தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 2 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 28, 2020

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 2

பெரியார் தலைமையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற ஊர்வலம்



தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!


சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...


- ஆசிரியர், 'விடுதலை'


 


1950 ஆகஸ்டு - 1951 மே காலத்திய “விடுதலை” யைப் படித்தால் இதற்காக நடந்த போராட்டங்களையும், இதற் கான வலுவான வாதங்களை அது விடாது சொல்லி வந்த தையும் அறிய முடிகிறது. சேலத்திலே ஊர்வலம், அண் ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவு, நெல்லைக் கல்லூரி மாணவர்கள் தீர்மானம், விருதைக் கல்லூரி ஆதரவு, காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி ஸ்டிரைக், குடந்தை சர்க்கார் கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் என்று இந்தப் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டது. இதற்கெல்லாம் முத் தாய்ப்பானது 1950 ஆகஸ்டு 14இல் சென்னையில் நடை பெற்ற எழுச்சிகரமான ஊர்வலம். அன்று “வகுப்புவாரி உரிமை நாள்’’ கடைப்பிடிக்கப்பட்டது.


20 ஆயிரம் பேர் பங்கு கொண்ட இந்த ஊர்வலத்தைப் பெரியார் தலைமை தாங்கி நடத்திச் சென்றார். இதுபற்றிய “விடுதலை”யின் (14-8-50) வர்ணனை- “எல்லா கட்சி களும் தங்கள் தங்கள் கட்சிக் கொடிகளுடன் கலந்து கொண்டனர். திராவிடர் கழகக் கொடி, முன்னேற்றக் கழகக் கொடி, தொழிலாளர்கள் கட்சிக்கொடி, கம்யூனிஸ்ட் கட்சிக் கொடி, தமிழ்க் கொடி, ஜஸ்டிஸ் கொடி ஆகிய கொடிகளுடன் உரிமை முழக்கமிட்டுக் கொண்டு சென்றனர்”. சகல எதிர்க்கட்சிகளின் ஆதரவும் இந்தப் போராட்டத்திற்கு இருந்தது. ஏன் காங்கிரசாரும் இதில் கலந்து கொண்டார்கள்.


ஊர்வலத்தின் முடிவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார் பேசிய பேச்சு இது. “ஊர்வலம் நடத்த வேண்டு மென்று நான் கேட்டுக் கொண்டேன். அதற்கு சகல கட்சி யாரும் ஒத்துக் கொண்டு இன்றைய தினம் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ்காரர்கள் பலரும் நம்முடைய ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஆனால் அவர்கள் தங்கள் கையிலே காங்கிரஸ் கொடி ஏந்தி வரவில்லை. இந்து மகாசபைக்காரர்கள் என்போர் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் வகுப்புவாரி உரிமைக்கு எதிரிகள். ஆனால், அவர்களும் அக்கொள்கைக்கு இருக்கும் செல்வாக்கைக் கண்டு அஞ்சியே பேச்சளவில் வகுப்புவாரிக் கொள்கையை ஒப்புக் கொள்ளத்தான் செய்கிறார்கள். காங்கிரஸ்காரர்களையம் சேர்த்துக் கொள்வது என்பதோடு மாத்திரமல்லாமல் கம்யூனிஸ்ட் முதலியவர்களையும் நம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். வகுப்புவாரி உரிமைக் கிளர்ச்சியில் அவர்களுக்கும் மாறுபட்ட அபிப்பிராயம் இருக்க முடியாது”


இந்து மகாசபை என்பது பிராமணிய சபை என்பதை யும், அவர்கள் இடஒதுக்கீட்டின் பரமவைரிகள் என்பதை யும், ஆனால் ஊரை ஏமாற்ற அவர்களும் அதை ஒப்புக் கொள்வதாய் நடிக்க வேண்டி வந்ததையும் பெரியார் பளிச்சென்று சொன்னது குறிக்கத்தக்கது. அன்று முதல் இன்றுவரை இது விஷயத்தில் இந்துத்துவாவாதிகள் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். இடஒதுக்கீட்டை முடிந்த அளவு தடுக்கப் பார்ப்பார்கள், முடியாத பட்சத்தில் தாங்களும் ஆதரிப்பதாக வாய்ப்பந்தல் போடுவார்கள்.


