சென்னை, ஜூலை 7- ஒன்றிய பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறையின் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் நேற்று (6.7.2024) பட்டினிப்போராட்டம் தொடங்கியது. திமுக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ (மாநிலங்களவை உறுப்பினர்) தலைமை தாங்கினார். திமுக சட்டத்துறை தலைவர் மூத்த வழக்குரைஞர் இரா.விடுதலை, சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் (சட்டமன்ற உறுப்பினர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன், வரவேற்புரையாற்றினார்.
பட்டினிப் போராட்டத்தை திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இந்த போராட்டத்தில் ஒன்றிய மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேயக் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா சட்டமன்ற உறுப்பினர், தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகர் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் மாநிலங்களவை உறுப்பினர், திமுக சட்டதிட்ட திருத்தக்குழுச் செயலாளர் வழக்குரைஞர் இரா.கிரிராஜன் எம்.பி., சென்னை உயர்நீதிமன்ற வழகுரைஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மாநில நெசவாளர் அணி செயலாளர், ஈரோடு சட்டக் கல்லூரி தலைவர் சிந்து ரவிச்சந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள், வழக்குரைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பட்டினிப் போராட்டத்தில் மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: 90 முதல் 95 சதவீதம் வரை காப்பி அடித்து பழைய சட்ட திருத்தத்தை தான் கொண்டு வந்துள்ளார்கள். 302 கொலை குற்றம் என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும். அதை 103க்கு மாற்றி இருக்கிறார்கள். அதனால் என்னவாகும் என்றால் சட்டத்தில் குழப்பம் வரும். எல்லாரும் மீண்டும் சட்டத்தை படிக்க வேண்டியது வரும். நீதித்துறையில் குழப்பம் ஏற்படும். முதலில் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றால் சட்ட ஆணையத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழுவில் எல்லாரும் விவாதித்து இருக்க வேண்டும். ஆனால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் வெளியேற்றி விட்டு நிறைவேற்றிருக்கிறார்கள்.
தற்போது வந்துள்ள சட்டத்தால் பிணை பெறுவது கடினமாக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஒரு நாளைக்கு 100 பிணை மனுக்கள் வருகிறது. அங்கு போய் எல்லாரும் பிணை வாங்க முடியாது. பிணை கிடைப்பது என்பது சிறிய குற்றத்துக்கு 60 முதல் 90 நாட்கள் வரை ஆகலாம். அதை போல காவல் துறையிலும் அவர்கள் சட்டத்தால் குழப்பம் ஏற்படும். ஒவ்வொரு மாநிலங்களும் புதிய சட்டங்களை எதிர்த்து சட்டசபைகளில் தீர்மானம் கொண்டு வரலாம். அதில் எதை மத்திய அரசு எடுக்கும் என்று சொல்ல முடியாது. எனவே, இந்த சட்டத்தை நிறுத்தி வைத்து சட்ட ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
திமுக பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: பாஜக அரசு 3 சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தியுள்ளனர். பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்று. நாக்கில் தர்ப்பை போட்டு தள்ளினாலும் இந்த வார்த்தை வாயில் வராது. இந்த இழவு வேண்டாம் என்பதற்காகத் தான் ஆதியிலிருந்து ஹிந்தியை நாம் எதிர்க்கிறோம். கொஞ்சம், கொஞ்சமாக இந்த பெயரை நீதிமன்றங்களில் உச்சரிக்க வேண்டும் என்று, ஹிந்தியை நுழைக்க வேண்டும் என்பதற்காக இது போன்று பாஜ செய்துள்ளது. அதிகாரத்தில் இருக்கும் யாரும் தங்களை கேள்வி கேட்க கூடாது என நினைக்கின்றனர்.
பெயர் மாற்றம் கூட எதிர்க்கட்சியினரை வெளியே தள்ளி ஆளுங்கட்சியினர் மட்டுமே பெயர் மாற்றம் செய்துள்ளனர். உச்ச நீதிமன்றம் இந்நேரம் இந்த சட்டத்திருத்தங்களை குப்பைத் தொட்டியில் வீசி இருக்க வேண்டும். எவன் டா இந்த சட்டங்களை அரசாங்கத்துக்கு சொன்னது. சர்வாதிகாரத்தின் தொனியை திணிப்பது தான் இந்த 3 சட்டங்கள். ஆரம்பத்திலேயே ஒன்றிய அரசின் இந்த போக்கை கிள்ளி எறிய திமுக சட்டக்குழு இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இறுதியாக திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா (மக்களவை உறுபபினர்) நிறைவுரையாற்றினார். காலை 10 மணிக்கு தொடங்கிய பட்டினிப் போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
No comments:
Post a Comment