ஜாதி ரீதியில் வன்கொடுமை உயரதிகாரிகள் கொடுத்த ஜாதிவெறி நெருக்கடியால் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட காவல்துறை அதிகாரி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 8, 2024

ஜாதி ரீதியில் வன்கொடுமை உயரதிகாரிகள் கொடுத்த ஜாதிவெறி நெருக்கடியால் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட காவல்துறை அதிகாரி

featured image

அய்தராபாத், ஜூலை 8 தெலங்கானாவில் காவல் நிலையத்தில் உயரதிகாரிகளின் தொந்தரவால், தாழ்த்தப்பட்ட சமூகச் சேர்ந்த காவல்துறை துணை ஆய்வாளர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா பத்ராரி கொத்தகுடெம் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வராபேட்டை காவல்நிலையத்தில் காவல்துறை துணை ஆய்வாளராக பணிபுரிந்தவர் சிறீராமுல சிறீனிவாஸ் (38). இவர், தனது உயரதிகாரி மற்றும் சில காவலர்களால் பணியிடத்தில் தொந்தரவை அனுபவித்து வந்துள்ளார்.

மேலும், அந்த காவல்துறை அதிகாரிகள், சிறீராமுல சிறீநிவாஸை லஞ்சம் வாங்கும் அதிகாரியைப் போல சித்தரித்து நாளிதழ்களில் அவருக்கு எதிராக செய்தி வெளியிட வைத்துள்ளனர். அவருக்கு எதிராக இரு குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என்பதால் ஜாதிரீதியாக இழிவுபடுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறீநிவாஸ் மனுகுரு காவல் நிலையத்திலிருந்து அஸ்வரபேட்டை காவல் நிலையத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம்தான் மாற்றுதலாகி வந்துள்ளார். மூத்த அதிகாரி மற்றும் உடன் பணிபுரிந்த அதிகாரிகள் 4 பேரின் குற்றச்சாட்டுகள் மற்றும் தொடர்ச்சியானத் தொந்தரவுகளைத் தாங்க முடியாமல் கடந்த ஜூன் 30 அன்று தற்கொலை செய்வதற்காக பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துள்ளார்.

பின்னர், சிகிச்சைக்காக வாரங்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாகும் தருவாயில் இருந்த காவல்துறை துணை ஆய்வாளரிடம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் தற்கொலைக்கான காரணம் வாக்குமூலமாகப் பெறப்பட்டுள்ளது. ஒரு வாரமாக உயிருக்குப் போராடி வந்த அவர் இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். இறந்த காவலர் சிறீநிவாஸுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அவருடைய மனைவி கிருஷ்ணவேணி அளித்த புகாரின் பேரில், சர்க்கிள் காவல் ஆய்வாளர் ஜிதேந்தர் ரெட்டி, கான்ஸ்டபிள்கள் சன்யாசி நாயுடு, சுபானி, சேகர் மற்றும் சிவ நாகராஜூ ஆகியோர் மீது தாழ்த்தப்பட்ட சமூகம் மற்றும் பழங்குடியின வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை துணை ஆய்வாளரின் தற்கொலைக்கு காரணமானவர்களைக் கடுமையாகத் தண்டிக்குமாறு பல்வேறு தாழ்த்தப் பட்டோர் (தலித்) அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

மல மகாநாடு என்ற தலித் அமைப்பின் தலைவரான பில்லி சுதாகர் கூறுகையில், “காவல்துறை அமைப்பில் தலித் அதிகாரிகளுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் தொந்தரவுகள் தற்போது அதிகரித்து வருகின்றன” என்றார்.

No comments:

Post a Comment