பாசிச பா.ஜ.க. அரசின் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டும் ஒன்றிய அரசின் எதேச்சதிகாரத்தை முறியடிப்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 12, 2024

பாசிச பா.ஜ.க. அரசின் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டும் ஒன்றிய அரசின் எதேச்சதிகாரத்தை முறியடிப்போம்!

featured image

பாசிச பா.ஜ.க. அரசின் குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான தி.மு.க. சட்டத்துறையின் அறப்போராட்டத்தை முடித்து வைத்து – ஆ. இராசா எம்.பி.உரை!

சென்னை, ஜூலை 12– சென்னை – எழும்பூர் – இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில், தி.மு.க. சட்டத்துறையின் சார்பில் பாசிச பா.ஜ.க. அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராகவும், அதனை ரத்து செய்ய வேண்டு மென வலியுறுத்தியும் நடைபெற்ற மாபெரும் பட்டினி அறப்போரை முடித்து வைத்து உரையாற்றிய தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ. இராசா எம்.பி., ‘‘அண்ணா – கலைஞர் வழியில், ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரத்தை எதிர்க்கும் முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்துவோம்!’’ என்று சூளுரைத்தார்.

சென்னை எழும்பூரில் 06.07.2024 அன்று நடைபெற்ற தி.மு.க. வழக்குரைஞர்களின் பட்டினி அறப்போரை முடித்து வைத்து கழக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா,எம்.பி. ஆற்றிய உரை வருமாறு:–
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள பாரதிய நியாய சன்தா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்தா மற்றும் பாரதிய சாக்சிய அபியான் உள்ளிட்ட மூன்று சட்டங்களுக்கு எதிராக நடை பெறும் இந்த பட்டினிப் போராட்டத்தில், அச்சட்டத்தில் உள்ள சட்டப்பிரிவுகள் குறித்தும், காலையிலிருந்து எல்லா சட்டங்களை பற்றியும், இங்கே இருக்கும் வழக்குரைஞர்கள், அரசியல் கட்சியின் தலைவர்கள் எல்லாம் பேசிவிட்டார்கள். அரசியல் ரீதியாக ஒன்றை மட்டும் நான்சொல்ல வேண்டும். அண்ணன் திருச்சி சிவா அவர்கள், என்.ஆர்.இளங்கோ அவர்களைப் பற்றி பேசுகிறபோது இங்கே சொன்னார். என்.ஆர்.இளங்கோ அவர்களுக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு – ஒரு பெருமை என்னவென்று கேட்டால், சட்டம் இயற்றும் நாடாளுமன்றத்திலும் அவர் இருக்கிறார்; அந்த நாடாளுமன்றம் இயற்றுகின்ற சட்டத்தைப் பிரதிபலித்து விவரித்து சுட்டிக்காட்டும் ஒரு மூத்த வழக்குரைஞராக நீதிமன்றத்திலும் அவர் இருக்கிறார். அது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்த இக்கட்டான நேரத்தில் இருக்கும் மிகப்பெரிய சிறப்பு; நல்வாய்ப்பு என்றே கருதுகிறேன்.

திருச்சி சிவா அவர்கள் பேசுகிறபோது அடிக்கடி ஒன்றை குறிப்பிட்டார். திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாநில கட்சி; என்றாலும், அந்த மாநில கட்சியின் வழக்குரைஞர் அணி எவ்வளவு பெரிய பெருமைகளைக் கடந்த காலத்தில் தன்னுடைய பணிகளால் பெற்றிருக்கிறது என்று பல நிகழ்வுகளை நினைவூட்டி சொன்னார். இதைவிட தி.மு.கழகத்திற்கு இருக்கும் மிகப்பெரிய சிறப்பு – நான் அரசமைப்புச் சட்டத்தில் உள்ளதை அடிக்கடி பல நிகழ்வுகளில் குறிப்பிடுவேன். இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை இருக்கிறதே, Basic structure of the Constitutionஎன்று சொல்லும் அந்த முகப்புரைWe, the People of India, having solemnly resolved to constitute India into a Sovereign, Secular, Socialist, Democratic, Republic. இந்தியர்களாகிய நாம் இந்த தேசத்தை இறையாண்மையுள்ள, மதச்சார்பற்ற, சமதர்ம தன்மையுடைய ஜனநாயக குடியரசு நாடாக நமக்கு நாமே கட்டமைத்துக் கொண்டுள்ளோம் என்பதுதான் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை! 5 காரணிகளை குணத்தை கொண்டிருக்கும் இந்த அரசமைப்புச் சட்டம்தான் நம்மை எல்லோரையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. எத்தனையோ மொழி – எத்தனையோ மதங்கள் – எத்தனையோ கலாச்சாரம் – எத்தனையோ உடை கள் – வெவ்வேறு பண்பாடுகள்- வெவ்வேறு பூகோள அமைப்புகள் – இத்தனையும் ஒன்றாக கட்டியிருப்பதற்குக் காரணம் அந்த அசமைப்புச் சட்டம்.

இந்தியாவின் இறையாண்மையை காப்பாற்றிய கலைஞர்
இந்த அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் இறையாண்மைக்கு (Sovereign) ஆபத்து வந்தது, பாகிஸ்தான் படையெடுத்து வந்தபோது, அப்போது 5 கோடி ரூபாய் அள்ளித் தந்து இறையாண்மைக்கு உறு துணையாக இருந்தார் அன்றைக்கு இருந்த முதலமைச்சர் கலைஞர். மீண்டும் கார்கிலில் போர் வந்தபோதும், மீண்டும் 100 கோடி ரூபாய் அள்ளிக் கொடுத்து இந்தியாவின் இறையாண்மையை காப்பாற்றியது கலைஞர். எனவே எப்போதெல்லாம் இறையாண்மைக்கு ஆபத்து வந்ததோ, அப்போதெல்லாம் தி.மு.கழகம் எனும் மாநில கட்சி இந்தியாவை முனைப்புடன் காப்பாற்றி இருக்கிறது. அதே போல, இந்திராகாந்தி அம்மையார் அவர்களால் ஜனநாயகத்திற்கு (Democracy) ஆபத்து வந்தபோது, அதை முழுக்க எதிர்த்து நின்று, ஆட்சியை இழந்து, மிசாவை எதிர்த்துக் காட்டிய பெருமை – தி.மு.கழகத்திற்கு உண்டு! சிறை சென்ற பெருமை சிவாவை போன்றவர்களுக்கும் உண்டு.
நான் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கின்ற விவாதத்தில் கலந்து கொண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டுபேசிக் கொண்டிருந்தபோது குறுக்கிட்டார்கள்.
வனத்துறை அமைச்சர் பூபேந்திர சிங், எழுந்து பேசினார் “இவ்வளவு ஆவேசமாக பேசுகிறீர்களே….. ஜனநாயகத்தைப் பற்றி பேசு கிறீர்களே…. எமர்ஜென்சி காலத்தில் தி.மு.க.விற்கு ஏற்பட்ட அந்த கொடுமை எல்லாம் மறந்து போய்விட்டதா?” என்று கேட்டார்.

நான் சொன்னேன், “மறந்து போய்விட வில்லை. ஆனால், செய்த தவறுக்காக, நான் தவறு செய்து விட்டேன் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று எங்கள் ஊர் கடற்கரைக்கு வந்து பொது மன்னிப்பு கேட்டுவிட்டு, மீண்டும் ஆட்சிக்கு வந்தார் இந்திரா காந்தி. அவருக்கு அந்தப் பெருந்தன்மை; பண்பு; நாகரீகம் இருந்தது. ஆனால், உங்களுக்கு இருப்பதோ சின்ன புத்தி, இந்திரா காந்தியைப்போல் பெருந்தன்மை இல்லையே” என்று நேராகவே கேட்டேன்.
இந்திரா காந்தி அம்மையாரால் எத்தனையோ பேர் பாதிக்கப்பட்டோம். திராவிட முன்னேற்றக் கழகம் பாதிக்கப்பட்டது. ஆனால், அப்போதுகூட அந்த அம்மையார் செய்த ஒரு மிகப்பெரிய செயலை நாம் மறந்து விடக்கூடாது.
அப்போதுதான் ‘Secular’ என்கிற வார்த்தை யும், ‘Socialistic’ என்கிற வார்த்தையும் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் வெளிப்படையாக கொண்டு வந்து சேர்த்தார்.
When the constitutional debate was conducted in the Assembly, the question was asked before the Ambedkar and Nehru, Whether the India is going to be a theocratic state or secular state, since Pakistan was declared as a theocratic state. பாகிஸ்தான் மத அடிப்படையில் பிரிந்து விட்டது, அது மதம் தழுவிய நாடு; அதாவது முஸ்லீம் நாடு.

நம்முடைய நாடு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று அரசியல் சாசன சபையில் பட்டாபி சீதாராமையா கேட்டார். கே.எம்.முன்ஷி மற்றும் சியாம பிரசாத் முகர்ஜி உள்ளிட்டோரும் கேட்டார்கள்.
அப்போது, அம்பேத்கர் சொன்னார், “இல்லை, அரசமைப்புச் சட்டத்தில் மதவாத நாடு என்று வெளிப்படையாக அறிவிக்காத வரை, அதற்கு என்ன பொருள் என்றால், இது ஒரு மதச்சார்பற்ற நாடுதான்” என்று சொன்னார். ஆனால், மதச்சார்பின்மைக்கு பங்கம் வந்துவிடுமோ என்று கருதிய இந்திரா காந்தி அம்மையார் – 1975 இல் அன்றைக்கு இருந்த ஜனசங்கம் வளர்ந்து வந்த நேரத்தில், தேசத்திற்கு வர இருந்த ஆபத்தை உணர்ந்து, ஜனநாயகத்திற்கு அன்றைக்கு வேட்டு வைத்த அதே இந்திரா காந்தி, இந்தியாவின் மதச்சார்பின்மையை அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையை திருத்தி, secular என்ற வார்த்தையை சேர்த்தவர் அவர். இந்த தேசம் இருக்க வேண்டும். ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்தால், அது Repairable Loss, Recoverable Loss; ஆனால், மதச்சார்பின்மைக்கு ஆபத்து வந்துவிட்டால் இந்த நாட்டில் இஸ்லாமியர்களும், சீக்கியர்களும், கிறிஸ்தவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் நிம்மதியாக இருக்க முடியாது; அதற்குப் பிறகு இந்த நாடு இருக்காது. எனவே secular என்ற வார்த்தையை இந்த மண்ணுக்கு ஜன நாயகத்தைவிட முக்கியத்துவம் என்று கருதி, அதை கொண்டு வந்து சேர்த்தவர் இந்திரா காந்தி. எனவே அதைப் பற்றி இப்போது பேசாதீர்கள் என்று சொன்னவுடன் ‘கப் சிப்’ என்று உட்கார்ந்து விட்டார். எனவே, அந்த வரலாறும், பெருமையும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு.

சமதர்மத்தை உறுதி செய்தது
கலைஞரும் கழகமும்!
எப்போது மதச்சார்பின்மைக்கு ஆபத்து வந்தது? வாஜ்ன்பேயுடன் கூட்டணி வைத்தபோது நாம் என்ன சொன்னோம். தி.மு.க. கூட்டணியில் இருக்கும் வரை காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கின்ற சிறப்பு அதிகாரமான பிரிவு 370-அய் தொடாதே. நாங்கள் இருக்கும் வரை பொது சிவில் சட்டம் கிடையாது. நாங்கள் கூட்டணியில் இருக்கும் வரை பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டக் கூடாது என்று குறைந்த பட்ச செயல் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்து மதச்சார்பின்மைக்கு வந்த ஆபத்தை தடுத்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். எனவே இறையாண்மையைக் காப்பாற்றியது தி.மு.க. ஜனநாயகத்தை காப்பாற்றியது, தி.மு.க. மதச்சார்பின்மையை காப்பாற்றியது தி.மு.க. socialistic என்ற சொல்லையும் சேர்த்து பின்னாளில் வங்கிகளை தேசியமயம் ஆக்க இந்திரா காந்திக்கு ஆதரவு கொடுத்து சமதர்மத்தை உறுதி செய்தது கலைஞரும், தி.மு.க.வும்தான். எனவே அரசமைப்புச் சட்டத்தையே காப்பாற்றும் வல்லமை திராவிட முன்னேற்றக் கழகதிற்குத்தான் அண்ணா காலத்தில் இருந்தது. அந்த வல்லமையை கலைஞர் நெறிப்படுத்தி பாதுகாத்து அரண் சேர்த்தார். அந்த வல்லமையைத்தான் இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற இந்த மகத்தான மனிதரும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

அதனால்தான் இவ்வளவு கட்டுப்பாட்டோடு, நம்முடைய இளங்கோ அவர்கள் உங்களை எல்லாம் அழைத்து இவ்வளவு அருமையாக ஒழுங்குபடுத்தி இந்த பட்டினி அறப்போர் பந்தலில் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கின்ற இந்த மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து ஒருசேர உட்கார வைத்திருக்கிறார்.
பொதுவாகவே சட்டம் படித்து விட்டாலே சட்டத்தை மீறுகிற உணர்வு நமக்கு வந்துவிடும். ஏனென்றால் சட்டம் தெரிந்துவிட்டது அல்லவா? கோர்ட்டுக்கு வருகின்ற வழக்காடிக்கு பயம் இருக்கும். ஆனால் வக்கீலுக்கு பயம் இருக்காது. நீதிமன்றத்திற்கு உள்ளே வரும்போதே ஒரு துணிச்சலோடுதான் வழக்குரைஞர்களாகிய நாம் வருவோம். என்ன பெரிய பட்டினிப் போர், ஒரு டீ குடித்துவிட்டு வந்தால் என்ன கெட்டுவிடப் போகிறது என்று கூட உங்களிடத்திலே எண்ணம் வரலாம், ஆனால், வரவில்லை உங்களுக்கு. என்ன காரணம்? உங்களுக்கு இருக்கும் அக்கறை, இந்த நாட்டின்மீது அக்கறை. அரசமைப்புச் சட்டத்தின்மீது அக்கறை. சமூகத்தின்மீது இருக்கும் அக்கறை. எல்லாவற்றையும் தாண்டி திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற அரசியல் இயக்கம்தான் அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்றுகிற இயக்கம் என்று என்னுகிற அந்த உணர்வு.

சட்டப் போராட்டம்
தி.மு.க.வுக்குப் புதிதல்ல!
நான் ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன். இது ஒன்றும் புதிது அல்ல. இந்த சட்டப் போராட்டம் ஒன்றும் புதிதல்ல.1868 இல் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) முதன் முதலில் வந்தபோது, இராஜதுரோகம் என்கிற பிரிவு (Sedation) இல்லை. இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவு 124A கிடையாது.
அதற்குப் பிறகு, இந்தியாவில் மட்டுமல்ல, வெள்ளைக்காரர்கள் ஆண்டு கொண்டிருந்த காமன்வெல்த் நாடுகளில் – பிரிட்டிஷ் ஆளு கைக்கு கீழ் இருக்கும் அனைத்து நாடுகளிலும் சுதந்திரப் போராட்ட வேட்கை உருவானபோது, விடுதலைக்கான தலைவர்கள் தோன்றினார்கள்;
அப்படி தலைவர்கள் இந்தியாவில் தோன்றியபோது. அவர்களை ஒடுக்குவதற்கு இராஜ துரோகம் (Sedation) என்கிற ஒரு பிரிவு தேவைப்பட்டது; அதில் முதல் குற்றவாளி யார் தெரியுமா? பால கங்காதர திலகர்.

பாலகங்காதர திலகரின் வக்கீல் யார் தெரியுமா? முகமது அலி ஜின்னா. பாகிஸ்தானின் தேசப்பிதா என்று பின்னாளில் சொல்லப்பட்ட அவர்தான், அன்றைக்கு 1920-களில் மூத்த வழக்குரைஞராக இருந்து பாலகங்காதர திலகருக்கு இங்கு போராடி தோற்றுப்போய் Privy Council–க்குப் போய் வாதாடினார். இன்றைக்கு இருக்கிற உச்சநீதிமன்றம் மாதிரி. அங்கேயும் வழக்கு தோற்று ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை திலகருக்கு. சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, 1950 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்ட வரைவு (The Draft Constitution-1950) கொண்டு வரப்பட்டது. அதில் Fundamental Rights-என்கின்ற அடிப்படை உரிமைக்கும் Public Order-என்கின்ற பொது அமைதிக்கும் எப்படிப்பட்ட உறவு இருக்க வேண்டும் என்று பிரிவு 13 (2) அய் கொண்டு வந்து அரசியல் நிர்ணய சபையில் விவாதித்தார்கள்.
Fundamental Rights- அடிப்படை உரிமையை Public Order- பொது ஒழுங்கு – சட்டம் ஒழுங்கு என்பதைக் காட்டி ஒரு தனி மனிதனின் பேச்சு சுதந்திரத்தை ஒடுக்கலாமா? என்ற கேள்வி எழுந்தது. பிறகு 1951-இல், ஒரு சம்பவம் நடந்தது; அதுவும் சொல்கிறேன், தமிழ்நாடுதான்.

பாம்பேயில் இருந்து ‘கிராஸ் ரோடு’ என்கிற பெயரில் ஒரு பத்திரிக்கை – அந்த பத்திரிகைதான் அன்றைக்கு இருந்த ஆட்சியாளர்களை எதிர்த்து எழுதிய பத்திரிக்கை. அந்த பத்திரிகை சென்னைக்கு வந்தது. அந்த பத்திரிகை சென்னையில் வரக்கூடாது என்பதற்காக அன்றைக்கு இருக்கும் காங்கிரஸ் அரசாங்கம் 1953 இல் Madras Public Maintenance Order என்ற அரசாணையின் கீழ் அந்த பத்திரிகையை தடை செய்து, அந்த பத்திரிகை ஆசிரியரைக் கைது செய்வதற்கு வாரண்ட் பிறப்பித்தார்கள்.

அதை எதிர்த்து வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. தலைமை நீதிபதி நீதியரசர் கண்ணா, அவரோடு அமர்வில் இருந்தவர்கள் நீதியரசர் பதஞ்சலி சாஸ்திரி, நீதியரசர் பசல் அலி உள்ளிட்ட அய்ந்து பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் என்ன தீர்ப்பு எழுதினார்கள்? When there is a conflict between the fundamental rights and the public order, Whether the public order has to be prevailed upon the fundamental rights or fundamental rights will supersede the public order. That was the question before the Supreme Court Bench. Justice Khanna and Justice Pathanjali Shastri both were very categorical that fundamental rights will prevail. அப்போதுதான் சொன்னார்கள், பொது அமைதி என்கிற பெயரில், பொது ஒழுங்கு என்கிற பெயரில் அடிப்படை உரிமைகளைப் பறிக்கக்கூடாது என்கிற மகத்தான தீர்ப்பு வந்தது. அரசமைப்புச் சட்ட உரிமைகளைப் பாதுகாப்பதில் நீதியரசர்கள் அவ்வளவு முனைப்போடு இருந்த காலம் அது.

எச்சில் இலைகளில் உருண்டால் தவ றில்லை – அது அவர் உரிமை என்று இப்போது ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. அதை தடுத்தால் பொது அமைதிக்கு குந்தகம் என்று கூட சொல்வார்கள். சட்டப்படி அது சரிதான் என்று ஒரு நீதியரசர் சொன்னால், அந்த தீர்ப்பு சரியா? தவறா? என்று கேள்வி கேட்கின்ற நமக்கு இருக்கின்ற உரிமைதான் அடிப்படை உரிமை. அதுதானே ஜனநாயகம். தீர்ப்பு கொடுத்த நீதிபதிக்கு உள்நோக்கம் இருந்தது என்று நான் சொல்லவில்லை. ஆனால், அந்த நீதிபதியின் தீர்ப்பு தவறா? சரியா? என்று விமர்சிக்க நமக்கு உரிமை உண்டு.

