சீனா எல்லையின் உண்மை நிலை என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 8, 2024

சீனா எல்லையின் உண்மை நிலை என்ன?

featured image

புதுடில்லி, ஜூலை 8- சீனாவுடனான எல்லை விவகாரத்தின் உண்மையான நிலவரத்தை வெளிப்ப டையாக தெரிவித்து நாட்டு மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என காங்கிரஸ் தேசியத்தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நேற்று (7.7.2024) தெரிவித்தாா்.

கிழக்கு லடாக்கின் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே உள்ள பகுதிகளை தொடா்ச்சியாக சீனா ஆக்கிரமித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், அங்குள்ள பாங்காங் ஏரிக்ரையைச் சுற்றிய பகுதிகளில் பூமிக்கடியில் சுரங்கம் அமைத்து ஆயுதங்கள் சேகரிக்கும் கிடங்குகளை சீனா கட்டமைத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிா்ந்து காா்கே வெளியிட்ட பதிவில், ‘கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பாங்காங் ஏரிக்கரையின் அருகே ராணுவ தளங்களை சீனா அமைத்தது எப்படி? கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தில் நமது ராணுவ வீரா்கள் உயிரிழந்த நிலையில் அங்கு எந்த நிலமும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகவில்லை என பிரதமா் மோடி 5 ஆண்டுகளாக கூறி வருகிறார்.

கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி சீனாவுடனான எல்லை பிரச்சினை குறித்த இந்தியாவின் வலுவான நிலைப்பாட்டை வெளிநாட்டு ஊடகங்கள் முன் பிரதமர் மோடி தெரிவிக்க முடியாமல் தோல்வியடைந்தாா். அதைத்தொடா்ந்து, இந்திய பகுதிகள் ஏதும் சீனாவால் ஆக்கிரமிக்கப்படவில்லை என கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தது.

அண்மையில் சீன வெளியுறவுத்துறை அமைச்ச ருடனான சந்திப்பின்போது எல்லை விவகாரத்தில் அமைதி திரும்ப வேண்டும் என இந்திய வெளியுற வுத்துறை அமைச்சா் தெரிவித்தார்.

ஆனாலும் சிரிஜாப் பகுதியில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை சீனா தொடா்ந்து ஆக்கிரமித்து வருகிறது. இதுவே மோடி அரசின் கொள்கைகள் தோல்விக்கு சான்றாகும். எனவே, சீனாவுடனான எல்லை விவகாரத்தில் நிலவும் உண்மையான சூழலை வெளிப்படையாக தெரிவித்து நாட்டு மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என மீண்டும் ஒருமுறை ஒன்றிய அரசை காங்கிரஸ் வலியுறுத்துகிறது’ என்றார்.

கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மே 2020-இல் இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையே எல்லை பிரச்சினை தொடா்ந்து வருகிறது. இதற்குத் தீா்வுகாண இரு நாடுகளைச் சோ்ந்த ராணுவ அதிகாரிகளின் உயா்நிலைக்குழுவும் தொடா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment