சென்னை, ஜூலை 9- பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றிய முடிவை திரும்ப பெற வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, அகில இந்திய பாது காப்புத் துறை ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.சிறீகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்புத் துறை அமைச்சகம், பாதுகாப்புத் துறை தளவாட தொழிற்சாலை தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுப்பதோடு, அவர்களை அலட்சியப்படுத்தி வருகிறது. நாட்டின் பாதுகாப்பில் நான்கா வது சக்தியாக விளங்கும் 3.5 லட்சம் பாதுகாப்புத் துறை தொழிலாளர்களை இரண்டாம் தர குடிமக்களாக அரசாங்கம் நடத்தி வருகிறது. தொழிலாளர்களின் குறைதீர்ப்பு அமைப்புகளின் கூட்டங்களை கடந்த 8 ஆண்டுகளாக கூட்டாமல் இருக்கிறது.
பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளனத்தின் முக்கிய கோரிக் கைகளான, 41 பாதுகாப்புத் தள வாட தொழிற்சாலைகளையும் கார்ப்பரேஷனாக மாற்றிய முடிவு தோல்வி அடைந்துள்ள நிலையில் அதனை திரும்பப் பெற வேண்டும். தற்போது 7 பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்களில் மாற்றுப் பணியில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் அவர்கள் பணி ஓய்வு பெறும் வரை அரசு ஊழியர்களாகவே தொடருவார்கள் என அரசாணை வெளியிட வேண்டும். தனியார்மயம், வெளிப் பணி, பதவிகளை ரத்து செய்வது, தொழிற்சாலைகளை மூடுவது, ஒப்பந்த முறை ஆகியவற்றை கைவிட வேண்டும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள 2.5 லட்சம் இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 8-ஆவது ஊதியக் குழுவை அமைத்திட வேண்டும். நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப் படியை உடனடியாக வழங்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வூதியத்தை உயர்த்தும் வகையில் நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் மறியல் போராட்டம் வரும் ஆக.2-ஆம் தேதி டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நடைபெறுகிறது. அதற்கு மேலும் எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்படாவிட்டால், அடுத்தகட்டமாக போராட்டம் தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு சிறீகுமார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment