தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 9 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 24, 2020

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 9

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பல வகுப்பாரின் ஆதரவு



தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.


அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!


சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர்களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...


- ஆசிரியர், 'விடுதலை'


 


தமிழறிஞர்களின் ஆதரவு மட்டுமல்ல, பல வகுப்பா ரின் ஆதரவும் இந்தி எதிர்ப்புக்கு இருந்தது. முஸ்லிம் லீக் தலைவர் ஜின்னா, தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர்கள் இரட்டை மலை சீனிவாசன், எம்.சி. ராஜா போன்றோரின் ஆதரவைப் பெற்றார் பெரியார். 1938 மே மாதத்தில் திருச்சியில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. சோம சுந்தர பாரதியார் தலைமையில் 112 உறுப்பினர்களைக் கொண்ட “சென்னை மாகாண இந்தி எதிர்ப்பாளர்கள் சங்கம்“ அமைக்கப்பட்டது. சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த டி.பி. வேதாச்சலம் தலைமையில், “சென்னை மாகாணத் தமிழர் மகாசபை’’ என்பது இருந்தது. இந்த இரண்டு அமைப்புகளும் சேர்ந்து ஒரு பெரும் இயக்கத் திற்கு திட்டமிட்டன. இதற்கான தலைவர்கள் குழுவில் சோமசுந்தர பாரதியார், தவே. உமாமகேசுவரம் பிள்ளை, சவுந்திரபாண்டியன், கி.ஆ.பெ. விசுவநாதம், கே.எம். பாலசுப்பிரமணியன், பெரியார் ஆகியோர் இருந்தார்கள். பல ஊர்களிலிருந்தும் சென்னையை நோக்கிப் பயணங்கள் நடந்தன. அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பல்லாயிரம் பேர் கலந்து கொண்டே மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.


இதைத் தொடர்ந்து முதலமைச்சர் ராஜாஜி வீட்டு முன்பு தொடர்மறியல் நடைபெற்றது. காங்கிரஸ் எதிர்த்து வந்த பிரிட்டீஷாரின் கொடூரமான சட்டங்களை இப் போது காங்கிரஸ் ஆட்சி இந்தி எதிர்ப்பு போராட்டக்காரர் கள் மீது பிரயோகித்தது. பிராமணியம் தனது நிலையைக் காக்க எதுவும் செய்யும் என்பது மீண்டும் நிரூபணமானது. எனினும் போராட்டம் சலிக்காமல் நடந்தது. செப்டம்பரில் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேர் கூட்டத்திற்கு வந்ததாக “குடி அரசு” தெரிவித்தது. இதில் பங்கு கொண்டவர்களில் மறைமலையடிகள், கே.வி. ரெட்டி நாயுடு, பெரியார், சோமசுந்தர பாரதியார், பி.டி. ராஜன், மீனாம்பாள் சிவராஜ், மவுலான மவுல்வி ஷர்புதீன், பரவஸ்து ராஜகோபாலாச்சாரியார், ரெவரண்ட் அருள் தங்கையா, திருப்பூர் முகைய்தீன், அ. பொன்னம் பலனார், டாக்டர் தர்மாம்பாள் போன்றோரும் இருந் தார்கள் பிராமணியத்தின் மொழிக் கொள்கைக்கு எதிராக முதன்முதலாக தலைவர்களது ஒரு விரிந்த அணிவகுப்பும், பிரம்மாண்டமான வெகு மக்கள் திரளும் நடந்தது. தென் னகத்தைப் பொறுத்தவரை இப்படியொரு இயக்கத்தைப் பிராமணியம் இதுவரை சந்தித்ததில்லை.


இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்து கொண்டிருந்த இந்தக் காலத்தில் சென்னையில் “தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு” நவம்பரில் நடைபெற்றது. இங்கும், அதற்கு முன்பும் பெரியார் பேசிய பேச்சுக்களுக்காக அவருக்கு ஒன்றரை ஆண்டுக் கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டார் பெரியார். அப்படிச் சிறை யில் இருந்த போதுதான் நீதிக்கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடிமைச் சமுதாயத்தில் இயங்கு வதையே பெரிதும் விரும்பிய அவர் ஓர் அரசியல் கட்சிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தி எதிர்ப்பு இயக்கம் அத்தகைய சூழலை உருவாக் கியது. டிசம்பரில் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநாட்டில் பெரியாரின் தலைமை உரை படிக்கப்பட்டது.


இந்தக் கட்டத்தில் இந்தி எதிர்ப்புப் போரில் சிறையிலிருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எல். நடராஜன் 1939 ஜனவரியில் மரணமடைந்தார்; முதல் களப்பலியானார். நாடார் வகுப்பைச் சார்ந்த தாளமுத்து இதுபோல மார்ச்சில் காலமானார். சிறையில் வாடிய பெரியாரின் உடல்நிலையும் மோசமானது. அவரை விடுதலை செய்யச் சொல்லியும் பொதுக்கூட்டங்களும் கிளர்ச்சிகளும் நடந்தன. நிலைமை மோசமாவதை அறிந்த ராஜாஜி அரசாங்கம் அவரை மே மாதம் விடுதலை செய்தது. ஆனால் கட்டாய இந்தியை வாபஸ் வாங்கவில்லை. அது இரண்டாம் உலகப்போரின் காரண மாக ராஜாஜி மந்திரிசபை ராஜினாமா செய்த பிறகே - ஆங்கிலேய கவர்னர் ஆட்சியாலேயே - வாபஸ் பெறப் பட்ட து.


மொழிப் பிரச்சினையில் பிராமணிய நோக்கு


மொழிப் பிரச்சினையில் பிராமணிய நோக்கு காங் கிரஸ் தலைவர்களுக்கு இருந்ததை சத்தியமூர்த்தி அய்யரின் 1939 ஜூலை பேச்சு உணர்த்தியது. அது - “என் கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதிகாரியானால் இந்தியர்களை (இந்தி மட்டுமில்லாமல்) சமஸ்கிருதத் தையும் கட்டாயமாகப் படிக்கும்படி செய்வேன். சர்க்கார் உத்தியோகங்களுக்கும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்கின்ற நிபந்தனையை ஏற்படுத்தி விடுவேன். காந்தியார் உயிருடன் இருக்கும்போதே இந்தியாவில் ராம ராஜ்யம் ஏற்பட்டுவிட வேண்டும் என்று மிக ஆவலாய் இருக்கிறேன். ராமராஜ்யம் என்பது வர்ணச்சிரம முறைப் படி ஒவ்வொருவனும் அவனவன் ஜாதி தர்மப்படி நடந்து கொள்ள வேண்டியதுதான். ராமர் காலத்தில் இந்த வர்ணாச்சிரம முறைப்படியே, அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் எனப் பிரிக்கப்பட்டு அவனவனுக்கு சாஸ்திரப்படி ஏற்பட்ட கர்மங்களை அவனவன் செய்து கொண்டு திருப்தியாய் இருந்தான். அதனால் யார் மீதும் வருத்தப்படவில்லை.’’ எத்தகைய வர்கள் எல்லாம் காங்கிரஸ் தலைவர்களாக இருந்தார்கள் என்பதை இது நன்கு புரிய வைக்கிறது. நல்ல வேளையாக இந்த மனிதர் கைக்கு அதிகாரம் வரவில்லை. ஆனால் இவரைப் போன்றவர்கள் நாணயமாகத் தங்களின் உள் ளக்கிடக்கையை வெளிப்படுத்தியதால் பிராமணிய எதிர்ப்பு இயக்கம் சென்னை மாகாணத்தில் கிளர்ந்தெழுந்தது!


தமிழகத்தின் வரலாற்றில் பிராமணியம் செய்த மிகப் பெரும் தவறாக இந்தித் திணிப்பு இருந்தது. சுயமரியாதை இயக்கத்தின் கடவுள் - மத எதிர்ப்பானது அதற்கு ஒரு தீவிர முகத்தைத் தந்தாலும் அதன் மக்கள் தளத்தை அக லப்படுத்தவில்லை. ஆனால், இந்தி எதிர்ப்பு இயக்கமோ அதற்கு ஒரு போராட்ட முகத்தைத் தந்ததோடு அல்லாமல் அதன் மக்கள் தளத்தை விரிவுபடுத்தியது. பின்னாளில் திராவிட இயக்கம் ஒரு பெருந்திரள் இயக்கமானதற்கான வலுவான அடித்தளம் இந்த மொழிப் போராட்டத்தில் உருவானது. அது பிராமணியத்திற்கு மிகப் பெரும் சவாலாக எழுந்தது.


இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக.....


இந்தக் காலத்தில் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வளர்த்ததில் சுயமரியாதை இயக்கத்திற்கு தனித்த பங்கு இருந்தது. இது பிராமணியத்தின் நோக்கிற்கு நேர் எதிரானது. அவர்கள் சமூக சீர்திருத்த இயக்கங்களை வளரவிடாமல் செய்ய முஸ்லிம்கள் மீது இந்துக்களை ஏவிவிடப் பார்த்தார்கள். பெரியாரின் இயக்கமோ சமூக நீதியை வென்றெடுக்க பிராமணரல்லாதார் - முஸ்லிம் ஒற்றுமையை உருவாக்க முனைந்தது. முஸ்லிம்களின் வகுப்புவாரிக் கோரிக்கையை அதரித்தார், அது நடை முறைக்கு வந்தபோது வரவேற்றார் பெரியார். 1930 சைமன் குழு அறிக்கை வெளிவந்தபோது அதில் “7.5 கோடி மகமதியருக்கு வகுப்புரிமை. தாழ்த்தப்பட்டோருக்கு வகுப்புரிமை - இது போதுமானதல்ல. 10,000 இந்துக்க ளுக்கு ஒரு பிரதிநிதி என்றால் 1,00,000 தாழ்த்தப்பட்டவர் களுக்கு ஒரு பிரதிநிதி என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. எனினும் தாழ்த்தப்பட்டோருக்கு வகுப்புரிமை என்பது கொள்கையளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. பெண் களுக்கு மொத்த இடங்களில் 5 முதல் 10 வரை தரப்பட்டுள் ளது. இது போதுமானதல்ல. எனினும் அவர்களது உரிமை ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது” என்பதைச் சுட்டிக்காட்டி அதை வரவேற்றார். இதில் முஸ்லிம்களுக்கு வகுப்புரிமை தரப்பட்டதை முதலில் சொல்லி வரவேற்றிருப்பதை நோக்க வேண்டும்.


சென்னை மாகாணத்தில் ராஜாஜி மந்திரிசபை அமைந்த ஒரு மாதத்திலேயே இந்தியைத் திணித்தது என்றால், இரண்டு மாதத்திலேயே “வந்தே மாதரம்“ பாடலைச் சட்டசபையில் பாட வேண்டும் என்று விதித் தது. இது எப்படி முஸ்லிம்களுக்கு மதரீதியில் சிக்கலானது என்பதை ஏற்கெனவே விளக்கியிருக்கிறோம். இதைப் புரிந்திருந்த பெரியார் அரசாங்கத்தைக் கண்டித்தார். “விடுதலை” ஏடும் கண்டித்தது. “வந்தே மாதரம்“ பாடலை எதிர்த்து 1938 மார்ச் 5 முதல் சத்தியாக்கிரகம் இருக்கப் போவதாக எஸ்.எஸ். பாமினி சாயுபு என்பவர் அறிக்கை விடுத்தார். உடனே ராஜாஜி அரசாங்கம் பின்வாங்கியது, அது சட்டசபையில் பாடப்படுவது நிறுத்தப்பட்டது.


1937-39ல் மாகாணங்களில் நடந்த காங்கிரஸ் அரசாங் கங்கள் முஸ்லிம்களுக்கு விரோதமாக இருந்ததைக் கண்டு வந்தோம். அவை ராஜினாமா செய்தபோது அதை வரவேற்றுக் கொண்டாடும்படி அறிக்கை விடுத்தார் முஸ்லிம் லீக்கின் ஜின்னா. ராஜாஜியின் அடக்குமுறை அரசாங்கம் ஒழிந்ததில் பெரியாரின் இயக்கமும் மகிழ நிறைய காரணங்கள் இருந்தன. குறிப்பாக இந்தித் திணிப்பு. ஆகவே அந்த ஆண்டு டிசம்பரில் ஈரோட்டில் அதற்காக நடந்த கூட்டத்தில் பெரியார் கலந்து கொண்டு பேசினார்.


(தொடரும்)


No comments:

Post a Comment