உச்சநீதிமன்றத் தீர்ப்பு


இத்தகைய எழுச்சிகரமான சூழலில்தான் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வதென்று சென்னை சர்க்கார் முடிவு செய்தது. எனினும், இயக்கத்தை தளர்த்தி விடவில்லை பெரியார். இது போன்ற விஷயங்களில் நீதிபதிகளை நம்புவதைவிட மக்களை நம்புவது உத்தமம் என்று அவர் தெளிவாக இருந்தார். 1950 டிசம்பர் 3இல் திருச்சியில் “வகுப்புவாரி உரிமைப்போர் மாநாடு” நடை பெற்றது. மாநாட்டின் தலைவர் எம்ரத்னசாமி. இவர் யாரென்றால் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் முன்னாள் தலைவர், வகுப்புவாரிப்படி உத்தியோகங்களைத் தர முடி யாததற்குக் காரணம் பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப் பட்டோரும் தொழில் நுட்பக் கல்வியைப் பெறாததே என்று சுட்டிக்காட்டினார். அதற்காக அந்தக் கல்வியிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்றார். அப்படித்தான் அங்கும் அது வந்தது. அதற்கு இப்போது ஆபத்து என்றதும் அவரும் பொங்கி எழுந்தார். “டில்லி மூலவர்களுக்கு எட்டுமாறு கிளர்ச்சி நடத்துங்கள்’’ என்றார் தனது தலைமை உரையில், பெரியாரோ “எல்லாப் பதவிகளிலும் நமக்குரிய விகிதப் பங்கை பெற்றே தீருவோம்“ என்று முரசறைந்தார்.


ஒவ்வொரு மாதம் 14ஆம் தேதியையும் வகுப்புரிமை நாளாகக் கடைப்பிடித்தது தி.க. “விடுதலை” ஏட்டில் அதுபற்றிய பெட்டிச் செய்தி வந்து கொண்டேயிருந்தது.


வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அந்த பிராமண மாணவர்களுக்காக அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் வாதாடினார். இந்த மனிதர் அரசியல் நிர்ணய சபையி லிருந்து அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் களில் ஒருவர் என்பதை அறிவோம். வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கு அங்கே பாதுகாப்புத் தரப்படவில்லை என்பதை அவர் நன்கு அறிவார். எனவே, வலுவாக வாதாடினார் வகுப்புரிமைக்கு எதிராக. இதற்கிடையில் முனிசிப் வேலைக்கு மனுச் செய்திருந்த பி. வெங்கட்ராமன் என்பவர் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருந்தார். அதையும் பரிசீலித்தது உச்ச நீதிமன்றம். முடிவில் குண்டைத் தூக்கிப் போட்டது. கல்வி, வேலைவாய்ப்பு இரண்டிலும் சென்னை மாகாணத்தின் வகுப்புரிமை அரசாணை செல்லாது என்று உற்சாகமாக அறிவித்தது.


1951 மார்ச் 27ஆம் தேதியிட்ட “விடுதலை” தந்த செய்தி இது - “கம்யூனல் ஜி.ஓ. இந்திய அரசியல் விதிக்கு முரணா னது. 1950 ஜனவரிக்கு முன் அது நியாயமானதாக இருக் கலாம். ஆனால் இன்று பொருந்தாது. சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அறிவிப்பு. அக்ரகாரத்தின் அமோகத் தீர்ப்பு”.


அதே நாளைய “விடுதலை”யின் தலையங்கம் இப்படிக் குமுறியது - “கொலை! கொலை! வகுப்புரிமை படுகொலை! படிப்பு - பதவி இரண்டிலும் அக்ரகாரம் உச்சநிலைக்கு போகப் போகிறது. மீண்டும் நம்மவர்கள் பழைய நிலைக்கே வரப்போகின்றனர். மத்திய சர்க்கார் பணிமனைகளைப் போலவே இனி மாகாண சர்க்கார் பணிமனைகளும் ஆகப் போகின்றன. சர்க்கார் ஊழியர், மாணவர் இந்த இரு சாராரும் இறுதித் துணிவுடன் இனி இறங்க வேண்டிய கட்டம் நெருங்கி விட்டது. நமது சந்ததிகளின் கதியை விரைவிலே முடிவு கட்டியாக வேண்டும்“


ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்தே மத்திய அரசில் வகுப்புவாரி இடஒதுக்கீடு இல்லை. அங்கே உயர் சாதியினரே - குறிப்பாக பிராமணர்களே - நிறைந்திருந் தார்கள். சென்னை மாகாணத்தில் தான் இட ஒதுக்கீடு காரணமாக பிராமணரல்லா தாரும் இடம் பெற்றிருந்தார் கள். இப்போது அதற்கும் ஆபத்து என்றால் டில்லியைப் போலவே சென்னையும் ஆகிப் போகும் என்று சரியா கவே எச்சரித்தது “விடுதலை”.


தி.க.களத்திலும் இறங்கியது. வகுப்புவாரி உரிமை பெற தமிழ் நாடெங்கும் மந்திரிகளுக்கு கருப்புக்கொடி பிடிக்கப் படும் என்றும், மந்திரிகளின் ராஜினாமா வற்புறுத்தப்படும் என்றும் ஏப்ரல் துவக்கத்தில் அறிவித்தது அதன் மத்திய நிர்வாகக் குழு. அன்றைய சென்னை மாகாண முதல்வர் குமாரசாமி ராஜாவுக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது. ஏப்ரல் 22ஆம் நாள் “காங்கிரஸ் ஒழிப்பு நாளாக” அனுஷ் டிக்கப்படும் என்று அறிக்கை விட்டார் பெரியார். மாவட் டம் தோறும் வகுப்புரிமை மாநாடு நடத்தப்படும் என்றும் கூறினார்.


இப்படி விடாமல் போராட்டங்கள் நடத்தியது மட்டு மல்லாது, வகுப்புவாரி இடஒதுக்கீட்டு உரிமையின் நியாயத்தையும் தனது பத்திரிகை மூலம் சொல்லி வந்தார் பெரியார். வகுப்புரிமையை அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் கோஷ்டியார் தங்களுக்குள்ள பத்திரிகை பலத் தைக் கொண்டு எதிர்த்து வந்தபோது “விடுதலை” (7.8.50) எழுதியது- “1941இல் தென்னிந்திய மக்கள் எண்ணிக்கை விபரம் வருமாறு: பிராமணர் 2.7%, ஆதிதிராவிடர் உள்ளிட்ட பிராமணரல்லாதார் 84%, முஸ்லிம்கள் 7.8%, கிறிஸ்தவர் 3.7%. இந்த வருஷம் இன்ஜினியரிங், வைத்தி யக் கல்லூரிகளில் கீழ்க்கண்டவாறு ஸ்தானங்கள் பகிர்ந்த ளிக்கப்பட்டன: பிராமணர் 20%, பிராமணரல்லாதார் 58%, கிறிஸ்தவர் 8%, முஸ்லிம் 7%, ஹரிஜன் 7%. வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமைப்படி ஹரிஜனங்களுக்கு இன்னும் அதிகமான சதவிகிதம் கிடைத்திருக்க வேண்டும். அதற் குத் தோதாக ஹரிஜன மாணவர்கள் இல்லையாதலால் காலி ஸ்தானங்களைப் பெரும்பாலும் பிராமணப் பிள்ளை களுக்கே தந்திருக்கிறார்கள்” வகுப்புவாரி உரிமை அரசாணை நடைமுறையில் இருந்த போதே இந்த கதி என்றால் . அதுவும் ஒழிந்தால் என்னாகும் என்று கேட்டது “விடுதலை” ஏடு. இதற்கு என்ன பதில் சொல்ல முடியும் பிராமணியவாதிகளால்?


- தொடரும்


No comments:

Post a Comment