தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 1 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 27, 2020

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 1

வகுப்புவாரி இடஒதுக்கீடு ஆணைக்கு ஆபத்து



தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!


சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...


- ஆசிரியர், 'விடுதலை'


 


சமூக சீர்திருத்தம் - பெரியார்


முஸ்லிம் லீக் கேட்ட பாகிஸ்தான் கிடைத்து, பெரியார் கேட்ட திராவிடஸ்தான் கிடைக்காத நிலையில் இந்துஸ் தானுக்கு சுதந்திரம் கிடைத்தது. அன்றைய சென்னை மாகாணத்தை “திராவிட நாடு” என அழைத்து பிரிவினை கேட்டார் பெரியார். அது காரிய சாத்தியமற்றதாக இருந்தது. மாகாணத்தில் தமிழர், தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள் எனும் மொழிவழிப்பட்ட தேசிய இன உணர்வுதான் இருந்ததேயொழிய “திராவிட இனம்“ எனும் வழிப்பட்ட உணர்வு இல்லை. பிராமணரல்லா தாரைத்தான் திராவிடர்கள் என அழைத்து வந்தார் பெரியார். அப்படிப் பார்த்தால் அவர்கள் இந்தியா முழுக்க இருந்தார்கள். அவர்களுக்காகச் சென்னை மாகாணத்தை மட்டும் தனி நாடாகக் கேட்டது அர்த்தமற்றதாக இருந்தது. பிராமணியத்தை எதிர்க்க இந்தியா முழுவதிலுமிருந்த பிராமணரல்லாதாரைத் திரட்ட முனைவதும், அதற்கு அச்சாரமாகச் சென்னை மாகாணத்தில் அந்தப் பணியைச் செய்வதுமே காலப் பொருத்தமுடையதாக இருந்தது. இந்திய ஒற்றுமையோ, இந்திய சுதந்திரமோ இதற்கு இடையூறாக இல்லை. பெரியாரோ இந்திய சுதந்திரத்தை வரவேற்கவில்லை .


திராவிடர் கழகத்தின் நிர்வாகக்குழுத் தலைவர் தி.பொ. வேதாசலம் 1947 ஜூலை 25 அன்று வெளியிட்ட அறிக்கையில் வரவிருக்கிற சுதந்திர நாள் “திராவிட மக்களுக்கு ஒரு துன்ப நாளாகும்“ என்று குறிப்பிட்டார். ஆகஸ்டு 6 அன்று பெரியாரே வெளியிட்ட அறிக்கையில் “சுதந்திரத் திருநாள் என்னும் ஆரியர் - பனியா ஏமாற்றுத் திருவிழாவில் நாம் கலந்து கொள்ளவில்லை என்கிறோம்“ என்றார்.


இது கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த அண்ணாவுக்கு ஏற்புடையதாக இல்லை. பெரியாரின் நிலைபாட்டை எதிர்த்து ஆகஸ்டு 10 அன்று விரிவான அறிக்கை வெளியிட்டார். காங்கிரசுக்கு மாற்றான ஓர் அரசியல் கட்சியாக தி.க.வை மாற்ற வேண்டும் என்கிற நினைப்பில் இருந்தார் அண்ணா . சமூகத் தளத்திலும், அறிவுத் தளத்திலும் இயங்குவதையே பெரியார் பெரிதும் நம்பியிருக்க, இவரோ அரசியல் தளத்திற்கு இதைக் கொண்டு செல்ல விரும்பினார், அதற்கான சில சமரசங் களுக்கும் தயாராக இருந்தார். தலைவருக்கும் பொதுச் செயலாளருக்கும் இடையிலான இந்த அடிப்படை முரண்பாடே 1949இல் தி.க. உடைந்து திராவிட முன் னேற்றக் கழகம் உதயமாவதற்கு காரணமாய் அமைந்தது. பெரியார்- மணியம்மை திருமணத்தை அதற்கு மிக லாவகமாகப் பயன்படுத்திக் கொண்டார் அண்ணா.


1949 செப்டம்பரில் தி.மு.க. பிறந்த போது தாய்க் கழ கத்திற்கும் இதற்கும் இடையே புகைச்சலும், கோபதாபங் களும் இருந்தன. 1967இல் தி.மு.க சென்னை மாநில ஆட்சியைப் பிடிக்கும் வரை இந்த நிலை தொடர்ந்தது. ஆர்.எஸ்.எஸ். கூட சமூகத் தளத்தில் இயங்குவதையே பெரிதும் நம்பியிருந்தது. ஆனால், அரசியல் தளத்தைப் புறக்கணிக்கவில்லை . 1957ல் ஜனசங்கம் என்கிற கட்சியை உருவாக்கி அதைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டதை அறிவோம். அத்தகையதொரு உத்தியை ஏனோ பெரியார் கடைப்பிடிக்கவில்லை.


காங்கிரசை எதிர்த்து நீதிக்கட்சியைப் பயன்படுத்தி யவர், பின்னர் அதை திராவிடர் கழகம் என்று மாற்றியவர் அதை சமூக இயக்கமாக மட்டுமே நடத்த முயன்றதில் உள்ளார்ந்த முரண் இருந்தது. இதைச் சுமூகமாகத் தீர்த்திருக்கலாம்ஆர்.எஸ்.எஸ். கடைப்பிடித்த அந்த உத்தியில். அதைச் செய்யத் தவறிய வேளையில் அண்ணா அறுவைச் சிகிச்சை மூலம் அதைச் செய்ய வேண்டி வந்தது. அதனால் ஏற்பட்ட கோபதாபம் வெகு காலம் நீடித்தது என்பது மட்டுமல்ல, தி.மு.க. வானது தி.க.வின் கட்டுப்பாட்டிற்குள் வராமலே போனது.


ஆக, சென்னை மாகாணத்தில் தி.க என்றும், தி.மு.க என்றும் இரு அமைப்புகள் இயங்கத் துவங்கின. ஆரம்பத் தில் தி.மு.க.வும் தேர்தலில் பங்கேற்கப் போவதில்லை என்று சொல்லிக் கொண்டது. திராவிட இயக்கம் என்ற பெயரில் பிராமணியத்தின் மீது இருமுனைத் தாக்குதல் பிறந்தது.


வகுப்புவாரி இடஒதுக்கீடு ஆணைக்கு ஆபத்து


இந்தக் கட்டத்தில்தான் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்தது. ஜாதி எதிர்ப்பு நோக்கில் அங்கு எழுதி வைக்கப்பட்ட சில சரத்துகளை சென்னை மாகா ணத்திலிருந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராகப் பயன்படுத்த முனைந்தார்கள் பிராமணியவாதிகள். கல்வி நிறுவனங் களிலும், அரசுப் பணிகளிலும் சாதி வேறுபாடின்றி சேர்க்கப்படுவார்கள் என இருப்பதைச் சுட்டிக்காட்டி வகுப்பு வாரி இட ஒதுக்கீடு ஆணை அரசியலமைப்புச் சட்டப்படி விரோதமானது என்று புறப்பட்டார்கள்.


சென்னை மாகாணத்தில் மருத்துவக் கல்லூரியில் 330 இடங்களும், பொறியியல் கல்லூரியில் 395 இடங்களும் இருந்தன. அன்று இந்தப் படிப்புகள் எவ்வளவு அரிதா னவை என்பது விளங்கும். இவை இங்கிருந்த வகுப்புவாரி அரசாணைக்கு ஏற்ப ஒதுக்கப்பட்டன. இதனால் தங்க ளுக்கு இடம் கிடைக்காமல் போனது என்று மருத்துவப் படிப்புக்கு மனுப்போட்ட செண்பகம் துரைச்சாமி, பொறியியல் படிப்புக்கு மனுப்போட்ட சி.ஆர். சீனிவாசன் என்கிற பிராமண மாணவர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குப் போட்டார்கள்.


இதன் மீது 1950 ஜூலையில் தீர்ப்புத் தந்த நீதிபதிகள் “பிரஸ்தாப வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவு வகுப்பு துவேஷத்தை வளர்க்கக் கூடியதாய் இருக்கிறது. தனிப்பட்டோரின் உரிமைகளில் சர்க்கார் தலையிட்டு ஏதாவது செய்யாமலிருக்க வேண்டும் என்றே அரசியல மைப்பை வகுத்தவர்கள் அதற்குப் போதுமான பாதுகாப்பு அளித்திருக்கிறார்கள்” என்று கூறி வகுப்புவாரி ஆணையை ரத்து செய்துவிட்டார்கள். இங்கு காலங்கால மாய் சாதிய ஒடுக்குமுறை நிலவுவது வகுப்பு துவேஷம் இல்லையாம், அதை முறியடிக்க சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தந்ததுதான் வகுப்பு துவேஷத்தை வளர்க்கு மாம்! இப்படிக் கோணல் புத்தியோடு தீர்ப்புத் தந்தார்கள், அப்படித் தரும் வகையில்தான் அரசியலமைப்புச் சட்டமும் இருந்தது.


இந்தத் தீர்ப்பு கண்டு பெரியார் கிளர்ந்தெழுந்தார். பிளவால் துவண்டு போயிருந்த அவரது கழகத்தை மீண்டும் தூக்கிநிறுத்த  பிராமணியவாதிகளே மறைமுக மாக உதவி செய்தது போலானது. இப்படியொரு வழக்கும், இப்படியொரு தீர்ப்பும் அவரது இயக்கத்திற்குள் புதிய ஆக்ரோஷத்தை ஊட்டியது. 1950 ஆகஸ்டு 2ஆம் தேதியிட்ட “விடுதலை” தலையங்கம் பேசியது “கம்யூனல் ஜி.ஒ. மீண்டும் உயிர் பெற வேண்டுமென்றால் மூன்று வழிகள்தாம் உண்டு - 1) மாகாண மந்திரிகளும் சட்டசபை உறுப்பினர்களும் பதவியை விட்டு விலகி அரசியல் நெருக்கடியை உண்டாக்க வேண்டும். 2) வயது வந்தோர் வாக்குரிமை பெறாத நிலையில், ஏதோ ஒரு கும்பலினால் வகுக்கப்பட்ட இந்த அரசியல் திட்டத்தைக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் எறிய வேண்டும். 3) கம்யூனல் ஜி.ஓ. வுக்காகவும் நம் நாட்டிற்கேற்ற தனி அரசியலை வகுத்துக் கொள்வதற்காகவும் எல்லாத் திராவிட மக்களும் ஒன்று சேர்ந்து பெருங்கிளர்ச்சி செய்தாக வேண்டும். இந்த மூன்றில் எதைக் செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? என்று செய்யலாம்? ஆணிவேர் அறுபட்ட மரமாகி விட்டது நம் திராவிட சமுதாயம். இனி சல்லிவேர் தான் பாக்கி. அதுவும் அறுக்கப்படலாம். அதன்பின் நம் கதி என்ன? வர்ணாசிரம முறைப்படி அவனவன் பார்க்க வேண்டியதுதானா? பார்ப்பனர் மட்டும் தங்கள் வர்ணத் திற்கேற்ற தொழிலை விட்டு நம்மை அடக்கியாளும் தொழில்களில் ஈடுபட வேண்டியதுதானா? திராவிடப் பொதுமக்களைக் கேட்கிறோம். விரைவில் முடிவு செய்யுங்கள்”


இத்தகைய ஆவேசமான, அர்த்தபாவமிக்கத் தலையங்கத்திற்கு முன்பாகவே இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக சென்னையில் மாணவர் போராட்டம் வெடித் தது. ஆகஸ்டு 1 அன்று சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினார்கள், திரு வல்லிக்கேணி கடற்கரைக்கு நீண்ட ஊர்வலமாகச் சென்ற வர்கள், அங்கே நடந்த பொதுக்கூட்டத்தில் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அரசாங்கத்தைக் கோரி னார்கள். அதிலும் வெற்றி இல்லையென்றால் அரசியல மைப்புச் சட்டத்தையே திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள். முடிவில் அதுதான் நடந்தது என்பது வரலாறு. ஆனால், அதற்காக பெரியாரும் அவரது தி.க.வும் எடுத்துக் கொண்ட முயற்சிகளும், நடத்திய போராட்டங்களும் இந்திய சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல்கல்.


 


- தொடரும்


No comments:

Post a Comment