புதைப்பிடம்-வாழ்விடப் பகுதிகளில் ஒரே நேரத்தில் அகழாய்வு செய்தால் மிகச் சரியான வரலாற்றை கட்டமைக்க முடியும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 8, 2024

புதைப்பிடம்-வாழ்விடப் பகுதிகளில் ஒரே நேரத்தில் அகழாய்வு செய்தால் மிகச் சரியான வரலாற்றை கட்டமைக்க முடியும்!

featured image

தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன்

மதுரை, ஜூலை 8- புதைப்பிடப் பகுதியுடன் தொடர்புடைய வாழ் விடப் பகுதியையும் தேர்வு செய்து இரு இடங்களி லும் ஒரே நேரத்தில் அகழாய்வு மேற்கொண்டால் மிகச் சரியான வரலாற்றை கட்டமைக்க முடியும் என்று தொல்லியல்துறை கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்று வளர்ச்சிகளை ஆய்வு செய்தவர் பேராசிரியர் ஆர்.வெங்கடராமன். மதுரையில் பாரம்பரிய தளங்களின் நண்பர்கள் அமைப்பு (FOHS) சார்பில் பேராசிரியர் ஆர்.வெங்கடராமன் நினைவுக் கருத்தரங்கம் கடந்த 6.7.2024 அன்று நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில் ‘தமிழ்நாட்டில் கீழடி அகழ்வாராய்ச்சியில் இருந்து நகர்ப்புற கலாச் சாரம் பற்றிய புரிதல்’ என்ற தலைப்பில் தொல்லி யல் துறை கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராம கிருஷ்ணா உரையாற்றினார். அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் இதுவரை புதைப்பிடங்களில்தான் அதிக அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதைப்பிடப் பகுதியுடன் தொடர்புடைய வாழ்விடப் பகுதியையும் தோ்வு செய்து இரு இடங்களிலும் ஒரே நேரத்தில் அகழாய்வு மேற்கொண்டால் மிகச் சரியான வரலாற்றை கட்டமைக்க முடியும். மேலும் கிராமப்புறங்கள், நகர்ப்புற மய்யங்கள் எவ்வாறு உருவானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்றார்.

முருகன், சிவன் உருவச் சிலைகள் கிடைக்கவில்லை
பின்னர் அமர்நாத் ராம கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கீழடி அகழாய்வில் குழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மை சிற்பங்கள் கிடைத்துள்ளன. கீழடி அகழாய்வில் முருகன், சிவன் உருவச் சிலைகள் கிடைக்கவில்லை. ஏற்கெனவே கிடைத்த பொருட்களை வைத்து, மத ரீதியாக ஒப்பிட்டு பேசுவது சரியல்ல. அந்த நேரத்தில் மதங்கள் மற்றும் கோட்பாடுகள் இல்லை. அவையெல்லாம் பின்னால் வந்தவைதான். கீழடி அகழாய்வை இன்னும் அதிகப்படுத்தினால் ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

கீழடி முதல் 2 கட்ட ஆய்வறிக்கையை வெளியிடுவது குறித்து ஒன்றிய தொல்லியல் துறை இயக்குநரகம் தான் முடிவெடுக்க வேண்டும். கீழடி 3 ஆம் கட்ட அகழாய்வில் கிடைக்கப்பெற்ற அக ழாய்வு பொருட்களை சென்னையில் பாதுகாப்பாக வைத்துள்ளோம். நீதிமன்ற தீர்ப்பு உள்ள நிலை யில் அதனை வெளியிடுவது குறித்து தொல்லியல் துறை இயக்குநரக அதிகாரிகள் முடிவெடுப்பார்கள்.
கீழடி அகழாய்விற்கான அனுமதி தாமதம் என்பது தேர்தல் காரணமாகத்தான். மற்றபடி அனு மதி உடனுக்குடன் கிடைக்கின்றது. கீழடியை சுற்றி உள்ள அகரம், மணலூர் பகுதிகளில் தொடர்ந்து அகழாய்வு செய்வதை தமிழ்நாடு தொல்லியல்துறை முடிவெடுக்கும். கொந்தகை பகுதிகளில் உள்ள புதைப்பிடங்களில் கிடைத்த பொருட்களை டி.என்.ஏ. சோதனை செய்தால் மனித வாழ்வியல் வரலாற்றை தெரிந்துகொள்ளலாம். இதுவரைக்கும் தமிழ்நாட்டில் புதைப்பிடங்களை மட்டுமேதான் அதிகளவிற்கு தோண்டியுள்ளோம். வாழ்விடப் பகுதியை தேர்வு செய்து அதனுடைய புதைவிட பகுதி யையும் தேர்வு செய்து இரண்டையும் ஒரே சமயத்தில் தோண்டும்போது தான் மிகச் சரியான வரலாற்றை கட்டமைப்பதற்கு உதவியாக இருக்கும்.

காவிரி படுகையில் அகழாய்வு
அகழாய்வை ஒரு குறிப்பிட்ட பகுதியில் தான் தேடிக்கொண்டிருக்கிறோம். காவிரி படுகையிலும் அதிகளவுக்கு கவனம் செலுத்த வேண்டும். அங்கும் அதிக அளவிற்கான தொல்லியல் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதிய இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்
முன்னதாக கருத்தரங்கில் கல்வெட்டியல் அறிஞர் வேதாச்சலம் பேசுகையில், பொருளாதார வளர்ச்சிக்கு நீர்ப்பாசனம் முக்கியமானது. முதலில் மழையை நம்பியே தொட்டிப் பாசனம் உரு வாக்கப்பட்டது. பின்னர் ஆற்று நீர், பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டது என்றார்.

No comments:

Post a Comment