ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் சிபிஅய் இயங்குகிறது உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 11, 2024

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் சிபிஅய் இயங்குகிறது உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

featured image

புதுடில்லி, ஜூலை 11- மேற்கு வங்காள மாநிலத்தில் விசாரணை நடத்துவதற்கும், சோதனை நடத்துவதற்கும் சி.பி.அய். க்கு அளிக்கப்பட்டிருந்த பொது அனுமதியை கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி மேற்கு வங்காள மாநில அரசு திரும்பப்பெற்றது. ஆனால் அதன்பிறகும் சந்தேஷ்காலி வன்முறை உள்ளிட்ட வழக்குகளை சி.பி.அய். விசாரித்து வருகிறது.
எனவே, சி.பி.அய். விசாரிப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்காள மாநில அரசு மனுதாக்கல் செய்தது. ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையிலான சர்ச்சைகளை விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கும் அரசியல் சாசனத்தின் 131ஆவது பிரிவின்கீழ், இந்த மனுவை தாக்கல் செய்தது.

ஆனால், ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சி.பி.அய். , ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்று வாதிட்டார். ஒன்றிய அரசுக்கு சம்பந்தம் இல்லாத மனு, விசாரணைக்கு உகந்தது அல்ல என்று அவர் கூறினார்.
மேற்கு வங்காள அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், பொது அனுமதியை திரும்பப்பெற்ற பிறகு, மேற்கு வங்காளத்துக்குள் சி.பி.அய். எப்படி நுழையலாம்? என்று வாதிட்டார்.
இந்நிலையில், இம்மனு மீது நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று (10.7.2024) தீர்ப்பு அளித்தது. மேற்கு வங்காள அரசின் மனு விசாரணைக்கு உகந்தது என்று தீர்ப்பு கூறியதுடன், ஒன்றிய அரசின் ஆட்சேபனையை நிராகரித்தது.

74 பக்க தீர்ப்பில் நீதிபதிகள் கூறுகையில், “1946ஆம் ஆண்டின் டில்லி சிறப்பு காவல் ஸ்தாபன சட்டத்தின்படி, ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட அமைப்புதான் சி.பி.அய். அது, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது.
டில்லி சிறப்பு காவல் ஸ்தாபன சட்டப்படி, ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வரும் குற்ற வழக்குகள், மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் (சி வி சி.) கட்டுப்பாட்டில் வரும். மற்ற குற்ற வழக்குகள் அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வரும்.
யூனியன் பிரதேசத்தை தவிர, இதர மாநிலங்களில் விசாரணை அமைப்புகளின் அதிகாரத்தையோ, விசாரணை வரம்பையோ நீட்டிக்க வேண்டுமானால் ஒன்றிய அரசின் உத்தரவு இல்லாமல் செய்ய முடியாது. அதற்கு அந்த மாநில அரசின் ஒப்புதலும் அவசியம். ஆகவே, சி.பி.அய். விசாரிப்பதற்கு எதிரான மேற்கு வங்காள அரசின் மனு விசாரணைக்கு உகந்தது” என்று நீதிபதிகள் கூறினர். பின்னர் மனு மீதான விசாரணையை ஆகஸ்டு 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment