சிறுமிகளைச் சிதைக்கும் சிறுமைக்கு முடிவு எப்போது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 8, 2020

சிறுமிகளைச் சிதைக்கும் சிறுமைக்கு முடிவு எப்போது

சிறுமிகளைச் சிதைக்கும் சிறுமைக்கு முடிவு எப்போது?


கடந்த சில நாட்களுக்குள் தமிழ்நாட்டில் நடந்த சில நிகழ்வுகள் தலை குனிய வைக்கின்றன. ஊரடங்கு கால கட்டத்தில் மட்டும்


6 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை அருகில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக இரு நிகழ்வுகள் வருமாறு:


ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்டது சோமரசன்பேட்டையில் அதவத்தூர்பாளையம் என்ற பகுதி; 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வரும் பகுதி. ஆனால் பெண்களுக்கு என்று வசதியாக பொதுக்கழிப்பிடம் எதுவும் இல்லை. அதனால்தான் இந்தச் சிறுமி, நண்பகலில் வீட்டுப் பக்கம் இருந்த முள் காட்டிற்கு சென்றார். அதன் பிறகு நீண்ட நேரம் ஆகியும்  அவர்  திரும்பி வரவே இல்லை. வீட்டினர் சந்தேகமடைந்து சிறுமியை தேடிச் சென்றபோதுதான், கருகிக் கிடந்ததாகத் தகவல் வந்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றினர். அந்த பெண் குழந்தையின் உடல் முற்றிலும் எரிந்த நிலையில் கிடந்தது. உடற்கூறாய்வில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் உறவினர்கள் சிலரிடம் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.


 இதேபோல் சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த 7 வயதுச் சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார், இது தொடர்பாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் இதுவரை 6 தொடர் பாலியல் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.


இந்தக் குரூர நிகழ்வுகளால் நாம் நாகரிகமான உலகத்தில் தான் வாழ்ந்து வருகிறோமா? 21ஆம் நூற்றாண்டில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா என்ற கேள்விகள் நமக்குள் சுடு தீயாக எழுந்து இதயத்தைச் சுட்டுப் பொசுக்குகின்றன.


இதுபோன்ற குற்றங்களைச் செய்யக் கூடியவர்களுக்கான தண்டனைகளை கால தாமதப்படுத்துவதும் - போதிய ஆதாரங்கள் இல்லாமல் குற்றவாளிகள் தப்பிவிடுவதும் இதுபோன்ற கோர நிகழ்வுகள் தொடர்வதற்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.


திரைப்படக் கவர்ச்சிகளும், வேலையற்றுத் திரியும் கூட்டத்தின் பெருக்கமும் இதற்குக் காரணமாக இருக்கக் கூடும். போதும் போதாதற்குச் சமூக வலை தளங்கள் ஆபாசக் காட்சிகளுக்கு உரமிட்டு வளர்த்துக் கொண்டுள்ளன. விஞ்ஞானம் என்பது ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்குப் பயன்படத் துணை போக வேண்டுமே தவிர பாலியல் வெறியைத் தூண்டுவதற்கான தூபமாக மாறிவிடக் கூடாது.


சமூகவலைதளங்களில் தலைவிரித்தாடும் ஆபாசக் காட்சி களுக்கு முடிவுரை எழுதப்பட வேண்டும். 24 மணி நேரத்தில் வேறு வேலையேயில்லாமல் சதா செல்போனைத் தோண்டிக் கொண்டிருப் பதில் வயது வித்தியாசமே இல்லை.


சிறு குழந்தைகள் முதல் பெரியோர் வரை இதில் இலயித்துக் கிடப்பதை என்னவென்று சொல்லுவது! சமூகவலைதளம் மூலம் வலை விரிக்கும் கயவர்களிடம் ஏமாந்து போகிற படித்த பெண்களைப் பற்றியும் அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணமே உள்ளன.


பொள்ளாச்சி போன்ற சம்பவங்கள் எதைக் காட்டுகின்றன? அரசியல் செல்வாக்குள்ளவர்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம். அதிகாரத்தைப் பயன்படுத்தித் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை நீடித்தால் நாடு நாடாக இருக்காது - காட்டு விலங்காண்டிகள் நடமாடும் காடாகத் தான் மாறும்.


ஊடகங்கள்கூட சினிமாத்தனத்திற்கு இரையாகிக் கிடக்கின்றன. டி.ஆர்.பி. விகிதம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சினிமாதான் கிடைத்ததா? உருப்படியான - தேவையான அவசியமான நிகழ்ச்சிகளைத் தயார் செய்து அவற்றைத் தொலைக்காட்சிகளில் காண்பதற்கான உந்துதலை ஊடகங்கள் நினைத்தால் செய்ய முடியாதா? குறுக்கு வழியில் சென்றுதான் - இளைஞர்களின் உள்ளத்தை, சினிமா சிறையில் சிக்க வைத்துதான் நேயர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டுமா?.


இப்படியும்கூடச் செய்யலாமே! மனநல மருத்துவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து பாலியல் என்பது என்ன? அதில் பெற வேண்டிய படிப்பினை என்ன என்கிற உளவியல் கருத்துகளை - தகவல்களைப் பக்குவமாக எடுத்துச் சொல்ல வைக்கலாமே!


இந்தப் பிரச்சினையில் கல்விக் கூடங்கள், பெற்றோர்களின் பங்கும் முக்கியமானது. குறிப்பிட்ட வயது வரை பிள்ளைகளைக் கண்காணிக்கும் பொறுப்பு, பெற்றோர்களுக்கு இல்லையா?


குழந்தை சாப்பிட அடம் பிடித்தால்கூட கைப்பேசியை கையில் கொடுத்து, அவர்களின் கவனத்தை இவ்வாறாக திசை திருப்பி, சோறு ஊட்டும் செயல் சரியானதுதானா?


பகுத்தறிவுப் பிரச்சாரம் நடந்தும், கோயில்கள் பெருகிக் கொண்டு போகின்றனவே, பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தானே  இருக்கிறது என்று கேலி செய்பவர்களை நம்மால் திருப்பிக் கேட்கவும் முடியும். கடவுள் பக்தி வளர்ந்த அளவுக்கு ஒழுக்கம் வளரவில்லையே- ஏன்? என்ற கேள்வியை நாம் எழுப்பினால், அவர்கள் முகத்தை எங்கே கொண்டு வைப்பார்கள்!


சினிமாதான் ஆபாசக் கூடமாக இருக்கிறது என்றால் நம் நாட்டுக் கோயில்களுக்குள் இருக்கும் சிற்பங்களும் அதைவிட நிர்வாண மாகத்தான் இருக்கின்றன. சினிமாவை ஈர்க்க ஆபாசம் தேவைப் படுவதுபோல - கோயிலுக்கு மக்களை ஈர்க்க இப்படிப்பட்ட சிற்பங் களைச் செதுக்கி வைத்துள்ளனர் என்றே கருத வேண்டி யுள்ளது. சமுதாயத்துக்குச்  கூட்டுப் பொறுப்பு இருக்கிறது. பெண் களை வேட்டையாடும் மிருகங்களை இனியும் - அனுமதிக்கக் கூடாது - ஆயிரம் காரணம் சொன்னாலும் அரசும் - காவல் துறையும்தான் இதற்கு முக்கிய பொறுப்பு!


ஒட்டு மொத்தத்தில் இத்தகு சீரழிவுக் காரியங்கள் ஒட்டு மொத்த சமுதாயத்துக்கே தலைக்குனிவுதான்!


No comments:

Post a Comment