தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 3 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 29, 2020

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 3

சமூக சீர்திருத்தத் துறையில் பெரியாரின் வெற்றிகள் பலப்பல



தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!


சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...


- ஆசிரியர், 'விடுதலை'


 


 


சென்னை மாகாணத்தில் வகுப்புரிமை ஆணை இருந்த போதே மிக உயர்ந்த பதவிகளில் பிராமணர்களே இருந்தார்கள். மக்கள் தொகையில் அவர்கள் வெறும் 2.7 சத வீதமே. ஆனால், “விடுதலை” (14-4-51) சுட்டிக் காட்டியது” சீப் இஞ்சினியர்கள் 3 பேர், மூவரும் பார்ப் பனர்கள். சூப்பிரடென்டிங் இஞ்சினியர்கள் 9 பேர், ஒன்பது பேரும் பார்ப்பனர்கள், எக்சிகியுடிவ் இஞ்சினியர் கள் 45 பேர், அதில் 33 பேர் பார்ப்பனர்கள்”. அரசு நிர் வாகத்தின் முக்கிய பதவிகளில் மட்டுமல்ல தொழில் நுட்பக் கல்வியிலும் பிராமணர்களே ஆளுகை செலுத் தினார்கள் என்பதையும் இது புரிய வைக்கிறது.


முன்சிப் பதவி கேட்டு ஒருவர் வழக்குத் தொடுத்தாரே அந்த நீதித்துறையில் கூட இப்போதும் உயர் மட்டத்தில் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தினார்கள். “விடுதலை” (174-51) எடுத்துக் காட்டியது - “சென்னை அய்கோர்ட் 14 ஜட்ஜுகளில் 7 பேர் பார்ப்பனர்கள்”


அரசியலமைப்புச் சட்டத்திற்கு திருத்தம்


இப்படி கருத்தளவிலும் செயலளவிலும் பெரியாரின் தி.க. ஒரு விடாப்பிடியான போராட்டத்தை நடத்திய காரணத்தால்தான் மாகாண, மத்திய அரசுகள் காரியத்தில் இறங்கின. 1951 ஏப்ரலில் மத்திய அரசுக்கு சென்னை சர்க்கார் எழுதிய கடிதத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டது. அதே மாதத்தில் வகுப்புவாரி அரசாணையை ஆதரித்தும், அதைக் காக்க ஆவன செய்ய வேண்டும் என்று கோரி யும் சென்னை மேலவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.


இதற்குப் பிறகுதான் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்ட நடவடிக்கையில் இறங்கினார் பிரதமர் நேரு.


“பிற்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு வழி செய்வது வகுப்புவாத நோக்கமாகாது, சட்ட நுணுக்கச் சிக்கலைத் தீர்க்கத்தான் திருத்த மசோதாக்கள் - பிரதமர் நேரு விளக்கம்“ என்கிற செய்தி 19.5.51 தேதியிட்ட “விடுதலை” யில் இடம் பெற்றது. தங்களது எண்ணிக்கைக்கு பல மடங்கு அதிகமாக கல்வி, வேலைவாய்ப்பில் உயர் சாதி யினர் இடம் பெறுவது வகுப்புவாதம் இல்லை, இந்த அநீதியைப் போக்க இடஒதுக்கீடு செய்வதுதான் வகுப்பு வாதம்! - இப்படித்தான் அன்று பிராமணியம் வாதம் செய் தது. இந்தப் பொல்லாத்தனத்தை பிராமணர் குலத்தில் பிறந்த பிரதமர் நேருவே நிராகரித்தது சமூக நீதி சக்திகளுக்கு - குறிப்பாக பெரியாருக்கு - கிடைத்த ஒரு மகத்தான வெற்றி.


சமூக சீர்திருத்தத் துறையில் பெரியாரின் வெற்றிகள் பலப்பல. அவற்றில் எல்லாம் தலையாயது இந்த அரசி யலமைப்புச் சட்டத் திருத்தத்தை இந்திய மக்களுக்குப் பெற்றுத் தந்தது. இது முழு தேசத்திற்கும் கிடைத்த பரிசு. இந்தத் திருத்தத்திற்குப் பிறகுதான் சென்னை மாகாண வகுப்புரிமை அரசாணை தப்பியது என்பது மட்டுமல்லாது பிற மாகாணங்களிலும் அத்தகைய ஆணைகள் தப்பின அல்லது அவை பிறப்பிக்கப்பட்டன. முடிவில் வி.பி.சிங் ஆட்சி காலத்தில் மத்திய அரசிலேயே அது அமுலானது. இதற்கெல்லாம் அச்சாரம் போட்டது இந்தத் திருத்தம்.


சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி 1952இல் நடந்த தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரசுக்குப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. நரியைப் பரியாக்கியது போலச் சிறுபான்மையைப் பெரும்பான்மையாக்க தந்திரசாலி ராஜாஜியை முதல்வ ராக்குவது என்று முடிவு செய்தார்கள். தேர்தலில் நிற்காது ஒதுங்கியிருந்த அவரை மேலவை உறுப்பினராக்கி முதல் வர் நாற்காலியில் உட்கார வைத்தார்கள். “கொல்லைப்புற வழியில் பதவியைப் பிடித்தவர்” எனும் அவப் பெயருக்கு ஆளானார் ராஜாஜி.


அதுமட்டுமல்ல, இந்தியாவின் மிக உயர்ந்த பதவி யாகிய கவர்னர் ஜெனரல் பதவியையே அனுபவித்தவர் ஒரு மாகாணத்தின் முதல்வர் பதவியில் உட்காரக் கூச்சமில்லாமல் சம்மதித்தார். பலித்தவரை லாபம் என நினைக்கிற பிராமணியவாதிகள் இதையெல்லாம் பார்ப்ப தில்லை. கலெக்டர் பதவியில் இருந்து பணி ஓய்வு பெற்ற வர் கர்ணம் வேலையை ஒப்புக் கொண்டது போல இருக் கிறது என்று நயம்படக் கேலி செய்தார் பெரியார். இது பற்றியெல்லாம் கவலைப்படாது பிறகட்சிகளிலிருந்து ஆட்களை இழுத்து சிறுபான்மையைப் பெரும்பான்மை யாக்கி கனஜோராய் ஆட்சி நடத்தி வந்தார் ராஜாஜி. எத்தகைய ஆட்சி?


ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம்


1953 கல்வியாண்டு துவங்குகிற வேளையில் ஒரு புதுவித ஆரம்பக் கல்வி பற்றிப் பேச ஆரம்பித்தார் ராஜாஜி. இதன்படி இதுவரை ஆறு மணி நேரமாக இருந்த பள்ளி நேரம் மூன்று மணி நேரமாகக் குறைக்கப்படும். மீதி மூன்று மணி நேரம் பிள்ளைகள் அப்பன் தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும். பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை இப்படிக் கூறியது - “சங்கீதம், உடற்பயிற்சி, இயற்கை, கைத்தொழில் முதலிய பாடங்களைச் சொல்லித் தர வேண்டியதில்லை. பள்ளியில் பயிலாத காலங்களில் காலையிலோ மாலையிலோ பிள்ளைகள் தங்கள் பெற் றோர் ஈடுபடும் பயிர்த் தொழிலிலோ அல்லது கைத் தொழிலிலோ ஈடுபட வேண்டும். எல்லாப் பெண்களும் தத்தம் வீட்டு வேலையிலோ, வீட்டார் செய்யும் வேலையிலோ ஈடுபட வேண்டும்”.


சுற்றறிக்கையின் இந்த வாசகங்கள் “விடுதலை” (5-5-1953) தலையங்கத்தில் உள்ளன. சென்னை மாகாண யாதவ மாணவர் மாநாட்டில் விவசாய மந்திரி டாக்டர் கன்னகவுடா பேசிய பேச்சும் அதில் மேற்கோள் காட்டப் பட்டுள்ளது. அது - “இளையவர்களாகிய நீங்கள் படிப்பு முடிந்தவுடன் உத்தியோக வேட்டையாடுவதைக் கைவிட்டு நவீன முறைப்படி பால் பண்ணைகள் நடத்தி அதிகமாகப் பால் உற்பத்தி செய்ய வேண்டும். கிராமப் பிள்ளைகள் காலையில் கல்வியும் மாலையில் அவரவர் குலத் தொழிலும் செய்ய வேண்டும் என்ற ராஜாஜி அவர் களின் புதிய கல்வித் திட்டத்தை நான் மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்”.


யாதவ மாணவர்களிடம் போய் பால்பண்ணை நடத்தச் சொன்னார் மந்திரி! உத்தியோக வேட்டையை உயர்சாதிக்காரர்கள் பார்த்துக் கொள்வார்கள்! சூத்திரர் களும் பஞ்சமர்களும் அவரவர் குலத்தொழிலைப் பார்த் தால்தான் சுதந்திர இந்தியாவிலும் உயர் சாதியினர் சொகு சான அரசாங்க உத்தியோகங்கள் பெறமுடியும் என்பதே பிராமணியத்தின் கணக்காக இருந்தது. இதற்கு “புதிய ஆரம்பக் கல்வித்திட்டம்“ என்பது ராஜாஜி அரசாங்கம் கொடுத்திருந்த பெயர். ஆனால், அது உண்மையில் குலக் கல்வித் திட்டமே என்பது மந்திரியின் பேச்சிலிருந்தே நிச்சயமானது. இப்படியாக அது அப்போதே “குலக்கல்வித் திட்டம்“ எனும் பொருத்தமான நாமகரணத்தைப் பெற்றது.


இந்தத் திட்டத்தால் மாணவர் சேர்க்கை இரு மடங் காகும், இது ஷிப்ட் சிஸ்டமே என்பது போல நியாயப் படுத்தினார் ராஜாஜி. பள்ளிகளை அதிகமாகத் துவக்கி, புதிய ஆசிரியர்களை நியமித்து ஆரம்பக் கல்வியைப் பரவலாக்குவதற்குப் பதிலாக இப்படியொரு குறுக்கு வழி காட்டினார். 5 வயதிலிருந்து 11 வயது வரையிலான ஆரம்பப் பள்ளி மாணவர்களின் படிப்பு நேரத்தைப் பாதியாகக் குறைத்தால் மீதி நேரத்தில் என்ன செய் வார்கள்? சின்னஞ்சிறுவர்கள் அவர்கள், விளையாட்டுப் புத்தி இருக்கும், விளையாட்டில்தான் அந்த நேரத்தைச் செலவழிப்பார்கள். இதற்கு ராஜாஜி காட்டிய மாற்று வழிதான் சிறுவர்கள் அவரவர் குலத் தொழிலைச் செய்ய வேண்டும் என்றது. இதைவிடக் கொடுமை  சிறுமிகள் வீட்டு வேலை செய்ய வேண்டும் என்றது. பெண்கள் என்றால் வீட்டு வேலைக்குத்தான் லாயக்கு எனும் பிராம ணியக் கோட்பாடு அரசாங்க உத்தரவாகவே வெளிப் பட்டது.


பிள்ளையார் உடைப்பு போராட்டம்


இப்படி ராஜாஜி அரசு குலக்கல்வித் திட்டத்தை அமுலாக்கும் வேலையில் இறங்கியிருந்த காலத்தில்தான் பெரியார் பிள்ளையார் உடைப்புப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தார். புத்தர் பிறந்த தினமாகிய மே 27அய் விடுமுறை நாளாக அப்போதுதான் சர்க்கார் அறிவித்திருந்தது. இந்த தினத்தை தனது போராட்டத்திற்குத் தேர்ந்தெடுத்தார் பெரியார். இது பற்றிய பெரியார் அறிக்கை இப்படிக் குமுறியது - “சூத்திரர்களுக்கு கல்வித் துறையில் ஒரு அளவுக்குப் பெரிய கிளர்ச்சி மீது சிறிது உரிமை இருந்தது. அதுவும் ஆச்சாரியார் ஆட்சியில் அழிக்கப்பட்டு விட்டது. . . அடிப்படைக் கல்வி என்னும் பேரால் தகப்பன் தொழிலை, பரம்பரைத் தொழிலைப் படிக்க வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது”. (விடுதலை 6-5-53)


ராஜாஜி அரசின் குலக்கல்வித் திட்ட அறிவிப்புப் பின்னணியில் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் உத்வேகம் பெற்றிருந்தது. இதற்கு அவர் தேர்ந்தெடுத்த தினமும் அர்த்தமுள்ளதாக இருந்தது. நாத்திகத்தை முன்னிறுத்தி அவர் பிள்ளையாரை உடைக்கவில்லை. புத்த மதத்திற்கு பிராமணிய மதம் மோசம் என்றே விஷயத்தை முன்வைத்தார். இந்த அளவுக்கு பெரியார் அம்பேத்கரோடு ஒன்றுபட்டார். “புத்த ஜெயந்தி கொண் டாட (கணபதி) பொம்மை தயாரித்துக் கொள்ளுங்கள்” என்றது “விடுதலை” ஏடு.


- தொடரும்


No comments:

Post a Comment