விபத்தில் பலியானவரின் உடல் வேறு குடும்பத்திடம் ஒப்படைப்பு: பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 8, 2024

விபத்தில் பலியானவரின் உடல் வேறு குடும்பத்திடம் ஒப்படைப்பு: பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடு

featured image

சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,ஜூலை 8- விபத்தில் உயிரிழந்தவரின் உடலை வேறு குடும்பத் தினரிடம் ஒப்படைத்த விவகாரத்தில் பாதிக்கப் பட்டவர் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு வழங் குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி சாலை விபத்தில் மரணடைந்த தனது கணவரின் உடலை அடையாளம் தெரியாத நபர்களுக்கு கொடுத்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி பத்மினி என்பவர் 2009ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவ மனை அதிகாரிகள், தனது கணவர் உடலை வேறு குடும்பத்தினரிடம் மாற்றிக் கொடுத்து விட்டதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் மன உளைச்சலுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளருக்கு 2018ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி விண்ணப்பம் அளித்த பத்மினிக்கு, 2 லட்சம் ரூபாய் மட் டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இழப் பீட்டை 25 லட்சம் ரூபாயாக அதிகரித்து வழங்க உத்தரவிடக் கோரி பத்மினி மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், சுகாதாரத் துறை செயலா ளர் தனது மனதை செலுத்தி, இழப்பீட்டை முடிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை பின்பற்றாமல், மனுதாரரின் கருத்தை கேட்காமல் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இழப்பீட்டை அதிகரித்துத் தரக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து, மனுதாரரின் கருத்தைக் கேட்டு ஆறு வாரங்களுக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment