 972)

பிறப்பில் ஏற்றத் தாழ்வு கூடாது என்ற கோட்பாட்டில் திருவள்ளுவரும், தந்தை பெரியாரும் ஒத்த சிந்தனை உடையவர்களே!

ஆனால், திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரோ என்ன சொல்லுகிறார்?

Òதிருக்குறளில் அறமாவது - மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும் ஆம், அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படுவர்" என்கிறார் பரிமேலழகர்.

(மனுதர்மம் என்பது பிறப்பின் அடிப்படையில் ஜாதி ஏற்றத் தாழ்வைக் கற்பிப்பது. திருக்குறளோ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறப்பில் எல்லா உயிர்களும் சமமானவையே என்று கூறுகிறது. இந்த நிலையில் மனுதர்மத்தைத் திருக்குறளில் நுழைப்பது அடிப்படைப் பிழையே! ஆரியக் கருத்துக்குத் தலைகீழாக மாறுபட்டது திருக்குறள் என்று தந்தை பெரியார் கூறியதை இந்நேரத்தில் நினைவு கூர்வது பொருத்த மானது).

மனிதர்களுக்குள் எவ்வளவு கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒருவருக்கு மரணம் சம்பவித்தது என்றால் கசப்புகள் எல்லாம் பறந்தோடி விடும் - ஆனால் இந்தப் பாழாய்ப் போன ஜாதி உணர்வு - பிணத்தை எடுத்துச் செல்லும் பாதையில் கூடக் குறுக்கே நிற்கிறது. சுடுகாட்டில்கூட ஜாதி அடிப்படையில் தனித்தனி இடங்கள் என்பது எவ்வளவுக் கேவலம்!

ஆனால் வள்ளுவத்தில் இந்த ஜாதிக்கு இடமில்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் நிலை - பேதமில்லாப் பெருவாழ்வு என்றும், பேதமில்லா இடமே மேலான திருப்தியானது என்றும், தந்தை பெரியார் கூறும் கருத்துகளும் வள்ளுவமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே என்பதற்கான எடுத்துக்காட்டுகள்!

வள்ளுவத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்ட அண்ணாச்சி வி.ஜி. பன்னீர்தாஸ், முனைவர் வி.ஜி. சந்தோஷம், ராஜா குடும்பம் சிறப்புடன் வாழ்க - வளர்க!

வாழ்க பெரியார்! வாழ்க வள்ளுவர்! என்று கூறி முடித்தார் திராவிடர் கழகத் தலைவர்.

தொடக்கத்தில் முதுமுனைவர் வி.ஜி,சந்தோஷம் வரவேற்புரையாற்ற நன்றியினை ராஜா தாஸ் (வி.ஜி. பன்னீர்தாஸ் அவர்களின் மகன்) கூறிட காணொலி நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு பெற்றது.