என்னை பொருத்தவரை, எச்சில் இலையில் உருளுவது என்பது மனித நாகரீகத்திற்கு ஏற்றதல்ல. புகழ்பெற்ற நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் சொன்னார் “Yes we are final, That does not mean we are infallible” என்று….. நாங்கள் சொல்லும் தீர்ப்பு இறுதியானது. ஆனால், அந்தத் தீர்ப்பில் தவறில்லை என்று சொல்ல முடியாது. அதிலும் தவறு இருக்கும். We are all Human being என்று சொன்னார். அந்த உணர்வோடு சொல்கிறேன், Fundamental Rights–என்கின்ற அடிப்படை உரிமைக்கும், Public Order என்கிற பொது அமைதிக்கும் மோதல் வந்தால், அடிப்படை உரிமைதான் காப்பாற்றப்பட வேண்டும்.
பிறகு,1961 இல் சட்டத்தைத் திருத்தி னார்கள். 1963 இல், தி.மு.க.வை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு சட்டத்தில் இராஜ துரோகத்திற்கான பிரிவு 124A வில் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் (Sovereignty and integrity) தீங்கு விளை விக்கும்படி பேசினால், இராஜதுரோகம் என்று மாற்றினார்கள்.

அப்போது நாடாளுமன்றத்தில் அண்ணா பேசினார், “எங்களை எதிர்ப்பதற்காக, ஒழிப்ப தற்காக, எங்கள் குரல் வளையை நசுக்குவதற்காக இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
நாங்கள் தனி தமிழ்நாட்டை எல்லாம் கைவிட்டுவிட்டோம். ஆனால், If you are continuing such legal repercussions … We will be the next Ruling Party in Tamilnadu” இதுபோன்ற சட்ட நெருக்கடியை எங்கள்மீது திணிப்பீர்களேயானால், எழுதி வைத்துக் கொள்ளுங்கள், தமிழ்நாட்டில் நாங்கள்தான் அடுத்த ஆட்சியாளர்கள் என்று அன்றே முழங்கியவர் அண்ணா.
1963 இல் காங்கிரஸ் ஆட்சி இப்படிப்பட்ட சட்டங்களை கொண்டு வந்தபோது, மதவெறி யர்கள் பதவியில் இல்லை. அவர்கள் பின்பற்றிய வழிகளில் பிழை இருந்தாலும், தேசிய ஒருமைப்பாடு என்கிற பொது நோக்கம் அவர்களுக்கு இருந்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு இருக்கின்ற பாசிச மோடி அரசாங்கம் ஏற்கெனவே இருக்கிற வார்த்தைகளோடு ஒற்றுமை (unity) என்கிற வார்த்தையையும் உள்நோக்கத்தோடு சேர்த்திருக்கிறார்கள்.

நான் இங்கே சொல்ல வருவது, இந்த அனைத்துக் கொடிய சட்டங்களையும் குறித்து என்.ஆர்.இளங்கோ பேசிவிட்டார், பாரதி விளக்கியிருக்கிறார், ப.சிதம்பரம் விளைவுகளைப் பற்றி விளக்கமாக இங்கே உரையாற்றி இருக்கிறார். எல்லோரும் பேசி விட்டார்கள் என்றாலும், திரும்பத் திரும்ப இந்த தவறுகளை மோடியும் – அமித் ஷாவும்- இந்த அரசாங்கமும் செய்யுமானால், எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இந்த மூன்று சட்டமே இந்த ஆட்சியை மாற்றுவதற்கான ஒரு காரணியாக அமையலாம் அல்லது அரசியலில் ஒரு மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தலாம். அந்தப் பிரளயத்தை ஏற்படுத்தும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அந்த வல்லமை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற இந்த மகத்தான தலைவனிடம் இருக்கிறது. அவர் கையில் படைக்கலன்களாக திருச்சி சிவாவாக இருந்தாலும், இளங்கோவாக இருந்தாலும், நானாக இருந்தாலும், பாரதியாக இருந்தாலும், நாங்கள் எல்லாம் இருக்கும் வரை அவர் என்ன உத்தரவிடுகிறாரோ அதை நிறைவேற்றுகின்ற இடத்தில் உங்களோடு நாங்களும் இருப்போம் என்று உறுதியளித்து உங்களையெல்லாம் வாழ்த்தி இந்தப் பட்டினிப் போராட்டத்தை முடித்து வைக்கிறேன்.
-இவ்வாறு தி.மு.க. துணைப் பொதுச்செய லாளர் ஆ.இராசா எம்.பி., உரையாற்றினார்.

No comments:

Post a Comment