நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உறுதி குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால் நீட் மறு தேர்வு நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 9, 2024

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உறுதி குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால் நீட் மறு தேர்வு நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

featured image

புதுடில்லி, ஜூலை 9- ‘நீட்’ முறைகேடு வழக்கில் வினாத்தாள் கசிவு தெளிவாகி இருக்கிறது, குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால், மறுதேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் அது தொடர்பான படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடந்தது.

முறைகேடுகள் அம்பலம்

24 லட்சம் மாணவ-மாண விகள் எழுதிய இந்த தேர்வு முன்னெப் போதும் இல்லாத வகையில் பெரும் சர்ச்சைகளை நாடு முழுவதும் எழுப்பி இருக்கிறது.

தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த தேர்வில் ஆள் மாறாட்டம். வினாத்தாள் கசிவு என பல்வேறு புகார்கள் தேர்வு நடந்தபோதே எழுந்தன.

அது தொடர்பாக மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு இருந்த நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான அதே நாளில் ஜூன் 4ஆம் தேதி திடீ ரென இந்த தேர்வு முடிவுகள் வெளியாயின. அப்போது மேலும் பல முறைகேடுகள் அம்பலமாகி இருந்தன.

மாணவர்கள் போராட்டம்

குறிப்பாக, எப்போதும் இல்லாத அளவாக 67 மாணவ-மாணவிகள் முழுமதிப்பெண்ணான 720 மதிப் பெண் பெற்றிருந்தனர். இதில் அரியானாவில் ஒரே மய்யத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்களும் அடங்குவர்.

இதைப்போல தேர்வின்போது பல்வேறு வகையில் ஏற்பட்ட நேர மிழப்புக்காக 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட் டிருந்தது. இதுவும் பல மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுவதற்கு காரணமாக அமைந்தது.
இவ்வாறு மிகப்பெரிய அளவிலான முறைகேடுகள் அம் பலமானதால் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவ-மாணவிகள் போராட்டம் நடத் தினர். அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும் போராட்டக் களத்தில் குதித்தன.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

மறுபுறம் இந்த மோசடிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வு நடத்தப்படவேண்டும் என அதில் கோரப்பட்டிருந்தன. இந்த முறைகேடு விவகாரம் ஒன்றிய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணை ரத்து செய்வதாக நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது. மேலும் அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தவும் நடவடிக்கை எடுத்தது.

அதன்படி கடந்த மாதம் 23ஆம் தேதி அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்த 1ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில் புதிய தரவரிசைப்பட்டியலும் வெளியிடப்பட்டது.
இந்த திருத்தப்பட்ட பட்டிய லின்படி முதலிடம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 67இல் இருந்து 61 ஆக குறைந்தது.

சி.பி.அய்.விசாரணை

முன்னதாக நீட் தேர்வு முறை கேடுகள் குறித்த விசாரணையை ஒன்றிய அரசு சி.பி.அய். வசம் ஒப்படைத்தது. அதன்படி பல்வேறு வழக்குகள் பதிவு செய்த அதிகாரிகள், விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதில் சோதனை, கைது என அடுத்தடுத்து நடவடிக்கைகள் வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக ஜார்க்கண்ட், பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமானோரை சி.பி.அய். அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்சினை என்பதால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீட் விவகாரமே நாடு முழுவதும் பேசு பொருளாகி இருக்கிறது. ஒன்றிய அரசையும், தேசிய தேர்வு முகமையையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க, நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது என நேர்மையாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களும் போர்க் கொடிதூக்கி இருக்கிறார்கள். இதுதொடர்பாக குஜராத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த மாணவர்களுக்கு ஒன்றிய அரசும் ஆதரவு தெரிவித்திருக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்வது அறிவுப்பூர்வமாக இருக்காது என உச்சநீதிமன்றத்திலும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.

இவ்வாறு நீட் தேர்வு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள

30-க்கு மேற்பட்ட வழக்குகள் நேற்று (8.7.2024) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.

விசாரணை தொடங்கியதுமே, பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஒருவர், நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, விடைத்தாள் மோசடி, ஆள் மாறாட்டம் மற்றும் முறைகேடுகள் அதிகமாக நடந்துள்ளதால் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஆனால் தேசிய தேர்வு முகமை மற்றும் ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், தேர்வை ரத்து செய்யக் கூடாது என வாதிட்டனர்.

அப்போது நீட் முறைகேடுகள் தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையை நோக்கி நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அவர்கள் கூறியதாவது:-

காட்டுத்தீ போல பரவும்

நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு நடந்துள்ளது தெளிவாகி இருக்கிறது. டெலிகிராம், வாட்ஸ்அப் மற்றும் எலக்ட்ரானிக் ஊடகங்கள் வழியாக வினாத்தாள் கசிந்திருந்தால் அது காட்டுத்தீ போல பரவும். அப்படி சமூக ஊடகங்கள் மூலம் வினாத்தாள் கசிந்திருந்தால், மறுதேர்வுக்கு உத்தரவிட வேண்டும்.

தேர்வின் புனிதத்தன்மையை இழந்திருந்தால், மறுதேர்வு கட்டாயம். நம்மால் குற்றவாளிகளை அடையாளம் காண முடியா விட்டால், மறுதேர்வுக்கு உத்தரவிட வேண்டும்.

நடந்ததை பற்றி நாம் மறுத்து சாதிக்க வேண்டாம். நீட்தேர்வை அரசுரத்து செய்யவில்லை என்று வைத்துக் கொள்வோம். ஆனால் கேள்வித்தாள் கசிந்ததன் மூலம் பயன்பெற்றவர்களை அடையாளம் காண அரசு என்ன செய்யும்?

பயன்பெற்றவர்கள் எத்தனை பேர்?

வினாத்தாள் கசிந்ததன் மூலம் எத்தனை பேர் பயன்பெற்றார்கள்? என்பதையும், அவர்களுக்கு எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்பதையும் அறிய விரும்புகிறோம்.

வினாத்தாள் கசிவு நடந்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கசிவின் அளவை நாங்கள் தீர்மானிக்கிறோம்.
இந்த மோசடிகள், அமைப்பு ரீதியாக நடந்துள்ளதா? இது முழு தேர்வு நடைமுறையின் கண்ணியத்தை பாதித்துள்ளதா? மோசடியால் பயனடைந்தவர்களை, கறைபடியாத மாணவர்களிடமிருந்து பிரிக்க முடியுமா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

அப்படி இந்த மோசடி அனைத்து தேர்வு நடைமுறைகளையும் பாதித்து, மோசடிதாரர்களை மற்ற வர்களிடமிருந்து பிரிக்க முடியாத சூழ்நிலையில், மறுதேர்வுக்கு உத்தரவிட வேண்டியது அவசியம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

பின்னர் இந்த வழக்கின் விசாரணையை வருகிற IIஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
மேலும் அதற்குமுன் இந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சி.பி.அய்.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் நடந்த மய்யங்கள், நகரங்களை அடையாளம் காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு தேசிய தேர்வு முகமையையும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதைப்போல மோசடியால் பயனடைந்தவர்களை அடையாளம் காண பின்பற்றப்பட்ட முறைகள் மற்றும் அவர்களின் எண்ணிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment