ஊன்றிப் படியுங்கள்! சுயமரியாதை இயக்க நூற்றாண்டுச் சிந்தனைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 9, 2024

ஊன்றிப் படியுங்கள்! சுயமரியாதை இயக்க நூற்றாண்டுச் சிந்தனைகள்

featured image

திராவிட இயக்க முன்னோடி பொற்கால முதலமைச்சர் பானகல் அரசர் புகழ் ஓங்குக

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

திராவிட இயக்கமான ஜஸ்டிஸ் கட்சியின் முதல் தேர்தலில் அப்போது தேர்வான முதல் முதலமைச்சர் (கடலூர்) சுப்பராயலு (ரெட்டியார்) உடல் நலக் குறைவின் காரணமாக பதவி விலக நேரிட்ட நிலையில், இரண்டாவது அமைச்சராக இருந்த பானகல் அரசர் இராமராய நிங்கார் அவர்கள் பொறுப்பேற்று, திராவிட இயக்க ஆட்சியின் ஒப்பற்ற பிரதம அமைச்சராகி, செய்த எண்ணற்ற சமூக நீதிச் சட்டங்களும் – திட்டங்களும், அசாதாரணமானவை!
• குரலற்றவர்களுக்குக் குரல் கொடுத்தது;
• கல்வி வாய்ப்பற்றவர்களுக்குக் கல்விக் கண்களைத் திறந்தது
• ஒடுக்கப்பட்டோரின் உரிமை காப்புக்கு அரணாக அமைந்தது.
• மருத்துவக் கல்லூரிக்கு மனு போடவே, சமஸ்கிருதப் படிப்புதான் முன் தகுதி என்ற கொடுமையான தடுப்புச் சுவரை இடித்து நொறுக்கி அனைவரும் மருத்துவராக வழிவகை செய்தது!
• எல்லாவற்றையும் தாண்டி ‘மகுடமாக’ கோயில் பெருச்சாளிகளான பார்ப்பனர்களின் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடும் எதிர்ப்புக்கு இடையில், எதிர்நீச்சல் அடித்து ஹிந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை இந்தியாவிலயே முதல்முறையாக நிறைவேற்றியது போன்ற எண்ணற்ற, வரலாற்றில் என்றும் பேசப்படும் அருஞ்சாதனைகளைச் செய்தவர் பிரதமர் பானகல் அரசர். இவற்றை எல்லாம் பலரும் அறிந்தவை;
• பலரும் அறியாத ஒரு முக்கிய செய்தி என்ன தெரியுமா? மத்திய சட்டமன்றத்தில் பானகல் அரசர் 1912இல் உறுப்பினராக இருந்து, தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக முழங்கியதோடு, பம்பாய் மாகாணத்திலிருந்து மகாராட்டிராவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நவ்ரோஜி என்ற பார்சி மதத்தவர் (தாதாபாய் நவ்ரோஜி என்ற பிரபலமானவர் அல்ல) முதன்முதலில் கொண்டுவந்த தனியார் தீர்மானத்தை தீண்டாமைக்கு எதிராக முன்மொழிந்தபோது பல உறுப்பினர்களும் அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தனர்; அப்போது சிங்கமென கர்ஜித்து, அதனை வழிமொழிந்து பேராதரவைத் தந்த முதல் முழக்கம் பானகல் அரசருடையது!
(அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட தீண்டாமை ஒழிப்புத் தீர்மானத்தை 1917இல் நடந்த அதன் கமிட்டியில்தான் விவாதித்து, அப்போது பல பார்ப்பன மூத்த உறுப்பினர்கள் அரசியல் கட்சியில் சமூக சீர்திருத்தம் பற்றிப் பேசி தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று எதிர்க்குரலும், சிலர் ஆதரவும் கொடுத்தனர்).
தந்தை பெரியார் அவர்கள் பானகல் அரசர் மறைவுக்கு எழுதிய உருக்கம் நிறைந்த இரங்கல் அறிக்கையில் அவரது ஒப்பற்ற தலைமை எப்படியெல்லாம் சிறப்பானது என்று படிப்போர் கண்கள் குளமாகிடும் வகையில் எழுதினார்.(ஒப்பற்ற தலைமை நூலில் காண்க).
அப்படிப்பட்ட பானகல் அரசருக்கு முழு உருவச் சிலையை (பனகல் பூங்காவில் உள்ள சிறிய சிலையைத் தவிர பொது இடத்தில் புதிதாக, பெரியதாக) ‘திராவிட மாடல்’ அரசு நிறுவி நமது வரலாற்று நாயகர்களை நன்றி உணர்வோடு கொண்டாடி, பெருமிதம் கொள்ள வேண்டும்!
திராவிட இயக்க முதல்வர் பானகல் அரசர் பாடத்தைப் படித்ததோடு, அதை மறுபதிப்பாக்கி வெளியிட வைத்த பெருமை நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் அவர்களையே சாரும்.
கலைஞர் நூற்றாண்டு தொடர்ச்சியாய் இந்த சிலை அமைப்புகள் அமையுமாக!

‘திராவிட லெனின்’ என்று தந்தை பெரியாரால் பாராட்டப் பெற்ற டாக்டர் டி.எம்.நாயர்,
பானகல் அரசர், டாக்டர் சி.நடேசனார், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், முத்தையா முதலியார் போன்ற பெருமக்களின் சிலைகளை அமைக்க நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அன்பான வேண்டுகோளாக வைக்கிறோம்.

No comments:

Post a Comment