மாணவர்களுக்கு எச்சரிக்கை! ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் வன்முறையில் ஈடுபட்டால் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 9, 2024

மாணவர்களுக்கு எச்சரிக்கை! ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் வன்முறையில் ஈடுபட்டால் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை

featured image

சென்னை, ஜூலை 9- ரயில்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் கல்லூரி மாணவர்கள் தொடர் வன்முறையில் ஈடுபட்டால், 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை ரயில்வே காவல் துறை கண்காணிப்பாளர் ரமேஷ் எச்சரித்துள்ளார்.

செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில்களில் கல்லூரி மாணவர்கள் வந்து செல்கின்றனர். வெவ்வேறு கல்லூரிகளில் படிக்கும் இந்த மாணவர்கள் இடையே ‘ரூட் தல’ விவகாரத்தில் அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது.

இதை தடுக்கும் விதமாக கல்லூரிகளுக்கு சென்று ரயில்வே காவல்துறை விழிப்புணர்வு ஏற் படுத்தி வருகின்றனர். ரயில்கள், ரயில் நிலையங்களில் மாணவர்கள் இடையே மோதல் ஏற்படாமல் இருக்க ரயில்வே காவல்துறை, ஆர்பிஎஃப் காவல்துறையினரின் கண்காணிப்பு பணிகளும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

படியில் தொங்கி செல்வது, அலைபேசியில் பேசிக்கொண்டு தண்டவாளத்தைக் கடப்பது, ரயில் பெட்டி மீது ஏறுவது, வந்து கொண்டிருக்கும் ரயில் முன்பு நின்று தற்படம் (‘செல்ஃபி’) எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.

பெற்றோர் மூலம் அறிவுரை

இதுகுறித்து ரயில்வே காவல் துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் கூறியதாவது:

பள்ளி, கல்லூரிகள் திறக்கப் பட்டுள்ளன. பொது இடங்களில் மாணவர்கள் ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவித செயல்களிலும் ஈடுபடக் கூடாது. மற்ற பயணிகளுக்கு இடையூறுசெய்யக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

கல்லூரி மாணவர்கள் இடையே நடக்கும் மோதலை தடுக்க, சம்பந்தப் பட்ட கல்வி நிறுவனம், பெற்றோர் மூலம் அறிவுரை வழங்கி, எச்சரித்து வருகிறோம். தொடர்ந்து மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடற்கரை, சென்ட்ரல், பெரம்பூர், கொருக்குப்பேட்டை, மாம்பலம், தாம்பரம், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு, ரோந்துப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 4 முதல் 6 பேர் இருப்பார்கள். விதிகளை மீறியும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் செயல்படும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அடிதடி, மோதல் என மாணவர் கள் தொடர் வன்முறையில் ஈடுபட்டால், சட்டப்படி அவர் களுக்கு 2 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்க முடியும். எனவே, மாணவர்கள் தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment