கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபாடு பாரம்பரிய நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 8, 2024

கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபாடு பாரம்பரிய நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை!

featured image

தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என் ராதா– முதலமைச்சர், அமைச்சர், மாவட்ட ஆட்சியருக்கு மனு

கடலூர், ஜூலை 8- சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்வது பாரம்பரிய நடைமுறை – இதை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும். அரசாணையை பின்பற்றாமல் ஆருத்ரா தரிசனத்தை யொட்டி கனகசபையில் தரிசனம் செய்ய தடை விதிக்கும் தீட்சிதர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோருக்கு தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என் ராதா மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 11 ஆம் தேதி தேர் திருவிழாவும் 12 ஆம் தேதி ஆனி திருமஞ்சன தரிசனமும் நடக்கிறது. இதனை ஒட்டி வருகிற 10, 11, 12, 13 ஆகிய 4 நாட்களுக்கு கனக சபை மீது ஏறி நடராஜரை வழிபட பொது தீட்சிதர்கள் தடை விதித்துள்ளனர். இது வேதனைக்குரியது
கனக சபையில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் நடைமுறை இந்த பாரம்பரிய நடைமுறையை மாற்ற பொது தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை.

கனகசபை மேடை மீது நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதித்து 2022 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் பக்தர்கள் கனகசபை மேடை மீது ஏறி பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கனகசபை மீது நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய உரிமை இல்லை என்று தீட்சர்கள் எப்படி கூற முடியும் – அதற்கு என்ன ஆதாரம் உள்ளது.
கடந்த ஆனி திருமஞ்சன திருவிழாவில் கனக சபை வழிபாட்டிற்கு 4 நாட்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதால் பக்தர்கள் மன வேதனைக்கு உள்ளானார்கள்.
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சனத்தின் போதிலும் மார்கழி திருவாதிரையின் போது திருவிழாவின் 6 ஆம்நாள் இரவு விசேஷ நகைகள் வெளியே எடுக்கப்படும், 7 ஆம் திருவிழா நாள் இரவு திருவாபரண அலங்காரம் நடைபெறும். 8 ஆம் திருவிழா நாள் காலை வழக்கம்போல் கனசபை மீது ஏறி பக்தர்கள் நடராஜரை வழிபடுவது வழக்கம்.
அன்றைய தினம் நடராஜர் முகம் மட்டுமே தெரிவது போல் பட்டு அணிவிக்கப்படும். இது பக்தர்களுக்கு அனைத்து செல்வங்களும் தரும் தரிசனமாகும்.

பின் நடராஜர், அம்பாள் 9 ஆம் திருவிழா நாள் அதிகாலை தேருக்கு சென்ற பின் நடராஜர் பெருமான் வீற்றிருந்த பீடத்தில் சிறீ சிறீவர்ண ஆகர்ஷண பைரவர், சந்திரசேகரர், படிகலிங்கம், நடராஜர் பாதுகை, மாணிக்க நடராஜர், ஆகிய சுவாமிகளையும் சிதம்பர ரகசிய தீவிரார்த்தனை பக்தர்களுக்கு சிறப்பு தரிசனமாக நடைபெறும்.
இது மறுநாள் தரிசன விழாவின் விசேஷ ரகசிய பூஜை நடைபெறும் வரை தொடரும் , பின் 10 ஆம் நாள் தரிசன திருவிழாவான ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து நடராஜர், அம்பாள் சபைக்கு வந்தவுடன் அன்று மாலை முதல் கனகசபையில் நடராஜரின் ராஜ அலங்காரத்தை மறுதினம் பல்லாக்கு இரவு வரை தரிசனம் செய்யலாம் பின் நடை அடைக்கப்படும் விசேஷ நகைகள் அகற்றப்படும்.
இக்கோவிலை பிரதிஷ்டை செய்த பதஞ்சலி முனிவர் குறித்தபடியே பொதுவான நடைமுறைக்கும் சடங்குகளும் பூஜைகளும் இன்றும் இக்கோவிலில் நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுகிறது என்று தீட்சிதர்கள் கூறுகின்றனர். ஆனால், எந்த ஆகம விதியின் அடிப்படையில் கனகசபை மீது நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் தடை விதிக்கின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் மன்னர்களால் கட்டப்பட்டது இது பொது கோவில் தீட்சிதர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கோயிலை நிர்வகித்து வரலாம் – நிர்வாகத்தில் தவறுகள் ஏதேனும் நடைபெற்றால் அறநிலைத்துறை ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கலாம் அல்லது நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனவே, தீட்சிதர்கள்மீது உரிய நடவடிக்கை எடுத்து ஆனி திருமஞ்சன தரிசன திருவிழா நடைபெறும் நாட்களில் பக்தர்கள் எந்தவித இடர்ப்பாடுகளும் இன்றி கனகசபைமீது நின்று தரிசனம் செய்யவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் இந்து சமய அறநிலைத்துறை சிறப்பு பணியாளர்கள் பாதுகாப்புடன் சிறப்பு பணி மேற்கொள்ளவும் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

மேலும் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற ஆருத்ரா தரிசன நேரம் தெரியாத காரணத்தால் காலை 10 மணி முதல் கோவிலுக்குள் வந்த பக்தர்கள் மாலை 6 மணி வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது இயற்கை உபாதைகளுக்குள்ளாகியும் – சிலர் மயக்கம் அடைந்து உடல்நிலை பாதிக்கப்பட்டதையும் காணமுடிந்தது. கைக் குழந்தையுடன் வந்த பெண்கள் குடிக்க நீரின்றி உண்ண உணவின்றி மிகவும் சிரமம் அடைந்தனர். எனவே, பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு வருகிற 12 ஆம் தேதி நடைபெற உள்ள ஆனி திருமஞ்சன தரிசன விழா நேரத்தை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் அல்லது காலதாமதம் இல்லாமல் நடத்த பொது தீட்சிதர்களை அறிவுறுத்த வேண்டும். மேலும் கோவிலில் அவசர சிகிச்சை முதல் உதவி மய்யம் அமைக்கவேண்டும் – பக்தர்களின் வசதிக்காக தற்காலிக கழிப்பறை அமைத்துக் கொடுக்க மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலைத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவின் நகலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஜெ. பரணிதரன் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment