தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! 11 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 26, 2020

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! 11

தமிழர் என்பது மொழிப் பெயர். திராவிடர் என்பது இனப்பெயர்: பெரியார்



தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!


சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...


- ஆசிரியர், 'விடுதலை'


 


ராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் எரிக்க வேண்டும் என்று பெரியாரும் அண்ணாவும் பேசி வந்த போது இவர்கள் பொருமத் துவங்கினார்கள். ஆங்காங்கே வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. 1943 பிப்ரவரியில் அண்ணாவும், ரா.பி. சேதுப்பிள்ளையும் மோதினார்கள். மார்ச்சில் அண்ணா வோடு வாது செய்தவர் சோமசுந்தர பாரதியார். இதில் எல்லாம் இந்த இலக்கியங்களில் உள்ள பிராமணியச் சிந்தனைகள் தமிழர்களுக்குப் பரவலாக எடுத்துச் சொல்லப்பட்டன.


“பெரிய புராணம் படித்தவர் சாதிகள் பல இருப்பின் இருக்கட்டும், குலத்திற்கோர் தொழில் இருப்பின் அக் குலத் தொழிலே செய்வோம் எனக் கருதுவார். ஆனால், பக்தி செய்தால் எந்தக் குலமாக இருப்பினும் மேன்மைய டையலாம் என்று நினைக்க முடியுமே தவிர, சாதிபேதம் ஒழிய வேண்டும், வர்ணாஸ்ரமம் போக வேண்டும் என்ற பாடத்தை, உணர்ச்சியை பெரிய புராணத்தைப் படித்துப் பெற முடியாது” - என்று மிக நுணுக்கமான விஷயத்தை எல்லாம் இந்த விவாத அரங்குகளில் எடுத்துச் சொன்னார் அண்ணா . இதே போன்ற கண்ணோட்டத்தையே இந்த பக்த சிரோண்மனிகளின் வரலாறு பற்றி அம்பேத்கரும் கொண்டிருந்தார் என்பதைக் கண்டு வந்தோம்.


“திராவிடர் கழகம்” பிறந்தது


இதே ஆண்டு அக்டோபரில் “குடி அரசில்” எழுதும் போது பெரியார் கேட்டார் - “பெரிய புராணச் செய்திகள் எல்லாம் உண்மையாக நடந்தவைகள் என்றால், ஒரு ஆயிரம் வருஷங்களுக்குள்ளாகக் கடவுள்கள் நேரில் வந்து காட்சி கொடுத்ததாக அர்த்தமாகவில்லையா?” இது முக்கியமான கேள்வி. ஒரு ஆயிரம் வருஷத்திற்குள் கடவுள் காட்சியளித்தார் என்றால், அவர் ஏன் இப்போது வரக்கூடாது என்கிற கேள்வி இதில் தொக்கி நிற்கிறது. இப்படியெல்லாம் பகுத்தறிவுச் சிந்தனையை வளர்த்தார். பகுத்தறிவுவாதம் என்பது பிராமணியத்திற்கு நேரடியான எதிர்ச்சொல் ஆகும்.


1944 ஆகஸ்டில் சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு நடந்தது. இங்குதான் நீதிக்கட்சியின் பெயர் - தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் பெயர் - “திராவிடர் கழகம்“ என்று மாற்றப் பட்டது. இது வெறும் பெயர் மாற்றம் அல்ல, பழைய நீதிக் கட்சித் தலைவர்களை ஓரங்கட்டிப் பெரியாரின் தலைமையை உறுதிசெய்திட்ட தீர்மானம். “அண்ணாதுரை தீர்மானம்” எனப் புகழ்பெற்ற அதில் சர்க்காரால் நியமனம் செய்யப் பட்ட பதவிகளில் இருக்கும் நீதிக்கட்சிக்காரர்கள் அதிலிருந்து ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும், இனிமேல் தேர்தலில் நிற்கக் கூடாது என்றும் கூறப்பட்டிருந்தது. அதாவது பெரியாரின் நெடுநாளைய ஆசை - கருத்தியல் தளத்தில் மட்டும் இயங்குகிற, தேர்தல் அரசியலில் ஈடுபடாத ஆசை - இப்போது நிறைவேறியது. ஓர் அரசியல் கட்சியை ஜீரணித்து விட்டார். இப்போது நீதிக்கட்சி பெரியாரின் கட்சியாகிவிட்டது. ஆனால் செரிமானம் ஆனதில் பிரச்சனை இருந்தது. அரசியல் கட்சியை சமூக சீர்திருத்த இயக்கமாக்க முயன்றதில் இன்னும் உள்ளே கடமுடா சத்தம் கேட்டது. அரசியலில் இறங்குகிற ஆசை இவரது இயக்கத்தவர்களுக்கே இருந்தது. இதுவே பின்னாளில் பெரும் பிளவுக்கு இட்டுச் சென்றது.


இப்போது பெயர் பிரச்சனை இருந்தது. பெரியாரே இது பற்றி இப்படிக் கூறியிருக்கிறார் - “தமிழர் என்பது மொழிப் பெயர். திராவிடர் என்பது இனப்பெயர். தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்ற தலைப்பில் கூட முடியும். ஆனால், தமிழ் பேசும் அத்தனை பேரும் திராவிடர் ஆகிவிட முடியாது. இனத்தால் திராவிடனான ஒருவன் எந்தச் சமயத்தைச் சார்ந்தவனாயிருந்தாலும், எந்த மொழி பேசுபவனாயிரு ந்தாலும் அவன் திராவிடர் என்ற தலைப்பில்தான் சேருவான். ‘தமிழர்’ என்றால் பார்ப்பானும் தன்னைத் தமிழன் என்று கூறிக் கொண்டு நம்முடன் கலந்து கொண்டு மேலும் நம்மைக் கெடுக்கப் பார்ப்பான். திராவிடர் என்றால் எந்தப் பார்ப்பானும் தன்னைத் திராவிடன் என்று கூறிக் கொண்டு நம்முடன் சேர மற்படமாட்டான்.” விஷயம் இதுதான். “பிராமண லாதார்” என்பது எதிர்மறைச் சொல்லாக இருந்தது. இதற்கு மாற்றாக ஓர் உடன்பாட்டுச் சொல்லைத் தேடினார். அதற்குத்தான் “திராவிடர்” என்பதைத் தேர்வு செய்தார். ஆக, அவரது இயக்கம் பிராமணியத்திற்கு எதிரான பிராமணரல் லாதார் இயக்கமே, அதுவும் குடிமைச் சமுதாயத்தில் மட்டும் இயங்குகிற இயக்கமே. ஆனால், திராவிட நாடு எனும் தனிநாடு கேட்கிற அரசியல் ஆசை யும் இருந்தது. இந்த வினோதமான முரணோடு அவரின் இயக்கம் நடந்து கொண்டிருந்தது. அது இப்போது திரா விடர் இயக்கம் ஆனது.


இதே 1944ல் “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்“ எனும் அருமையான நாடகம் எழுதினார் அண்ணா . சிவாஜியின் வாழ்வை நாம் விரிவாகக் கண்டு வந்திருக்கிறோம். அதிலே பிராமணியவாதிகள் அவரைச் ஷத்திரியராக ஏற்க மறுத்ததையும், பிறகு காகபட்டர் அப்படி ஏற்றுப் பட்டம் சூட்டியதையும், அதில் பெரும் செல்வத்தை பிராமண புரோகிதர்கள் அடைந்ததையும் கண்டோம். இதை மையமாக வைத்து பிராமணியத்தைக் கடுமையாக விமர்சித்து அண்ணா எழுதிய நாடகம் அது. இதிலே சிவாஜியாக நடித்துத்தான் வி.சி. கணேசன் பெரியார் வாயால் “சிவாஜி கணேசன்” என அழைக்கப்பட்டு அந்தப் பெயரைப் பெற்றார். பிராமணியத்தை எதிர்த்து இதுவரைப் பத்திரிகைகளிலும் மேடையிலும் முழங்கி வந்தவர்கள் நாடகம் எனும் வலுவான கலைச் சாதனத்தின் மூலமும் இயங்கத் தலைப்பட்டார்கள். இது இவர்களை விரைவில் திரைப்பட உலகத்திற்கும் அழைத்துச் சென்றது. பிராமணியத்திற்கு எதிரான ஒரு விரிவான கலைப்பிரச்சாரம் தமிழகத்தில் எழத் துவங்கியது.


துன்ப நாளா? இன்ப நாளா?


அடுத்த சில ஆண்டுகளில் இந்திய அரசியலில் படு வேகமாகக் காட்சிகள் மாறின. இரண்டாவது உலக யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து கிளம்ப மூட்டை முடிச்சுகளைக் கட்ட ஆரம்பித்தார்கள் பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் என்பதை அறிவோம். அவர்களுக்குப் பிரதான பிரச்சனையாக இருந்தது இந்து-முஸ்லிம் விவகாரமே, காங்கிரஸ் - லீக் மோதலே. அந்தச் சிக்கலில் இருந்தவர்கள் திராவிடர் கழகத்தின் திராவிட நாடு கோரிக்கையைக் கண்டு கொள்ளவில்லை. திராவிட நாடு கிடைக்காமலேயே இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது.


காங்கிரஸ் ஆட்சி பிராமணிய ஆட்சியாகவே இருக் கும் என்று எதிர்பார்த்தார் பெரியார். இதே கணிப்பு அண் ணாவுக்கும் இருந்திருக்கலாம். அதற்காக வாழ்க்கை யதார்த்தங்களைப் புறந்தள்ள அவர் தயாராயில்லை. வெள்ளைக்கார்கள் வெளியேறும்போது அதற்காகக் கண்ணீர்விடத் தேவையில்லை, அப்படிச் செய்வது இயக்கத்திற்குத் தேவையற்ற கெட்ட பெயரைத் தேடித் தரும் என்று அவர் நினைத்தார். பெரியாரோ காங்கிரஸ் ஆட்சியை நஞ்சாய் வெறுத்தார். ஆகவே சுதந்திரம் என்பதையே சந்தேகக் கண்கொண்டு பார்த்தார். 1947 ஆகஸ்டு 15ம் தேதியைத் “துன்ப நாள்” என்று வருணித் தார், “சுதந்திரத் திருநாள் என்னும் ஆரியர் - பனியா ஏமாற்றுத் திருவிழாவில் நாம் கலந்து கொள்ளவில்லை என்கிறோம்” என்றார்.


இதற்கு மாறான நிலை எடுத்தார் அண்ணா. அப் போது திராவிடர் கழகத்திற்கு அவர்தான் பொதுச் செயலாளர். தலைவர் நிலைப்பாட்டிற்கு மாறான ஒரு நிலைபாட்டுக்கு வந்திருந்தார் பொதுச் செயலாளர். அதற்கு முக்கிய காரணம் திராவிடர் கழகத்தை ஒரு விரிந்த வெகுமக்கள் கட்சியாக மாற்றி தேர்தலில் பங்கு பெற்று அதன் பலத்தைக் காட்ட வேண்டும் என்கிற ஆசை அவருக்கு அப்போதே வந்திருந்தது. அதற்கு இந்தத் “துன்ப நாள் ” நிலைபாடு ஒத்துவராது என்கிற தீர்க்கமான முடிவுக்கு வந்திருந்தார். ஆகவே மாற்று அறிக்கை விடுத்தார். அதில் இந்த நாளை இன்பநாள் என்றார். சுதேசிகளின் கையில் ஆட்சி வந்துவிட்டதால் இனி சமூகப் பிரச்சனைகளுக்கு “வாய்தா” போட முடியாது என்று நயம்பட உரைத்தார். அப்படியும் போடப் பார்த்தால் “குடியரசு முறைப்படி அவர்களை ஆளும் இடத்திலிருந்து விரட்டவும் மக்களுக்கு உரிமையும் வழி யும் பிறக்கிறது” என்று தனது எதிர்காலத் திட்டத்தையும் - அரசியல் வழிபாட்டையும் - கோடி காட்டினார்.


பிராமணியத்திற்கு எதிராகச் சவால் விட்டு எழுந்த இயக்கத்திற்கு ஒரு பிளவுக்கான வித்து தெளிவாக விழுந் தது. இந்தப் பிளவு பிராமணியத்திற்கு மேலும் சிரமத்தைத் தந்ததா அல்லது சவுகரியத்தைத் தந்ததா என்பது எதிர் கால வரலாறு. இப்போதைக்கு பிராமணியம் திராவிட இயக்கத்தை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு புதிதாகக் கிடைத்த அரசியல் சுதந்திரத்தை அனுபவிக்க ஓடியது..


- முற்றும்


No comments:

Post a Comment