சேலம், ஜூலை 8 சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு செய்த தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலத்தில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன் மீது மோசடி புகார் எழுந்தது. அதன்பேரில், பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி கருப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
இதனிடையே அவரது பதவிக் காலம் நிறைவடையவுள்ள நிலையில், புகாருக்குள்ளான ஜெகநாதன் துணைவேந்தர் பயிற்சியிலிருந்து மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஆளுநர் ரவி, முறை கேட்டில் ஈடுபட்ட ஜெகநாத னுக்கு உறுதுணையாக இருந்து வந்த நிலையில், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க ஆளுநர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
ஆளுநரின் இந்த முடி வுக்கு பல்கலைக்கழக பேராசி ரியர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அதனை பொருட்படுத்தாமல் ஜெகநாதனுக்கு வரும் 2025 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். இந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு செய்த தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் உத்தரவை கண்டித்து பல்கலைக் கழக தொழிலாளர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இதன் தொடர்ச்சியாக இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்பின் சார்பில் பெரியார் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு இன்று (8.7.2024) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக மாணவர் அணியின் மாநில துணை செயலாளர் தமிழரசன், அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் மாநில செயலாளர் தினேஷ் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் திராவிடர் கழகம், மதிமுக, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், முஸ்லிம் மாணவர் பேரவை, சமூகநீதி மாணவர் இயக்கம், முற்போக்கு மாணவர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தின்போது, துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கிய தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பப்பட்டது. துணைவேந்தரை பணிநீக்கம் செய்யும் வரை போராட்டம் நடைபெறும் என்றும் துணை வேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விரைவில் போராட்டம் நடத்த உள்ளதாக போராட்டக் குழு சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.
No comments:
Post a Comment