'விஜயபாரதத்துக்கு' ராஜாஜியின் பதில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 27, 2020

'விஜயபாரதத்துக்கு' ராஜாஜியின் பதில்

* மின்சாரம்


கேள்வி: ஸ்ரீராமர் சீதையை தீக்குளிக்கச் சொன்னது சரிதானா?


பதில்: சீதை உத்தமி என்று ராமருக்குத் தெரியும். ஆனால் உலகம் புரிந்து கொள்வதற்காக தீக் குளிக்கச் சொன்னார். இந்நிகழ்வு மூலம் சீதையின் புகழ் ஓங்கியது.


- 'விஜயபாரதம்' ஆர்.எஸ்.எஸ். இதழ் 29.5.2020


ஊரார் சொல்லுகிறபடி எல்லாம் நடப்பதற்கு இராமன் சாதாரண மனிதன்தானா? அப்பனும், மகனும் கழுதையைச் சந்தைக்கு ஓட்டிச் சென்ற போது ஊரார் பேசியபடியெல்லாம் நடந்ததால் கடைசியில் கழுதையின் கெதி என்னாயிற்று என்பதுதான் நினைவிற்கு வருகிறது.


இதை எல்லாம்விட, இன்னொரு முக்கிய மானவர் இதுகுறித்து தெரிவித்த கருத்தை நினை வூட்டினால் 'விஜயபாரதங்களுக்கு' ரொம்ப நன்னா உச்சிக் (குடுமி) குளிர்ந்திடும் அல்லவா! அதை இங்கே எடுத்துக்காட்டினால் பேஷா இருக்குமே இல்லையா?


அந்த முக்கியமான மனுஷன் வேறு யாரு மல்லர். சாட்சாத் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி). 'சக்ரவர்த்தி திருமகன்'  என்ற சிறீராமன் காப்பியத்தை உருகி உருகி எழுதியவர் ஆயிற்றே! இதோ ராஜாஜி எழுதுகிறார் கேண்மின்!


"உத்தர ராமசரிதம்" என்னும் தலைப்பில், சமஸ் கிருதத்தில் பவபூதி என்பவர் எழுதி, க.சந்தானம் அய்யங்கார் தமிழில் மொழி பெயர்த்து எழுதிய நூலை சென்னை அலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


அந்நூலுக்கு ராஜாஜி முன்னுரை ஒன்று எழுதி யுள்ளார். இந்தக் கருத்துக்களைப் படிப்பவர்களுக்கு இராஜாஜியா இப்படி எழுதியுள்ளார்? இருக்காதே! நம்ப முடியாது என்கிறீர்களா? உண்மை தான், இவை இராஜாஜி எழுதியவை. அது இதோ!


"நாரதர் சொல்லி வால்மீகி இயற்றினார்; இதில் ஒரு விதத் தவறும் இருக்கமுடியாது; ஓர் எழுத்து விடாமல் எல்லாம் ஒப்புக் கொண்டே தீர வேண்டும் என்பதாயிருந்தால் எனக்கு ஒன்றும் சொல்ல இட மில்லை. அப்படி யில்லை; உனக்குத் தோன்றியதைத் தோன்றியவாறு சொல் லலாம்; குற்றமில்லை என்று பெரியோர் இடம் கொடுத்தால் ராமாயண உத்தர காண்டத்தைப் பற்றிச் சொல்ல விரும்பு கிறேன்.


நானும் எவ்வளவோ முயற்சி செய்து தான் பார்த்தேன் - சிறீ ராமன் உலகத்துக்கு வழிகாட்ட அவதரித்த கடவுள் - சீதையை அரும்பாடுபட்டு இலங்கையிலிருந்து மீட்டுக் கொண்டபின் ஊராரின் வம்புப் பேச்சைக் கேட்டுக் காட்டுக்கு அனுப்பி விட்டான் என்கிற கொடூரக்கதை என் மனசுக்குச் சமாதானப்படுத்திக் கொள்ளவே முடிய வில்லை. அன்புடனும், பக்தியுடனும் முயற்சி செய்திருக் கிறேன்.


பெரியோர்கள் என்னை 'நாஸ்திகன் - சூனா மானாக்காரன்' என்று சொல்லக் கூடாது. உண்மையில் இந்தக் கதையைச் சகிக்க என்னால் முடியவில்லை. நாஸ்திகனாக இருந்தால் ஒரு வேளை சகித்திருப்பேன். ராமாயணத்தில் முதல் அத்தியாயத்தில் கதை முழுவதும் சொல்லப் படுகிறது. அதில் இந்த அனர்த்த விஷயம் சொல் லப்பட வில்லை.


நாடு நகரம் முழுவதும் அறிவு விவேகிகளும் சீலமும் நிறைந்த ஜனங்கள் எல்லோரும் தர்மாத் மாக்கள், வெகு சாஸ்திரங்களை அறிந்தவர்கள் என்றும், அற்ப குணமுள்ளவன் - வித்தை பெறாதவன் - நாஸ்திகன், துஷ்டன் மருந்துக்கும் கூட ஒருவன் அகப்படமாட்டான். என்றெல்லாம் ஓயாமல் பாடப்பட்டிருக்கிறது.


இப்பேர்ப்பட்ட ஜனங்கள், சீதை ஊருக்குத் திரும்பி வந்ததும், பான்மை யிழந்து இவ்வளவு கேவலமாகப் போனது எப்படி? சிறீராமன் அரசாண்டு வந்த அயோத்தியா நகரம் நம் கலிகால சென்னைப்பட்டணம், திருச்சிராப்பள்ளியை விடக்  கேடுகெட்ட நிலைக்கு எவ்வாறு வந்துவிட்டது? இந்தக் கலிகாலத்தில் நம்மைப் போன்ற, தாழ்ந்த மதியும் சீர் கெட்ட பண்பும் கொண்டவர் களும் கூடச் சொல்லத் துணியாத பேச்சை, அயோத் தியாவாசிகள், சிறீராமனுடைய பிரிய தேவியைப் பற்றி பேசினார்கள் என்றால் எவ்வாறு ஒப்புக் கொள்வது?


அப்படி யாராவது பேசினாலும் ராமன் ஏன் காதில் போட்டுக் கொண்டான்? அந்தப் பாமர ஜனங்கள் கூட சீதையைக் காட்டுக்கு அனுப்பச் சொல்லவில்லையே. ஏன் ஒரு விசாரணையுமின்றி அக்கிரமமாக இவ்வாறு ராமன் செய்யத் துணிந்தான்? இதை எவ்விதத்திலும் ஒப்புக் கொள்ள முடியாது. இதனால் தான் நன்னெறிப் பயில்வதற்கு இந்தக் கதை உதவாது என்று நம் முடைய பெரியோர் இந்தக் கட்டத்தைப் பிரயோகத் தினின்றும் தள்ளிவிட்டார்கள். ஆழ்வார்களும் இதை எடுத்துப் பாடாமல் நீக்கி விட்டார்கள்.


இம்மாதிரியான ஒரு பெரும் அநீதியை சிறீ ராமச்சந்திரன் தன் தேவிக்குச் செய்ததாக எப்படியோ ஒரு கதை கர்ண பரம்பரையாகச் சொல்லிவந்து - அந்தக் காலத்திலும் கூட வால்மீகி முனிவரையும் தடுமாறச் செய்தி ருக்க வேண்டும். புண்ணிய கதையாகிய ராமாயணத்தைப் பாட உட்கார்ந்த போதே இந்தப் பொல்லாத அய்தீகத்தை என்ன செய்வது என்று அவர் யோசித்திருக்க வேண்டும். அதற்காகவே முனிவர் யுத்த காண் டத்தின் முடிவில், வேண்டாத ஓர் அக்கினிப் பரிட் சையை அமைத்து, அத்துடன் அந்த ஆபத்தும் ஒழியும் என்று எண்ணினார் போல் தோன்றுகிறது. ஆனாலும் அவர் எண்ணம் முடிவு பெறவில்லை. உத்தரகாண்டம் யாரோ எழுதி ராமாயணத்துடன் சேர்ந்தே போயிற்று, ஊர் வம்புக்குப் பயந்து ராமன் சீதையை காட்டுக்கு அனுப்பியது ராவணன் செய்த செயலை விடப் பெரும் பாவச்செயல்.


ராவணன் அபாயங்களைப் பொருட்படுத்தாமல் இந்தக் கெட்ட காரியத்தில் இறங்கி ஜடாயுவோடு போர் புரிந்து அவனை வென்று சீதையை இலங் கைக்குத் தூக்கிப் போனான். துஷ்டத்தனமானாலும் தைரியம் கலந்த செயல். ராவணன் காமவெறி கொண்டவ னானாலும் இலங்கையில் தேவியை பலாத் காரம் செய்ய எண்ணம் கொள்ளவில்லை. அசோக வனத்தில் வைத்து அவள் அன்பைப் பெற முயன்று, பலநாட்கள் தன் வெறியை அடக்கியே வந்தான்; அதற்காக உயிரையும் நீத்தான்.


ஆனால் இந்த உத்தர ராம சரித்திரத்தில் வெறும் ஊர் வம்பைக் கேட்டு ராமன், சீதையை நீதி, உண்மை எதையும் கருதாமல் காட்டுக்கு அனுப்பி விட்டான் என்று சொல் லப்படுகிறது. உண்மையில் இது நடந்திருந் தால் இறந்த ஜடாயு மீண்டும் உயிர் கொண்டு எழுந்து ராமனுக்கு நல்ல புத்தி புகட்டியிருப்பான்! மகனே இது தகாது. இது பயங் கொள்ளித்தனம். இது தர்மத்தைக் கொன்ற தாகும் என்று சொல்லி தடுத்திருப்பான்... உத்தர காண் டத்தை விட்டு விட இஷ்டமில்லாமற் போனால், ராமாயண மாலையில் ரத்னங்களாக ஜொலிக்கும் வீர புருஷர் களையும் அவர்கள் பண்புகளையும் வெறுங்கதையென்று தள்ளிவிட வேண்டியதாகும்.


ஆயினும் பவபூதி என்ற பேராசிரியர் பொருத்த மற்ற இந்தக் கதையை அழகிய நாடகமாக சமஸ் கிருதத்தில் இயற்றினான்; அது மிகவும் புகழ் பெற்ற நூல், நண்பர் சந்தானம் என்னுடன் சிறையிலிருந்த காலத்தில் அதைத் தமிழில் எழுதி முடித்தார். மிகவும் சாமர்த்தியமாக வட மொழி நூலின் அழகு குறையாதபடி மொழி பெயர்த்தி ருக்கிறார்."


இவ்வாறு ராஜாஜி எழுதியுள்ளார்.


சீதையைத் தண்டித்தது குறித்து ராஜாஜி யாலேயே சமாதானம் அடைய முடியவில்லை என்கிற போது இந்த 'விஜயபாரதங்கள்' எந்த மூலை?


ராமன் செய்தது பயங்கொள்ளித்தனம், தர்மத்தைக் கொன்ற செயல் - சொல்லுவது ராஜாஜி.


கடைசிவரிதான் முக்கியம். "வெறுங்கதை" என்று தள்ளிவிட வேண்டும். இதுவும் ராஜாஜி எழுதியுள்ளதுதான்.... என்ன  விஜயபாரதமே தலையைச் சுற்றுகிறதா?


No comments:

Post a Comment